Tuesday, December 6, 2011

சாங்கிய தரிசனம் வேதத்துக்கு அன்னியமானதா ?

சில  தினங்களுக்கு முன் திரு ஜெயமோகனின் 'இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் " என்ற புத்தகத்தை வாங்கி வாசித்தேன். இரண்டு மாலை வேளைகள் உட்கார்ந்து படித்தேன். இருநூறு பக்கங்கள். படித்த உடனே ஒரு பரபரப்பு. இதற்கு பதில் எழுத வேண்டும் என்று. இன்று தான் முடிந்தது.
 
அவரைப் பற்றி நான் அறிந்தது இது . அவர் இன்றைய தமிழக எழுத்தாளர்களில் தத்துவ ரீதியாக எழுதும் வெகு சிலரில் ஒருவர். பெரும் விவாத அறிவு கொண்டவர். சுய அறிதலுக்காக   நாராயண குரு வழி வந்த  குரு பாரம்பரியத்தில் இருப்பவர்.

அவரது " ஆறு தரிசனங்கள் " பல தருணங்களில் எனக்கு தெளிவினைத் தந்த போதும் , மேலும் பல தருணங்களில்  ஏமாற்றமே தந்தது. அதற்குக் காரணம் அவர் சில அடிப்படைகளில் (premises )  இந்த தரிசனங்களை அணுகுகிறார். அவைகளில் சில

1 .  தரிசங்கள் நான்குக்கு வேதங்கள் அந்நியமானவை.
2 . சில தரிசனங்கள் பழங்குடிச் சமுதாயத்தினின்று பிறந்தவை.
3 . தரிசனங்கள் உருவாகிய பிற்பாடே வேத இலக்கியங்களில் சேர்க்கப் பட்டன.
4 . பக்தி இயக்கம் என்பது வைதீக நெறியே.
5 . இன்றைய புரோகிதர்கள் மீமாம்சகர்கள்
6 . கீதை வேதங்களைச் சாடுகிறது
7 . உபநிடதங்கள் வேத மறுப்பையே அடிப்படையாகக் கொண்டவை 

எனக்கு வேதம் அவ்வளவாகத் தெரியாது. வேத சமஸ்கிருதம் பண்டிதர்களுக்கே புதிராக இருக்க, நானெங்கே ? சிறிது உபநிடதமும், சிறிது யோக  சூத்திரமும் , கீதையும் அறிமுகம்.  தரிசனங்களைப்   பற்றி ஏறக்குறைய விக்கிபீடியா அளவில் செய்திக் கோர்வை  மட்டும் தெரியும்.

 எனக்கு இந்த மேற்கூறியவை  பிழையாகத்  தெரிகின்றன. ஒரு சிறிது என்றால் அதை நேராக ஜெயமோகனுக்கே அனுப்பியிருப்பேன். ஆனால் இவை அடிப்படையாகவே தவறு எனத் தோன்றுவதால் இதைத் தனியாக பதிவு செய்கிறேன்

முதலில் சாங்கியம். ஜெயமோகன் (இனி ஜெ)  பல ஐரோப்பிய ஆராய்ச்சியாளர் மற்றும் இந்திய இடது சாரி ஆராய்ச்சியாளர்களான கோசாம்பி மற்றும் தாமோதரன்    கூற்றை மேற்கோள்   காட்டுகிறார். அவை சாங்கியம் வேத மறுப்பு உள்ளதாகப் பேசுகின்றன .

தன தரப்பாக ஜெ சாங்கியம் வேத விரோதி இல்லை என்று ஒரு இடத்திலும், வேறு இடத்தில் அது லோகாயத வாதத்தின் நீட்சியே என்றும் பதிவு செய்கிறார். இன்னொரு இடத்தில் சொல்லும் விதமோ அது வேத மரபுடன் வாதித்தே வளர்ந்தது என்றுதான்.


தெளிவு ஏற்பட நான் கபில சூத்திரத்தின் ஐந்தாவது புத்தகத்தில் படித்த போது நேர் எதிர் தகவல்களே கிடைக்கின்றன. (39 முதல் 51 வது சூத்திரம் வரை வேதம் பற்றிய தெளிவாக்கல்கள் மட்டுமே. கபிலர் சாங்கிய முறையில் வேதத்தைப் பார்க்கிறார்.


சூத்திரம் 5 -46 இப்படி போகிறது
अपौरुषेयत्वं   तत्कर्त्तु:   पुरुषस्याभावात   |
அபௌருஷேயத்வம் தத் கர்த்து : புருஷஸ்யாபாவாத் |
(வேதங்கள் (பர) மனிதனால் செய்யப்பட்டவை அல்ல.(பர) மனிதர் யாரும் அதற்கு எழுத்தாளராக முடியாது )

5 - 51 இதோ
निज शक्त्याभीव्यक्ते :  स्वत : प्रामाण्यम |
(நிஜ சக்த்யாபி வ்யக்தே ஸ்வத : ப்ராமாண்யம் )
(வேதங்கள் தன்னளவிலேயே அதிகார பூர்வமானவை. ஏனெனில் அவை தங்கள் சக்தியாலேயே சரியான அறிவைத் தருகின்றன )புருஷன் என்பவன் சாங்கியத்தில் ஒரு சலனம் அற்றவன் (passive ) . ஆகையால் புருஷன் அவற்றைப் படைக்கவில்லை என்று கூறிவிட்டு அவை மனிதனாலும் படைக்கப் படவில்லை என பிற சூத்திரங்களில் விளக்குகிறார். இணைய தளத்தில் விளக்க உரையுடன் இந்த சூத்திரங்கள் இங்கே கிடைக்கின்றன.

வேத தொடர்பு அற்ற தரிசனம் ஏன் வேதத்துக்கு இந்த அளவு முக்கியத்துவம் தர வேண்டும் ? ஜெ அவர்கள் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா மற்றும் கோசாம்பியின் படைப்புகளையே நம்பி இவற்றைப் பதிவு செய்ததினால் இதைக் கவனிக்காமல் விட்டிருக்கலாம்.   இடது சாரி வாதிகளின் நேர்மை அற்ற போக்குக்கு இது இன்னொரு உதாரணம்.


சில தினகளுக்கு முன் ஜெ உடன் பேசும் போது அவர் ஆஸ்திக (சேஸ்வர)   மற்றும் நாஸ்திக (நிரீஸ்வர ) அணுகுமுறைகளைப் பற்றித் தான் பேசினார். . ஆனால் நான் கூறிக் கொண்டிருப்பதோ வைதீகமா அவைதிகமா என்பது பற்றி. ஜெ இது  போன்ற  வாதம் செய்ய நியாயம் உண்டு. சாங்கியம் பக்தி மற்றும் இன்ன பிற அமைப்புகளுக்குள்ளும் ஊடுருவி விட்டதனால், அதன் தனி அடையாளம் தேடிச் சென்றிருக்கிறார். அவர் நம்பிய மூலங்களிடம் தான் பழுது.

ஒரு வலைத் தளத்தில் நான் படித்தது இது. வேதங்களின் ஒரு ரகசிய சங்கேதத்தை வைத்தே கபிலர் சாங்கிய தரிசனத்தை அருளினார் என்பது தான் அது. இதற்கு நிருபணம் இல்லாமல் போகலாம். ஆனால் சாங்கியம் வைதீகத்துக்கு கடன் பட்டதே அல்லது வெகு வெகு நெருக்கமானதே என்பது தான் உண்மை.அதற்கு கபில சூத்திரம் வாழும் சாட்சி.

வெங்கட் 


அடுத்தது : பக்தி என்பது வைதீகமா ? இன்றைய புரோகிதர்கள் மீமாம்சகர்களா ?


No comments:

Post a Comment