Sunday, June 30, 2013

ராமாயணத் தருணம்

ராமாயணம் உலகின் முதல் காவியம் - "ஆதி காவ்யம்" என   போற்றப் படுகிறது. மகரிஷி வால்மீகி உலகின் முதல் கவி.

மேலே சொன்னவை பலர் முதலிலேயே கேட்டது. பலரும் அப்படியே ஒப்புக் கொண்டு சென்றிருப்பர் . இந்த இரண்டு விஷயங்களை சிறிது ஆராயப் புகுந்தால் ஒரு புதையல் அளவு விஷயங்கள் மறைந்திருப்பது தெரிகிறது. நான் வால்மீகி ராமாயணத்தை இப்போது தான் மூல ஸ்லோகங்களின் மூலம் படிக்க ஆரம்பித்துள்ளேன். சற்றே ஆசுவாசமாக இதைப் படியுங்கள். நான் அனுபவித்த அந்த 'கண்டு கொண்டேன்" தருணம் உங்களுக்கும் வாய்க்கட்டும் .

வால்மீகி காலம் வரை உலகில் இருந்த ஒரே கல்வி வேதக் கல்வி. வேதங்கள் மந்திரங்களால் ஆனவை .மந்திரங்கள் தங்களுக்கென தனி உச்சாடன பாணி கொண்டவை. மிகப் பழையவை. மேலும் அநநாளில் பேச்சுக்கென்று, எழுத்துக்கென்று   சம்ஸ்கிருத மொழி இருந்திருக்கின்றது என்றாலும் அது வேத மொழியினின்று சற்று வேறுபட்டது. பிற்பட்டது.

இந்தச் சூழலில் தான் மூன்று நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. அவைகளைத் தான் நான் "ராமாயணத் தருணம்" என்று அழைக்கிறேன். இந்தக் கட்டுரையின் முடிவில் நீங்களும் அதை ஒப்புக் கொள்வீர்கள்.

முதல் நிகழ்வு - வால்மீகியும், நாரதரும் சந்திக்கின்றனர். நாரதரிடம் , " இந்த உலகில் சத்தியம், தர்மம், ரூபம், வீரம், கல்வி, அறிவு, கருணை , ஒழுக்கம் போன்ற பண்புகளை பூரணமாகக் கொண்ட மானுடர் இருந்திருக்கிறார்களா ? அப்படியிருப்பின் அவரது கதையை எனக்குக் கூறுங்கள் என்று கேட்க , நாரதரும் . " அப்படி ஒரு தீரன் இருந்தான். நெடு நாட்களுக்கு முன் வாழ்ந்தவன் அவன். ராமன் என்பது அவன் பெயர் " என்று ஆரம்பித்து ராம சரிதத்தை சுருக்கமாகக் கூறுகிறார்.

இரண்டாவது நிகழ்வு - நாரதர் வால்மீகியிடம் விடை பெற்றுச் சென்ற பிறகு , வால்மீகி அழகிய தமஸா நதியில் நீராடிய பின் ,நதிக் கரையில் உலாவச் செல்கிறார். அங்கே இரு கிரவுஞ்ச பட்சிகள் சல்லாபித்தபடி விளையாடுகையில், அழிவே நோக்கமாகக் கொண்ட வேடன் ஒருவன் அதில் ஆண் பறவையை அம்பால்  அடித்து வீழ்த்துகிறான். இறந்து விழுந்த இணையைப் பார்த்து பெண் பறவை கதறுகிறது. சாதுவான் வால்மீகி துடிதுடிக்கிறார். உணர்ச்சி மேலீட்டால் , அந்த வேடனைச் சபிக்கும் வண்ணம் தன வாயினின்று சில சொற்றொடர்களை உதிர்த்தார்.

அது இது தான்

मा निषाद प्रतिष्ठाम्त्व | मगमः शाश्वतीः समाः |
यत् क्रौङ्च मिथुनात् एक | मवधीः काम मोहितम् || १-२-१५

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வ மகம: ஸாஸ்வதீ:  ஸமா: |
யத் க்ரௌஞ்ச மிதுநாதேக  மவதீ: காம மோஹிதம் || (1-2-15)


இதன் பொருள் :- ஓ நிஷாதனே ! கிரௌஞ்ச பட்சிகளின் வேட்கை மிகுந்த சேர்க்கையில் நீ அவற்றில் ஒன்றைக் கொன்றதால் நீ வருங்காலத்தில் நிரந்தரமாக (அவ) கதியை அடைவாயாக !

வால்மீகியோ முதலில் தன தவ வலிமையைக் குறைக்கும் இது போன்ற கோபமான சாபம் வெளி வந்ததே என்று துணுக்குற்ற போதிலும், இன்னொரு எண்ணம் தலை தூக்கவே அவருக்குள் மகிழ்ச்சி பரவியது. . அதற்குக் காரணம் , அவர் உதிர்த்த சொற்களின் அமைப்பு. அது இது வரை யாராலும் மொழியப்படாதது. புது லயத்தில் அமைந்திருந்தது. அவரது சீடர்களும் , அவரது சொற்களின் அமைப்பை சிலாகித்து அதன் புதுமையை எண்ணி வியந்தனர்.

மூன்றாவது நிகழ்வு : அந்த வார்த்தைகளின் புது அமைப்பை எண்ணி எண்ணி வியந்தபடி ஆஸ்ரமம்  வந்து சேர்ந்த பொழுது , அங்கே சாக்ஷாத் பிரம்ம தேவன் பிரசன்னமானார். வால்மீகியும், சீடர்களும் அவரைப் பணிந்து ஆசனம் அளித்து , உபச்சாரம் செய்து மகிழ்ந்தனர். பிரம்மன் வால்மீகி யைப் பார்த்து , " தங்கள் வாயால் உயர்ந்த சொற்களைக் கூறினீர்கள். அவை என் சங்கல்பத்தால் வெளி வந்தவை.  அந்த ஸ்லோகத்தைக் கொண்டு நீங்கள் நாரதர் கூறிய ராமன் என்னும் மகா மனிதனின் வாழ்க்கை சரிதத்தை எழுதுவீராக. உங்களுக்கு ராமனின் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவும் உள்ளது உள்ளபடியே தோன்றும் !! " என்று ஆக்ஞை கூறி மறைந்தார்.;

மந்திரம் என்ற பழம் அமைப்பிலிருந்து வேறுபட்டு "ஸ்லோகம்" என்ற ஒரு புது வகைக் கவிதை பிறந்த தருணம் அது. வால்மீகி பாடியது அனுஷ்டுப் என்னும் சந்த வகையைச் சார்ந்தது. 32 அக்ஷரங்கள் கொண்டது. உலகின் முதல் மானுடக் கவிதை அது. 

இந்த மூன்று நிகழ்வுகளும் சேர்ந்ததே ராமாயணத் தருணம். அது ஒரு பொன் தருணம் என்று வழி வழி மகான்கள் வியந்து கூறுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ? ஒரு காவியம் ஒரு சாபம் போன்ற பாட்டால் துவங்குவதா ? என்று நண்பர்கள் கேட்கலாம்.  அதில் தான் இருக்கிறது அந்தப் பொன் முடிச்சு. அந்த ஸ்லோகம் உண்மையில் வேடன் நிமித்தமாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் அது புருஷோத்தமனான , திருமாலுடைய ஸ்தோத்திரம் ஆகும். இதோ மீண்டும் பொருள் எழுதுகிறேன்.

மா நிஷாத - ஓ ,  லக்ஷ்மி நிவாஸரே !
 த்வம் - நீவீர், 
காம மோஹிதம்- காம வயப் பட்ட 
கிரௌஞ்ச - அசுர 
மிதுநாத்- தம்பதிகளில் (ராவண - மண்டோதரி) 
ஏகம்- ஒருவரைக்
அவதீ :- கொன்று 
ஸாஸ்வதீ  ஸ மா:  -என்றும் நிலைக்கும் 
பிரதிஷ்டாம் - புகழை 
அ கம; - பெற்றீரே 

ஓ , திருமகளுரை திருமாலே ! நீர் காம வயப்பட்ட அசுர தம்பதிகளுள் ஒருவரை வீழ்த்தி , என்றும் நிலைக்கும் புகழை அடைந்தீரே !

எப்போதும் , ஒரு காவியம் தன உட்பொருளை முதலில , சுருங்கக் கூறி பிறகு விரித்துக் கூறும். இது நியதி. (காவ்ய அர்த்த ஸூ சனம் கஸ்சின் ஆதயம் ஏவ நிரூப் யதே ). அது போல இது இந்த மகா காவியத்தின் மங்கள ஆரம்பம் . 

அதை சாத்தியமாகிய இந்த நிகழ்வுகளே அந்த பொன்னான " ராமாயணத் தருணம் "




Saturday, June 15, 2013

மார்க்சீயம் இன்று எதனால் நிலை நிற்கிறது ?

மார்க்சியம் இன்று  எதனால் நிலை நிற்கிறது ?
( இந்த கடிதம் நான் தமிழ எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதியது . அவர் தன இணைய தளத்தில் அந்தக் கடிதத்தை பிரசுரித்தார். இது என் நண்பர்களுக்காக இங்கே மீண்டும் வெளியிடப் படுகிறது. )

திரு ஜெயமோகன்
உங்கள் மார்க்சீயம் பற்றிய கட்டுரைகள் மூன்றையும் படித்தேன். கூடவே ‘மார்க்சீயம் தேவையா ?‘ முதலிலேயே படித்தது. இணைய தளத்தில் தமிழில் இந்தத் தலைப்பில் மிக விஸ்தாரமான , ஆழமான எழுத்துக்கள் இவையே.
எனக்கு இது குறித்த புரிதல் குறைவு. இருந்தாலும் மார்க்சீயம்,  நடைமுறைக்கு ஒவ்வாது என்ற உள்ளுணர்வு மட்டும் இருந்தது. நான மூலதனமோ மற்றைய அடிப்படை நூல்களோ படித்ததில்லை. ஒரு சித்தாந்தம் எவ்வாறு செய்முறைப் படுத்தப் படுகிறதோ, அவ்வளவே அதன் சிறப்பு என்பதில் எனக்குத் தெளிவான உடன்பாடு உண்டு. சந்தோஷ் அவர்கள் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு அதே நியாயத்துடன் பதில் சொல்லியுள்ளீர்கள்.
நீங்கள் சொல்லாமல் விட்டவை என்று எனக்குப் படுகின்ற சிலவற்றை இங்கே கூறுகிறேன். கம்யூனிசம் இயற்கை சித்தாந்தம் அல்ல. அது ஒரு எதிரிய விளைவு (reactionary movement) இயக்கம். அது முளைக்க வேண்டுமானால் அப்படிப்பட்ட நிலம் வேண்டும். ஒரு பாரம்பரிய இந்திய  விவசாயியிடம் போய்க் கம்யூனிசத்தைப் பற்றியும் முதலாளித்துவ ஆதிக்கத்தையும்  பேசினால் அது அவனிடம் எந்தவித சலனத்தையும் உண்டுபண்ணாது. ஆனால் அதே விவசாயி,தன் தொழிலைக் கைவிட்டு , ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குப்  போகட்டும், அடுத்த கணமே மார்க்சீயம் அவனுக்கு நியாயமானதாகப் பட்டுவிடும். இது,வேதம் ஓதும் ஒரு பாரம்பரிய பிராம்மணன், ஒரு நாவிதன், வண்ணான், கொல்லன், நெசவாளி, எல்லாருக்கும் பொருந்தும்.
கொல்லன்,  பிராம்மணன் முதலானோர், தன் தொழிலைத் தன் தந்தையிடம் இருந்து பெற்றவர்கள் . அங்கே ஏது முதலாளியும் சுரண்டலும் ? அங்கே மார்க்சியம் செல்லாது. அவர்கள் முதலாளித்துவ அமைப்பில் ஏதாவதொரு துருவத்தில் அமரும் போது மார்க்சீயத்துக்கு சாதகமாகவோ பாதகமாகவோ நிலைப்பாடுகளை எடுப்பார்கள். நீங்களே அரசுப் பணியில் அமர்ந்தவுடன் தொழிற்சங்கம் உங்களைக் கவர்ந்து விட்டது. அதிலும் மார்க்சிய சங்கமே உங்கள் இதயத்தில் இடம் பிடித்தது. என் சகோதரர் முறை உள்ள ஒருவர்,அரசு வங்கியில் சேர்ந்து நீங்கள் கூறும் மார்க்சிய யூனியனில்தான் சேர்ந்தார்.ஒரே வித்தியாசம் உங்கள் பக்குவம் அவருக்கு இல்லை.
ஆக,மார்க்சீயம் வளர ஐரோப்பிய மாதிரியான நிலவுடைமை அமைப்பு தேவை. ஆங்கிலேயர் வரும் வரை இங்கே அந்த அமைப்பு இல்லை. நிலம் ஒரு செலாவணியாகக்  கூடிய பொருள் இல்லை (saleable commodity). எல்லாம் மானிய நிலங்கள். ஒருவன் ஊரை விட்டால் நிலமும் போய் விடும். வெள்ளையர் தான் இந்தப் பட்டா முறையைக் கொண்டு வந்தனர். அங்கிருந்து தான் நிவந்தம் , மானியம் எல்லாம் போய்ப் பிரபு முறை உருவாகி விட்டது. ரியல் எஸ்டேட் என்ற துறை உருவாயிற்று.
இந்தப் பிரபு முறைதான் நீங்கள் சொன்ன மாநிலங்களில் மார்க்சியத்தை உருவாக்கியது. சொல்லப் போனால் இவை இரண்டும்  complimentary.  ஒன்றை  ஒன்று  சார்ந்தவை .முதலில் கம்யூனிச சித்தாந்தம்,மேல்தட்டு அறிவுஜீவிகளின் தேநீர் விவாதத்துக்கு மட்டுமே பயன் பட்டது. பிற்பாடு கூலித் தொழிலாளர்களால் தான் பாமரப் படுத்தப் பட்டது. அதுவும் குறிப்பாக வெள்ளாளர்களால். அவர்கள் நுழைந்ததும் தான் கம்யூனிசம் பரவலாகியது. வரவேற்பும் பெற்றது. வெள்ளாளர்களுக்கு சமூக ரீதியில் பிராம்மணர்களும் , உத்தியோக ரீதியில் முதலாளிகளும் எதிரிகளானார்கள். இது பிரபு முறை வந்த பின் (1802 க்கு மேல் )  நடந்தது. அதற்கு முன் ஒரு கிராம ரீதியில் யாரும் யாருக்கும் எதிரி இல்லை.
இதன் இன்னொரு விளைவு,தலித்துகள் தனிமைப்படுத்தப்பட்டது. நடுத்தட்டான வெள்ளாளர்,அரசியலை மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தனர். அதுவும் 90 களில் இது முறைப் படுத்தப் பட்டது வி பி சிங் காலத்தில். வெள்ளாளர் தங்கள் கிராம மனப் பாங்கை  விடாதவர்கள். தலித்துகளை ‘எப்போதும்’ போல் நடத்தினர். இந்த நேரத்தில் கம்யூனிசம்,தன் தலித்துகளைத் தக்க வைத்துக் கொள்ளப் பாடுபட்டது. இந்த நேரத்தில் வெள்ளாளர் கட்சிகள் வரிசையாக முளைத்து விட, கம்யூனிசத்தின் பார்வை தலித்துகளை நோக்கித் திரும்பியது. இருந்தும் தங்கள் வெள்ளாள ஆதரிப்பைக் காட்ட அவ்வப்போது முயன்றே வந்தது. 2007 களில் ஐ ஐ டி  27  சதவீத   இட ஒதுக்கீடு ஒரு உதாரணம். சீதாராம் எச்சூரி இந்த விஷயத்தில் பிடிவாதமாக நின்றது குறிப்பிடத்தக்கது. கடைசியில் காரத்தும் இதற்குப் பணிந்தார்.
நான்,அறிவிக்கப்பட்ட இந்துத்துவ வாதியல்ல என்றாலும் அதன் சார்பு நிலைப்பாட்டைக்  கொண்டவன். இந்துத்துவமும் ஒரு எதிரிய விளைவே. நம் தேசியப் பண்பாடுகளை, அதன் ஆணிவேர்களைக் குறி வைத்துத் தாக்கும் நிலை வந்த போது பிறந்தது தான் அது . அதன் குறிக்கோள்கள் நிறைவேறிய பிறகு அதன் தேவை இருக்காது. (it is time bound) இதன் நோக்கமே பழையதை, சிறந்ததை  நிலை நிறுத்தல்.இதற்கு ஒன்றும் பெரிய படிப்பறிவோ ,  அலசும் சக்தியோ தேவையில்லை. இதன் காரணம்தானோ என்னவோ, இந்துத்துவ களத்தில்  மார்சியவாதிகள் போல் படைப்பாளிகளும் , பேச்சாளர்களும் உருவாகவில்லை. ஆனால் அங்கும் சிலர் உள்ளனர். ஆனால் கம்யூனிசமோ இத்தகைய அறிவுஜீவித் தனத்தை ஏவி இதற்குப் பிறகு என்றென்றும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் அமைப்பை உருவாக்க முனைகிறது. (it is not time bound) . இது தான் அதன் அபாயம்.
நகர்ப்புற சேரிகளில் மார்க்சிய இயக்கத்துக்கு இருக்கும் வரவேற்பு கிராமங்களில் இருக்கவே இருக்காது. நகரத் தொழிலாளி அதிக கூலி வாங்கினாலும் இதே நிலை. காரணம் வருணப் பாகுபாடு ஸ்திரமாக உள்ள இடங்களில் மார்க்சியம் செல்லாது.
மார்க்சியத்துக்கும் இந்துத்துவத்துக்கும் உள்ள இன்னொரு அடிப்படை வேறுபாடு ,கருத்து சுதந்திரம்,மற்றும் கருத்து வேறுபாட்டை அங்கீகரிப்பது. எண்பதுகளில் நான கல்லூரியில் படிக்கையில் திரு கோவிந்தாச்சாரி அடிக்கடி என்னைக் கோவையில் சந்திப்பார். ஒரு நாள் அவரிடம் விவேகானந்தர் மற்றும் சங்கரர் தான் நமக்கு வழிகாட்டிகள் என்று சற்று முதிர்ச்சி அற்ற பாணியில் கூறினேன். அவரோ உடனே சங்கரரைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒரே போடாகப் போட்டார். பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு வைணவர் என்று. இருந்தாலும் அங்கே செயல் முறையில் எந்த விரிசலும் இல்லை. இந்த மாதிரி விஷயங்கள் கம்யூனிசத்தில் சாத்தியமே இல்லை.
மார்க்சியமும்,முதலாளித்துவமும் அதிகாரத்தை மையத்தை நோக்கித் திருப்புபவை (centralization ). ஆனால் நம் இயல்பான வாழ்க்கை முறையோ பரவலாக்கத்தை (decentralization) அடிப்படை ஆகக் கொண்டது. வெள்ளையன் வருவதற்கு முன்னர் வரை ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாகவே இருந்திருக்கிறது. சாணக்கியரும் கூடப் போரிலும்  கிராமத்தைத் தொடக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.  முஸ்லிம் மன்னர்களும் இந்த முறை அவர்களின் வரி வசூலிபபுக்கும் ஆட்சிக்கும் சாதகமானதாக இருந்ததால் அந்தத் தொன்று தொட்ட முறையை ஆதரித்தனர்.
முதலாளித்துவம்,வெள்ளையனின் கண்டுபிடிப்பு. இயல்பும் கூட.  கம்யூனிசமும் அப்படியே. நம் நாட்டில் இதில் ஏதாவது ஒன்று இருக்கும்  வரை மற்றது இருக்கும்.

வேங்கடசுப்ரமணியன்