Sunday, November 3, 2013

வணிக எழுத்து மற்றும் தரமான இலக்கிய எழுத்து

சில காலம் முன்பு ஜெயமோகன் அவர்களின் வலைத் தளத்தில் படிக்கையில், இது குறித்து ஒரு கட்டுரை தென்பட்டது. படித்ததும், மேலும் சில கட்டுரைகள் இந்த விஷயத்தில் இருந்தன.

விஷயம் இது தான். தமிழில் உருவாகும் இலக்கியங்களை அவர் இரு வகைப் படுத்துகிறார்.ஒன்று , பெருவாரியாக ஜனங்கள் படிக்கும் தின, வார, மாத இதழ்களில் வரும் கட்டுரைகள், புனைவுகள் பெரும்பாலும் வணிக நோக்குடன் இலக்கியச் சிறப்பு இல்லாமல் எழுதப் படுகின்றன என்று ஜெயமோகன் சுட்டிக் காட்டுகிறார். இந்தக் குற்றச் சாட்டும் ஐம்பது வருடங்களுக்கு மேலேயே உள்ளது போலும். க நா சு, சுந்தர ராமசாமி போன்றோரும் இதையே எழுதி உள்ளனர்.

ஜெயமோகன் முதலில் கல்கியையே இந்த வணிக எழுத்தின் முன்னோடியாகக் கருதுகிறார். (சில இடத்தில் அவரது எழுத்தை ஆதர்ச எழுத்து என்றும் கூறுவதுண்டு) .அகிலனும், நா பார்த்தசாரதியும் கூட இந்தப் பட்டியலில் தான் போடுகின்றனர். இது தமிழ் வாசகர்களை சற்று அயர வைக்கும். ஆனாலும், ஜெயமோகனும் அவரது ஆதரவாளர்களும் அடிக்கடி இதைக் கூறி வருகின்றனர். எனக்கும் முதலில் இதை ஏற்றுக் கொள்ளத் தயக்கமாக இருந்தது. கேள்வி கேட்டு  எழுதினால் பிராம்மண பாசம் போலும் என்று ஊதி விடுவார்களோ என்ற பயம் வேறு. அதனால் விட்டு விட்டேன். சமீபத்தில் ஜெயமோகன் மீண்டும் ஒரு கட்டுரை இது பற்றி எழுத. என் ஆர்வம் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது.

முதலில் கல்கியின் எழுத்து பற்றி. கல்கி தமிழில் ஒரு புது நடையை யே உண்டாக்கினார் என்று பொதுவான கருத்து உண்டு.  பொன்னியின் செல்வன் அதற்கு ஒரு உதாரணம். ஹரிதாஸ் சினிமா காலம் போன்ற சம்பிரதாய இசை மட்டுமே உள்ள சினிமாவில் இருந்து முச்சந்திக் கூத்து மட்டுமே முதலாகிப் போன நடப்புக் கால கட்டத்திலும் கூட பொன்னியின் செல்வன் மகத்தான வாசிப்பு அந்தஸ்து பெற்றுத் திகழ்கிறது. இது என்ன கல்கியின் வியாபார உத்தியா ? அப்படி என்னதான் இருக்கிறது கல்கியின் நடையில் ? கல்கி எங்கிருந்து அத்தகைய நடையைப் பிடித்தார் ?

ஒரு எழுத்தாளரின் பின்னணி என்பது அவருடைய வர்ணனைகளில் தான் பெரும்பாலும் வெளிப் படும். அங்கு தானே பெண்பால் கவர்ச்சி, காதல் கிளர்ச்சி போன்றவற்றை எழுதி விற்க முடியும் ? இதே வருணனைகளில் தான் அந்த எழுத்தாளரின்  அனுபவத்தின் மூலமும் தெரிந்து விடும்.

இன்றைய தமிழ் விமரிசகர்கள் எந்த அளவிற்கு வாசிப்பு குறைந்தவர்கள் என்பது நாம் இந்த விஷயத்தில் சற்று ஆராய்ந்தால் தெரிந்து விடும். பொன்னியின் செல்வனில் இருந்து ஒரு வாசகம் . அநிருத்தப் பிரம்ம ராயர் தம் மாளிகையில் வெளியில் வந்த கோலம் பற்றி வருணனை - இதோ 

" அன்பில் அநிருத்தர் ஜப, தப, ஸ்நான,பான, கிரியைகளை முடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்."

இந்த வாக்கியத்தைப் படித்த பாரம்பரியம் தெரிந்த அனைவருக்கும் அவர் தன சந்தியா வந்தனத்தையும், பூசையையும் முடித்து விட்டு வந்தார் என்று தெரிந்து விடும். இதற்கு முன்னர் யார் அதை எழுதினார்கள் என்றால் இப்போதைய விமரிசகர்கள் விழிப்பார்கள். என் தகப்பனார் வயதுடையவர்களைக் கேட்டால் விளங்கி விடும். " அடேடே ! இது கதா காலட்சேபம் செய்யறவா பாணி " என்று கூறி விடுவர். 
அவர்களுக்கு யார் முன்னோடி ? 
" வேறென்ன ? நம்மோட புராணங்கள் தான் "
"அப்போ புராணங்கள்ல வணிக சமாச்சாரங்கள் உண்டா ?"
" சீச்சீ ! வாயைக் கழுவு . புராணங்கள் ஞானிகளால சொல்லப் பட்டது. ஆனால் அது பிராம்மணன் முதல் வேளாளன்  வரை எல்லாருக்கும் பொது. "
" அப்ப புராண பாணில எழுதினா  வணிக  எழுத்தா ?"
" இதெல்லாம் அந்த பகுத்தறிவு  பேசறவாளண்டை  கேளு" என்று எழுந்து பொய் விடுவர்.

அப்போ இந்த வணிக எழுத்து என்று ஓயாது குற்றம் கூறுவது ஏன் ? இதை இன்னொரு கோண த்தில் பார்ப்போம். வணிக எழுத்து நல்ல இலக்கியங்களை மறைக்கிறது என்பது ஒரு குற்றச் சாட்டு . அப்போது அந்த "நல்ல இலக்கியங்கள் " வணிகம் செய்ய லாயக்கில்லை என்பது அர்த்தமா ?

இன்றைய வணிக எழுத்துகளில் பெரும்பாலானவை காதல்,  உணர்ச்சிகளை நியாயப் படுத்தி எழுதப் படுபவை. இதுவும் அநாதி காலமாக நாம் நம் நாட்டில் கண்டதுதான். (மணியன், சிவசங்கரி, இந்துமதி, பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன்,) 

இன்னொரு பிரிவு , ,துப்பறிதல்  வன்முறை , வீரம் ஆகியவற்றை தூக்கிப் பிடிக்கும் ஒன்று.இதற்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகம். ( சுஜாதா,ராஜேந்தர், தமிழ்வாணன்,) 

 அடுத்தது குடும்பம், பாசம், வறுமை, விடா முயற்சி , போன்ற சராசரிக் குடும்பங்களின் நிலை குறித்து  மிகையாகவும், நடுத்தரமாகவும் எழுதப் படும் எழுத்து. இது எப்போதும்  பெண்களின மனம் கவர் எழுத்து. (லக்ஷ்மி, நா பா, அகிலன், கல்கி,) 


ஒரு குறிப்பிடும் கணிசமான பிரிவு காம உணர்ச்சிகளைத் தூண்டுபவை. இதுவும் மொத்தத்தில் ஐந்து சதவிகிதம் இருக்கலாம். இது உலக அளவில் உள்ள விகிதாசாரத்துடன் ஒப்பிட்டால் குறைவாகவே இருக்கும் என்பது என் எண்ணம். ( சாண்டில்யன், பால  குமாரன், புஷ்பா தங்கதுரை,)

இவற்றில் எஞ்சியது ஒரு எழுத்து உண்டு. அது காலம் காலமாக நம் மண்ணின் இலட்சியங்களை, அநாதி காலமாகக் கைக்கொள்ளும் பழக்கங்களை, நம் வரலாற்றை செழுமையாக்கும் மாவீரர்கள், அறிஞர்கள், துறவிகள், அவதாரங்கள் போன்றோரின் வாழ்க்கையை வெகுஜனங்களிடம் கொண்டு சேர்ப்பவை. புராண காலம் தொட்டு  இன்றைய பாகவதர்கள் வரை அது  நம் வாழ்க்கையை செழுமை ஆக்கிக் கொண்டே வருகிறது. அதற்குப் பெயர் தான் ஆதர்ச எழுத்து. லட்சிய எழுத்து. இதை மட்டுமே நான் ஆதரித்து பேசுகிறேன்.

அரிச்சந்திர புராணத்தைக் கேட்டு காந்தியை பொய் பேசாமல் இருக்கச் செய்தது இந்த எழுத்து தான்.

 "பசுவைக் கொல்பவனை நான் கொல்வேன் என்று குழந்தை சிவாஜியைப் பேச வைத்தது இந்த எழுத்து தான்.

எப்போதோ நடந்த  ராமாயணக் கதையைக் கேட்டு   "படை திரட்டடா ? இலங்கை செல்வோம்  தேவி சீதையை மீட்போம் !"  என்று ஆயிரம் வருடம் முன்பு  குலசேகரப் பெருமாளை பேச வைத்ததும் இந்த எழுத்து. 

விவேகானந்தனை இமயத்தில் இருந்து குமரி வரை இழுத்து வந்து அகிலத்தையே குலுக்கும் வேதாந்த வாதியாக மாற்றியது இந்த எழுத்து தான். 


இந்த எழுத்தின் ஜாம்பவான்கள் தான் கல்கியும், அகிலனும், நா பா வும். அவர்கள் நம் பாரம்பரியத்தின் நீட்சிகள். இவர்கள் எழுத்தைப் படித்து ஒருவன் திருடினான், பெண்ணை அபகரித்தான் , பொய் சொன்னான் என்றால் அதை நம்ப முடியாது.

இப்போது "தரமான இலக்கியங்கள் " பற்றி சற்றுப் பார்த்து விடுவோம். அவைகளை எடுத்துப் படித்தவுடன் நமக்கு முதலாக தெரிந்து விடுவது அவைகள் யதார்த்த  எழுத்துக்கள். அங்கே நல்லது கேட்டது போன்ற தீர்ப்புகள் எழுதக் கூடாது. எழுதிய கணம் அது "இலக்கியத் தரம்" இழந்து விடும். ஜெயகாந்தனின் "ஒரு மனிதன், ஒரு வீடு , ஒரு உலகம் " ஒரு சிறந்த உதாரணம்.அது நான் என்றுமே மறக்க விரும்பும் நூல். மானுட வாழ்க்கையை லட்சியம் இல்லாமல் வாழ முடியும் என்ற விஷயத்தில் நிலை நிற்கும் நூல். 

இந்த    விமரிசனம் செய்யாத மனப் பாங்கு அதை எழுதிய எழுத்தாளர்களிடமும் சென்று சேர்ந்து விட்டது. நான் பள்ளி இறுதி வகுப்பு படிக்கையில் , மேட்டுப் பாளயம் தமிழ்ச் சங்கத்து நிகழ்ச்சியில், ஜெயகாந்தன்  முந்தைய நாள் போதையுடன்,  மேடையில் நின்று கூச்சலிட்டது நினைவில் இன்னும் இருக்கிறது. கூட்டமே ரத்தானது. அதை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் அண்ணன் , " அவரு அப்படித்தாண்டா !" என்று சாவகாசமாகக் கூறிவிட்டார் . இதுவே கல்கி மது அருந்தி இருக்கட்டும், கலியுகத்தின் இறுதி வரை அது பேசப்படும்.

ஜெயகாந்தனுக்கு இந்தப் பிரச்சினையே இல்லை. அவருடைய சமீபத்திய கட்டுரையில் கூட எப்படி அவரும் ஒரு ரிக்ஷாக்காரனும் சேர்ந்து குடித்து விட்டு வீடு வந்து சேர்ந்தது பற்றி விலாவாரியாக இருந்தது. இது இந்த தரமான இலக்கியவாதி பட்டம் அளித்த எழுத்து சுதந்திரம்.


நான் இந்த விஷயத்தை எழுத எடுத்துக் கொண்டதற்குக் காரணம், தமிழ் எழுத்தாளர் உலகம் எந்த அளவுக்குச் சீர் கெட்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டவே. ஜெயமோகன் அவ்வப் போது எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் சேரும் கூட்டங்கள், முகாம்கள்  நடத்துவார். அப்போதெல்லாம் அவர் திரும்பத் திரும்பச் செய்யும் முக்கிய அறிவிப்பு " இங்கே கண்டிப்பாக மது அருந்தக் கூடாது " என்பது தான். இது போன்ற எழுத்தாளர்கள் ஆன்ம சுத்தி இல்லாமல் எழுதுபவை தான் "தரமான இலக்கியங்களா ?" அவை விற்பனை    ரீதியில் போணியாகாமல் போனது ஒன்றே அவர்களுக்கு "இலக்கியவாதி " அந்தஸ்தைக் கொடுத்து விடுமா ?

அவர்களுடைய எழுத்தின் இன்னொரு இயல்பு உள்ளது உள்ளபடி எழுதுகிறேன் என்று விட்டு அபத்தங்களைக் கூடச் சேர்த்துக் கொள்ள தயாராகி விடுவார்கள். கோவிலில் , அம்பாளின் அழகும், கோவிலின் கம்பீரமும் கூட தெரியாமல் போகலாம். ஆனால் குருக்களின் அழுக்குப் பூணூல் எழுத்தில் இருக்கும். பிரசாதத்தின் மணம் பற்றி எழுதக் கூடாது. அங்கே வந்து நிற்கும் பணக்காரப் பெண்மணியின் மூக்கில் அமர்ந்து தொந்தரவு  செய்யும் ஈ பற்றி எழுதி விட வேண்டும். அதுவும் முக்கியமாக நமஸ்கரிக்கும் போது எண்ணெய்ப் பிசுக்கை கன்னத்தில் அப்பிக் கொண்ட பேராசிரியர் பற்றி எழுதாமலிருக்கவே முடியாது.


கல்கியின் பாத்திரம் தேவாரத்தை ராக மாலிகையாக பாடுவதாக எழுதி , மோகனமும், பிலஹரி  பற்றியும்,  காம்போதி பற்றியும் எழுதி விட்டால் பிரளயம் தான். மேல் தட்டு எழுத்து, அகம்பாவ எழுத்து , பாமரர்களை தாழ்வு மனப் பான்மையில் ஆழ்த்தும் எழுத்து என்று விமரிசித்து "தரமான இலக்கியம்" பட்டியலில் இருந்து நீக்க முகாந்திரம் தேடிவிடலாம். ஜெயமோகன் தன்னுடைய கிறித்தவ தமிழாசிரியர்    ஆபேரியில் கம்ப ராமாயணப்  பாடல் பாடிக்காணபித்ததாக எழுதியவுடன் தான் கர்நாடக சங்கீதத்துக்கு வெகுஜனத் தன்மை வந்து விட்டது போலும்.

ஆக , இப்போது கட்டாயமான இறுதி வாசகம் ஒன்றை எழுத வந்து விட்டேன். (அது தான் சார் 'பஞ்ச்சு டயலாக்கு ")



வணிக எழுத்து , ஆதர்ச எழுத்து, பாமர எழுத்து போன்றவை உண்மையில் மனிதர்களின் நீட்சியே.  பாமரன், வணிகன், வஞ்சகன், காமுகன்,  அறிஞன், ஞானி போன்றோர் எந்த அளவுக்குச் சமூகத்தில் இருக்கிறங்களோ, அந்தந்த வகை எழுத்துக்கள் சமூகத்தில் அந்தந்த விகிதத்தில் இருக்கும்.

Sunday, June 30, 2013

ராமாயணத் தருணம்

ராமாயணம் உலகின் முதல் காவியம் - "ஆதி காவ்யம்" என   போற்றப் படுகிறது. மகரிஷி வால்மீகி உலகின் முதல் கவி.

மேலே சொன்னவை பலர் முதலிலேயே கேட்டது. பலரும் அப்படியே ஒப்புக் கொண்டு சென்றிருப்பர் . இந்த இரண்டு விஷயங்களை சிறிது ஆராயப் புகுந்தால் ஒரு புதையல் அளவு விஷயங்கள் மறைந்திருப்பது தெரிகிறது. நான் வால்மீகி ராமாயணத்தை இப்போது தான் மூல ஸ்லோகங்களின் மூலம் படிக்க ஆரம்பித்துள்ளேன். சற்றே ஆசுவாசமாக இதைப் படியுங்கள். நான் அனுபவித்த அந்த 'கண்டு கொண்டேன்" தருணம் உங்களுக்கும் வாய்க்கட்டும் .

வால்மீகி காலம் வரை உலகில் இருந்த ஒரே கல்வி வேதக் கல்வி. வேதங்கள் மந்திரங்களால் ஆனவை .மந்திரங்கள் தங்களுக்கென தனி உச்சாடன பாணி கொண்டவை. மிகப் பழையவை. மேலும் அநநாளில் பேச்சுக்கென்று, எழுத்துக்கென்று   சம்ஸ்கிருத மொழி இருந்திருக்கின்றது என்றாலும் அது வேத மொழியினின்று சற்று வேறுபட்டது. பிற்பட்டது.

இந்தச் சூழலில் தான் மூன்று நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. அவைகளைத் தான் நான் "ராமாயணத் தருணம்" என்று அழைக்கிறேன். இந்தக் கட்டுரையின் முடிவில் நீங்களும் அதை ஒப்புக் கொள்வீர்கள்.

முதல் நிகழ்வு - வால்மீகியும், நாரதரும் சந்திக்கின்றனர். நாரதரிடம் , " இந்த உலகில் சத்தியம், தர்மம், ரூபம், வீரம், கல்வி, அறிவு, கருணை , ஒழுக்கம் போன்ற பண்புகளை பூரணமாகக் கொண்ட மானுடர் இருந்திருக்கிறார்களா ? அப்படியிருப்பின் அவரது கதையை எனக்குக் கூறுங்கள் என்று கேட்க , நாரதரும் . " அப்படி ஒரு தீரன் இருந்தான். நெடு நாட்களுக்கு முன் வாழ்ந்தவன் அவன். ராமன் என்பது அவன் பெயர் " என்று ஆரம்பித்து ராம சரிதத்தை சுருக்கமாகக் கூறுகிறார்.

இரண்டாவது நிகழ்வு - நாரதர் வால்மீகியிடம் விடை பெற்றுச் சென்ற பிறகு , வால்மீகி அழகிய தமஸா நதியில் நீராடிய பின் ,நதிக் கரையில் உலாவச் செல்கிறார். அங்கே இரு கிரவுஞ்ச பட்சிகள் சல்லாபித்தபடி விளையாடுகையில், அழிவே நோக்கமாகக் கொண்ட வேடன் ஒருவன் அதில் ஆண் பறவையை அம்பால்  அடித்து வீழ்த்துகிறான். இறந்து விழுந்த இணையைப் பார்த்து பெண் பறவை கதறுகிறது. சாதுவான் வால்மீகி துடிதுடிக்கிறார். உணர்ச்சி மேலீட்டால் , அந்த வேடனைச் சபிக்கும் வண்ணம் தன வாயினின்று சில சொற்றொடர்களை உதிர்த்தார்.

அது இது தான்

मा निषाद प्रतिष्ठाम्त्व | मगमः शाश्वतीः समाः |
यत् क्रौङ्च मिथुनात् एक | मवधीः काम मोहितम् || १-२-१५

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வ மகம: ஸாஸ்வதீ:  ஸமா: |
யத் க்ரௌஞ்ச மிதுநாதேக  மவதீ: காம மோஹிதம் || (1-2-15)


இதன் பொருள் :- ஓ நிஷாதனே ! கிரௌஞ்ச பட்சிகளின் வேட்கை மிகுந்த சேர்க்கையில் நீ அவற்றில் ஒன்றைக் கொன்றதால் நீ வருங்காலத்தில் நிரந்தரமாக (அவ) கதியை அடைவாயாக !

வால்மீகியோ முதலில் தன தவ வலிமையைக் குறைக்கும் இது போன்ற கோபமான சாபம் வெளி வந்ததே என்று துணுக்குற்ற போதிலும், இன்னொரு எண்ணம் தலை தூக்கவே அவருக்குள் மகிழ்ச்சி பரவியது. . அதற்குக் காரணம் , அவர் உதிர்த்த சொற்களின் அமைப்பு. அது இது வரை யாராலும் மொழியப்படாதது. புது லயத்தில் அமைந்திருந்தது. அவரது சீடர்களும் , அவரது சொற்களின் அமைப்பை சிலாகித்து அதன் புதுமையை எண்ணி வியந்தனர்.

மூன்றாவது நிகழ்வு : அந்த வார்த்தைகளின் புது அமைப்பை எண்ணி எண்ணி வியந்தபடி ஆஸ்ரமம்  வந்து சேர்ந்த பொழுது , அங்கே சாக்ஷாத் பிரம்ம தேவன் பிரசன்னமானார். வால்மீகியும், சீடர்களும் அவரைப் பணிந்து ஆசனம் அளித்து , உபச்சாரம் செய்து மகிழ்ந்தனர். பிரம்மன் வால்மீகி யைப் பார்த்து , " தங்கள் வாயால் உயர்ந்த சொற்களைக் கூறினீர்கள். அவை என் சங்கல்பத்தால் வெளி வந்தவை.  அந்த ஸ்லோகத்தைக் கொண்டு நீங்கள் நாரதர் கூறிய ராமன் என்னும் மகா மனிதனின் வாழ்க்கை சரிதத்தை எழுதுவீராக. உங்களுக்கு ராமனின் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவும் உள்ளது உள்ளபடியே தோன்றும் !! " என்று ஆக்ஞை கூறி மறைந்தார்.;

மந்திரம் என்ற பழம் அமைப்பிலிருந்து வேறுபட்டு "ஸ்லோகம்" என்ற ஒரு புது வகைக் கவிதை பிறந்த தருணம் அது. வால்மீகி பாடியது அனுஷ்டுப் என்னும் சந்த வகையைச் சார்ந்தது. 32 அக்ஷரங்கள் கொண்டது. உலகின் முதல் மானுடக் கவிதை அது. 

இந்த மூன்று நிகழ்வுகளும் சேர்ந்ததே ராமாயணத் தருணம். அது ஒரு பொன் தருணம் என்று வழி வழி மகான்கள் வியந்து கூறுவதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ? ஒரு காவியம் ஒரு சாபம் போன்ற பாட்டால் துவங்குவதா ? என்று நண்பர்கள் கேட்கலாம்.  அதில் தான் இருக்கிறது அந்தப் பொன் முடிச்சு. அந்த ஸ்லோகம் உண்மையில் வேடன் நிமித்தமாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் அது புருஷோத்தமனான , திருமாலுடைய ஸ்தோத்திரம் ஆகும். இதோ மீண்டும் பொருள் எழுதுகிறேன்.

மா நிஷாத - ஓ ,  லக்ஷ்மி நிவாஸரே !
 த்வம் - நீவீர், 
காம மோஹிதம்- காம வயப் பட்ட 
கிரௌஞ்ச - அசுர 
மிதுநாத்- தம்பதிகளில் (ராவண - மண்டோதரி) 
ஏகம்- ஒருவரைக்
அவதீ :- கொன்று 
ஸாஸ்வதீ  ஸ மா:  -என்றும் நிலைக்கும் 
பிரதிஷ்டாம் - புகழை 
அ கம; - பெற்றீரே 

ஓ , திருமகளுரை திருமாலே ! நீர் காம வயப்பட்ட அசுர தம்பதிகளுள் ஒருவரை வீழ்த்தி , என்றும் நிலைக்கும் புகழை அடைந்தீரே !

எப்போதும் , ஒரு காவியம் தன உட்பொருளை முதலில , சுருங்கக் கூறி பிறகு விரித்துக் கூறும். இது நியதி. (காவ்ய அர்த்த ஸூ சனம் கஸ்சின் ஆதயம் ஏவ நிரூப் யதே ). அது போல இது இந்த மகா காவியத்தின் மங்கள ஆரம்பம் . 

அதை சாத்தியமாகிய இந்த நிகழ்வுகளே அந்த பொன்னான " ராமாயணத் தருணம் "




Saturday, June 15, 2013

மார்க்சீயம் இன்று எதனால் நிலை நிற்கிறது ?

மார்க்சியம் இன்று  எதனால் நிலை நிற்கிறது ?
( இந்த கடிதம் நான் தமிழ எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதியது . அவர் தன இணைய தளத்தில் அந்தக் கடிதத்தை பிரசுரித்தார். இது என் நண்பர்களுக்காக இங்கே மீண்டும் வெளியிடப் படுகிறது. )

திரு ஜெயமோகன்
உங்கள் மார்க்சீயம் பற்றிய கட்டுரைகள் மூன்றையும் படித்தேன். கூடவே ‘மார்க்சீயம் தேவையா ?‘ முதலிலேயே படித்தது. இணைய தளத்தில் தமிழில் இந்தத் தலைப்பில் மிக விஸ்தாரமான , ஆழமான எழுத்துக்கள் இவையே.
எனக்கு இது குறித்த புரிதல் குறைவு. இருந்தாலும் மார்க்சீயம்,  நடைமுறைக்கு ஒவ்வாது என்ற உள்ளுணர்வு மட்டும் இருந்தது. நான மூலதனமோ மற்றைய அடிப்படை நூல்களோ படித்ததில்லை. ஒரு சித்தாந்தம் எவ்வாறு செய்முறைப் படுத்தப் படுகிறதோ, அவ்வளவே அதன் சிறப்பு என்பதில் எனக்குத் தெளிவான உடன்பாடு உண்டு. சந்தோஷ் அவர்கள் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்கு அதே நியாயத்துடன் பதில் சொல்லியுள்ளீர்கள்.
நீங்கள் சொல்லாமல் விட்டவை என்று எனக்குப் படுகின்ற சிலவற்றை இங்கே கூறுகிறேன். கம்யூனிசம் இயற்கை சித்தாந்தம் அல்ல. அது ஒரு எதிரிய விளைவு (reactionary movement) இயக்கம். அது முளைக்க வேண்டுமானால் அப்படிப்பட்ட நிலம் வேண்டும். ஒரு பாரம்பரிய இந்திய  விவசாயியிடம் போய்க் கம்யூனிசத்தைப் பற்றியும் முதலாளித்துவ ஆதிக்கத்தையும்  பேசினால் அது அவனிடம் எந்தவித சலனத்தையும் உண்டுபண்ணாது. ஆனால் அதே விவசாயி,தன் தொழிலைக் கைவிட்டு , ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குப்  போகட்டும், அடுத்த கணமே மார்க்சீயம் அவனுக்கு நியாயமானதாகப் பட்டுவிடும். இது,வேதம் ஓதும் ஒரு பாரம்பரிய பிராம்மணன், ஒரு நாவிதன், வண்ணான், கொல்லன், நெசவாளி, எல்லாருக்கும் பொருந்தும்.
கொல்லன்,  பிராம்மணன் முதலானோர், தன் தொழிலைத் தன் தந்தையிடம் இருந்து பெற்றவர்கள் . அங்கே ஏது முதலாளியும் சுரண்டலும் ? அங்கே மார்க்சியம் செல்லாது. அவர்கள் முதலாளித்துவ அமைப்பில் ஏதாவதொரு துருவத்தில் அமரும் போது மார்க்சீயத்துக்கு சாதகமாகவோ பாதகமாகவோ நிலைப்பாடுகளை எடுப்பார்கள். நீங்களே அரசுப் பணியில் அமர்ந்தவுடன் தொழிற்சங்கம் உங்களைக் கவர்ந்து விட்டது. அதிலும் மார்க்சிய சங்கமே உங்கள் இதயத்தில் இடம் பிடித்தது. என் சகோதரர் முறை உள்ள ஒருவர்,அரசு வங்கியில் சேர்ந்து நீங்கள் கூறும் மார்க்சிய யூனியனில்தான் சேர்ந்தார்.ஒரே வித்தியாசம் உங்கள் பக்குவம் அவருக்கு இல்லை.
ஆக,மார்க்சீயம் வளர ஐரோப்பிய மாதிரியான நிலவுடைமை அமைப்பு தேவை. ஆங்கிலேயர் வரும் வரை இங்கே அந்த அமைப்பு இல்லை. நிலம் ஒரு செலாவணியாகக்  கூடிய பொருள் இல்லை (saleable commodity). எல்லாம் மானிய நிலங்கள். ஒருவன் ஊரை விட்டால் நிலமும் போய் விடும். வெள்ளையர் தான் இந்தப் பட்டா முறையைக் கொண்டு வந்தனர். அங்கிருந்து தான் நிவந்தம் , மானியம் எல்லாம் போய்ப் பிரபு முறை உருவாகி விட்டது. ரியல் எஸ்டேட் என்ற துறை உருவாயிற்று.
இந்தப் பிரபு முறைதான் நீங்கள் சொன்ன மாநிலங்களில் மார்க்சியத்தை உருவாக்கியது. சொல்லப் போனால் இவை இரண்டும்  complimentary.  ஒன்றை  ஒன்று  சார்ந்தவை .முதலில் கம்யூனிச சித்தாந்தம்,மேல்தட்டு அறிவுஜீவிகளின் தேநீர் விவாதத்துக்கு மட்டுமே பயன் பட்டது. பிற்பாடு கூலித் தொழிலாளர்களால் தான் பாமரப் படுத்தப் பட்டது. அதுவும் குறிப்பாக வெள்ளாளர்களால். அவர்கள் நுழைந்ததும் தான் கம்யூனிசம் பரவலாகியது. வரவேற்பும் பெற்றது. வெள்ளாளர்களுக்கு சமூக ரீதியில் பிராம்மணர்களும் , உத்தியோக ரீதியில் முதலாளிகளும் எதிரிகளானார்கள். இது பிரபு முறை வந்த பின் (1802 க்கு மேல் )  நடந்தது. அதற்கு முன் ஒரு கிராம ரீதியில் யாரும் யாருக்கும் எதிரி இல்லை.
இதன் இன்னொரு விளைவு,தலித்துகள் தனிமைப்படுத்தப்பட்டது. நடுத்தட்டான வெள்ளாளர்,அரசியலை மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தனர். அதுவும் 90 களில் இது முறைப் படுத்தப் பட்டது வி பி சிங் காலத்தில். வெள்ளாளர் தங்கள் கிராம மனப் பாங்கை  விடாதவர்கள். தலித்துகளை ‘எப்போதும்’ போல் நடத்தினர். இந்த நேரத்தில் கம்யூனிசம்,தன் தலித்துகளைத் தக்க வைத்துக் கொள்ளப் பாடுபட்டது. இந்த நேரத்தில் வெள்ளாளர் கட்சிகள் வரிசையாக முளைத்து விட, கம்யூனிசத்தின் பார்வை தலித்துகளை நோக்கித் திரும்பியது. இருந்தும் தங்கள் வெள்ளாள ஆதரிப்பைக் காட்ட அவ்வப்போது முயன்றே வந்தது. 2007 களில் ஐ ஐ டி  27  சதவீத   இட ஒதுக்கீடு ஒரு உதாரணம். சீதாராம் எச்சூரி இந்த விஷயத்தில் பிடிவாதமாக நின்றது குறிப்பிடத்தக்கது. கடைசியில் காரத்தும் இதற்குப் பணிந்தார்.
நான்,அறிவிக்கப்பட்ட இந்துத்துவ வாதியல்ல என்றாலும் அதன் சார்பு நிலைப்பாட்டைக்  கொண்டவன். இந்துத்துவமும் ஒரு எதிரிய விளைவே. நம் தேசியப் பண்பாடுகளை, அதன் ஆணிவேர்களைக் குறி வைத்துத் தாக்கும் நிலை வந்த போது பிறந்தது தான் அது . அதன் குறிக்கோள்கள் நிறைவேறிய பிறகு அதன் தேவை இருக்காது. (it is time bound) இதன் நோக்கமே பழையதை, சிறந்ததை  நிலை நிறுத்தல்.இதற்கு ஒன்றும் பெரிய படிப்பறிவோ ,  அலசும் சக்தியோ தேவையில்லை. இதன் காரணம்தானோ என்னவோ, இந்துத்துவ களத்தில்  மார்சியவாதிகள் போல் படைப்பாளிகளும் , பேச்சாளர்களும் உருவாகவில்லை. ஆனால் அங்கும் சிலர் உள்ளனர். ஆனால் கம்யூனிசமோ இத்தகைய அறிவுஜீவித் தனத்தை ஏவி இதற்குப் பிறகு என்றென்றும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் அமைப்பை உருவாக்க முனைகிறது. (it is not time bound) . இது தான் அதன் அபாயம்.
நகர்ப்புற சேரிகளில் மார்க்சிய இயக்கத்துக்கு இருக்கும் வரவேற்பு கிராமங்களில் இருக்கவே இருக்காது. நகரத் தொழிலாளி அதிக கூலி வாங்கினாலும் இதே நிலை. காரணம் வருணப் பாகுபாடு ஸ்திரமாக உள்ள இடங்களில் மார்க்சியம் செல்லாது.
மார்க்சியத்துக்கும் இந்துத்துவத்துக்கும் உள்ள இன்னொரு அடிப்படை வேறுபாடு ,கருத்து சுதந்திரம்,மற்றும் கருத்து வேறுபாட்டை அங்கீகரிப்பது. எண்பதுகளில் நான கல்லூரியில் படிக்கையில் திரு கோவிந்தாச்சாரி அடிக்கடி என்னைக் கோவையில் சந்திப்பார். ஒரு நாள் அவரிடம் விவேகானந்தர் மற்றும் சங்கரர் தான் நமக்கு வழிகாட்டிகள் என்று சற்று முதிர்ச்சி அற்ற பாணியில் கூறினேன். அவரோ உடனே சங்கரரைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒரே போடாகப் போட்டார். பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு வைணவர் என்று. இருந்தாலும் அங்கே செயல் முறையில் எந்த விரிசலும் இல்லை. இந்த மாதிரி விஷயங்கள் கம்யூனிசத்தில் சாத்தியமே இல்லை.
மார்க்சியமும்,முதலாளித்துவமும் அதிகாரத்தை மையத்தை நோக்கித் திருப்புபவை (centralization ). ஆனால் நம் இயல்பான வாழ்க்கை முறையோ பரவலாக்கத்தை (decentralization) அடிப்படை ஆகக் கொண்டது. வெள்ளையன் வருவதற்கு முன்னர் வரை ஒவ்வொரு கிராமமும் ஒரு குடியரசாகவே இருந்திருக்கிறது. சாணக்கியரும் கூடப் போரிலும்  கிராமத்தைத் தொடக் கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார்.  முஸ்லிம் மன்னர்களும் இந்த முறை அவர்களின் வரி வசூலிபபுக்கும் ஆட்சிக்கும் சாதகமானதாக இருந்ததால் அந்தத் தொன்று தொட்ட முறையை ஆதரித்தனர்.
முதலாளித்துவம்,வெள்ளையனின் கண்டுபிடிப்பு. இயல்பும் கூட.  கம்யூனிசமும் அப்படியே. நம் நாட்டில் இதில் ஏதாவது ஒன்று இருக்கும்  வரை மற்றது இருக்கும்.

வேங்கடசுப்ரமணியன்

Sunday, May 19, 2013

மாமிசமும் ஆன்மீகமும்

உணவும் ஆன்மீகமும்

ஒரு வருடத்துக்குப் பின்பு எழுத வருகிறேன். இப்போது கதை அல்ல. ஒரு விஷயம் படித்து அதற்கு என்னளவில் மறுப்பும் மேல் விளக்கமும் தர இதை எழுதுகிறேன்.  
தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இந்த கட்டுரை என் கவனத்தைக் கவர்ந்தது.  உணவும்  விதியும் 

ஒரு வாசகர் அவரிடம் மாமிசம் ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்றதா என்று கேட்க , அதற்கு தன பாணியில்  விளக்கியிருந்தார். அதில் கொஞ்சம் உடன்பாடு,  சிறிது மாற்றுக் கருத்து என்னுடையது.

இந்த புலால் விஷயம் தொன்று தொட்டது என்று ராதா ஷியாம் பிரம்மச்சாரி போன்ற ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. ராமர் , சீதை மற்றும் இலக்குவன் மூவரும் புலால் உண்டதை வால்மீகியே பதிவு செய்திருக்கிறார் என்று பிரம்மச்சாரி கூறுகிறார்.வேத காலத்தில் பிராம்மணர்களே இறைச்சி , அதுவும் பசு இறைச்சியை உண்டனர் என்கிறார் அவர். தேவி பாகவதத்தில்  விசுவாமித்திரர் பஞ்ச காலத்தில் ஒரு புலையன் சேமித்து வைத்திருந்த நாயின் மாமிசத்தை திருடி உண்டதாக வருகிறது என்று தம்பண்ண செட்டியார் சமீபத்திய நூலில் கூறுகிறார்.

ராதா ஷியாம் பிரம்மச்சாரி கீதையில் எங்குமே புலால் உணவைக் கண்டித்து நேரடியாக ஒரு வார்த்தை கூட இல்லை என்கின்றார். 

இது இப்படி இருக்க , இன்றைய ஆன்மீக குருக்கள் , சிந்தனையாளர்கள் அனைவரும் புலால் விலக்கம் ஆன்மீக முன்னேற்றத்துக்கு அடிப்படைத் தகுதி என்கின்றனர். திருக்குறளும் , திருமந்திரமும் புலாலை வன்மையாகக் கண்டிக்கின்றன. 

தன்னூண் பெருக்கிற்குப் பிறிதூண்  தான் தின்பான் 
எங்ஙனம் ஆளும் அருள் 

இது திருக்குறள்.

ஜெயமோகன் அப்படியெல்லாம் இல்லை என்று கூறி , விவேகானந்தரையும் , சீன ஞானிகளையும் உதாரணம் காட்டி  அவர்கள் புலால் உண்டவர்கள் என சுட்டுகிறார். 

இப்போது எல்லாருக்கும் சந்தேகம் வந்திருக்கும். இந்த பின்னணித் தகவல்களால் சற்று குழம்பி , புலால் நன்மை தானோ என்ற கருத்தும் வந்திருக்கலாம். முதலில் நவீனத்தில் இருந்தே செல்வோம். விவேகானந்தர் ஒரு இடத்தில் ஆகாரத்தைப் பற்றிக் கூறுகையில் " ஒரு கால கட்டம் வரை உணவில் கவனமாக இரு. புலால் தவிர்.  முதிர்ந்த கால கட்டம் ஒன்று வரும் அப்போது நீ என்ன உண்டாலும் அது உன்னை ஒன்றும் செய்யாது." என்கிறார். இது வங்காளத்தில் கொடுக்கப் பட்ட அறிவுரை. அங்கே பிராம்மணர்கள் கூட மீன் சாப்பிடுவார்கள். 


சமீபத்தில் வெளிவந்த விரிவான வாழ்க்கைக் குறிப்பில் , யாரிடம் என்ன வாங்கி உண்கின்றோம் என்பதில் கவனம் செலுத்தியே இருந்திருக்கிறார் சுவாமி விவேகானந்தர் . அமெரிக்காவில் இரண்டாம் முறை இருந்த போது " நானும் அந்தக் கிழவர் (ராமகிருஷ்ணர் ) மாதிரியே ஆகிவிட்டேன். ஒரு சிலர் சமைத்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை " என்று கூறி ஒரு ஓட்டலில் சாப்பிட்டதை வாந்தி எடுத்தாராம்.


அடுத்தது கீதை. கீதையில் உணவு பற்றி வரும் குறிப்புகள் இதோ
1 . அளவான உணவே யோகிக்கு ஏற்றது. (அதிகம் உண்ணாமலும் பட்டினி இல்லாமலும் இரு.) (ப கீ 6-16)
2 . சாத்வீக உணவு என்பது ஆயுள், அறிவு, பலம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, ருசி, ஆகியவைகளை வளர்த்தும், ரசம் (நீர்பிடிப்பு) , மற்றும் பசை (எண்ணெய் பிடிப்பு)  உள்ளது வாகவும் , வலிவு தருவது வாகவும் , இன்பம் விளைவிப்பதுமாக இருக்கும்.
 3 . கசப்பு, புளிப்பு,  துவர்ப்பு , அதிக சூடு, வறட்சி, எரிச்சல் மிகுந்தவை ராஜச உணவுகள் . இவை துக்கம், சோகம், நோய் ஆகியவற்றை உண்டு பண்ணும்.
4 . சாமம் கழிந்த , சுவை அற்ற, ஊசிப் போன, பழைய , எச்சில் செய்யப்ப்பட்ட, மற்றும் தூய்மை அற்றது தாமச உணவு.  (ப  கீ 17-8,9,10)


 ஹோமியோபதி என்னும் மருத்துவம் பற்றி இங்கே கொஞ்சம் சொல்ல வேண்டும். மனித உடல் ஆரோக்கியமான நிலையில் இருக்கையில் ஒருவருக்கு ஒரு செடியின் சாறோ , ஒரு வேதிப் பொருளோ  அளிக்கப் பட்டு அவர் உடல் மற்றும் மனம்  அந்த புது பதார்த்தத்துக்கு எப்படி எல்லாம்  ஆட்பட்டு மாற்றம் அடைகிறது என்பது ஆராயப் படுகிறது. அவை குறிப்பெழுதப் பெறுகின்றன. பிற்பாடு வேறு யாருக்கேனும் அதே விதமான மாற்றங்கள் கொண்ட உடல் நோய் இருந்தால் அதே பதார்த்தம் வீரிய  படுத்தப்பட்டு  அந்த நபருக்கு கொடுக்கப் படும் பொது அந்த நோய் குணமாகிறது.  இது ஹோமியோபதியின் எளிய விளக்கம்.  இன்று ஹோமியோபதியில் மூன்றாயிரத்துக்கு மேற்பட்ட மருந்துகள் உள்ளன. அவை யாவும் ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு , விளைவுகள் பதிவாகி உபயோகத்துக்கு வந்தவை. இன்னும் அந்தப் பட்டியல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டுவது மன மாற்றம். உதாரணம் ஊமத்தை. இந்த சாற்றை கொடுத்தால் மனம் தடுமாறும், வார்த்தை குழறும். இடை விடாது சிரிப்பார் அல்லது இடைவிடாது பேசுவார். இருட்டைக் கண்டால் பயம். பேய்களைப் பார்த்தது போல பேசுவார். மொத்தத்தில் ஒரு பயித்தியம் பிடித்த நிலை. இதன் முழு விளைவுகளை  இங்கே படிக்கலாம். 

நம் ஊரில் ஊமத்தை காய் தின்றால் பயித்தியம் பிடிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் பயித்தியம் பிடித்த ஒரு மனிதருக்கு பல சமயம் ஊமத்தை மருந்தாகவும் ஆகிறது ஹோமியோபதி விதியின் படி.

நான் இதை விரிவாக எழுதக் காரணம் அந்நிய உணவுகள்/ பொருட்கள் ஏற்படுத்தும் மன மாற்றம் நிஜமே என்பது.  காமத்தை தூண்டுகின்ற பொருட்கள் ஆன்மீகத்துக்கு தடைக் கற்கள். ஆன்மீக ஆற்றலை விரயம் செய்பவை. வெங்காயம், பூண்டு, முருங்கை, போன்றவை இந்த வகையை சேர்ந்தவை. துளசி, வேம்பு போன்றவை இதற்கு எதிர் ரகத்தைச் சேர்ந்தவை. அவை மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சி தேவை இல்லை.


மாமிசம் மனித உடலின் அதன் தன்மையை ஏற்றி விடும். ஜெயமோகன் சொல்வது போல் இது குடல் சார்ந்தது அல்ல. தூல உடல் என்பது புலன்கள், மனம், புத்தி, மற்றும் பிராணன் சார்ந்தது. உலகின் ஒவ்வொரு பொருளும் பிராணனை பல வகைகளில் கொண்டுள்ளன. மனித உடலில் அவை பலவேறு வகைகளில் இயங்குகின்றன. மனிதனின் பிராணனை அந்த அந்நிய பிராணன்கள் தாக்கி மாற்றும் போது நோய் உருவாகிறது. ( மேலும் படிக்க இங்கே)

மாமிசம் உடல் பலத்தை ஏற்றுகிறது என்பது ஒரு வகையில் உண்மை. ஆனால் பல வகைகளில் பலவீனத்தை ஏற்படுத்திய பிறகே அது நிகழுகிறது. 

கீதை உபதேசமா, விவாதமா அல்லது உரையாடலா ?

கீதை உபதேசமா, விவாதமா  அல்லது உரையாடலா ?

"இந்தத் தலைப்பு வைத்து எழுதுவது சரிதானா ? " என்று பலரும் யோசிப்பர் . நானும் அப்படித்தான் இருந்தேன். இந்த விஷயம்  சமீப காலமாக  முற்போக்கு, பின் நவீனத்துவ , நவீன இலக்கியவாதிகளின் கையில் வேறு சிக்கி விட்டது. இதனால் என்னைப் போன்ற பாரம்பரிய ( பிற்போக்கு, மூட ஆச்சார, பழமை  ) வாதிகளுக்கு இது விஷயமாக விளக்க அவசியம் வந்து விட்டது.

 நவீன வாதிகள் பலர் கீதை ஒரு விவாதமே என்கின்றனர். ஜெயமோகன் அதில் ஒருவர். நம்முடைய நெடும் பாரம்பரியமோ  கீதையை உபதேசம் என்கின்றது.

கீதை எழுதப்  பெற்ற காலத்தில் உபதேசம் என்றால் குரு  சீடருக்கு உபதேசிப்பது.    உரையாடல் என்றால் இரு சம அந்தஸ்து பெற்றோர் பேசுவது.   விவாதம் என்றால் இருவரோ பலரோ தம் கருத்துகளை நிலை நாட்ட வாதம் செய்வது.

கீதையில்  விவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அர்ஜுனன் கிருஷ்ணனை விட மேதாவி அல்ல. அவன் எந்த இடத்திலும் அறிவு பூர்வமாக விவாதிக்கவே இல்லை. ஜெயமோகன் மற்றும் நடராஜ குருவின் "விவாத" வாதம் தள்ளுபடி ஆகிறது..

இப்போது நமக்கு உரையாடல் மற்றும் உபதேசம் மட்டுமே மீதம் உள்ளன

இது பற்றி நடுநிலையாகவே பார்ப்போம். சமீப காலமாக அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் தலைவர் பிரபு பாதா தன்னுடைய ஆங்கில கீதை உரையை அமெரிக்காவில் வெளியிடுகையில் " the greatest dialgue ever" அதாவது  "உரையாடல்களிலேயே மிகச் சிறந்தது " என்று குறிப்பிட்டு  விளம்பரம் செய்தார்.

கிருஷ்ணரே கூட பதினெட்டாம் அத்தியாயத்தில்  " இந்த உரையாடலை (சம்வாதம்) என் பக்தர்களிடம் பரப்புபவன் எனக்கு மிகவும் உகந்தவன் " என்கிறார் .

கீதையில் ஒவ்வொரு அத்தியாத்தின் முடிவிலும் ஒரு முத்தாய்ப்பு வரும். அதை "புஷ்பிகை" எனவும் வர்ணிப்பர். அதில் முதல் அத்தியாயத்தின் முடிவில்   " ஓம் தத்ஸ திதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு  உபனிஷத்ஸு  ப்ரஹ்ம  வித்யாயாம்  யோக ஸாஸ்த்ரே ஸ்ரீ க்ருஷ்ணார்ஜுன  ஸம்வாதே அர்ஜுன விஷாத யோகோ நாம ப்ரதமோத்யாய : || " என்று வரும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அந்தந்த அத்தியாயத்தின் பேர் அடிக்கோடிட்ட இடத்தில் வரும்.

இங்கே சிவப்பில் எழுதப் பட்ட வாக்கியம் அனைத்து புஷ்பிகைகளிலும் வரும். இங்கே சம்வாதம் என்று வியாசரே கூறி விட்டார்.  சஞ்சயன் பதினெட்டாம் அத்தியாயத்தில் "ஸம்வாதம் இமம் அத்புதம் ..." என்று கிருஷ்ணரின் கீதையை வர்ணிக்கிறார். சம்வாதம் என்றால் உரையாடல் என்று தான் பொருள்.

இதில் தெளிவு பெற கீதையின் உள் ஸ்லோகங்களையே பார்ப்போம். அர்ஜுனன் மொத்தம் பேசியது  85  ஸ்லோகங்கள்.
முதல் அத்தியாயம்  47 ஸ்லோகத்தில் அவன் பேசியது மட்டூம் 26.
இரண்டாம் அத்தியாயத்தில் அவர் பேசியது 5 ஸ்லோகங்கள்.
மூன்றாம் அத்தியாயத்தில்  3 ஸ்லோகங்கள்.
நான்காம் அத்தியாயத்தில் 1
ஐந்தாம் அத்தியாயத்தில் 1

ஒன்றாம் அத்தியாயம் முழுதும் அர்ஜுனனின் மனக் குழப்பமே நம் முன் நிற்கிறது. பாரத யுத்தத்துக்கு சில மாதம் முன்பு இதே அர்ஜுனன் ப்ருஹன்னளை ரூபத்தில் அவன் இன்று உறவு கொண்டாடுகின்ற அனைத்து வீரர்களையும் யுத்த களத்தில் தோற்கடித்திருந்தான். திடீரென்று அவனுக்கு கலக்கம் வந்து செய்தது  வெறும்  சண்டித்தனம் மட்டுமே. அன்று அவன் செய்தது புலம்பல் மட்டுமே.

இரண்டாம் அத்தியாயத்தில்  அர்ஜுனனின் புலம்பல் வாதத்தை க்ருஷ்ணன் அலித்தனம்  என்று விவரித்தமையால் அர்ஜுனன் மேலும் குழப்பமடைந்து நான் உங்கள் சீடன் . எனக்கு நல்லுரை கூறுங்கள் என்று ஆரம்பிக்கிறான். ( " சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் ")  இதே அத்தியாயத்தில் இடையில் 54 வது ஸ்லோகத்தில் அவன் கேட்டது ஸ்திதப் ப்ரக்ஞனின் இலக்கணம் பற்றி.

 மூன்றாம் அத்தியாயத்திலோ அர்ஜுனன் கிருஷ்ணனைக் கேட்டது சன்யாசம் அல்லது கர்மம் இதில் எது சிறந்தது என்ற கேள்வி.இதிலும் அர்ஜுனனின் சண்டித்தனத்தின் எச்சங்களைக் காணலாம்.

நான்காம் அத்தியாயத்தில் அர்ஜுனன் க்ருஷ்ணனின் திவ்ய பிறப்பு பற்றி சந்தேகம் எழுப்புகிறான்.

இதோடு அர்ஜுனனின் குழப்பங்கள் முடிவுக்கு வருகின்றன. இப்போது  அவர் க்ருஷ்ணரின்  கருத்துகளை ஸ்ரத்தையோடு கேட்க  தயாராகிறார்.  க்ருஷ்ணரின் உபதேசத்தை எதிர் மறை எண்ணங்கள் இல்லாமல் கேட்கிறார். சில சிறு சந்தேகங்களை அங்கங்கே நிவர்த்தி செய்து கொள்கிறார். பத்தாம் அத்தியாயத்தில் அவர் க்ருஷ்ணனை பரம் பொருளாக ஏற்றுக் கொள்கிறார். பதினொன்றாம் அத்தியாயத்தில் க்ருஷ்ணனின் விராட ரூபம் கண்டு களிக்கிறார். சரணாகதி அடைவதாகக் கூறுகிறார். இதன் பின்னர் பகவான்  கூறும் அனைத்து ஸ்லோகங்களையும் அப்படியே ஸ்வீகரிக்கிறார்.

 இந்த நான்காம் அத்தியாயத்துப் பிறகு உரையாடல் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அது சுத்தமாக உபதேசம் மட்டுமே. உபதேசத்தின் இன்னொரு விளக்கம் தகுதி வாய்ந்தவனுக்கு மட்டுமே கொடுப்பது . இரண்டாம் அத்தியாயத்தில் அர்ஜுனன் தன்னுடைய தனிக் கருத்துகளை விட்டு க்ருஷ்ணரின் மொழிகளை ஏற்க முற்பட்ட உடனே உபதேசம் ஆரம்பிக்கிறது எனலாம். நான்காம் அத்தியாயத்தில் முதிர்ந்த சிஷ்யராகி விடுகிறார்.

இதற்குப் பிறகு அவர் அதிக பட்சமாக பதினொன்றாம் அத்தியாயத்தில் 32 ஸ்லோகம் சொல்கிறார். அனைத்தும் விஸ்வரூப தரிசனத்தைக் கண்டு பிரமித்து சொன்னவை.

நம்முடைய முன்னோர் கீதையை உபதேசம் என்றது இது போன்ற திடமான ஆராய்ச்சியால் தான். வியாசர் சம்வாதம் என்ற போதிலும் அது  சம்வாதத்தில் ஆரம்பித்து வேண்டுமானால் இருக்கலாம். ஆனால்  முடிவதோ உபதேசத்தில் தான் என்று நான் கூறுகிறேன்.

Sunday, May 12, 2013

தமிழில் எந்த கீதை உரை சிறந்தது ?




தமிழில் எந்த கீதை உரை சிறந்தது ?

என்னுடைய கீதை வாசிப்பு இப்போது பதின்மூன்று வருடங்களை தொட்டு விட்டது. முப்பது வருடங்களுக்கு மேலாகவே எங்கள் வீட்டில் சித்பவானந்தரின் உரை ஒன்று இருந்தது. பிறகு ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் யோகானந்தரின் ஆங்கில உரை, பாரதியின் தமிழ் உரை, ஜெயதயால் கோயந்தகா அவர்களின் இந்தி உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு - தத்துவ விவேச்சனி (கீதா பிரஸ் ), சுவாமி ராம்ஸுகதாஸ் அவர்களின்  சாதக சஞ்சீவியின் தமிழ் மொழி பெயர்ப்பு (கீதா பிரஸ் ), பிரபு பாதாவின் கீதை உரை (இஸ்கான் ) போன்றவைகள் வாங்கி விட்டேன். கடைசியில் ஓஷோவின் உரை இரண்டு அத்தியாயம் வாங்கினேன். 

என்னுடைய வாசகர்களுக்கு நான ஒரு நல்ல தமிழ் உரையை சிபாரிசு செய்யவே இந்தப் பதிவு என்பதினால் சித்பவானந்தரின் உரை, ஜெயதயால் கொயந்தகாவின் தத்வ விவேச்சனி (இனி இப்பெயரில்) , சாதக சஞ்சீவனி, மற்றும் பிரபுபாதாவின் கீதை  ஆகியவைகளில் இருந்தே தேர்வு செய்ய வேண்டியுள்ளது. பாரதியின் உரை உத்தமம் என்றாலும், அதில் பதவுரை இல்லை. ஒரு உரையின் உயிர் போன்ற விளக்கவுரை (அல்லது பொழிப்புரை அல்லது நயவுரை) இல்லை. ஆகையால் அதை மேற்கண்ட உரைகளுக்கு பின்னரே வைக்கிறேன்.

பொதுவாகவே கீதைக்கு உரை எழுதுவதென்பது சமய ஆச்சாரியர்கள் (சங்கரர், மத்துவர், ராமானுசர், நிம்பார்க்கர், வல்லபர், சைதன்யர் ) காலத்தோடு நின்று விட்டது எனலாம். இவை அனைத்தும் ஒவ்வொரு பெரும் தத்துவ தளத்தை நிறுவ முயற்சிக்கும் மாபெரும் உரைகள்.மற்றும் இவை ஒன்று மற்றொன்றை மறுப்பவை. இவைகளில் புகுந்து மீளுவது சாமானியனால் ஆகாது.

ஆச்சாரியர்களின் காலத்துக்குப் பிறகு, இவ்வுரைகள் குரு சீட பரம்பரை வழியாகவே பரவி வந்தன.நூற்றைம்பது வருடத்துக்கு முன் வேதாந்தம் பற்றி பிரசங்கமோ, பிரவசனமோ  நடை பெற்றே இருக்காது. குரு இல்லாமல் அது நடக்காது. ராமகிருஷ்ண இயக்கத்தின் தாக்கம் ஒன்றே வேதாந்த பரவலுக்கு வித்திட்டது. புத்தகம் மூலமாக வேதாந்தம் பரவத் தொடங்கியது இக்கால கட்டத்தில் தான். 

இஸ்கான் உரையை நீக்கி விட்டால் ஐம்பது வருடங்களாக தமிழில் வெளியான உரைகள் அனைத்தும் தனிப்பார்வை (exclusivity)  கொண்டவை அல்ல. ராமகிருஷ்ண மடத்து உரைகள் , கீதா பிரஸ்ஸின் உரைகள் எல்லாவற்றிலும் இந்த சார்பின்மையைக் காணலாம். இல்லையெனில், அத்துவைத மார்க்கத்தை நிருபிக்கப் புகுந்தால் 2/ 22 இல் " ஆத்துமா இன்னொரு உடலுக்குள் புகுகிறது" என்ற சொற்றொடருக்கு சுற்றி வளைத்தே உரை எழுத வேண்டியிருக்கும். அங்கும் மடக்கப் படலாம். துவைத மார்க்கத்தில் உரை சொல்லப் புகுந்தால்,  2/ 24, இல் எங்கும் விரவியவன் ஆத்துமா என்னும் போது சறுக்கும்.

ஆக, உள்ளதை உள்ளபடி உரைத்து  படிப்பவரின் சிந்தனையைத் தூண்டி , அவரை அந்த அமர வாக்கியங்களை அநுபூதி வாயிலாகவே அடையத் தூண்டும் ஒரு உரையை மட்டுமே நான சிபாரிசு செய்ய முடியும். மேலும் , நான ஆரம்ப நிலை  சாதகர்களுக்காக மட்டுமே இப்போது எழுதுகிறேன் .  அப்படி தமிழில் உள்ள உரைகள் ஜெயதயால் கோயந்தகாவின் தத்துவ விவேச்சனிசித்பவானந்தரின் உரை ,ஸ்ரீ  ராம் ஸுகதாஸின் சாதக சஞ்சீவனி. ((((பிரபு பாதா உண்மை உருவில் என்று எழுதினாலும், அதில் திரிபுகள் ஏராளம். மத்துவ  கௌடீய பிரிவின் தத்துவங்கள் நிருபிப்பதற்காக பெரும் திரிபுகளை  பிரபு பாதா  கையாள்கிறார்.ஆகவே அது ஆரம்பத்திலேயே அடிபடுகிறது.))))

மேலே உள்ள மூன்றில் சுவாமி ஸ்ரீ  ராம் ஸுகதாஸின்  உரை மெய் சிலிர்க்கும் உரை தான். சந்தேகம் இல்லை. ஆனால் அது ஏறக்குறைய இரண்டாயிரம் பக்கங்கள் கொண்டது. இரண்டாம் அத்தியாயத்துக்கு மேல் ஏறக்குறைய எல்லா சுலோகங்களுக்கும் பொழிப்புரை, விளக்க உரை மற்றும் நயவுரை மூன்றும் கொண்டது. ஆரம்ப நிலை வாசகர்கள் மற்றும் சாதகர்களை இது மிரளச் செய்து விடும். ஆகவே நான அதை மேல் நிலை சாதகர்களுக்கு மட்டுமே சிபாரிசு செய்வேன். 

இப்போது நம்மிடம் இரண்டு உரைகள் மட்டுமே என் மேற்கண்ட தகுதிகள் பெற்றுள்ளன. 
1. சித்பவானந்தர் உரை 
2. தத்துவ விவேச்சனி 

இந்த இரண்டுமே நன்கு விற்பனை ஆனவை. பிரபலமாகவும் உள்ளவை. இரண்டிலும் தேவ நாகரி எழுத்திலும் , தமிழிலும்  மூல சுலோகம் கொடுக்கப் பட்டுள்ளது. பிறகு பதம் பிரித்து பதங்களின் அர்த்தங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. இது இந்த இரண்டு உரைகளின் மாபெரும் சேவை ஆகும். பிறகு இரண்டிலும் பொழிப்புரை உள்ளது. 

சித்பவானந்தரின் உரை ராமகிருஷ்ண இயக்கங்களின் பரவலான , பெருந்தன்மையான ஆன்மீக உரைகளின் தழுவல். மேலும் அவர் கையாண்ட தமிழ் கூர்மை கொண்டது.சுருக்கம் கொண்டது. பக்தி சார்பு குறைவாகவும், வேதாந்த தத்துவ விசாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் உள்ளது. உரையின் முக்கியக் கூற்றுகளை உள்ளது உள்ளபடி கூறிவிட்டு சென்று விடுகிறது.

இங்கே ஒரு முக்கிய விஷயம் கவனிக்க வேண்டும்  கீதையில் எழுநூறு சுலோகங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் எண்பதுக்கும் மேலே அர்ஜுனன் மற்றும் சஞ்சயன் கூறுபவை. மிஞ்சியதில் இருந்து மட்டுமே கீதையின் மொத்த உருவை அப்படியே சாதகரின் மனதில் ஏற்ற ஒரு உரை முயற்சிக்க வேண்டும். இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து என்ன என்றால் சித்பவானந்தரின் உரை போதுமானதாக இல்லை என்பதே. சித்பவானந்தர் பெரும்பாலான சுலோகங்களுக்கு ராமகிருஷ்ண உபதேசங்களை மேற்கோள் காட்டுகிறார். சில சமயம் அவை அற்புதமாகப் பொருந்தினாலும், பல சமயம் அப்படி இல்லை. கீதையின் வேத, புராண, உபநிடத தொடர்பான வாக்கியங்களுக்கு அங்கே முழுமையான விளக்கம் இல்லை.


 இன்னொன்று , மிக முக்கியமானது. நுண்ணியது.  கீதை ஒற்றை செய்தி என்பதே நம்முடைய பாரம்பரியம்.  இதை விட்டு கீதை பக்தி, தியான, ஞான , கர்ம பாதைகளைக் காட்டுவதால் அவை ஒன்றொன்றும் தனி என்றும், கிருஷ்ணர் ஒன்றுக்கு ஒன்று முரணான இப்பாதைகளிடையே ஒரு விதமான சமரசத்துக்கு முயற்சிக்கிறார் என கூறும் வாதங்களுக்கு சித்பவானந்தரிடம் விடையே இல்லை. 

உண்மையில் கீதையில் முரண்பாடு இல்லை என்பது தத்வ விவேச்சனியில் இயல்பாக   விளக்கப் பட்டுள்ளது.   ஆன்ம  நெறியில்  பக்தியும், ஆத்ம சம்யமமும், ஞானமும், கர்மமும் இணைந்தே வரும் என்பதை கீதை கோடிட்டுக் காட்டவே செய்கிறது.  

தத்துவ விவேச்சனியின் நடை, நம்முடைய புராண, வைதீக  நெறியை அப்படியே ஏற்றுக் கொண்டு செல்லும் பாரம்பரியமான் ஒன்று. இன்று புதிய தலைமுறையிடம் நம் பாரம்பரியத்தைக் கொண்டு சேர்க்கும் ஒன்று. அதன்  மொழிபெயர்ப்பும் மிக இனிப்பானது . அதன் அமைப்பு கூட கேள்வி பதில் போன்ற அமைப்பில் உள்ளது . கீதா பிரஸ் நிறுவனத்தால் சேவை விலையில் வழங்கப் படுகிறது. 

தத்துவ விவேச்சனியின் தலையாய பகுதி அதன் முன்னுரை. ஆனால் அந்த முன்னுரை குறைந்தது மூன்று முறை கீதை படித்தவர்களுக்கு மட்டுமே விளங்கும். 

கீதை வேதாந்த மதங்களின் மூல நூலாகி விட்டபடியால் அதை வேதாந்தம் என ஒற்றை அடைப்புக் குறிக்குள்  அடைக்க முயல்வதில் உள்ள தவறை தத்துவ விவேச்சனி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இன்றைய  வேதாந்த மதங்களின் தத்துவம் வேதாந்தமாக இருக்கலாம். ஆயினும் அவற்றின் நடைமுறை முற்றிலும் பக்தி சார்ந்தது.  சங்கரர்  , மத்துவர் , ராமானுஜர் ஆகியோரின் மதங்கள் நடைமுறையில் உபாசனை  சார்ந்தவை என்பது கண்கூடு.


அண்மைக் காலத்தில் சில விமரிசகர்கள் முதிர்ச்சியில்லாமல் கீதை முரண்பாடுகளைக் கொண்டது என்பது போன்ற கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். எழுத்தாளர் திரு ஜெயமோஹனும் அதில் ஒருவர். அவர் தன குருமார்களில் ஒருவரான நடராஜ குருவின் உரையின் தாக்கத்தால் இதை எழுதி இருக்கிறார். நான் எதிர்பார்த்தது போலவே அவர் தத்துவ விவேச்சனியை காட்டமாக சாடி விட்டும் போயிருக்கிறார். 


நவீன உரைகளைப் பற்றி இன்னொரு விஷயம். அவர்கள் முற்போக்கு வாதிகளாக நினைத்துக் கொண்டு ஒரு விஷயத்தில் மழுப்பலாக இருப்பார்கள். அது இது தான். கிருஷ்ணர் பரம்பொருள் என்பதை அவர்கள் உரைகளில் நேரடியாக எழுதவே மாட்டார்கள். நடராஜ குருவும் தன உரையில் வியாசரின் " பகவான் உவாச்ச " என்ற சொற்றொடரை " கிருஷ்ணர் கூறுகிறார் " என்று திரித்துத் தான் எழுதுவார். இரண்டு பக்கமும் தப்பிக்க இது வழியாகி விடுமே !! பாரம்பரியம் சற்றும் அற்று வெற்று வேதாந்தம் பேசினால் வரவேற்பு கிடைக்கும் என நம்பியவர்கள் கீதை போன்ற முழு உபதேசத்தை படிக்கும் போது இப்படித் தான் சறுக்குவார்கள். 


முதலில் கீதை என்பது கிருஷ்ணரின் செய்தி என்பது இவர்களுக்கு சத்தமாக உரைக்கப் பட வேண்டும். கிருஷ்ணன் தன்னையே தன செய்தியின் உட் பொருளாகவும் தலைப் பொருளாகவும்  வைத்து கீதையைப் பாடினான் என்ற விஷயம்  இந்த நாட்டின் பாமரனுக்கும் தெரியும். இந்த நிலையில் இருந்தே கீதைப் படிப்பைத் துவங்க வேண்டும்.