மார்கழிக் குளிர் சில்லென்று நின்று குடைந்தது. நாச்சிமுத்துக் கவுண்டர் இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தார். கோவிலுக்குள் இப்போதே சில சாதுக்கள் பாட்டு ஆரம்பித்து விட்டனர். ஒரு குரல் மட்டும் இனிமையாக ஒலித்தது. அந்த ரிஷிகேசத்து சந்நியாசி போலும். மடப்பள்ளியில் சமையல் மணம் சுகமாய் நாசியில் சஞ்சரித்தது.
பட்டர் இவரை நோக்கி வந்தார் " கவுண்டர் வாள் ! இன்னிக்கு ராத்திரிக்குள் பெரும்பாலும் பாகவதர்கள் எல்லாம் வந்துடுவா . தங்க வைக்க சில வீடும் தயார் செஞ்சிருக்கேன். கோவில் பிரகாரத்திலேயும் சில சாதுக்கள் தங்குவா. உங்க ரைஸ் மில் குடோனில கொஞ்சம் பேரை படுக்க வைக்க அனுமதிக்கணும். புதுசா பாய் ஒரு அம்பது இருந்தா பரவாயில்லை. அப்புறம் ரெண்டு குடி தண்ணீர் அண்டா வாடகைக்கு வேணும். சமையல் ஆட்கள் வந்தாச்சு. சாமானும் இறங்கியாச்சு. காலை அடுப்பு மூட்டணும் " பட்டர் அடுக்கிக் கொண்டே போனார்.
கவுண்டர் பட்டருக்கு தெளிவாக சில உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு, சாமான்களுக்கு ஏற்பாடு செய்து விட்டு , திரும்பி நடந்தார். ஒன்றா இரண்டா ? ஐம்பது வருடமாக அவர் இதை விடாமல் அல்லவா செய்து வருகிறார் ? முதுமை அவரை விரட்டிய போதும் இந்த உத்சவம் அவரை பொறுத்த வரை ஒரு தவம். ஒரு பிராயச்சித்தம்.
எல்லாம் ஆறு மாதங்களுக்குள் நடந்து விட்டது. இளைஞன் நாச்சிமுத்து வின் அப்பா தான் முதல் முதலில் அந்தச் செய்தியைச் சொன்னார். உச்சவரம்புச் சட்டம் பிறபபித்தாகி விட்டது என்றும், பத்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது என்றும், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்றும் விவரித்தார்.
முத்துஸ்வாமி அய்யர் அதைக் கேட்டதும், முதலில் தன் உபரி நிலங்களை அங்கே உழுதவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டார். ஏதோ அவர்கள் கொடுத்ததை வாங்கிக் கொண்டார். கடைசியாய் பத்து ஏக்கர் மட்டும் வைத்துக் கொண்டார். அங்கே தான் அவருக்கு பிரச்சினையே எழுந்தது. அதை உழுது கொண்டிருந்த மயில்சாமி ஒரு நாள் சில முரட்டு ஆட்களுடன் வந்து , இந்த நிலம் தனக்கே சொந்தம் என்று வாதாட , முத்துஸ்வாமி இடிந்து போய் விட்டார்.
பிரச்சினை ஒரு நாள் முற்றியது. ஊர் கூடி நியாயம் கேட்டும் ஒன்றும் பயனில்லை. அரசியல் வேறு புகுந்து கொண்டது. அன்றிரவு அய்யர் நாச்சிமுத்து வின் வீட்டிற்கு வந்தார்.இரவு வெகு நேரம் பேசியதாக அம்மா பிறகு சொன்னாள். விடிந்து பார்த்தால், வண்டி கட்டி , கிளம்பி விட்டார். சங்கரன் மட்டுமே நாச்சிமுத்துவிடம், தாங்கள் மதராஸ் செல்வதாகவும், உறவினர் உதவுவதாகவும் சொன்னான். இருவரும் ஒரே வயது பள்ளித் தோழர்கள்.
நாச்சிமுத்துவிற்கு அப்போது வயது பதினைந்து மட்டும் தான். ஊரே அன்று திரண்டிருந்தது. சங்கரன் போகும் போது சொன்ன வார்த்தைகள் இன்று போல் ஒலித்தன. "ஆச்சு நாச்சிமுத்து ! எங்கப்பா நேத்து சொன்னார். இரண்டாயிரம் வருஷ சகாப்தம் முடிஞ்சு கிளம்பறோம் அப்படீன்னு.! ஒரே வருஷத்தில எங்கப்பா சொந்த ஊர்லயே அகதியாயிட்டார். வர்ரேன். எங்க வீட்டை அவர் விக்கலை. அதை பார்த்துக்கோ."
அவன் தந்தை , தாய், சகோதரி எல்லாரும் குதிரை வண்டியில் ஏறி அமர்ந்தனர். சங்கரனின் அப்பா கடைசி முறையாக அவர் வாழ்ந்த வீட்டை ஒரு முறை பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார். சங்கரனின் பார்வை கடைசி வரை கோவில் கோபுரத்தையே பார்த்தபடி இருந்தது. வண்டி மெல்ல நகர்ந்து திரும்பியது.
நல்லவர்களின் பேச்சு பலிக்கவில்லை அங்கே. அவர் நிலம் அபகரிக்கப் பட்டது. சில மாதங்களுக்குப் பின் , மயில்சாமி ஒரு கொலை வழக்கில் மாட்டி போலீஸ் பிடித்துக் கொண்டு போனது. பிறகு ஊர்க் கவுண்டரான நாச்சிமுத்துவின் அப்பா , அதை தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு, அய்யருக்கு தகவல் அனுப்பினார். அய்யர் தன் பதிலில் " அது உங்களிடமே இருக்கட்டும். பிறகு பார்க்கலாம். அதில் வரும் வருமானத்தில் மார்கழி விழாவை மட்டும் தவறாமல் நடத்துங்கள்." என்று எழுதி விட்டார். கிருஷ்ணர் கோவில் சங்கரனின் பரம்பரைச் சொத்து. மார்கழி விழாவில் ஹரித்துவாரில் இருந்தெல்லாம் சாதுக்கள் வருவார்கள். முத்துஸ்வாமி அய்யர் வைராக்கியமாக ஊருக்குத் திரும்பி வர மறுத்து, பட்டணத்திலேயே காலமானார்.
தந்தைக்குப் பிறகு கோவில் நிர்வாகம் நாச்சிமுத்துவிற்கு வந்தது.
ஐம்பது வருஷம் ! அவர் மனம் கணக்குப் போட்டது. இப்போதுதான் அவர் சங்கரனைப் பார்க்கப் போகிறார். சங்கரா , இத்தனை காலமும் உன் மனசை இவ்வளவு கல்லாவா வச்சிருந்தே ? சட்டைப் பையில் அந்த தபால் அட்டை நெஞ்சில் முட்டியது. ஹரித்துவாரில் இருந்து எழுதியிருந்தான். மார்கழி விழாவில் சநதிப்போம் என்று.
சங்கரன் அவ்வப்போது கடிதம் எழுதுவான். கல்லூரி முடித்து விட்டு சம்ஸ்கிருத விரிவுரையாளராக டில்லியில் இருப்பதாகவும் ஒரு முறை எழுதினான். தமக்கை கல்யாணம் முடிந்ததும், தந்தை இறந்ததும் குறுகிய இடைவெளியில். அதன் பிறகு வெகு காலம் தகவல் இல்லை. பத்து வருஷம் முன்பு மார்கழி விழாவுக்கு வந்த இந்த ரிஷிகேச சுவாமிதான் , சங்கரனை தான் பார்த்ததாகவும் சொன்னார் . பிறகு வந்த வருடங்களில் இவர் மட்டும் வருவார். சங்கரன் பற்றிய தகவல் ஏதும் அவரிடம் இல்லை.
சங்கரனின் வீட்டை மட்டும் இது நாள் வரை வெள்ளை அடித்து பராமரித்து வந்தார் கவுண்டர். விழாவின் போது சாதுக்கள் மட்டும் அங்கே தங்குவர்.
கோவிலுக்குள் மீண்டும் நுழைந்தார் கவுண்டர். அங்கே பாகவதக் காட்சிகளை விளக்கும் ஒரு சிறு சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. ரிஷிகேச சுவாமி ஸ்லோகங்களையும் தமிழ் விளக்கங்களையும் தந்து பிருந்தாவனத்தையே அங்கு கூடியிருந்த பக்தர் முன் காண்பித்துக் கொண்டிருந்தார். முழுதும் மழித்த முகமும் தலையும் அந்த முதிய சுவாமிக்கு. அவர் யார், எந்த ஊர் என்று யாருக்கும் தெரியாது. அவரிடம் அனைத்து பண்டிதர்களும், துறவிகளும் பெரும் மரியாதை காட்டினர். இவரோ,பரப்பிரும்மம். கோவிலில் கோவர்த்தன மலையைச் சுண்டு விரலால் தூக்கும் கோலத்தில் இருந்த கிருஷ்ணனை இமை கொட்டாமல் பார்த்தார் . கண்ணில் இருந்து நீர் தாரை தாரையாய் வழிந்தது .
அவர் மட்டுமல்ல. அந்த சுற்று வட்டாரத்தில் கோவர்த்தன கிரிதாரியின் அழகில் மயங்காதவர் யாரும் கிடையாது. சங்கரனும் , அவன் தந்தையும் இவனுக்கு தாசர்கள். "எங்க குடும்பமே அவனுக்கு அடிமை" என்று பெருமையாகச் சொல்வான்.
கவுண்டர் சுவாமியின் அருகில் போய் அமர்ந்தார். பாட்டு முடிந்து சுய நினைவுக்கு வந்தவர், "ஒ , கவுண்டரா ? இன்னிக்கு நாம சங்கீர்த்தனம் எப்படி இருந்தது ? காளிங்க நர்த்தனத்தை ரசிச்சீர்களா ?" என்று குழந்தை போல ஆர்வமுடன் கேட்க , கவுண்டர், தயக்கமாக, "சாமீ, அம்பது வருஷத்துக்கு முந்தி இங்க பஜனை நடக்கும், பெரிய அய்யரும் , சங்கரனும் நல்லாப் பாடுவாங்க. சமயத்தில உச்சக் கட்ட பஜனைல எழுந்து நின்னு ஆடவும் செய்வாங்க. நாங்க எல்லாரும் ஆட ஆரம்பிச்சிருவோம். பொம்பளைங்க விம்மி விம்மி அழும். தப்பா நினைக்காதீங்க. சங்கரன் போன பிறகு, நான பஜனைல உக்காந்ததே இல்லைங்க. மடப் பள்ளியோட சரி."
"சாமியார் இப்போது ஒரு மிடறு தண்ணீர் குடித்து விட்டு, கவுண்டரை பார்த்துச் சிரித்தார். "உங்களுக்குத் தெரியுமா ? சங்கர சர்மா இப்போ ஒரு சந்நியாசி. "
கவுண்டர் இப்போது பரபரப்பானார். " எப்படி இருக்கார் ? அவுங்க குடும்பம் ? "
சுவாமி சிரித்தார். " அவர் அத்துவித மார்க்க சந்நியாசி. அவருடைய சந்நியாச ஆசிரமப் பேரு கிருஷ்ணானந்தா. நிலையாக இப்போ எங்கும் இல்லைனும் சொன்னார். அவரைப் போன்றவர்கள் குடும்பத்தைப் பற்றிப் பேச மாட்டார்கள் "
கவுண்டர் அப்போது சங்கரன் போட்ட கடிதத்தை எடுத்து அவரிடம் நீட்டினார். ஸ்வாமிகள் அதைப் பார்த்து விட்டு பெருமூச்செறிந்தார். "சந்நியாசிக்கு கடைசி ஆசைகள் உண்டு போல. அதான் பிறந்த ஊரையும் கிரிதாரியையும் பார்க்க வர்றார் "
கவுண்டர் தள்ளாடியபடியே வீட்டிற்குத் திரும்பினார். சங்கரன் சந்நியாசியா ? இந்த ஊர்ல நடந்த கசப்புதான் அவனை இந்த முடிவுக்குத் தள்ளியதோ ? இன்னும் ஐந்நூறு வருடம் உற்சவம் செய்தாலும் சங்கரனுக்கு செய்த அநீதிக்கு பிரதியாகுமா ? நாளை அவனை எப்படி பார்ப்பது ?
அடுத்த நாள் பாண்டுரங்கன் கிரிதர கோபாலனுக்கு உத்சவம். ஊரே திரண்டிருந்தது. அபிஷேகம் முடிந்து பெரும் நாம சங்கீர்த்தனம் துவங்கியது. பாகவதர்கள் தங்கள் பக்தியால் அந்த ஊரையே மூழ்கடித்துக் கொண்டிருந்தனர். ஸ்வாமிகள் உணர்ச்சி பொங்கப் பாட எல்லாரும் கண்ணை மூடி மெய் மறந்து கிறங்கி இருந்தனர்.
கவுண்டர் தான் வாசலிலேயே தவம் கிடந்தார். ஒவ்வொரு சாதுவின் முகத்தையும் உற்று நோக்கி, சிலரிடத்தில் பேரை வேறு விசாரித்துக் கொண்டும் தவித்துக் கொண்டு இருந்தார். ஆரத்திக்கு பட்டர் அழைத்த போது கலங்கிய மனத்துடன் தான் உள்ளே போனார். "பட்டரே , உற்சவமே முடியப் போகுது.இன்னும் சங்கரன் வரலை. இப்போ அவன் இல்லாம முடிக்கறதா ?" என்று பரிதாபமாய்க் கேட்க, பட்டர் அவரை புரிந்து கொண்டவர் போலப் பார்த்து விட்டு, " எல்லாம் அவன் வேலை. அவன் கிட்ட விட்டுட்டு வாங்க. சுவாமி உங்களைக் கூபிடுறார் பாருங்க "
கவுண்டர் சுவாமிகளிடம் செல்லும் போது நெஞ்சம் கனத்தது. உள்ளே ஆரத்தி மணி அடிக்கும் போது ," விட்டல, விட்டல , கோபாலா , பாண்டுரங்கா, கோவிந்தா " என்று கோஷம். கோவிலே அதிர்ந்தது. மிருதங்கங்களும், கஞ்சிராக்களும் மதுரமாய் முழங்கின. முதல் வரிசையில் ஸ்வாமிகள் நின்று கொண்டு , கவுண்டரை அழைத்தார். இவர் அருகில் சென்றதும், ஸ்வாமிகள் கவுண்டரின் கையைப் பிடித்துக் கொண்டார். கண்ணுக்குள் கண் பார்த்து "நாச்சிமுத்து, இன்னுமா என்னை உனக்குப் புரியலை " என்று கேட்டார்.
அந்த கனிவு, அந்த நெருக்கம் ! கவுண்டர் தீயை மிதித்தது போல சற்றுப் பின் வாங்கினார். தெய்வீக நாகம் தன் உயிருக்கு உயிரான மாணிக்கத்தை வாயைத் திறந்து காட்டியது போலும். காலம் அடைத்து வைத்திருந்த புதிர்கள் விலகின. நாச்சிமுத்து வாயைத் திறக்க நினைத்தும் முடியவில்லை. சுற்றி நின்றோர் கண்ணன் நாம மழை பொழிந்து கொண்டிருக்க, சங்கரன் என்கின்ற கிருஷ்ணானந்தன் அங்கே அன்பு பொழியும் தெய்வீக முகத்தோடு "இப்போது உனக்கு மகிழ்ச்சியா நாச்சிமுத்து ?" எனக் கேட்டது தான் தாமதம். நாச்சிமுத்து வின் உள்ளே அடக்கி வைத்திருந்த உணர்ச்சி ஊற்றுக்கள் வெடித்துப் பீறிட்டன. "சங்கரா " என்ற கேவலுடன் மூர்ச்சையாகி விட்டார்.
சுய நினைவு வந்த போது கவுண்டர் சங்கரனின் கனிவான முகத்தில் தான் விழித்தார். ஊர் மக்கள் அனைவரும் கூடியிருந்தார்கள். எல்லாரும் அவரைத் தேற்றி எழுப்பி ஆசுவாசம் செய்ய, நாச்சி முத்துவிடம், சங்கரன் மெதுவாக, இப்போ எல்லாரையும் சாப்பிடச் சொல்லலாமா நாச்சிமுத்து ? " என சிரித்துக் கொண்டே வினவ , கவுண்டர் வெட்கம் மேலிட்டு எழுந்து எல்லாருக்கும் வருத்தம் தெரிவித்து விட்டு, பட்டருக்கு கைகளாலேயே சமிக்ஞை செய்ய , அவர் உடனே பந்தி ஏற்பாட்டுக்கு விரைந்தார்.
சங்கரனோ அவர் கையை விடவே இல்லை. பாகவதர்கள் திருப்தியுடன் பிரசாதம் உண்ணச் செல்ல, நண்பர்கள் இருவரும் , வெளியேறி நடந்தனர். இடது புறம் திரும்பியதும் சங்கரன் திரும்ப , நாச்சிமுத்துவும் புரிந்து கொண்டு நின்றார். அவர் வாழ்ந்த வீடு. மெள்ள உள்ளே நுழைந்தார் . நேராக பூஜையறையினுள் சென்று தங்கள் குலதெய்வங்கள் குடியிருந்த மாடத்தை பார்த்து விட்டு, ஓய்வாக வெளியே வந்து வெளித்திண்ணையில் அமர்ந்து கொண்டார்.
கவுண்டர் இப்போது தான் வாயைத் திறந்தார். "இத்தனை வருஷமும் இப்படியே பரதேசியா வந்து போய் ... என்னை ஏன் இப்படி ஏமாத்தினே ? "
சங்கரன் என்கின்ற கிருஷ்ணானந்தர் இப்போது சிரித்தார். "சன்னியாசிகளிடம் உனக்கு சகவாசம் அதிகம் கூடாது. சந்நியாசிகளுக்கும் பந்தம் கூடாது. நீயே பிரம்மம் என்று என் குரு காதில் ஓதினாலும், இந்த கிரிதாரியும், நாச்சிமுத்துவும் , பவானி நதிக்கரையும் அப்பப்ப பந்தப் படுத்திட்டுத் தான் இருந்தது. இன்று எல்லாத்துக்கும் பெரும் ஓய்வு ! உன்னுடைய நட்பின் ஆழம் இந்த ஐம்பது வருஷம் நீ நடத்துன வைபவத்தில தெரிஞ்சது. அந்தக் கிரிதாரி என்னை அத்துவைத மோக்ஷத்திற்குப் போகச் சொல்லி சம்மதம் சொல்லிட்டான். நீயும் உன்னோட நட்புல இருந்து எனக்கு விடை குடு நாச்சிமுத்து. " இதைச் சொல்லும் போதே சங்கரனின் பார்வையில் வைராக்கியம் ஏறுவதை நாச்சிமுத்து உணர்ந்தார்.
சங்கரன் அப்படியே எழுந்து , வெளியே நடந்தார். மேல் துண்டு காற்றில் பறந்து ஓடியது. சங்கரனோ நேராக நடந்தார். திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. நாச்சிமுத்து மெல்ல பின் சென்று பார்த்த போது, சங்கரன் நதிக்கரையில் அரச மரத்தடியில் பத்மாசனத்தில் இருப்பது தெரிந்தது . நாச்சிமுத்து விற்கு கால்கள் தள்ளாடின. கோவிலின் கோபுரம் தெரிந்தது. ஏதோ கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. உடலெங்கும் ரத்த நாளங்கள் பொங்கின. ஐம்பது வருட ஆயாசம் உடலெங்கும் பரவியது. அங்கமெல்லாம் பாரம் குறைந்து ஆடியது. கண் செருகியது. நீர் பெருகியது. நெஞ்சு நிறைந்தது. "கிருஷ்ணா" என்று உதடுகள் மெல்ல உச்சரித்தன.
ஆற்றங்கரைச் சரிவில் அவர் உருண்ட போது சங்கரன் அசையவில்லை. பிராணனை உச்சந்தலைக்கு ஏற்றி நிறுத்தி, ஓங்கார அணை மேல் ஏறி நின்றார். கடைசி முறையாக அவர் "அஹம் பிரம்மாஸ்மி " என்று உச்சரிக்கையில் அங்கே சங்கரன் இல்லை. பிரம்மமே இருந்தது. பிராணன் உச்சந்தலையைப் பிளந்து கொண்டு வெளியேற, மூக்கில் இருந்து ரத்தம் கசிந்தது. காலம் அசையாமல் நின்ற தருணம் அது .
பவானித் தாய் தன் இரு தவப் புதல்வர்களையும் பறிகொடுத்த சோகத்தில் மெள்ள புரண்டோடினாள்.
good narration!
ReplyDeleteThis happens?
What to do.
its all time.
SARATHY
the story is gripping ! ur narrtaive is so very good.but i would have been joyed to c a happy ending. is it not possible to explain that d two friends in their perspectives suitable to their "asramas" had communion with the Lord? d normal mind always longs fro peace n joy.
ReplyDeleteal d best.
durgalakshmi
This is a very inspiring story, may be based on some real life instance ! We can see the plight of certain communty people in Thirunelveli and Tanjore district in this story.
ReplyDeleteThe ending is a real climax. In real life we do not find such good ending .
Well done Mr Venkata Subramanian.
mugunthanchari@hotmail.com