Wednesday, December 7, 2011

பக்தி என்பது வைதீகமா ? இன்றைய புரோகிதர்கள் மீமாம்சகர்களா ?

திரு  ஜெயமோகன் தனது நூலான "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் " என்ற நூலில் ஒரு முக்கியமான கூற்றை முன் வைக்கிறார். நூலின் முதலிலேயே தரப்புகளை முன் வைப்பதே தன் பணி என்றும், விமரிசனங்கள் அல்ல என்றும் தெளிவாகக் கூறும்  ஜெ , மீமாம்சை பக்கம் வரும் போது இந்த நியதியை மீறி விடுகிறார்.

முதலில் அவர் கூறும் வாக்கியம் இது.    பக்தி என்பது வைதீக மரபே.ஜெ இதை எழுதினர் என்பது ஆச்சரியமாக உள்ளது. பக்தி என்பது ஷன்மதங்களின் செயல்பாட்டு முறை. ஷண்மதங்கள் அடிப்படையில் தந்திர மதங்கள். இதை புரிந்து கொள்ள ஒன்றும் பெரிய நூலறிவு தேவையில்லை.

 இன்று பக்தி நெறியின் மூன்று மிஞ்சியுள்ள பெரு மதங்கள் சைவம், வைணவம் மற்றும் சாக்தம். இவை மூன்றும் ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இன்னொரு விஷயம் வேதத்தில் மத பேதம் இல்லை. அவற்றில்  சைவ , வைணவ  பாகுபாடு இல்லை. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஸ்ரீ ருத்திரம் என்னும் சிவனுக்கு உரிய தாகக் கருதப்படும் மந்திரம் வைணவ ஆலயங்களிலும் பிரயோகம் ஆகிறது. இதிலும் சமகம் பகுதி சுத்த மத சார்பின்மை கொண்டது. (செகுலர்). புருஷ சூக்தம் அனைத்து தெய்வ ஆராதனைகளிலும்  எடுத்தாளப் படுகிறது. மந்திர புஷ்பமும் அப்படியே.

முதலில் சைவம். இது வேதத்தை பிரதானமாக அங்கீகரித்தாலும் முழு முதல் பிரமாணமாக ஏற்பதில்லை. சிவானந்தர் இது குறித்து எழுதி உள்ளார். ஆகமங்களை  படிப்பவருக்கு  இந்த விஷயம் உடனேயே விளங்கி விடும். சைவ சித்தாந்தம் " புறத்தாற்குப் பேயோன் தன் பூங்கழல்கள் வெல்க" என்று வேதத்துக்கு ஒவ்வாத கருத்தை அல்லவா கூறுகிறது ?


வைணவத்தின் ஸ்தாபக ஆச்சாரியார் ஆன யமுனாசாரியர் வேதம் வைணவத்துக்கு பிரதானம் இல்லை என்றும் வைணவ ஆகமங்களே முதன்மை என்றும் எழுதி வைத்து விட்டார்( பி டி  ஸ்ரீனிவாச அய்யங்கார் ). இங்கே வேதம் முதன்மை இல்லை என்றாலும் விரோதமும் இல்லை. இந்த சமாதானமே சங்கரர் காலத்துக்குப் பின் தான் வந்தது. அவர் தான் ஷண்மதங்களை முறைப் படுத்தியவர்.  ஆக பக்தி சார்ந்த தந்திர மதங்களான ஷண்மதங்களை வைதீக மரபு  என்று எழுதுவது மதில் மேல் பூனை நிலை. வேதம் வெறும் பூசைப் புத்தகமாக மாறியதும் இம்மதங்களால் தான்.

சாக்தம் தன் பங்குக்கு வேதத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கருணா மூர்த்தியான கடவுள் என்பதே அவைதிக கோட்பாடு.  ஆரிய சமாஜம் தொடக்கி வைத்து வேதங்களை முன்னிலைப் படுத்திய ஸ்ரீ  தயானந்த சரஸ்வதி இதைக் கேட்டதுமே கொதித்தார் . கடவுள் என்பவர் நியாயமானவர் தானே ? அப்படியிருக்க எப்படி தன்னை கீழ்ப்படிபவரை மட்டும் ரட்சிப்பார் ? என்று கேட்டார். ஸ்ரீமத் பாகவதம் கூட அவைதிக புராணம் என வகைப் படுத்தப் பட்டுள்ளது. ஏனெனில் அது பரந்தாமனின் வியூஹ நிலைகளின் மூலம் தொடங்கிய படைப்பு பற்றிப் பேசுகிறது.


ஆக, பக்தி இயக்கம் என்பது வைதீக நெறி என்பது ஒரு இரண்டும்  கெட்டான் வாதம்  .   பாகவதம் தான் பக்தியின்  தொடக்கம். அதுவே அவைதிகம்.  பக்தியை வைதீக நெறி என்பது ஒரு பொதுப் படுத்தப் பட்ட கூற்று. சைவ, வைணவ , மற்றும் சாக்த தீட்சை பெறுபவர்கள் தான் இந்த உண்மையை உணர முடியும். அங்கே சிவனைத் ( அல்லது நாராயணனை)  தவிர வேறு தெய்வம் அண்டாதே என்பது தான் முதல் உபதேசமாக வரும். நாங்களும் வைதீகர்கள் என்று ஷண்மதர்கள் கூறினாலும் அதை மறுக்க யாரும் இங்கே இல்லை.

இன்றைய புரோகிதர்கள் மீமாம்சகர்களா ?  

இன்றைய புரோகிதர்கள் என்ன செய்கின்றனர் ? அவர்கள் செய்யும் பிரதான காரியம் பூஜை மற்றும் ஹோமம் (கவனியுங்கள். யாகம் அல்ல ). அவர்கள் செய்யும் பூஜை பெரும்பாலும் பிள்ளையார், சிவன், பெருமாள், முருகன் மற்றும் அம்பாள் ஆகிய பெரும் தெய்வங்களுக்கு . சில சமயம் சிறு தெய்வங்களுக்கும் உண்டு.

இவர்கள் செய்யும் அக்னி காரியம் பெரும்பாலும் ஹோமமே. அதில்  கணபதி ஹோமம்   முதன்மை. சண்டி, ருத்திர ஹோமம், சுதரிசன ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் என்று  பல வகை. இதில் எதையாவது வேத கால மீமாம்சகர்கள் செய்தார்களா என்று ஜெ தான் சொல்ல வேண்டும். வேத கால யாகங்கள் இயற்கை சக்திகளை வசீகரிப்பதர்காக நடத்தப் பட்டவை. பெரும்பாலும் செயல் முறை சிக்கலானது. இன்றைய ஹோமங்கள் ஷண்மதங்கள் சார்ந்தவை. அந்தந்த தெய்வங்களை அழைத்து ஆகுதி அளிப்பவை.

மீமாம்சகர்களுக்கு பூஜையும் தெரியாது. ஹோமமும் தெரியாது. அவர்கள் வேதங்கள் தன்னளவில் பிரமாணமானவை  என்ற மைய கருத்தை  முன்னிறுத்தி மேலே செல்லுகின்றனர். இன்றைய புரோகிதர்கள் மீமாம்சகர்களே என்ற இடது சாரி வாதம் எந்த அளவு சொத்தை என்பது இப்போது புரியும்.


இன்னொன்று வைதீக பாடசாலைகளில் பாடம் பயின்று வெளி வருபவர்கள் பெரும்பாலும் ஸ்மார்த்தர்கள். மற்றவர் ஸ்ரீ வைஷ்ணவர் மற்றும் மாத்துவர். பின் கூறிய இந்த இரண்டு வகையினரும் வைஷ்ணவர்கள் மற்றும் வேதாந்த மதத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள்.

ஸ்மார்த்தர்கள் ஷன்மத சம்மதமானவர்கள். இவர்களை ஸ்மார்த்த வைதீகர் என்பதே பொருந்தும்.  ஆனால் சைவ கோவில்கள் மற்றும் வைணவ கோவில்களில் ஸ்மார்த்தர்கள் ஹோமம் செய்ய முடியாது. மீதமுள்ள தங்கள் மடங்கள் மற்றும் பிராம்மண இல்லங்களில் மட்டும் இவர்கள் அக்னி காரியம் செய்வார்கள். சென்ற காலங்களில் மன்னர்கள் தான் இவர்களது போஷகர்களாக இருந்து அவர்கள் அக்னி காரியம் செய்ய நிலமும், மாடுகளும் அளித்தார்கள்.

மீமாம்ஸகம்  உயிரோடு இருக்க வேண்டுமானால் ஸ்மார்த்தர்கள் மட்டும் தான் அதை செய்ய அதிகாரம் உள்ளவர்கள் ஆனால் அப்படிப்பட்ட ஸ்மார்த்தர்கள் அருகி கடைசியில் இல்லாமலே போய்விட்டார்கள். இன்று ஸ்மார்த்த மடங்களில் மீமாம்சம்  பாடம் உண்டு. ஆனால் அங்கே மீமாம்சை வழியான ஒரு வாழ்க்கை முறை இல்லை.

இன்று மீமாம்சகம் வெறும் வாதப் பொருளாக மட்டும் உள்ளது. வாழ்க்கை நெறியாக அது அழிந்து போய் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

No comments:

Post a Comment