Sunday, November 3, 2013

வணிக எழுத்து மற்றும் தரமான இலக்கிய எழுத்து

சில காலம் முன்பு ஜெயமோகன் அவர்களின் வலைத் தளத்தில் படிக்கையில், இது குறித்து ஒரு கட்டுரை தென்பட்டது. படித்ததும், மேலும் சில கட்டுரைகள் இந்த விஷயத்தில் இருந்தன.

விஷயம் இது தான். தமிழில் உருவாகும் இலக்கியங்களை அவர் இரு வகைப் படுத்துகிறார்.ஒன்று , பெருவாரியாக ஜனங்கள் படிக்கும் தின, வார, மாத இதழ்களில் வரும் கட்டுரைகள், புனைவுகள் பெரும்பாலும் வணிக நோக்குடன் இலக்கியச் சிறப்பு இல்லாமல் எழுதப் படுகின்றன என்று ஜெயமோகன் சுட்டிக் காட்டுகிறார். இந்தக் குற்றச் சாட்டும் ஐம்பது வருடங்களுக்கு மேலேயே உள்ளது போலும். க நா சு, சுந்தர ராமசாமி போன்றோரும் இதையே எழுதி உள்ளனர்.

ஜெயமோகன் முதலில் கல்கியையே இந்த வணிக எழுத்தின் முன்னோடியாகக் கருதுகிறார். (சில இடத்தில் அவரது எழுத்தை ஆதர்ச எழுத்து என்றும் கூறுவதுண்டு) .அகிலனும், நா பார்த்தசாரதியும் கூட இந்தப் பட்டியலில் தான் போடுகின்றனர். இது தமிழ் வாசகர்களை சற்று அயர வைக்கும். ஆனாலும், ஜெயமோகனும் அவரது ஆதரவாளர்களும் அடிக்கடி இதைக் கூறி வருகின்றனர். எனக்கும் முதலில் இதை ஏற்றுக் கொள்ளத் தயக்கமாக இருந்தது. கேள்வி கேட்டு  எழுதினால் பிராம்மண பாசம் போலும் என்று ஊதி விடுவார்களோ என்ற பயம் வேறு. அதனால் விட்டு விட்டேன். சமீபத்தில் ஜெயமோகன் மீண்டும் ஒரு கட்டுரை இது பற்றி எழுத. என் ஆர்வம் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது.

முதலில் கல்கியின் எழுத்து பற்றி. கல்கி தமிழில் ஒரு புது நடையை யே உண்டாக்கினார் என்று பொதுவான கருத்து உண்டு.  பொன்னியின் செல்வன் அதற்கு ஒரு உதாரணம். ஹரிதாஸ் சினிமா காலம் போன்ற சம்பிரதாய இசை மட்டுமே உள்ள சினிமாவில் இருந்து முச்சந்திக் கூத்து மட்டுமே முதலாகிப் போன நடப்புக் கால கட்டத்திலும் கூட பொன்னியின் செல்வன் மகத்தான வாசிப்பு அந்தஸ்து பெற்றுத் திகழ்கிறது. இது என்ன கல்கியின் வியாபார உத்தியா ? அப்படி என்னதான் இருக்கிறது கல்கியின் நடையில் ? கல்கி எங்கிருந்து அத்தகைய நடையைப் பிடித்தார் ?

ஒரு எழுத்தாளரின் பின்னணி என்பது அவருடைய வர்ணனைகளில் தான் பெரும்பாலும் வெளிப் படும். அங்கு தானே பெண்பால் கவர்ச்சி, காதல் கிளர்ச்சி போன்றவற்றை எழுதி விற்க முடியும் ? இதே வருணனைகளில் தான் அந்த எழுத்தாளரின்  அனுபவத்தின் மூலமும் தெரிந்து விடும்.

இன்றைய தமிழ் விமரிசகர்கள் எந்த அளவிற்கு வாசிப்பு குறைந்தவர்கள் என்பது நாம் இந்த விஷயத்தில் சற்று ஆராய்ந்தால் தெரிந்து விடும். பொன்னியின் செல்வனில் இருந்து ஒரு வாசகம் . அநிருத்தப் பிரம்ம ராயர் தம் மாளிகையில் வெளியில் வந்த கோலம் பற்றி வருணனை - இதோ 

" அன்பில் அநிருத்தர் ஜப, தப, ஸ்நான,பான, கிரியைகளை முடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்."

இந்த வாக்கியத்தைப் படித்த பாரம்பரியம் தெரிந்த அனைவருக்கும் அவர் தன சந்தியா வந்தனத்தையும், பூசையையும் முடித்து விட்டு வந்தார் என்று தெரிந்து விடும். இதற்கு முன்னர் யார் அதை எழுதினார்கள் என்றால் இப்போதைய விமரிசகர்கள் விழிப்பார்கள். என் தகப்பனார் வயதுடையவர்களைக் கேட்டால் விளங்கி விடும். " அடேடே ! இது கதா காலட்சேபம் செய்யறவா பாணி " என்று கூறி விடுவர். 
அவர்களுக்கு யார் முன்னோடி ? 
" வேறென்ன ? நம்மோட புராணங்கள் தான் "
"அப்போ புராணங்கள்ல வணிக சமாச்சாரங்கள் உண்டா ?"
" சீச்சீ ! வாயைக் கழுவு . புராணங்கள் ஞானிகளால சொல்லப் பட்டது. ஆனால் அது பிராம்மணன் முதல் வேளாளன்  வரை எல்லாருக்கும் பொது. "
" அப்ப புராண பாணில எழுதினா  வணிக  எழுத்தா ?"
" இதெல்லாம் அந்த பகுத்தறிவு  பேசறவாளண்டை  கேளு" என்று எழுந்து பொய் விடுவர்.

அப்போ இந்த வணிக எழுத்து என்று ஓயாது குற்றம் கூறுவது ஏன் ? இதை இன்னொரு கோண த்தில் பார்ப்போம். வணிக எழுத்து நல்ல இலக்கியங்களை மறைக்கிறது என்பது ஒரு குற்றச் சாட்டு . அப்போது அந்த "நல்ல இலக்கியங்கள் " வணிகம் செய்ய லாயக்கில்லை என்பது அர்த்தமா ?

இன்றைய வணிக எழுத்துகளில் பெரும்பாலானவை காதல்,  உணர்ச்சிகளை நியாயப் படுத்தி எழுதப் படுபவை. இதுவும் அநாதி காலமாக நாம் நம் நாட்டில் கண்டதுதான். (மணியன், சிவசங்கரி, இந்துமதி, பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன்,) 

இன்னொரு பிரிவு , ,துப்பறிதல்  வன்முறை , வீரம் ஆகியவற்றை தூக்கிப் பிடிக்கும் ஒன்று.இதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகம். ( சுஜாதா,ராஜேந்தர், தமிழ்வாணன்,) 

 அடுத்தது குடும்பம், பாசம், வறுமை, விடா முயற்சி , போன்ற சராசரிக் குடும்பங்களின் நிலை குறித்து  மிகையாகவும், நடுத்தரமாகவும் எழுதப் படும் எழுத்து. இது எப்போதும்  பெண்களின மனம் கவர் எழுத்து. (லக்ஷ்மி, நா பா, அகிலன், கல்கி,) 


ஒரு குறிப்பிடும் கணிசமான பிரிவு காம உணர்ச்சிகளைத் தூண்டுபவை. இதுவும் மொத்தத்தில் ஐந்து சதவிகிதம் இருக்கலாம். இது உலக அளவில் உள்ள விகிதாசாரத்துடன் ஒப்பிட்டால் குறைவாகவே இருக்கும் என்பது என் எண்ணம். ( சாண்டில்யன், பால  குமாரன், புஷ்பா தங்கதுரை,)

இவற்றில் எஞ்சியது ஒரு எழுத்து உண்டு. அது காலம் காலமாக நம் மண்ணின் இலட்சியங்களை, அநாதி காலமாகக் கைக்கொள்ளும் பழக்கங்களை, நம் வரலாற்றை செழுமையாக்கும் மாவீரர்கள், அறிஞர்கள், துறவிகள், அவதாரங்கள் போன்றோரின் வாழ்க்கையை வெகுஜனங்களிடம் கொண்டு சேர்ப்பவை. புராண காலம் தொட்டு  இன்றைய பாகவதர்கள் வரை அது  நம் வாழ்க்கையை செழுமை ஆக்கிக் கொண்டே வருகிறது. அதற்குப் பெயர் தான் ஆதர்ச எழுத்து. லட்சிய எழுத்து. இதை மட்டுமே நான் ஆதரித்து பேசுகிறேன்.

அரிச்சந்திர புராணத்தைக் கேட்டு காந்தியை பொய் பேசாமல் இருக்கச் செய்தது இந்த எழுத்து தான்.

 "பசுவைக் கொல்பவனை நான் கொல்வேன் என்று குழந்தை சிவாஜியைப் பேச வைத்தது இந்த எழுத்து தான்.

எப்போதோ நடந்த  ராமாயணக் கதையைக் கேட்டு   "படை திரட்டடா ? இலங்கை செல்வோம்  தேவி சீதையை மீட்போம் !"  என்று ஆயிரம் வருடம் முன்பு  குலசேகரப் பெருமாளை பேச வைத்ததும் இந்த எழுத்து. 

விவேகானந்தனை இமயத்தில் இருந்து குமரி வரை இழுத்து வந்து அகிலத்தையே குலுக்கும் வேதாந்த வாதியாக மாற்றியது இந்த எழுத்து தான். 


இந்த எழுத்தின் ஜாம்பவான்கள் தான் கல்கியும், அகிலனும், நா பா வும். அவர்கள் நம் பாரம்பரியத்தின் நீட்சிகள். இவர்கள் எழுத்தைப் படித்து ஒருவன் திருடினான், பெண்ணை அபகரித்தான் , பொய் சொன்னான் என்றால் அதை நம்ப முடியாது.

இப்போது "தரமான இலக்கியங்கள் " பற்றி சற்றுப் பார்த்து விடுவோம். அவைகளை எடுத்துப் படித்தவுடன் நமக்கு முதலாக தெரிந்து விடுவது அவைகள் யதார்த்த  எழுத்துக்கள். அங்கே நல்லது கேட்டது போன்ற தீர்ப்புகள் எழுதக் கூடாது. எழுதிய கணம் அது "இலக்கியத் தரம்" இழந்து விடும். ஜெயகாந்தனின் "ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம் " ஒரு சிறந்த உதாரணம்.அது நான் என்றுமே மறக்க விரும்பும் நூல். மானுட வாழ்க்கையை லட்சியம் இல்லாமல் வாழ முடியும் என்ற விஷயத்தில் நிலை நிற்கும் நூல். 

இந்த    விமரிசனம் செய்யாத மனப் பாங்கு அதை எழுதிய எழுத்தாளர்களிடமும் சென்று சேர்ந்து விட்டது. நான் பள்ளி இறுதி வகுப்பு படிக்கையில் , மேட்டுப் பாளயம் தமிழ்ச் சங்கத்து நிகழ்ச்சியில், ஜெயகாந்தன்  முந்தைய நாள் போதையுடன்,  மேடையில் நின்று கூச்சலிட்டது நினைவில் இன்னும் இருக்கிறது. கூட்டமே ரத்தானது. அதை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் அண்ணன் , " அவரு அப்படித்தாண்டா !" என்று சாவகாசமாகக் கூறிவிட்டார் . இதுவே கல்கி மது அருந்தி இருக்கட்டும், கலியுகத்தின் இறுதி வரை அது பேசப்படும்.

ஜெயகாந்தனுக்கு இந்தப் பிரச்சினையே இல்லை. அவருடைய சமீபத்திய கட்டுரையில் கூட எப்படி அவரும் ஒரு ரிக்ஷாக்காரனும் சேர்ந்து குடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தது பற்றி விலாவாரியாக இருந்தது. இது இந்த தரமான இலக்கியவாதி பட்டம் அளித்த எழுத்து சுதந்திரம்.


நான் இந்த விஷயத்தை எழுத எடுத்துக் கொண்டதற்குக் காரணம், தமிழ் எழுத்தாளர் உலகம் எந்த அளவுக்குச் சீர் கெட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவே. ஜெயமோகன் அவ்வப் போது எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் சேரும் கூட்டங்கள், முகாம்கள்  நடத்துவார். அப்போதெல்லாம் அவர் திரும்பத் திரும்பச் செய்யும் முக்கிய அறிவிப்பு " இங்கே கண்டிப்பாக மது அருந்தக் கூடாது " என்பது தான். இது போன்ற எழுத்தாளர்கள் ஆன்ம சுத்தி இல்லாமல் எழுதுபவை தான் "தரமான இலக்கியங்களா ?" அவை விற்பனை    ரீதியில் போணியாகாமல் போனது ஒன்றே அவர்களுக்கு "இலக்கியவாதி " அந்தஸ்தைக் கொடுத்து விடுமா ?

அவர்களுடைய எழுத்தின் இன்னொரு இயல்பு உள்ளது உள்ளபடி எழுதுகிறேன் என்று விட்டு அபத்தங்களைக் கூடச் சேர்த்துக் கொள்ள தயாராகி விடுவார்கள். கோவிலில் , அம்பாளின் அழகும், கோவிலின் கம்பீரமும் கூட தெரியாமல் போகலாம். ஆனால் குருக்களின் அழுக்குப் பூணூல் எழுத்தில் இருக்கும். பிரசாதத்தின் மணம் பற்றி எழுதக் கூடாது. அங்கே வந்து நிற்கும் பணக்காரப் பெண்மணியின் மூக்கில் அமர்ந்து தொந்தரவு  செய்யும் ஈ பற்றி எழுதி விட வேண்டும். அதுவும் முக்கியமாக நமஸ்கரிக்கும் போது எண்ணெய்ப் பிசுக்கை கன்னத்தில் அப்பிக் கொண்ட பேராசிரியர் பற்றி எழுதாமலிருக்கவே முடியாது.


கல்கியின் பாத்திரம் தேவாரத்தை ராக மாலிகையாக பாடுவதாக எழுதி , மோகனமும், பிலஹரி  பற்றியும்,  காம்போதி பற்றியும் எழுதி விட்டால் பிரளயம் தான். மேல் தட்டு எழுத்து, அகம்பாவ எழுத்து , பாமரர்களை தாழ்வு மனப் பான்மையில் ஆழ்த்தும் எழுத்து என்று விமரிசித்து "தரமான இலக்கியம்" பட்டியலில் இருந்து நீக்க முகாந்திரம் தேடிவிடலாம். ஜெயமோகன் தன்னுடைய கிறித்தவ தமிழாசிரியர்    ஆபேரியில் கம்ப ராமாயணப்  பாடல் பாடிக்காணபித்ததாக எழுதியவுடன் தான் கர்நாடக சங்கீதத்துக்கு வெகுஜனத் தன்மை வந்து விட்டது போலும்.

ஆக , இப்போது கட்டாயமான இறுதி வாசகம் ஒன்றை எழுத வந்து விட்டேன். (அது தான் சார் 'பஞ்ச்சு டயலாக்கு ")



வணிக எழுத்து , ஆதர்ச எழுத்து, பாமர எழுத்து போன்றவை உண்மையில் மனிதர்களின் நீட்சியே.  பாமரன், வணிகன், வஞ்சகன், காமுகன்,  அறிஞன், ஞானி போன்றோர் எந்த அளவுக்குச் சமூகத்தில் இருக்கிறங்களோ, அந்தந்த வகை எழுத்துக்கள் சமூகத்தில் அந்தந்த விகிதத்தில் இருக்கும்.