Sunday, April 25, 2010

பேராயிரம் கொண்டான்



தமிழ்க் குடிக்கு என்றுமே கற்பனையும் தெய்வீகமும் அதிகம். வட மொழியை தேவ பாஷையாக கருதினாலும், தெய்வ துதிகளை தமிழாக்கம் செய்வதில் அவருக்கு நிகர் அவரே. சமயத்தில், துதிகளை வட மொழியிலேயே பாடினாலும், அவற்றிற்கு பெயர் மட்டுமாவது தமிழில் வைத்து விடுவர்.

வட மொழியில் 'விஷ்ணு சஹஸ்ர நாமம் " என்ற பரந்தாமனின் புகழ் பாடும் ஆயிரம் நாமங்கள் கொண்ட துதி உண்டு. நம் வைணவ நாயகர்களான ஆழ்வார்கள் துதியை சமஸ்கிருதத்தில் சொன்னாலும், தலைப்பை அருமையை தமிழில் வைத்தனர். அதுதான் " பேராயிரம்".

இந்த பேராயிரம் என்றால் என்ன ? அதன் மகிமை என்ன ?


மகாபாரதப் போர்க்களத்தில் பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் உத்தராயணத்தை எதிர் நோக்கி உடலில் உயிர் தாங்கிக் கிடக்கிறார். பேரன் அடித்த பாணங்கள் உடலைச் சல்லடையாய்த் துளைத்தும் தாய் கங்கா தேவி அளித்த வரத்தால் நினைத்த நேரத்தில் உயிர் விடும் சக்தி பெற்றவர்.

இங்கே அஸ்தினாபுரத்தில் போர் முடிந்து மன்னன் தருமன் முடி சூடுகிறான். ஆனாலும் அவன் மனதில் ஒரு கிலேசம். பதினெட்டு இலட்சம் க்ஷத்திரியர்களின் மரணத்திற்குத் தான் காரணமாகி விட்டோமோ என்று துடித்தான். துயரம் அவனை வாட்டியதைக் கண்டு வாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணன் அவனை போர்க்களத்தில் கிடக்கும் பாட்டனாரிடம் அழைத்துச் செல்கின்றான்.

தருமன் தன கொடுஞ்செயலால் போர் விளைந்ததையும் தன்னால் பெண்கள் மணாளனை இழந்ததையும் கூறி தன்னால் தருமம் வீழ்ந்து விடுமோ என்று அஞ்சுவதையும் கூறி புலம்பிப் பதை பதைத்து நின்றான். பீஷ்மர் பேரனுக்கு அங்கே தருமத்தின் சூக்குமத்தையும் , அதனை மன்னன் எவ்வாறு காக்க வேண்டும் என்றும் விரிவாக விளக்கினார்.

தருமனுக்கு அங்கே அந்த விஷயத்தில் ஆறுதல் ஏற்படினும், ஆன்மீக விஷயத்தில் ஒரு புதிய சந்தேகம் தலை தூக்கிற்று. அந்தச் சந்தேகத்தின் காரணமாகவே பீஷ்மர் தன பேரனுக்கு இந்த பேராயிரத்தை உபதேசித்தார்.

தருமனின் சந்தேகந்தான் என்ன ?

ஒன்றேயான சிறந்த தெய்வம் யார் ?
அவருக்குரிய மேலான நிலை எது ?
அவரை எப்படிப் பாடியும் துதித்தும் மானுடர் மங்களம் பெறுவர் ?
எல்லா வழிபாட்டு நெறிகளிலும் சிறந்தது எது ?
எந்த ஜபத்தினால் மனிதன் உலக பந்தங்களில் இறந்து விடுபடுகின்றான் ?

இந்த கேள்விக்கு பீஷ்மரிடம் கிடைத்த பதில் தான் புகழ் பெற்ற விஷ்ணு சஹஸ்ர நாமம் என்னும் பேராயிரம். ஒரே தெய்வம், உலக நாயகன் , அளவிலன், புருஷோத்தமனான ஸ்ரீமன் நாராயணனே என்றும், அவனைப் போற்றும் ஆயிரம் நாமங்கள் மனிதனை உய்விக்கும் என்றும் அதனைக் கேட்கும் படியும் தருமனைத் தூண்டிய வீடுமர், அற்புதமான அந்த ஆயிரம் பேர்களை பிந்தை உலகின் நற்பேற்றுக்காக அங்கே அதை திறம்பட மொழியவும் செய்தார்.

பிறக்கப் போகும் கலியுகத்தின் முக்தி நெறி நாம சங்கீர்த்தனமே என்று உணர்ந்த அப் பெருந்தகை , தாமரைக் கண்ணனாகிய மாலோனை துதிகள் மூலம் வழிபடுவதே சிறந்த தர்மம் என்பது தன கருத்தாக அங்கே மொழிகிறார். இந்நாமங்கள் உலகவழக்கில் இருந்த போழ்தும், ரிஷிகளால் பாடப்பெற்ற போழ்தும் , அதனைத் திறம்பட செம்மையாய் உரைத்த பெருமை வீடுமரையே சேரும். அதனை ஆங்கே காவியத்தில் புகுத்திய திறம் வியாசரையே சேரும்.

ஓம் விஸ்வம் விஷ்ணுர் வஷட்காரோ என்று தொடங்கும் அந்த பேராயிரம் கேட்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி " என்ற போது கோதை நாச்சியார் நாம சங்கீர்த்தனத்தையே சொன்னாள் போலும் !

இந்த சீரிய துதியைக் கேட்க , முன் வினை நல்வினை ஆக இருத்தல் வேண்டும். அமரர் எம் எஸ் அவர்கள் பாடிய பேராயிரம் இதோ கீழே. சொடுக்கி இசையைப் பெறலாம்.
பாகம் ஒன்று


பாகம் இரண்டு

பாகம் மூன்று


பேராயிரம் பெரு சிறப்புக்களைக் கொண்டது
போற்றப்படும் நாயகனாகிய கண்ணன் உடனிருந்து வீடுமனின் கூற்றை ஆமோதித்தான்.
ஆச்சாரியார் சங்கரர் முதல் முதலாக துதி ஒன்றிற்கு உரை எழுதினர் என்றால் அது பேராயிரம் மட்டுமே
மத்வரும் இராமானுசரும் புகழ்ந்தது. அவரது சீடர்களால் உரை செய்விக்கப் பெற்றது.

மேற்கூறியவை ஆன்மீகப் புகழ்கள். பக்தரின் வாழ்வில் அவை என்ன செய்தன ? என்ன செய்தது என்பதை விட என்ன செய்யாது என்றே கேட்கலாம். முனி மொழியும், ரிஷி மொழியும் பொய்க்குமா ?
வைத்திய சாத்திரம் பேராயிர ஜபத்தால் குட்டம், க்ஷயம் , விஷ சுரம் போன்ற தீர வியாதிகளும் தீரும் என்கிறது.
மந்திர சாத்திரம் இந்த ஜபத்தால் உலக வசியம்,புத்திர பாக்கியம் , படிப்பு, எதிரி ஜெயம் போன்றவை சித்திக்கும் என்கிறது.
சோதிட சாத்திரமும் தசா புத்திகளினால் ஏற்படும் தீய விளைவுகளைப் போக்க பேராயிர ஜெபமே சிறந்தது என கூறுகிறது.

இவை எல்லாம் உலகாயத விஷயங்கள். சாதகர்களை இந்த ஜபம் முக்திக்கே இட்டுச் செல்லும். முன் சென்ற யுகங்களில் பகவானுக்கு சத- சித்- ஆனந்தம் என்ற மூன்று சிறப்புக்கள் மட்டுமே இருந்தன என்றும் , கலி யுகத்திலே நாமமும் , ரூபமும் சேர்ந்து கொண்டன என்று சான்றோர் கூறுவர். அதன் படி இறைவன் தன நாமத்திலும் உறைகின்றான். யாகங்களிலே நான் ஜபம் என்று கண்ணன் குருட்சேத்திரப் போர்க்களத்திலே உரைக்கவில்லையா ?

நாமும் உய்வு பெற்று, உலகும் உய்வு பெற பேராயிரம் பெரு வழி. ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன் பெரியாழ்வார் பாடியது இது

அண்டக் குலத்துக் கதிபதியாகி
அசுரரி ராக்கதரை,
இண்டைக் குலத்தை எடுத்துக் களைத்த
இருடீ கேசன் தனக்கு,
தொண்டைக் குலத்தினுள் ளீர்வந் தடிதொழு
தாயிர நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்த்துப்பல் லாண்டுபல்
லாயிரத் தாண்டென் மினே (திருப்பல்லாண்டு - 5 )


நம்மாழ்வார் கூற்றோ இவ்வாறு

தோள்கள் ஆயிரத்தாய்! முடிகள் ஆயிரத்தாய் !
துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் ! பேர்கள் ஆயிரத்தாய் !
தமியனேன் பெரிய அப்பனே !
(திருவாய் மொழி- 8-5 -10

திருமங்கை ஆழ்வார் இதோ
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்
வாயிலோர் ஆயிர நாமம்
முள்ளிய வாகிப் போதவாங்கதனுக்
கொன்றுமோர் பொறுப்பிலனாகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப்
பிறைஎயிற்றனல் விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே (பெரிய திருமொழி 2-3- 3)

பரந்தாமன் நமக்கே உரியவன் . நாமம் சொல்லுங்கள் . தேடி வருவான் துயர் தீர்க்க.