Sunday, May 12, 2013

தமிழில் எந்த கீதை உரை சிறந்தது ?
தமிழில் எந்த கீதை உரை சிறந்தது ?

என்னுடைய கீதை வாசிப்பு இப்போது பதின்மூன்று வருடங்களை தொட்டு விட்டது. முப்பது வருடங்களுக்கு மேலாகவே எங்கள் வீட்டில் சித்பவானந்தரின் உரை ஒன்று இருந்தது. பிறகு ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் யோகானந்தரின் ஆங்கில உரை, பாரதியின் தமிழ் உரை, ஜெயதயால் கோயந்தகா அவர்களின் இந்தி உரையின் தமிழ் மொழி பெயர்ப்பு - தத்துவ விவேச்சனி (கீதா பிரஸ் ), சுவாமி ராம்ஸுகதாஸ் அவர்களின்  சாதக சஞ்சீவியின் தமிழ் மொழி பெயர்ப்பு (கீதா பிரஸ் ), பிரபு பாதாவின் கீதை உரை (இஸ்கான் ) போன்றவைகள் வாங்கி விட்டேன். கடைசியில் ஓஷோவின் உரை இரண்டு அத்தியாயம் வாங்கினேன். 

என்னுடைய வாசகர்களுக்கு நான ஒரு நல்ல தமிழ் உரையை சிபாரிசு செய்யவே இந்தப் பதிவு என்பதினால் சித்பவானந்தரின் உரை, ஜெயதயால் கொயந்தகாவின் தத்வ விவேச்சனி (இனி இப்பெயரில்) , சாதக சஞ்சீவனி, மற்றும் பிரபுபாதாவின் கீதை  ஆகியவைகளில் இருந்தே தேர்வு செய்ய வேண்டியுள்ளது. பாரதியின் உரை உத்தமம் என்றாலும், அதில் பதவுரை இல்லை. ஒரு உரையின் உயிர் போன்ற விளக்கவுரை (அல்லது பொழிப்புரை அல்லது நயவுரை) இல்லை. ஆகையால் அதை மேற்கண்ட உரைகளுக்கு பின்னரே வைக்கிறேன்.

பொதுவாகவே கீதைக்கு உரை எழுதுவதென்பது சமய ஆச்சாரியர்கள் (சங்கரர், மத்துவர், ராமானுசர், நிம்பார்க்கர், வல்லபர், சைதன்யர் ) காலத்தோடு நின்று விட்டது எனலாம். இவை அனைத்தும் ஒவ்வொரு பெரும் தத்துவ தளத்தை நிறுவ முயற்சிக்கும் மாபெரும் உரைகள்.மற்றும் இவை ஒன்று மற்றொன்றை மறுப்பவை. இவைகளில் புகுந்து மீளுவது சாமானியனால் ஆகாது.

ஆச்சாரியர்களின் காலத்துக்குப் பிறகு, இவ்வுரைகள் குரு சீட பரம்பரை வழியாகவே பரவி வந்தன.நூற்றைம்பது வருடத்துக்கு முன் வேதாந்தம் பற்றி பிரசங்கமோ, பிரவசனமோ  நடை பெற்றே இருக்காது. குரு இல்லாமல் அது நடக்காது. ராமகிருஷ்ண இயக்கத்தின் தாக்கம் ஒன்றே வேதாந்த பரவலுக்கு வித்திட்டது. புத்தகம் மூலமாக வேதாந்தம் பரவத் தொடங்கியது இக்கால கட்டத்தில் தான். 

இஸ்கான் உரையை நீக்கி விட்டால் ஐம்பது வருடங்களாக தமிழில் வெளியான உரைகள் அனைத்தும் தனிப்பார்வை (exclusivity)  கொண்டவை அல்ல. ராமகிருஷ்ண மடத்து உரைகள் , கீதா பிரஸ்ஸின் உரைகள் எல்லாவற்றிலும் இந்த சார்பின்மையைக் காணலாம். இல்லையெனில், அத்துவைத மார்க்கத்தை நிருபிக்கப் புகுந்தால் 2/ 22 இல் " ஆத்துமா இன்னொரு உடலுக்குள் புகுகிறது" என்ற சொற்றொடருக்கு சுற்றி வளைத்தே உரை எழுத வேண்டியிருக்கும். அங்கும் மடக்கப் படலாம். துவைத மார்க்கத்தில் உரை சொல்லப் புகுந்தால்,  2/ 24, இல் எங்கும் விரவியவன் ஆத்துமா என்னும் போது சறுக்கும்.

ஆக, உள்ளதை உள்ளபடி உரைத்து  படிப்பவரின் சிந்தனையைத் தூண்டி , அவரை அந்த அமர வாக்கியங்களை அநுபூதி வாயிலாகவே அடையத் தூண்டும் ஒரு உரையை மட்டுமே நான சிபாரிசு செய்ய முடியும். மேலும் , நான ஆரம்ப நிலை  சாதகர்களுக்காக மட்டுமே இப்போது எழுதுகிறேன் .  அப்படி தமிழில் உள்ள உரைகள் ஜெயதயால் கோயந்தகாவின் தத்துவ விவேச்சனிசித்பவானந்தரின் உரை ,ஸ்ரீ  ராம் ஸுகதாஸின் சாதக சஞ்சீவனி. ((((பிரபு பாதா உண்மை உருவில் என்று எழுதினாலும், அதில் திரிபுகள் ஏராளம். மத்துவ  கௌடீய பிரிவின் தத்துவங்கள் நிருபிப்பதற்காக பெரும் திரிபுகளை  பிரபு பாதா  கையாள்கிறார்.ஆகவே அது ஆரம்பத்திலேயே அடிபடுகிறது.))))

மேலே உள்ள மூன்றில் சுவாமி ஸ்ரீ  ராம் ஸுகதாஸின்  உரை மெய் சிலிர்க்கும் உரை தான். சந்தேகம் இல்லை. ஆனால் அது ஏறக்குறைய இரண்டாயிரம் பக்கங்கள் கொண்டது. இரண்டாம் அத்தியாயத்துக்கு மேல் ஏறக்குறைய எல்லா சுலோகங்களுக்கும் பொழிப்புரை, விளக்க உரை மற்றும் நயவுரை மூன்றும் கொண்டது. ஆரம்ப நிலை வாசகர்கள் மற்றும் சாதகர்களை இது மிரளச் செய்து விடும். ஆகவே நான அதை மேல் நிலை சாதகர்களுக்கு மட்டுமே சிபாரிசு செய்வேன். 

இப்போது நம்மிடம் இரண்டு உரைகள் மட்டுமே என் மேற்கண்ட தகுதிகள் பெற்றுள்ளன. 
1. சித்பவானந்தர் உரை 
2. தத்துவ விவேச்சனி 

இந்த இரண்டுமே நன்கு விற்பனை ஆனவை. பிரபலமாகவும் உள்ளவை. இரண்டிலும் தேவ நாகரி எழுத்திலும் , தமிழிலும்  மூல சுலோகம் கொடுக்கப் பட்டுள்ளது. பிறகு பதம் பிரித்து பதங்களின் அர்த்தங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. இது இந்த இரண்டு உரைகளின் மாபெரும் சேவை ஆகும். பிறகு இரண்டிலும் பொழிப்புரை உள்ளது. 

சித்பவானந்தரின் உரை ராமகிருஷ்ண இயக்கங்களின் பரவலான , பெருந்தன்மையான ஆன்மீக உரைகளின் தழுவல். மேலும் அவர் கையாண்ட தமிழ் கூர்மை கொண்டது.சுருக்கம் கொண்டது. பக்தி சார்பு குறைவாகவும், வேதாந்த தத்துவ விசாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் உள்ளது. உரையின் முக்கியக் கூற்றுகளை உள்ளது உள்ளபடி கூறிவிட்டு சென்று விடுகிறது.

இங்கே ஒரு முக்கிய விஷயம் கவனிக்க வேண்டும்  கீதையில் எழுநூறு சுலோகங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் எண்பதுக்கும் மேலே அர்ஜுனன் மற்றும் சஞ்சயன் கூறுபவை. மிஞ்சியதில் இருந்து மட்டுமே கீதையின் மொத்த உருவை அப்படியே சாதகரின் மனதில் ஏற்ற ஒரு உரை முயற்சிக்க வேண்டும். இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து என்ன என்றால் சித்பவானந்தரின் உரை போதுமானதாக இல்லை என்பதே. சித்பவானந்தர் பெரும்பாலான சுலோகங்களுக்கு ராமகிருஷ்ண உபதேசங்களை மேற்கோள் காட்டுகிறார். சில சமயம் அவை அற்புதமாகப் பொருந்தினாலும், பல சமயம் அப்படி இல்லை. கீதையின் வேத, புராண, உபநிடத தொடர்பான வாக்கியங்களுக்கு அங்கே முழுமையான விளக்கம் இல்லை.


 இன்னொன்று , மிக முக்கியமானது. நுண்ணியது.  கீதை ஒற்றை செய்தி என்பதே நம்முடைய பாரம்பரியம்.  இதை விட்டு கீதை பக்தி, தியான, ஞான , கர்ம பாதைகளைக் காட்டுவதால் அவை ஒன்றொன்றும் தனி என்றும், கிருஷ்ணர் ஒன்றுக்கு ஒன்று முரணான இப்பாதைகளிடையே ஒரு விதமான சமரசத்துக்கு முயற்சிக்கிறார் என கூறும் வாதங்களுக்கு சித்பவானந்தரிடம் விடையே இல்லை. 

உண்மையில் கீதையில் முரண்பாடு இல்லை என்பது தத்வ விவேச்சனியில் இயல்பாக   விளக்கப் பட்டுள்ளது.   ஆன்ம  நெறியில்  பக்தியும், ஆத்ம சம்யமமும், ஞானமும், கர்மமும் இணைந்தே வரும் என்பதை கீதை கோடிட்டுக் காட்டவே செய்கிறது.  

தத்துவ விவேச்சனியின் நடை, நம்முடைய புராண, வைதீக  நெறியை அப்படியே ஏற்றுக் கொண்டு செல்லும் பாரம்பரியமான் ஒன்று. இன்று புதிய தலைமுறையிடம் நம் பாரம்பரியத்தைக் கொண்டு சேர்க்கும் ஒன்று. அதன்  மொழிபெயர்ப்பும் மிக இனிப்பானது . அதன் அமைப்பு கூட கேள்வி பதில் போன்ற அமைப்பில் உள்ளது . கீதா பிரஸ் நிறுவனத்தால் சேவை விலையில் வழங்கப் படுகிறது. 

தத்துவ விவேச்சனியின் தலையாய பகுதி அதன் முன்னுரை. ஆனால் அந்த முன்னுரை குறைந்தது மூன்று முறை கீதை படித்தவர்களுக்கு மட்டுமே விளங்கும். 

கீதை வேதாந்த மதங்களின் மூல நூலாகி விட்டபடியால் அதை வேதாந்தம் என ஒற்றை அடைப்புக் குறிக்குள்  அடைக்க முயல்வதில் உள்ள தவறை தத்துவ விவேச்சனி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இன்றைய  வேதாந்த மதங்களின் தத்துவம் வேதாந்தமாக இருக்கலாம். ஆயினும் அவற்றின் நடைமுறை முற்றிலும் பக்தி சார்ந்தது.  சங்கரர்  , மத்துவர் , ராமானுஜர் ஆகியோரின் மதங்கள் நடைமுறையில் உபாசனை  சார்ந்தவை என்பது கண்கூடு.


அண்மைக் காலத்தில் சில விமரிசகர்கள் முதிர்ச்சியில்லாமல் கீதை முரண்பாடுகளைக் கொண்டது என்பது போன்ற கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். எழுத்தாளர் திரு ஜெயமோஹனும் அதில் ஒருவர். அவர் தன குருமார்களில் ஒருவரான நடராஜ குருவின் உரையின் தாக்கத்தால் இதை எழுதி இருக்கிறார். நான் எதிர்பார்த்தது போலவே அவர் தத்துவ விவேச்சனியை காட்டமாக சாடி விட்டும் போயிருக்கிறார். 


நவீன உரைகளைப் பற்றி இன்னொரு விஷயம். அவர்கள் முற்போக்கு வாதிகளாக நினைத்துக் கொண்டு ஒரு விஷயத்தில் மழுப்பலாக இருப்பார்கள். அது இது தான். கிருஷ்ணர் பரம்பொருள் என்பதை அவர்கள் உரைகளில் நேரடியாக எழுதவே மாட்டார்கள். நடராஜ குருவும் தன உரையில் வியாசரின் " பகவான் உவாச்ச " என்ற சொற்றொடரை " கிருஷ்ணர் கூறுகிறார் " என்று திரித்துத் தான் எழுதுவார். இரண்டு பக்கமும் தப்பிக்க இது வழியாகி விடுமே !! பாரம்பரியம் சற்றும் அற்று வெற்று வேதாந்தம் பேசினால் வரவேற்பு கிடைக்கும் என நம்பியவர்கள் கீதை போன்ற முழு உபதேசத்தை படிக்கும் போது இப்படித் தான் சறுக்குவார்கள். 


முதலில் கீதை என்பது கிருஷ்ணரின் செய்தி என்பது இவர்களுக்கு சத்தமாக உரைக்கப் பட வேண்டும். கிருஷ்ணன் தன்னையே தன செய்தியின் உட் பொருளாகவும் தலைப் பொருளாகவும்  வைத்து கீதையைப் பாடினான் என்ற விஷயம்  இந்த நாட்டின் பாமரனுக்கும் தெரியும். இந்த நிலையில் இருந்தே கீதைப் படிப்பைத் துவங்க வேண்டும்.   

1 comment:

  1. http://gita-omni.blogspot.in இந்த முயற்சியையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete