Sunday, July 25, 2010
சுப விரயம் - ஒரு சிறு கதை
"அய்யா, கிட்டய்யர் வந்திருக்காருங்க !" சிப்பந்தி கூறினான்
கிட்டு உள்ளே நுழைந்தார். கையில் எப்போதும் போல் ஒரு டயரி. இன்று கூடவே சில காகிதங்கள். இவரைப் பார்த்து நமஸ்கரித்து புன்னகைத்தார்.
"வாங்க கிட்டு சார் " என்று எழுந்து உபசரித்து விட்டு மனோகர் உட்கார்ந்தார். அவரைப் பார்த்தாலே மதிக்கத் தோன்றும். என்றுமே வெள்ளை வேட்டி சட்டை தான். கிட்டு நேராக விஷயத்துக்கு வந்தார். " இன்னிக்கு பேங்குல இருந்து மில் சைட் பார்க்க வர்றாங்க.நம்ம பத்து மணிக்கு அங்கே இருக்கணும். பன்னிரண்டு மணிக்கு நம்ம ஓட்டல் புது கிளை பீளமேட்டுல மூன்றாவது கிளை துவக்க விழா. சுகி சிவம் பேச்சு இருக்கு. கிளம்ப மணி ரெண்டாயிடும். அஞ்சு மணிக்கு காலேஜ் விழா"
மனோகர் கிட்டு அய்யருடன் கிளம்பினார். "இவரையா சுவாமி அப்படிச் சொன்னார் ?"
மனோகருக்கு அந்த நாள் இன்றும் நன்கு நினைவிருந்தது . அன்று மனோகர் குழம்பிய மனத்துடன் தான் வழக்கமான பௌர்ணமி சந்திப்புக்குச் சென்றார். ஓட்டலில் பணக் குளறுபடிகள், மில் கட்டுவதில் தொய்வு, மகனின் சந்தேகமான நடவடிக்கைகள், மாப்பிள்ளையின் ஊதாரித்தனம் எல்லாம் சேர்ந்து அன்று அவரை உச்ச கட்ட விரக்தியில் ஆழ்த்தியிருந்தன.
மனோகரன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அவரின் தலையை வாஞ்சையோடு தொட்ட சுவாமி 'சௌக்கியமா ?' என்று ஆதுரமாய் விசாரித்தவுடன், மனோகருக்கு கடந்த மாத மன உளைச்சல்கள் எல்லாம் கரைந்து விட்டது போல் இருந்தது. பழங்களை சமர்ப்பித்த பிறகு சுவாமி எல்லோரையும் அமரச் செய்தார்.
அப்போது சீடர்கள் பஜனையை ஆரம்பித்தனர். இந்த ஒரு நாளை மனோகர் என்றுமே தவற விட்டதில்லை. பிரதி பௌர்ணமி சுவாமி மக்களுக்காகவே இருப்பார். சிரிப்பு, உபசரிப்பு, சிறிய உபதேசம், புத்தகங்கள் அன்பளிப்பு என்று ஒவ்வொருவரிடமும் தனிக் கவனம் செலுத்துவார். இன்று மனோகர் பஜனையில் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார். ஒவ்வொரு பாட்டும் அவருக்கு புது உற்சாகத்தைத் தந்து கொண்டிருந்தது.
மாலை எல்லோரும் கிளம்புகையில் , சுவாமி மனோகரை அழைத்தார். கண்களாலேயே 'என்ன' என்பது போல விசாரிக்க, மனோகர் அது வரை அடக்கியிருந்த சோகங்கள் அங்கே பீறிட்டன. கண்களில் நீர் தழும்ப தன் துக்கங்களை விவரிக்க, சுவாமியோ, " கிருஷ்ணா ! இத்தனை சோகமா ? முக்தியை மட்டும் ஒன்றாக வைத்த நீ பந்தமும் ஏன் அதுபோல் ஒன்றாக வைக்கவில்லை ?" என்று தன் முன்னே இருந்த வேணுகோபாலனின் திருவுருவத்தைப் பார்த்து வினவினார் .
சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, மனோகரனை நோக்கி, உங்களுக்கு ஒரு நல்ல உதவியாளர் வேண்டும் . சரியா ? என்று விட்டு மனோகரைப் பார்த்தார். மனோகருக்கு அது சரியா தவறா என்று சொல்ல முடியவில்லை. ஸ்வாமியே தொடர்ந்தார், " இங்கே கிட்டு என்ற சீடர் இருக்கிறார். அவரை நீங்கள் இரண்டு வருடம் வைத்திருக்கலாம். தற்போது தான் ஒய்வு பெற்றவர். அவரை அனுப்பி வைக்கிறேன் " என்று முடித்தார்.. அப்போது மற்றவர்களும் வந்து விடவே, மனோகர் விடை பெற்றார்.
பௌர்ணமிக்கு இரண்டாம் நாள் கிட்டு அவரைச் சந்தித்தார். அவரை கம்பனியின் விருந்தினர் அறையில் தங்க வைத்து விட்டு , சுவாமிக்கு போன் செய்தார் மனோகர். " வந்து விட்டாரா ? நல்ல மனிதர். எதையும் நம்பிக் கொடுக்கலாம். " பின்பு சிரித்து விட்டு , "உங்க பணமும் , சொத்தும் பத்திரமாப் பாத்துக்குங்க . ஹரி ஓம் " சுவாமி போனை வைத்து விட்டார். மனோகருக்கு அந்த சிரிப்பின் பொருளும், கடைசி வார்த்தைகளின் பொருளும் புரியவில்லை.
கிட்டுவோ , எத்தனை வேலை கொடுத்தாலும் , அசராத ஆளாக இருந்தார். முதலில் அவருக்கு ஓட்டல் பொறுப்பைத் தான் கொடுத்தார். இரண்டாவது நாள் அவர் முன் இருபது ஊழியர்களின் வேலை நீக்கப் படிவத்துடன் வந்தார். அன்னூரில் இருபது விவசாயிகளிடம் நேரடி ஒப்பந்தம் போட்டு காய் கறிகளும் தேங்காயும் வாங்க ஏற்பாடு, சாப்பாட்டு மெனுவில் மாற்றம், முகப்பில் பிள்ளையாருக்கு அனுதினமும் ஒவ்வொரு அலங்காரம் என்று ஒரே மாதத்தில் பல மாற்றங்கள். மனோகரும் அவரது பணப் பரிமாற்றங்களை உற்றுக் கவனித்தார். ஒரு சிலரிடம் குறுக்கு விசாரணையும் செய்தார்.
எல்லாரும் அவரை ஒரு மகானாகவே பார்த்தனர். அன்னூர் விவசாயிகளில் ஒருவர் , " சார், கிட்டய்யரைப் போல கிடைக்குமா சார் ? என்னை கந்த புராணம் தினமும் படிக்கச் சொன்னார். என் மகளுக்கு கல்யாணம் நிச்சயமாக ஒரு ஸ்லோகம் எழுதிக் கொடுத்திருக்கார் " என்று புகழாரம் பாடினார். புதிதாக போர்டு எழுதிய ஓவியன், பலசரக்குக் கடை செட்டியார் எல்லாம் ஏறக்குறைய இதே போன்றே தான்.
சிப்பந்திகளோ , ஒரு படி மேலேயே புகழ்ந்தனர். " தினமும் பிரார்த்தனை பண்ண பிறகு தான் வேலை ஆரம்பிக்கச் சொன்னார் சார் . அவரும் கூடவே இருந்து சொல்வார் சார். எங்களுக்கு எல்லாம் புது பாயும் , போர்வையும் குடுத்தார் சார். ". முன்னமே இந்தசலுகையைக் கிட்டு கேட்ட போது, மனோகர் தயங்க , கிட்டு தான், " இத்தனை நாள் ந்யூஸ் பேப்பர் விரிச்சு தூங்கறாங்க. முழுசா தூங்காம பகலில் எப்படி வேலை செய்வாங்க ? " என்று நேராக அவர்கள் தூங்கும் ஹாலைக் கூட்டிக் கொண்டு போய் காட்ட, மனோகர் வெட்கத்தில் சிறுத்து விட்டார். மூன்றாயிரம் சதுர அடிக்கு இரண்டே ஜன்னல்கள் !
" சார் இவங்களுக்கு ஏதாவது செய்யணும். நீங்களே சொல்லுங்க" என்று கிட்டுவைக் கேட்க, அவரோ , " இந்த கீழ் தளம் அவங்க தங்க வைக்க தகுதியில்லாதது. இங்கே சாமான்களும் , காய் கறிகளும் வச்சுக்கலாம். மூணாவது மாடியிலே இருக்கற ஸ்டோர் ரூம் அவங்களுக்குக் குடுங்க " என்று சிபாரிசு செய்ய உடனடியாக அது அமலுக்கும் வந்து விட்டது. எல்லாருக்கும் மாதம் ஒரு முறை பஜனை , மனோகரனுடன் நேரடி சந்திப்பு, அதிக சம்பளம் என்று சலுகைகள் பொழிந்தன.
இரண்டு மாதத்தில், ஓட்டல் நிமிர்ந்தது. காந்தீபுரத்தில் மனோகருக்கு பழைய வீடு இருந்தது. அதை இன்னொரு ஓட்டலாக மாற்றச் சொன்னார் கிட்டு. வீட்டை சிறிய மாற்றங்களுடன் , குறைந்த செலவில் புதுப்பித்து ஆரம்பிக்க, அது சக்கைப் போடு போட்டது. கிட்டு தினமும் இரவு வசூல் தொகையை எஸ் எம் எஸ் செய்வார். புதிய ஓட்டல் , பழைய ஓட்டலின் வசூலை நெருங்கிக் கொண்டிருந்தது.
மனோகருக்கு அப்போது தான் சுவாமி நினைவு வந்தது. கிட்டுவிடம் , " அய்யா , நீங்க சுவாமி சொல்லி வந்தீங்க. அவரை நினைவு படுத்தீட்டே இருக்கீங்க. பணப் பிரச்சினை இப்போ இல்ல . இப்போ உங்கள் அறிவுரை என்ன ? " என்று கேட்க , " உங்க மகன் பேரில் ஒரு ஏழைக் குழந்தைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் ஒரு ஆசிரமம் ஆரம்பிங்க " என்று விட்டு மனோகரை உற்றுப் பார்த்தார். மனோகருக்கு அப்போது தான் மகன் செல்வம் நினைவு வந்தது. முன்பெல்லாம் ஓட்டலில் இருக்கும் கேஷியரிடம் மிரட்டிக் காசை வாங்கிக் கொண்டு போய் விடுவான். இப்போதோ ? கிட்டு அய்யர் செய்த மாயம் தான் !
அன்று இரவு அவர் மனைவி படுக்கையில் , " ஏங்க ! நீங்க செல்வம் கிட்ட பேசிக் கூட நாளாச்சு. அவன் என்ன பாவம் பண்ணினான்.? நீங்க பேசாதது அவனுக்கு ரொம்ப வருத்தம். உங்களுக்குத் தெரியுமா, நேற்று அவனோட பிரின்சிபால் கூப்பிட்டு அவனோட பிராஜக்ட்டு தேசிய அளவில தேர்வு ஆகியிருக்குன்னு சொன்னார். அவனோட புது அறுவடை கருவிக்கு 'மனோவெஸ்ட்' என்று உங்க பேர் வெச்சிருக்கான். இதோ பாருங்க அவன் போட்டோ " என்று காட்டினார். மனோஹருக்குப் புல்லரித்தது. அதில் ஒரு பெரிய இயந்திரத்தின் முன் செல்வம் நின்றிருந்தான். அசப்பில் தன் தாத்தாவை நினைவு படுத்தும் தோற்றம்.!
அவர் மனைவி தொடர்ந்தார் ," எல்லாம் கிட்டு அய்யர் தாங்க அவனை இப்படி மாற்றினது.
மனோகருக்கு எல்லாம் தெரியும் . செல்வத்துக்கு தன் சொந்த மதிப்பு தெரிய வேண்டும் என்று தான் இத்தனை நாளும் மௌனம் காத்தார்.
கிட்டு அய்யரிடம் செல்வம் மாட்டினதே ஒரு தனிக் கதை. ஒரு நாள் செல்வம் தன் நண்பர்களுடன் காரில் வந்து , நேராக காஷியரிடம் பணம் கேட்க , அவர் இதோ வர்ரேன் என்று விட்டு கிட்டு அய்யரிடம் சொல்ல, சமையல் கட்டில் இருந்த அவர் , ஓடி வந்தார். " ஒ, செல்வம் நீ தானா ? வாப்பா ! உன்னைத் தான் பார்க்கனும்னுட்டு இருந்தேன் என்றபடி அவன் கையைப் பிடித்துக் கொண்டார். காஷியரைக் கூப்பிட்டு, சாருக்கும் அவர் நண்பர்களுக்கும் சாப்பிட ஏற்பாடு பண்ணுங்க " என்று அவரை விரட்டினார்.
திடீரென்று எதோ நினைத்துக் கொண்டவராக , "தம்பி , கொஞ்சம் கல்லால உக்காருங்க. இதோ காய்கறி சப்ப்ளையர் வந்திருக்கார். அனுப்பிச்சிட்டு வந்துடறேன். " என்று விட்டு உள்ளே ஓடினார். செல்வத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அய்யர் சொன்ன மாதிரி அடுத்த அரை மணி நேரம் பணம் வாங்கிப் போட்டுக் கொண்டு இருந்தான். அப்போது காஷியர் கையில் காமராவுடன் ஓடி வந்தார். "சார்! அப்படியே உட்காருங்க . ஒரு போட்டோ எடுக்கறேன் " என்றவாறு பல போட்டோ எடுத்து விட்டார்.
அய்யர் அப்போது செய்த வேலை அவனை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு பெரும் கூட்டத்தையே கூட்டிக் கொண்டு வந்து விட்டார். " இவங்கல்லாம் நம்ம அலுவலக பணியாளர்கள் " என்றவாறு எல்லாரயும் அறிமுகப் படுத்தினார். பின்பு செல்வத்தை சமையல் அறை, குளிர் சாதன அறை, தாங்கும் வளாகம் எல்லாம் சுற்றிக் காண்பித்தார்.
செல்வத்துக்கு இதெல்லாம் புதிது. அவனை எல்லாரும் சின்னப் பையனாகவே கருதி வந்தனர். ஆனால் கிட்டு அய்யர் ?
அப்போது அவர்களிடம் சொல்லிக் கொண்டு போக ஒரு உயரமானவர் வந்தார். பார்த்தாலே விவசாயி என்று தெரிந்தது. "ஐயரே , வரட்டுங்களா ? அந்த உரம் இல்லாம வளர்த்த கீரை எப்படீன்னு சொல்லுங்க " என்று சொல்லி விட்டுக் கிளம்ப , "அய்யர் அவரை நிறுத்தி, கவுண்டரே , இவர் யார்னு கேட்காமலே போறீங்களே " என்று அழைக்க , அவரும் கேள்விக்குறியோடு செல்வத்தைப் பார்த்தார். "இவரு நம்ம முதலாளியோட மகன் செல்வம். எஞ்சினியரிங் படிக்கறார்." என்று அறிமுகப்படுத்த , அவரோ, "அடடே, மன்னிக்கணும் கண்ணு. பார்த்தாலே பெரிய இடத்துப் பையன் மாதிரி தெரியுது. நல்லா இருக்கீங்களா " என்று கேட்டு விட்டு வணக்கம் போட்டார். செல்வமும் பதில் வணக்கம் போட்டான்.
மூவரும் திரும்பி நடந்தனர் , " செல்வம் எஞ்சினியரிங் கடைசி வருஷம் தானே ! பிராஜக்ட் வருமே ? என்ன பண்ணறதா உத்தேசம் ? இதோ கவுண்டருக்கு உதவற மாதிரி ஏதாவது பண்ணுங்க . அவரு பெரிய விவசாயி " என்று விட்டு அவரைப் பார்க்க , கவுண்டர் செல்வத்தை நோக்கித் திரும்பி, "தம்பி நீங்க அறுவடை எந்திரம் ஒண்ணு பண்ணுங்க . இப்ப இருக்கறது எல்லாம் இந்திய நாட்டுக்கு பொருந்தாது . நம்ம தோட்டத்துக்கு கட்டாயம் வாங்க " என்று அழைப்பு வைத்து விட்டு விடை பெற்றார்.
அதற்குள் அவர்களுக்கு சிற்றுண்டி தயாராக இருந்தது . செல்வம் அப்படியொரு உபசாரத்தை அனுபவித்ததே இல்லை. அவன் நண்பர்களோ வாயடைத்தே போயினர். போகும் போது , " செல்வம் பணம் ஏதாவது வேணுமின்னா என்கிட்டே கேளு . உன் பேர்ல ஒரு அக்கவுன்ட் ஆரம்பிக்க சொல்லி பாங்க மானேஜர் கிட்ட பேசியாச்சு. நாளைக்கு செக் புக் அனுப்பறேன்." என்றார்.
மனிதர் அடுத்த நாள் காலை காலேஜு வாசலிலேயே இருந்தார் . " ஏர்போர்ட் வேலை இருந்தது. அப்படியே உன் கிட்ட செக் புக் குடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன் " என்றவர், உங்க டிபார்ட்மென்ட் ஹெட் யாரு ? அவரண்டை கொஞ்சம் பேசணுமே ? " என்றார்.
பேராசிரியர் அனந்த கிருஷ்ணன் கிட்டு அய்யரிடம் மயங்கியே போனார். அவரும் சுவாமியின் சிஷ்யர் . சற்று நேரம் பேசி விட்டு செல்வத்தின் பிராஜக்ட் பற்றிப் பேசினார். அறுவடை எந்திரத்தைப் பற்றிச் சொல்ல , அவரோ " பிரமாதம் ! நான எல்லா வகையிலும் ஒத்தாசை செய்யறேன் " என்று உறுதி வேறு கொடுத்தார்.
என்ன நடக்கிறது என்று உணரும் முன்பே செல்வத்தை வேலைகள் சூழ்ந்து கொண்டன. அவன் நண்பர்கள் கிட்டு அய்யரிடம் மகுடியில் மயங்கிய நாகங்கள் போன்று இருந்தனர்.கவுண்டர் தனது தோட்டத்தில் இவர்களுக்கு ஒரு கொட்டகையே போட்டுக் கொடுத்து விட்டார். அய்யர் அங்கே ஊரில் இருந்த ஒர்க் ஷாப் ஒன்றுடன் பேசி செல்வத்துக்கு தேவையான பாகங்களைச் செய்ய சொல்லி விட்டார்.
அதன் பலன் தான் இன்று செல்வத்துக்கு ஜனாதிபதி விருது. செல்வம் காலேஜில் நாளை மாணவர்களை விடை அனுப்பும் நாள் வேறு. செல்வம் அய்யரிடம் தனியாகப் பேசி பீளமேட்டில் ஒரு கிளை ஓட்டல் ஆரம்பிக்குமாறு சொல்லி இருக்கிறான். அய்யரும், அது பற்றி ஆலோசித்து பார்க்க, அங்கே ஒழுங்கான ஓட்டலே இல்லை என்றும் , நன்றாக ஓடும் என்றும் செல்வம் இப்போது வியாபாரத்துக்குத் தயாராகி விட்டான் என்றும் தெரிவித்தார். மனோகரன் ஆனந்தத்தில் திளைத்தார்.
" அய்யர் சார். நீங்க சொன்ன மாதிரியே செல்வம் பேர்ல ஆசிரமம் ஆரம்பிச்சுடலாம். எவ்வளவு பணம் ஒதுக்கணும் ? " என்று கேட்க , " ஒரு கட்டிடமும் , பணமா இருபது லட்சமும் தேவைப்படும். இதோ விவரம் " என்று கிட்டு அய்யர் ஒரு காகிதம் நீட்டினார். "இருபது லட்சமா ? " மனோகர் தயங்கினாலும் , இரண்டே மாதத்தில் தன் வருமானத்தை இரட்டித்தவரிடம் வாதாடாமல் , "செஞ்சுடுங்க . பேப்பர் ஒர்க் எல்லாம் ஆடிட்டர் கிட்ட சொல்லி செய்யச் சொல்லுங்க " என்று விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டார். என் மகன் பேரில் வேறு அல்லவா நடக்கிறது ?
மனோஹருக்கு அது மட்டும் புதிராகவே இருந்தது " இந்த மனிதரைப் பற்றி ஏன் சுவாமி அப்படிச் சொன்னார்? "
காரில் திரும்புகையில் மனோகரனுக்கு மில் விவகாரம் நினைவு வந்தது . போன வாரம் தான் மாப்பிள்ளை வந்து , தன்னுடைய பூர்வீக இடத்தில் மில் கட்டப் போவதாகவும் , மனோகரனிடம் பண உதவி வேண்டும் என்றும் கேட்டார். ஆளே மாறிப் போயிருந்தார். அய்யரிடம் ஏதும் கேட்கும் முன்பே அய்யர் விவரங்களோடு தயாராக இருந்தார். " மில் தொழில் பரவாயில்லை. ஆள் பற்றாக்குறை மட்டும் தான் . அதுக்கு ஒரு வழி இருக்கு. " அடுத்த நாளே அங்கே சென்றனர்.
அந்த ஊர்க் கவுண்டர் மரியாதையான மனிதர். " எங்க ஊர்ல பல பேரு வேற ஊர்களுக்கு போறாங்க. இங்கயே மில் கட்டினா நல்லது தான். ஒரு விண்ணப்பம் ... " என்று இழுக்க , மனோகர் " தயங்காம சொல்லுங்க ," என்றார்.
" எங்களுக்கு எல்லாம் பொன்காளியம்மன் தான் குல தெய்வம். ஆத்தா கோயில் போன வருஷம் இடி இறங்கி சேதாரமாயிடுச்சு. விக்கிரகம் மட்டும் தான் மிஞ்சுச்சு. நீங்க மில் கட்டும் போதே ஆத்தா கோயிலையும் கட்டிக் குடுத்தீங்கன்னா இந்த ஊர் ஜனங்க உங்களுக்கு எல்லா வகையிலையும் ஒத்தாசையா இருப்போம். " என்று மிக பவ்வியமாக கேட்டார்.
அடுத்த நாள் அய்யர் மில் திட்ட அறிக்கையுடன் வந்தார். கூடவே கோவிலுக்காக ஸ்தபதி கொடுத்த வரை படமும் இருந்தது. "மில்லுக்கு கட்டம் ஒண்ணரைக் கோடி ஆகும். நம்ம மாணிக்கம் குடுத்த எஸ்டிமேட். " கிட்டு அய்யர் விளக்கினார்.
"அபப கோவிலுக்கு எவ்வளவு ? ". மனோகரன் கேட்டார்.
"ஸ்தபதி பத்து லட்சம் ஆகுமின்னு சொன்னார் " என்றார் கிட்டு அய்யர்.
"இது அவசியமா ?" என மனோகரன் கேட்க , கிட்டு அய்யரோ , "அந்த ஊர்ல நம் தொழில் நடக்கப் போகுது. சொல்லப் போனா இனிமே அதுவும் நம்ம ஊர்தான். செய்யறதுல தப்பில்லை . என்னைக் கேட்டா கண்டிப்பா செய்யனும்பேன் " என்றார்.
மனோகரன் சரியென்று சொல்லிவிட்டார். அவருடைய மனமெல்லாம் அவருடைய மகள் மற்றும் மாப்பிள்ளையின் எதிகாலம் பற்றி சிந்தித்தது. மாப்பிள்ளை எப்படி மாறி விட்டார் ? அய்யர் எப்படி மாற்றினாரோ ?
அன்று மாலை காலேஜ் விழாவில் முதல்வர் செல்வத்தை ஆகோ ஒகோவெனப் புகழ்ந்தார். செல்வத்தின் இயந்திரத்தின் செயல் விளக்கம் வீடியோவோடு இருந்தது. ஒரே கரகோஷம் ! மனோகர் குடும்பமே மகிழ்ச்சியில் மிதந்தது. . வீடு திரும்புகையில் செல்வத்தை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார் மனோகரன். "அய்யர் தாம்பா என்னை இந்த அளவு ஊக்குவிச்சார் " செல்வத்தின் குரல் உணர்ச்சியால் கம்மியிருந்தது. மனோகரனுக்கு புல்லரித்தது. இந்த மனிதனிடமா ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார் சுவாமி ? ஏன் ? இந்த தடவை சுவாமியிடம் கண்டிப்பாக கேட்டு விட வேண்டும் !
அடுத்த பௌர்ணமி அன்று சுவாமியை குடும்பத்தோடு சந்தித்தார் மனோகர். " கிருஷ்ணன் அருள் உங்க கிட்ட பூரணமா இருக்கு போலே. கவலை தீர்ந்ததா ? " என்று சுவாமி ஆதுரமாய் வினவ, மனோகரோ , " சுவாமி , எல்லாம் உங்க கருணை. உங்க சீடர் கிட்டு அய்யர் என் வாழ்க்கையையே மாற்றிட்டார். என் மகன் இன்று எனக்குத் தோள் கொடுக்கத் தயாராயிடான். என் மாப்பிள்ளை நல்ல பழக்கத்துக்கு மாறீட்டார். என் தொழில் நல்ல படியா போகுது. " என்றார்.
"சுவாமியோ, ஹரே கிருஷ்ணா ! உன் கருணையே கருணை " என்று கிருஷ்ண விக்கிரகத்தை பார்த்துப் பார்த்து ஆனந்தித்தார்.
மனோகரோ சற்றுத் தயங்கி ," சுவாமி , ஒரு கேள்வி! " என்றார்.
சுவாமியோ, சிரிப்பு மாறாமல் அவரைப் பார்த்து மேலே சொல்லச் சொன்னார்.
" அன்னிக்கு கிட்டு அய்யரை அனுப்பும் போது , சொத்தையும் பணமும் பத்திரமா பாத்துக்க சொன்னீங்களே ! எதுக்குன்னு விளக்கமா சொல்லுங்க சுவாமி "
சுவாமி அதற்கு மறு மொழி பேசவில்லை. அருகில் இருந்த சீடரிடம் சொல்லி , கிட்டுவை வரச் சொல்லு என்றார். கிட்டு பவ்வியமாக நின்று நமஸ்கரித்தார்.
" எத்தனை செலவு வைத்தாய் இவருக்கு ?" என்று அவரைப் பார்த்தார்.
'" ஆசிரமத்துக்கு இருபது. கோவிலுக்கு பத்து . ஆக மொத்தம் முப்பது லக்ஷம் சுவாமி "
மனோகர், பார்த்தாயா ? நான்கே மாதத்தில் உன்னிடம் இருந்து முப்பது லக்ஷம் பறித்து விட்டார் கிட்டு. இன்னும் ஒரு வருஷம் கூட இருந்தால் என்ன நடக்கும்? "
மனோகர் சிரித்தபடி , " இந்த மாதிரி பணம் பறிக்கறதுக்கு நான என்றுமே உடன் படுவேன் சுவாமி " என்றார்.
"இதெல்லாம் ஆண்டவன் கொடுத்தது . நமக்கே எல்லாம்னு இல்லாம அதை எல்லாருக்கும் குடுக்கணும். தர்மம் தழைக்கணும். " சுவாமி எல்லாரையும் ஆசீர்வதித்தார்.
கிருஷ்ணன் எல்லாருக்கும் அருள் தரும் புன்னகையை வீசி நின்றான்.
Subscribe to:
Post Comments (Atom)
AWESOME BLOG
ReplyDeletevery touching and moving with message for community welfare and responsibility. Full appreciation. Kuppuswamy
ReplyDeleteVery nice story. loved reading it. Thanks, kiruthika
ReplyDeleteThis is a comment sent to me on mail by Sri Subrahmanhyam Srinivasan. Since he faced troubles in registering into blogger , he asked me to post it on his behalf:
ReplyDelete"Dear Venkat,
Yet another superb story, with a lesson. You have succeeded very well in conveying your mission that Happiness multiplies when shared.
Let there be more such stories.
Best wishes,
Subramanyan"
Beautiful story,carries a strong message.
ReplyDeletelove
mithila kannan
Very good story with strong message.
ReplyDeleteகொடுப்பினை குடுப்பினையாக மாறும் என்பதை நன்கு விளக்கியுள்ளீர்கள்
ReplyDeleteமகிழ்வுடன்
பாலகோபால்