Sunday, August 15, 2010

தவப் புதல்வர்கள்-சிறுகதை

மார்கழிக் குளிர் சில்லென்று நின்று குடைந்தது.   நாச்சிமுத்துக் கவுண்டர்   இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தார். கோவிலுக்குள் இப்போதே சில சாதுக்கள் பாட்டு ஆரம்பித்து விட்டனர். ஒரு குரல் மட்டும் இனிமையாக ஒலித்தது. அந்த ரிஷிகேசத்து சந்நியாசி போலும். மடப்பள்ளியில் சமையல் மணம் சுகமாய் நாசியில் சஞ்சரித்தது.


பட்டர்    இவரை நோக்கி  வந்தார்  " கவுண்டர் வாள் ! இன்னிக்கு ராத்திரிக்குள்  பெரும்பாலும்  பாகவதர்கள் எல்லாம் வந்துடுவா . தங்க வைக்க  சில வீடும் தயார் செஞ்சிருக்கேன். கோவில் பிரகாரத்திலேயும் சில சாதுக்கள் தங்குவா. உங்க ரைஸ் மில்   குடோனில கொஞ்சம் பேரை படுக்க வைக்க அனுமதிக்கணும். புதுசா பாய் ஒரு அம்பது இருந்தா பரவாயில்லை. அப்புறம் ரெண்டு குடி தண்ணீர் அண்டா வாடகைக்கு வேணும். சமையல் ஆட்கள் வந்தாச்சு. சாமானும் இறங்கியாச்சு. காலை அடுப்பு மூட்டணும் " பட்டர் அடுக்கிக் கொண்டே போனார். 

கவுண்டர் பட்டருக்கு தெளிவாக சில உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு, சாமான்களுக்கு ஏற்பாடு செய்து விட்டு , திரும்பி நடந்தார். ஒன்றா இரண்டா ?  ஐம்பது வருடமாக அவர் இதை விடாமல் அல்லவா செய்து வருகிறார் ? முதுமை அவரை விரட்டிய போதும் இந்த உத்சவம் அவரை பொறுத்த வரை ஒரு தவம். ஒரு பிராயச்சித்தம்.

ல்லாம் ஆறு மாதங்களுக்குள் நடந்து விட்டது. இளைஞன் நாச்சிமுத்து வின் அப்பா தான் முதல் முதலில் அந்தச் செய்தியைச் சொன்னார். உச்சவரம்புச் சட்டம் பிறபபித்தாகி விட்டது என்றும், பத்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது என்றும், உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என்றும் விவரித்தார்.

முத்துஸ்வாமி அய்யர் அதைக் கேட்டதும், முதலில் தன் உபரி நிலங்களை அங்கே உழுதவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும்  பிரித்துக் கொடுத்து விட்டார். ஏதோ அவர்கள் கொடுத்ததை வாங்கிக் கொண்டார். கடைசியாய் பத்து ஏக்கர் மட்டும் வைத்துக் கொண்டார். அங்கே தான் அவருக்கு பிரச்சினையே எழுந்தது. அதை உழுது கொண்டிருந்த மயில்சாமி ஒரு நாள் சில முரட்டு ஆட்களுடன் வந்து , இந்த நிலம் தனக்கே சொந்தம் என்று வாதாட , முத்துஸ்வாமி இடிந்து போய் விட்டார்.

பிரச்சினை ஒரு நாள் முற்றியது. ஊர் கூடி நியாயம் கேட்டும் ஒன்றும் பயனில்லை. அரசியல் வேறு புகுந்து கொண்டது. அன்றிரவு அய்யர் நாச்சிமுத்து வின் வீட்டிற்கு வந்தார்.இரவு வெகு நேரம் பேசியதாக  அம்மா பிறகு சொன்னாள். விடிந்து பார்த்தால், வண்டி கட்டி , கிளம்பி விட்டார். சங்கரன் மட்டுமே நாச்சிமுத்துவிடம், தாங்கள் மதராஸ் செல்வதாகவும், உறவினர் உதவுவதாகவும் சொன்னான். இருவரும் ஒரே வயது பள்ளித் தோழர்கள்.

நாச்சிமுத்துவிற்கு  அப்போது வயது பதினைந்து  மட்டும் தான். ஊரே அன்று திரண்டிருந்தது. சங்கரன் போகும் போது சொன்ன வார்த்தைகள் இன்று போல் ஒலித்தன. "ஆச்சு நாச்சிமுத்து ! எங்கப்பா நேத்து சொன்னார். இரண்டாயிரம் வருஷ சகாப்தம் முடிஞ்சு கிளம்பறோம் அப்படீன்னு.! ஒரே வருஷத்தில எங்கப்பா சொந்த ஊர்லயே அகதியாயிட்டார். வர்ரேன். எங்க வீட்டை அவர் விக்கலை. அதை பார்த்துக்கோ."

அவன் தந்தை , தாய், சகோதரி எல்லாரும் குதிரை வண்டியில் ஏறி அமர்ந்தனர். சங்கரனின் அப்பா கடைசி முறையாக அவர் வாழ்ந்த வீட்டை ஒரு முறை பார்த்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார். சங்கரனின் பார்வை கடைசி வரை கோவில் கோபுரத்தையே பார்த்தபடி இருந்தது. வண்டி மெல்ல நகர்ந்து திரும்பியது.

ல்லவர்களின் பேச்சு பலிக்கவில்லை அங்கே. அவர் நிலம் அபகரிக்கப் பட்டது. சில மாதங்களுக்குப் பின் , மயில்சாமி ஒரு கொலை வழக்கில் மாட்டி போலீஸ் பிடித்துக் கொண்டு போனது. பிறகு ஊர்க் கவுண்டரான நாச்சிமுத்துவின்  அப்பா , அதை தன் பொறுப்பில் வைத்துக் கொண்டு, அய்யருக்கு தகவல் அனுப்பினார். அய்யர் தன் பதிலில் " அது உங்களிடமே இருக்கட்டும். பிறகு பார்க்கலாம். அதில் வரும் வருமானத்தில் மார்கழி விழாவை மட்டும் தவறாமல் நடத்துங்கள்."  என்று எழுதி  விட்டார். கிருஷ்ணர் கோவில் சங்கரனின் பரம்பரைச் சொத்து. மார்கழி விழாவில் ஹரித்துவாரில் இருந்தெல்லாம் சாதுக்கள் வருவார்கள்.  முத்துஸ்வாமி அய்யர் வைராக்கியமாக ஊருக்குத் திரும்பி வர மறுத்து, பட்டணத்திலேயே காலமானார்.

 தந்தைக்குப் பிறகு கோவில் நிர்வாகம் நாச்சிமுத்துவிற்கு வந்தது.

ம்பது   வருஷம் ! அவர் மனம் கணக்குப் போட்டது. இப்போதுதான் அவர் சங்கரனைப் பார்க்கப் போகிறார். சங்கரா , இத்தனை காலமும் உன் மனசை  இவ்வளவு கல்லாவா வச்சிருந்தே ? சட்டைப் பையில் அந்த தபால் அட்டை நெஞ்சில் முட்டியது. ஹரித்துவாரில் இருந்து எழுதியிருந்தான். மார்கழி விழாவில் சநதிப்போம் என்று.


சங்கரன் அவ்வப்போது கடிதம் எழுதுவான். கல்லூரி முடித்து விட்டு சம்ஸ்கிருத விரிவுரையாளராக டில்லியில் இருப்பதாகவும் ஒரு முறை எழுதினான். தமக்கை கல்யாணம் முடிந்ததும், தந்தை இறந்ததும் குறுகிய இடைவெளியில். அதன் பிறகு வெகு காலம் தகவல் இல்லை. பத்து வருஷம் முன்பு மார்கழி விழாவுக்கு வந்த  இந்த ரிஷிகேச  சுவாமிதான் , சங்கரனை தான் பார்த்ததாகவும் சொன்னார் . பிறகு வந்த வருடங்களில் இவர் மட்டும் வருவார். சங்கரன் பற்றிய தகவல் ஏதும் அவரிடம் இல்லை.

சங்கரனின்  வீட்டை மட்டும்   இது நாள் வரை வெள்ளை அடித்து பராமரித்து வந்தார் கவுண்டர். விழாவின் போது சாதுக்கள் மட்டும் அங்கே தங்குவர்.

கோவிலுக்குள் மீண்டும் நுழைந்தார் கவுண்டர். அங்கே பாகவதக் காட்சிகளை விளக்கும் ஒரு சிறு சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. ரிஷிகேச  சுவாமி ஸ்லோகங்களையும் தமிழ் விளக்கங்களையும் தந்து பிருந்தாவனத்தையே அங்கு கூடியிருந்த பக்தர் முன் காண்பித்துக் கொண்டிருந்தார். முழுதும் மழித்த முகமும் தலையும் அந்த முதிய சுவாமிக்கு. அவர் யார், எந்த ஊர் என்று யாருக்கும் தெரியாது. அவரிடம் அனைத்து பண்டிதர்களும், துறவிகளும் பெரும் மரியாதை காட்டினர். இவரோ,பரப்பிரும்மம். கோவிலில் கோவர்த்தன மலையைச் சுண்டு விரலால் தூக்கும் கோலத்தில் இருந்த கிருஷ்ணனை இமை கொட்டாமல் பார்த்தார் . கண்ணில் இருந்து நீர் தாரை தாரையாய் வழிந்தது .

அவர் மட்டுமல்ல. அந்த சுற்று வட்டாரத்தில் கோவர்த்தன கிரிதாரியின் அழகில் மயங்காதவர் யாரும் கிடையாது. சங்கரனும் , அவன் தந்தையும் இவனுக்கு தாசர்கள். "எங்க குடும்பமே அவனுக்கு அடிமை" என்று பெருமையாகச் சொல்வான்.


வுண்டர் சுவாமியின் அருகில் போய் அமர்ந்தார். பாட்டு  முடிந்து சுய நினைவுக்கு வந்தவர், "ஒ , கவுண்டரா ? இன்னிக்கு நாம சங்கீர்த்தனம் எப்படி இருந்தது ? காளிங்க நர்த்தனத்தை ரசிச்சீர்களா ?" என்று குழந்தை போல ஆர்வமுடன் கேட்க , கவுண்டர், தயக்கமாக, "சாமீ, அம்பது வருஷத்துக்கு முந்தி இங்க பஜனை நடக்கும், பெரிய அய்யரும் , சங்கரனும் நல்லாப் பாடுவாங்க. சமயத்தில உச்சக் கட்ட பஜனைல எழுந்து நின்னு ஆடவும் செய்வாங்க. நாங்க எல்லாரும் ஆட ஆரம்பிச்சிருவோம். பொம்பளைங்க விம்மி விம்மி அழும். தப்பா நினைக்காதீங்க. சங்கரன் போன பிறகு, நான பஜனைல உக்காந்ததே இல்லைங்க. மடப் பள்ளியோட சரி."

"சாமியார் இப்போது ஒரு மிடறு தண்ணீர் குடித்து விட்டு, கவுண்டரை பார்த்துச் சிரித்தார். "உங்களுக்குத் தெரியுமா ? சங்கர சர்மா இப்போ ஒரு சந்நியாசி. "

கவுண்டர் இப்போது பரபரப்பானார். " எப்படி இருக்கார் ? அவுங்க குடும்பம் ? "

சுவாமி சிரித்தார். " அவர் அத்துவித மார்க்க சந்நியாசி. அவருடைய சந்நியாச ஆசிரமப் பேரு கிருஷ்ணானந்தா. நிலையாக இப்போ எங்கும் இல்லைனும் சொன்னார். அவரைப் போன்றவர்கள் குடும்பத்தைப் பற்றிப் பேச மாட்டார்கள் "

கவுண்டர் அப்போது சங்கரன் போட்ட கடிதத்தை எடுத்து அவரிடம் நீட்டினார். ஸ்வாமிகள்  அதைப் பார்த்து விட்டு பெருமூச்செறிந்தார். "சந்நியாசிக்கு கடைசி ஆசைகள் உண்டு போல. அதான் பிறந்த ஊரையும் கிரிதாரியையும் பார்க்க வர்றார் "

கவுண்டர் தள்ளாடியபடியே வீட்டிற்குத் திரும்பினார். சங்கரன் சந்நியாசியா ? இந்த ஊர்ல நடந்த கசப்புதான் அவனை இந்த முடிவுக்குத் தள்ளியதோ ? இன்னும் ஐந்நூறு வருடம் உற்சவம் செய்தாலும் சங்கரனுக்கு செய்த அநீதிக்கு பிரதியாகுமா ? நாளை அவனை எப்படி பார்ப்பது ?

டுத்த நாள் பாண்டுரங்கன் கிரிதர கோபாலனுக்கு உத்சவம். ஊரே திரண்டிருந்தது. அபிஷேகம்  முடிந்து பெரும் நாம சங்கீர்த்தனம் துவங்கியது. பாகவதர்கள் தங்கள் பக்தியால் அந்த ஊரையே மூழ்கடித்துக் கொண்டிருந்தனர். ஸ்வாமிகள் உணர்ச்சி பொங்கப் பாட எல்லாரும் கண்ணை மூடி மெய் மறந்து கிறங்கி இருந்தனர்.

கவுண்டர் தான் வாசலிலேயே தவம் கிடந்தார். ஒவ்வொரு சாதுவின் முகத்தையும் உற்று நோக்கி, சிலரிடத்தில் பேரை வேறு விசாரித்துக் கொண்டும் தவித்துக் கொண்டு இருந்தார். ஆரத்திக்கு பட்டர் அழைத்த போது கலங்கிய மனத்துடன் தான் உள்ளே போனார். "பட்டரே , உற்சவமே முடியப் போகுது.இன்னும் சங்கரன் வரலை. இப்போ அவன் இல்லாம முடிக்கறதா ?" என்று பரிதாபமாய்க் கேட்க, பட்டர் அவரை புரிந்து கொண்டவர் போலப் பார்த்து விட்டு, " எல்லாம் அவன் வேலை. அவன் கிட்ட விட்டுட்டு வாங்க. சுவாமி உங்களைக் கூபிடுறார் பாருங்க "

கவுண்டர் சுவாமிகளிடம் செல்லும் போது நெஞ்சம் கனத்தது. உள்ளே ஆரத்தி மணி அடிக்கும் போது ," விட்டல, விட்டல , கோபாலா , பாண்டுரங்கா, கோவிந்தா " என்று கோஷம்.  கோவிலே அதிர்ந்தது. மிருதங்கங்களும், கஞ்சிராக்களும் மதுரமாய் முழங்கின.  முதல் வரிசையில் ஸ்வாமிகள் நின்று கொண்டு , கவுண்டரை அழைத்தார். இவர்  அருகில் சென்றதும், ஸ்வாமிகள் கவுண்டரின் கையைப் பிடித்துக் கொண்டார். கண்ணுக்குள் கண் பார்த்து  "நாச்சிமுத்து, இன்னுமா என்னை உனக்குப் புரியலை " என்று கேட்டார்.

அந்த கனிவு, அந்த நெருக்கம் !  கவுண்டர் தீயை மிதித்தது போல சற்றுப் பின் வாங்கினார்.  தெய்வீக  நாகம் தன் உயிருக்கு உயிரான மாணிக்கத்தை வாயைத் திறந்து காட்டியது போலும். காலம் அடைத்து வைத்திருந்த புதிர்கள் விலகின. நாச்சிமுத்து வாயைத் திறக்க நினைத்தும் முடியவில்லை. சுற்றி நின்றோர் கண்ணன் நாம மழை பொழிந்து கொண்டிருக்க, சங்கரன் என்கின்ற கிருஷ்ணானந்தன் அங்கே அன்பு பொழியும் தெய்வீக முகத்தோடு  "இப்போது உனக்கு மகிழ்ச்சியா நாச்சிமுத்து ?" எனக் கேட்டது தான் தாமதம்.  நாச்சிமுத்து வின் உள்ளே அடக்கி வைத்திருந்த உணர்ச்சி ஊற்றுக்கள் வெடித்துப் பீறிட்டன.  "சங்கரா "  என்ற கேவலுடன் மூர்ச்சையாகி விட்டார்.

சுய நினைவு வந்த போது கவுண்டர் சங்கரனின் கனிவான முகத்தில் தான் விழித்தார். ஊர் மக்கள் அனைவரும்  கூடியிருந்தார்கள். எல்லாரும் அவரைத் தேற்றி எழுப்பி ஆசுவாசம் செய்ய, நாச்சி முத்துவிடம், சங்கரன் மெதுவாக, இப்போ எல்லாரையும் சாப்பிடச் சொல்லலாமா நாச்சிமுத்து ? " என சிரித்துக் கொண்டே வினவ , கவுண்டர் வெட்கம் மேலிட்டு  எழுந்து எல்லாருக்கும் வருத்தம் தெரிவித்து  விட்டு, பட்டருக்கு கைகளாலேயே சமிக்ஞை செய்ய , அவர் உடனே பந்தி ஏற்பாட்டுக்கு விரைந்தார்.

சங்கரனோ அவர் கையை விடவே இல்லை. பாகவதர்கள் திருப்தியுடன் பிரசாதம் உண்ணச் செல்ல, நண்பர்கள் இருவரும் , வெளியேறி நடந்தனர். இடது புறம் திரும்பியதும் சங்கரன் திரும்ப , நாச்சிமுத்துவும் புரிந்து கொண்டு நின்றார். அவர்  வாழ்ந்த வீடு. மெள்ள உள்ளே நுழைந்தார் . நேராக பூஜையறையினுள் சென்று தங்கள் குலதெய்வங்கள் குடியிருந்த மாடத்தை பார்த்து விட்டு, ஓய்வாக வெளியே  வந்து வெளித்திண்ணையில் அமர்ந்து கொண்டார்.

கவுண்டர் இப்போது தான் வாயைத் திறந்தார். "இத்தனை வருஷமும் இப்படியே பரதேசியா வந்து போய் ...  என்னை ஏன் இப்படி ஏமாத்தினே ? "

சங்கரன் என்கின்ற கிருஷ்ணானந்தர் இப்போது சிரித்தார். "சன்னியாசிகளிடம் உனக்கு சகவாசம் அதிகம்  கூடாது. சந்நியாசிகளுக்கும் பந்தம் கூடாது. நீயே பிரம்மம் என்று என் குரு காதில் ஓதினாலும், இந்த கிரிதாரியும்,   நாச்சிமுத்துவும் , பவானி நதிக்கரையும் அப்பப்ப பந்தப் படுத்திட்டுத் தான் இருந்தது. இன்று எல்லாத்துக்கும் பெரும் ஓய்வு  ! உன்னுடைய நட்பின் ஆழம் இந்த ஐம்பது வருஷம் நீ நடத்துன வைபவத்தில தெரிஞ்சது. அந்தக் கிரிதாரி என்னை அத்துவைத மோக்ஷத்திற்குப் போகச் சொல்லி சம்மதம் சொல்லிட்டான். நீயும் உன்னோட நட்புல இருந்து எனக்கு விடை குடு நாச்சிமுத்து.  " இதைச் சொல்லும் போதே சங்கரனின் பார்வையில் வைராக்கியம் ஏறுவதை நாச்சிமுத்து உணர்ந்தார்.

சங்கரன் அப்படியே எழுந்து , வெளியே நடந்தார். மேல் துண்டு காற்றில் பறந்து ஓடியது. சங்கரனோ நேராக நடந்தார். திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. நாச்சிமுத்து மெல்ல பின் சென்று பார்த்த போது, சங்கரன் நதிக்கரையில் அரச மரத்தடியில் பத்மாசனத்தில் இருப்பது தெரிந்தது . நாச்சிமுத்து விற்கு கால்கள் தள்ளாடின. கோவிலின் கோபுரம் தெரிந்தது. ஏதோ கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது.   உடலெங்கும் ரத்த நாளங்கள் பொங்கின. ஐம்பது வருட ஆயாசம் உடலெங்கும்  பரவியது.  அங்கமெல்லாம்  பாரம் குறைந்து ஆடியது.  கண் செருகியது. நீர் பெருகியது.  நெஞ்சு நிறைந்தது. "கிருஷ்ணா"  என்று உதடுகள் மெல்ல உச்சரித்தன.

ஆற்றங்கரைச் சரிவில் அவர் உருண்ட போது சங்கரன் அசையவில்லை. பிராணனை உச்சந்தலைக்கு ஏற்றி நிறுத்தி, ஓங்கார அணை மேல் ஏறி நின்றார். கடைசி முறையாக அவர் "அஹம் பிரம்மாஸ்மி " என்று உச்சரிக்கையில் அங்கே சங்கரன் இல்லை. பிரம்மமே இருந்தது. பிராணன் உச்சந்தலையைப் பிளந்து கொண்டு வெளியேற, மூக்கில் இருந்து ரத்தம் கசிந்தது. காலம் அசையாமல் நின்ற தருணம் அது .


பவானித் தாய் தன் இரு தவப் புதல்வர்களையும் பறிகொடுத்த சோகத்தில்  மெள்ள புரண்டோடினாள்.

Tuesday, August 10, 2010

வாய்க்கு ஒரு சமையல், வயித்துக்கு ஒரு சமையல் !!! - சிறுகதை


கு ஆபீசுக்கு கிளம்பும் முன், சுஜாவிடம் ," ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். இன்னிக்கு வாசு வர மாட்டான். அவன் ஏதோ காசி போற க்ரூப்போட சமையலுக்கு போயாச்சு.  அவனுக்கு வேண்டிய இன்னொரு ஆளோட போன் குடுத்திருக்கான்.நானும் வரச் சொல்லிட்டேன். பதினோரு மணிக்கு வருவான். அப்பாவையே வழக்கம் போல பேசச் சொல்லிடு " என்றவாறே காரைக் கிளப்பினான். வழக்கம் போல என்று சொல்லும் போதே அவன் முகத்தில் ஒரு கிண்டல் சிரிப்பு.

ள்ளே கூடத்தில் சுந்தரேசன் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு மருமகளின் வாயைக் கிண்டிக் கொண்டிருந்தார். " என்னமோ இனிமே அரசாங்கம் மார்க்கு முறையை ஒழிக்கப் போறதாமே ? அபப இனிமே என் பேரன்  உன்கிட்டருந்து தப்பிச்சிடுவான்  இல்லையா ?"

சுஜா ரோஷத்தோடு திரும்பி , " மாமா ! காலம் கார்த்தாலே வேண்டாம். உங்க காலம் மாதிரி எஸ் எஸ் எல் சி பெயில் ஆனாக் கூட உத்தியோகம் கிடைக்கற காலமா இது ? ஏன், உங்க பையனண்டை இத எல்லாம் சொல்லறது தானே ? "

அங்கே ஓரத்தில் கோதுமையைப் புடைத்துக் கொண்டே இவர்களின் சண்டையை ரசித்துக் கொண்டிருந்த மாமியார்  ஞானம் , " சுஜா ! யாரோ கேட்டைத் திறந்தாப்பல இருந்தது. போய்ப் பாரேன் " என்றார்.

ந்தவன் ஒல்லியாக இருந்தான் இள வயது தான்.
ஏம்ப்பா ? வாசுக்கு பதிலா வந்தியா  ? எந்த ஊரு ? " என சுந்தரேசன் வினவ " என் பேர் சாமி. தொண்டாமுத்தூர் தான் ஊர். மணி அய்யர் கிட்ட இருந்துட்டு இப்ப ரெண்டு வருஷமா நானே சமையல் ஒத்துண்டு பண்ணறேன் "

" பூணல் தேதி தெரியுமா. வர்ற ஆவணி பத்து." என்று சுந்தரேசன் சொல்ல, சாமியும் , " தெரியும் மாமா . அண்ணா சொன்னார்."

"  ரெண்டு நாள்  பண்ணனும். முத நாள்  நாந்தி. ரெண்டாம்  நாள் உபநயனம்." என்ற  சுந்தரேசன் மருமகளைப் பார்த்து , "ஏம்மா ! உன் ஆம்படையான் ஏதாவது மெனு சொன்னானா ?" என்று மூக்குக் கண்ணாடிக்கு மேலே அவளைப் பார்க்க, சுஜா ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து விட்டு  அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள். " ஏம மாமா இந்த உபசாரம் ? இந்த மெனு விஷயத்தில என்னிக்காவது நாங்க சொல்லி ஏதாவது நடந்திருக்கா . எல்லாம் பாசாங்கு." என்றவாறு கிசுகிசுத்து விட்டு அகன்றாள்.

"வாடா அம்பி   உக்கார்." என்றதும் அவன் ஊஞ்சல் அருகில் வந்து தரையில் அமர்ந்து கொண்டான்.

முதல் நாள் காலையில என்ன ? என்று அவனை பார்க்க, அவன் " காலைல காப்பி. அப்புறம் டிபன். அம்பது பேர் இருப்பாளா ?" என்று கேட்க, "பரவாயில்லை. கெட்டிக்காரன். சரியா ஊகிச்சுட்டே . சொந்தக் காராள் தான் இருப்பா. இட்டிலி மட்டும் போதும். மதியம் சாப்பாடு. ஒரு பொரியல், பச்சடி, மோர்க்குழம்பு, சிம்பிளா ஒரு பாயசம்......" அவர் எழுதி முடித்து விட்டு , இதெல்லாம் பெரிசில்ல . உபநயனம் அன்னிக்கு தான் மெனு பிரமாதமா இருக்கணும் " என்றதும் ஞானமும் சுஜாவும் களுக்கென்று சிரித்து விட்டனர். சாமி திரும்பிப் பார்த்து விழித்தான்.

சுந்தரேசன் கோபமாக அவர்களைப் பார்த்து  முறைத்து விட்டு சாமியைப் பார்த்து    "காலைல என்ன போடறது.?"  என கேட்க ,  அவர் முடிக்கும் முன்பே சாமி உற்சாகமா ," ஒரு இட்டிலி சம்பிரதாயத்துக்கு போட்டுட்டு, பூரி, வடை , பருப்பு உசிலி சேவை , மசால் தோசை எல்லாம் போட்டுடலாம் மாமா... " சுந்தரேசன் இதை ரசிக்கவில்லை என்று அப்படியே நிறுத்தினான்.

" ஏண்டா அம்பி. வர்றவாள்லாம்  பூணலை பாப்பாளா இல்ல பாத்ரூமுக்கு  ஒடுவாளா ? உன் மெனு சகிக்கலை " என்றார். சாமியின் முகத்தைப் பார்த்து பெண்மணிகள் இருவரும் புன்முறுவலித்தனர்.

சுந்தரேசன் தொடர்ந்தார்." காலம் கார்த்தாலே வயிறு அப்போதான் இயல்புக்கு வரத் தொடங்கியிருக்கும். அப்போ பார்த்து மசால் தோசை போடுவாயா ? பூரி வேறே ? மணி அய்யர் உனக்கு ஒண்ணுமே சொல்லித் தரலியா ? சரி சரி. இப்ப நான சொல்லறேன் எழுதிக்கோ ?"  சுந்தரேசன் முடிக்கவும் ,ஞானம்  " கீதோபதேசம் ஆரம்பம்" என்று சுஜாவின் காதைக் கடித்து சிரித்தாள்.

" இட்டிலி ஒரு இலைக்கு குறைந்தது நாலு இருக்கணும். கூடவே தேங்காய்ச் சட்டினி. தொட்டுக்க சாம்பார் வேணா இருக்கட்டும். பருப்பை கொட்டி வைக்காதே. பேருக்கு பருப்பு இருந்தா போறும். பின்ன ஒரு கரண்டி பொங்கல். இட்டிலியும் பொங்கலும்  எப்படிப் பண்ணுவே ? என்று அடுத்த கேள்வியை வீசினார் சுந்தரேசன்.

"என்ன மாமா இப்படிக் கேட்டுட்டேள்? ஒன்னரைக்கு ஏழு கலவையில உளுந்தும் அரிசியும் போட்டு ஆட்டி கடைசில கொஞ்சம் சோடா உப்புப் போட்டு வச்சா இட்டிலி பூ மாதிரி வருமே ? அதைப் போல , பொங்கல்ல வழக்கமா போடற அரிசியும் பருப்பும் போட்டு வெந்ததும், மிளகு சீரகம்  எல்லாம்  போட்டு கடைசில மேலுக்கு டால்டா விட்டு இறக்கினா ..." சாமி முடிப்பதற்குள் சுந்தரேசன் இடைமறித்தார்.

"சனியன் சனியன் ! சோடா உப்பாம், டால்டாவாம் ! அம்பி கோயம்புத்தூர்ல நீங்க எல்லாம் ஒரே மாதிரிப் பேசறேள். சோடா உப்பு போட்டா ஒரு இட்டிலிக்கு மேல இறங்காது. டால்டா போட்டா, நாலு மணி நேரத்துக்கு வயித்தை அமுக்கும். இட்டிலிக்கு ரெண்டுக்கு ஏழு போட்டு செய் கொஞ்சம் ஆமணக்கு விதையை போடு.. பூ மாதிரி வரும்.டால்டாவுக்கு  பதில் கால் கரண்டி நெய்யை ஊத்தி பிரட்டீடு. அப்புறம் பாரு."

சாமி இப்போது புதிதாக கேள்வி ஒன்று போட்டான் . " எண்ணெய் எல்லாம் சண் ப்ளவர் தானே ?" இப்போது பெண்மணிகள் இருவரும் வாய் விட்டே சிரித்து விட்டனர். சுந்தரேச அய்யர் இப்போது நன்றாகவே அவர்களை முறைத்து விட்டு , "எனக்காகவா இந்த மெனு ? ஏதோ சொந்த பந்தம் வர்றப்ப  வயிறு வாழ்த்தர மாதிரி இருக்கட்டுமேன்னு சொன்னேன். எதுக்கு சிரிக்கறேள்"  என்று சீறினார்.  ஞானம் சுஜாவை ஓரக் கண்ணால் பார்த்து, " நல்லா மாட்டீண்டான் " என்றுவிட்டு அடக்கிச் சிரித்தாள்.

சுந்தரேச அய்யர் இப்போது அவனைப் பார்த்து , "இங்க என் கூட வா" . என்று சமையல் உள்ளினுள் அழைத்துச் சென்றார்.  "மேலே பார்" என்று எக்சாஸ்ட் மின் விசிறியைக் காட்டினார். " இது மாட்டினது முதல் இந்த மாதிரியே இருக்கு " என்று விட்டு, "அப்படியே அங்க பார்" என்று பக்கத்து வீட்டு சமையல் அறை புகைத்துவாரத்தைக் காட்டினார்." எப்படி இருக்கு அது ? " என்று கேட்க , " எண்ணெய்ப் பிசுக்கு தொங்கறது மாமா " என்று சாமி இப்போது அடக்கமாக பதில் சொன்னான். இப்போது அவனுக்கு அவர் மேல் ஒரு தனி மரியாதை வந்திருந்தது.

"இப்படி சண் பிளவர் ஆயில் சாப்பிடறவா வயித்தில அல்லவா தொங்கும் ? அதை நம்ம தொடலாமோ ? " என்று சுந்தரேச அய்யர் வெற்றியுடன் அவனைப் பார்க்க , அவன் இப்போது சற்றுத் தெளிவாக , " அபப நீங்க வீட்டுல என்ன போடறேள் ? " என்று ஆர்வமாகக் கேட்க , " கடலை எண்ணெய் தாண்டா அம்பி. ஆயிரக்கணக்கான வருஷம் அதை அல்லவா சாப்பிட்டோம். ? இப்ப என்னடான்னா , சண் பிளவர், கொலஸ்ட்ரால் அப்படீன்னு கதை கட்டறா "

இப்போது சாமி கவனமாகி விட்டான். இப்போது பாயசத்தைப் பற்றி பேச்சு. " நன்னா மில்க் மெய்ட் போட்டு அடைப் பிரதமன் போட்டுடலாமா ?" என்று விட்டு மாமாவைப் பார்க்க, அவரோ , முன்னை விட அதிக கோபமாகி , " நோக்கு சயின்ஸ் கூட தெரியலடா !" என்று விட்டு மேலே சொல்லும் முன் சுஜாவைப் பார்க்க , கீழே அவர்கள் இருவரும் ,வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.

அவர் இப்போது விறைப்பாகி, " பாலும் தானியமும் சேரக் கூடவே கூடாது அப்படீங்கிறது ஆயுர்வேத விதி. பாலைப் போயி அரிசியோட கலக்கரயே ? " எனச் சொல்ல  , அவன் அப்போ , பாயசத்துக்கு எதைத்  தான் போடறது ? " என்று அப்பாவியைக் கேட்டான். மாமா ,   "தேங்காய்ப் பாலைப் போடுடா. அசத்திப் புடலாம்" என்று சொல்ல, அவனோ "தேங்காய்ப் பாலா , நேரம் செலவு கூலி , இதெல்லாம் .." என்று இழுத்தான்.

இப்போது சுஜா , " செலவெல்லாம் மாமா பார்க்க மாட்டார். மகன் கை நிறைய சம்பாதிக்கறார். இதுக் கெல்லாமா கணக்கு " என்று விட்டு அய்யரின் முகத்தைப் பார்க்க, அவர் சாமியைப் பார்த்து விட்டு " கேட்டுக்கோடா அம்பி . அவளே சொல்லீட்டா . பின்ன நான என்ன சொல்ல ?" என்று இருவரை பார்த்து முகத்தைக் கோணினார்.

"நாந்தி அன்னிக்கு சாயங்காலத்துக்கு, அல்வாவும் , பக்கோடாவும் காபியும் போடலாம் இல்லையா ?" சாமி இதிலாவது வெற்றி அடையலாம் என்று பார்த்தான்.

மாமாவோ, "கூடாது கூடாது. சாயங்காலம் எண்ணெய்ப் பதார்த்தமா ? அது பிரதோஷ காலம்டா அம்பி. மத்தியான விருந்து நன்னா செரிச்சி நாலு மணி நேரம் ஆனதுக்கு அப்புறமா ஒரு ப்ரூட் சாலட் பண்ணிடு. ஆவணில ஆப்பிளும், கொய்யாவும், ஆரஞ்சும் , திராட்சையும் கிடைக்கும். நறுக்கித் தேன் கலந்து குடு "

சற்று நேரத்திற்குப் பிறகு சாமி மெனுவையும் அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டு போனான். "பாவம்நா இவன் ! இன்னிக்கே இவ்வளவு உபதேசம். உபநயனத் தண்ணிக்கு  இன்னும் எவ்வளவு வாங்குவானோ ?" என்றுவிட்டு ஞானம் சிரிக்க, மாமாவோ , " உங்களுக்கு எல்லாம் , விவஸ்தையே கிடையாது. கிடைத்ததை முழுங்கிண்டு பின்னால டாக்டருக்கு ஓடுவேள். வேணாப் பாரு. சாமி எப்படி அசத்தப் போறான்னுட்டு !" என்று எதையோ நினைத்துப் புன்னகைத்தார்.

சொன்ன மாதிரியே, சாமி அசத்தி விட்டான். சுந்தரேச அய்யர் சமையறை முழுதும் டால்டா வோ , சோடா உப்போ மறைத்து வைக்கப் பட்டிருக்கிறதா என்று அவ்வப்பொழுது தேடினார். பயல் உண்மையாகத்தான் இருக்கிறான் என்று உணர்ந்து ஆனந்தப் பட்டார்.

உபநயனம் வெற்றிகரமாக நடந்தது. எல்லாரும் உறவினர்கள் ஆனதால் இரண்டாம் நாள் மதிய விருந்துக்குப் பிறகே புறப்பட்டார்கள். முந்தைய நாளிலிருந்தே , எல்லாரும் சமையலைப் புகழ்ந்த வண்ணம் இருந்தனர். " டே சுந்தரேசா, நல்லாத்தான் சாப்பிட்டேன் . ஆனாலும் வயிறு லேசா இருக்குடா. கச கசன்னு போடாம , குறைஞ்ச அயிட்டம் தான். ஆனா வயித்துக்கு சுகமா இருக்குடா." இது மாதிரி பல புகழ்ச்சிகள். சுந்தரேசனோ, " நாளைக்கு வரைக்கும் இருப்பே. அப்புறம் சொல்லு. " என்று இன்னும் பெருமிதமாகச் சொல்லிக் கொண்டார்.

ம்பந்தி  விடைபெறும் போது,"உபநயனம் அமர்க்களம். வாத்தியாரும் நிதானமா சொன்னார். உபசரிப்பும் பிரமாதம். அப்புறம் விருந்து ஏ ஒன. யார் மெனு நீங்கதானா ? சமாளிச் சுட்டேள் போங்கோ.  " என சிலாகித்தார்.

ஞானத்தின் தம்பி, " அத்திம்பேர், அந்த ப்ரூட் சாலட் பாருங்கோ, இன்னும் வாயில இருக்கு. சாயங்காலத்துக்கு அதைக் குடுக்கனுமின்னு தோணித்து பாருங்கோ." என்று பாராட்டினார்.

சுந்தரேச அய்யரோ , " ஏதோ நம்ம ஒண்ணு ரெண்டு சொல்லுவோம். ஆனா சமையல் காரர் கையிலன்னா எல்லாமும் இருக்கு ? ஒரு விண்ணப்பம். நீங்க ஒரு வார்த்தை அவனையும் பாராட்டீட்டு போங்கோ." என்று சொன்னார்.

ல்லாரும் போன பிறகு, சாமி மெல்ல வந்தான். " மாமா , சொல்லீட்டுப் போக வந்தேன். எல்லா ஐடியா வும் உங்களோடது. ஆனா எல்லாரும் என்னைப் பாராட்டிட்டுப் போறா. நாலு கல்யாணம் எனக்கு இங்கேயே புக் ஆயிடுச்சு மாமா. எல்லாம் உங்களால்தான். நாக்குக்கு மட்டுமே சமைச்சுப் போட்ட எனக்கு வயித்துக்காகவும் எப்படி சமைக்கறதுன்னு சொல்லிக் கொடுத்தது நீங்கதான்." என்ற படி அய்யரின் காலைத் தொட, அய்யரோ கண்கலங்கி, " டே, டே நான என்னடா பண்ணேன். வெறும் வாய் வார்த்தை. நீ தாண்டா அடுப்படியில வெந்து இவாளுக்கெல்லாம் பண்ணினே. உனக்குத்தான் எல்லாப் பெருமையும். போற இடத்தில பேரைக் காப்பாத்து." என்று அனுப்பி வைத்தார். ஞானமும் சுஜாவும் இப்போது ஐயரைப் பெருமையோடு பார்த்தனர்.

Thursday, August 5, 2010

மதிப்பு கூட்டல் வழி- ஒரு சிறுகதை


மாலை நேர குளிர் காற்று பூங்காவில் இனிமையாக வீசியது. வைத்தியநாதன் உற்சாகமாக நடந்தார்.

"டே, டே ! கொஞ்சம் மெள்ள நட . இன்னிக்கு என்ன ஆளே மாறிட்டே ?" காசி பின்னாடியே நடந்து வந்தார்.

விஷயம் இருந்தது. அன்று வைத்தி தனது ஆறாவது சொற்பொழிவை பற்றி எண்ணிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய ஆன்மீக வாதி. தத்துவமும் , தருக்கமும் அத்துப்படி. பகவத் கீதையைக் கரைத்துக் குடித்தவர். தன்னை அண்டி வந்த எல்லோருக்கும் தான் பெற்ற அருட் செல்வத்தை வாரி வழங்குவார்.

அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை ரோட்டரி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டத்திற்கு அவரை பேச அழைத்திருந்தனர். சற்று முன்னர் தான் செயலாளர் பேசினார். "மிஸ்டர் வைத்தி ! நீங்க தான் பேசனுமின்னு நான முன் மொழிந்திருக்கேன். ஏறக்குறைய எல்லாரும் ஏத்துகிட்டாச்சு. முறைப்படி இன்னிக்கு மீட்டிங்க்ல பதிவாயிடும். அபப எங்க பிரசிடன்ட் உங்களைக் கூப்பிட்டுப் பேசுவாரு. வேறு ஏதாவது கண்டிஷன் உண்டா ?" என்று கேட்டார்.  இவர் பதில் சொல்வதற்குள் அங்கே செல் போன சமிக்ஞை செயலிழக்க, தொடர்பு அறுந்து போனது. வீட்டுக்குப் போய் பேசலாம் என விட்டு விட்டார்.

காசிக்கு அதை விவரிக்க, ' என்ன ஒய் ! கொஞ்ச நாளில புக் பப்ளிஷர் தொழிலை விட்டு சமயப் பேச்சாளராயிடுவே போல. சபாஷ் !" எனப் பாராட்டினார் . காசி அவருக்கு ஒரே நண்பர்.. உலக விவகாரங்களில் அவருக்கு ஆலோசகர். யதார்த்த சிந்தனை உள்ளவர். 'என்ன டாபிக் பேசப் போற ? " என்று வினவ, வைத்தி உற்சாகமானார். " பகவத் கீதை ஒன்பதாவது அத்தியாயம் . உபாசனை ரகசியங்களை விவரிக்கும் இடம். இன்றைய நவீன மக்களுக்கு ஏற்ற விஷயம் " என்று அடுக்கினார்.

" ஆமா ! நீயாத்தான் முடிவு பண்ணியா அல்லது ..." என்று காசி கேட்க , " நான்தான் சொன்னேன். ஏன் ?" என்று வைத்தி அவசரமாய்ச் சொன்னார். காசி இப்படிக் கேட்டது அவருக்கு இடித்தது. காசி கைகாரன். ஒரு இடத்திற்கு  சென்றால், ஒரு நிமிடத்தில் அங்கு நிலைமையை ஊகித்து விடுவான். "ஏண்டா அப்படிக் கேட்டே ?" என்று வைத்தி சந்தேகமாய் வினவினார்.

"ஒண்ணுமில்லை . சும்மாத்தான் கேட்டேன் " என்றார் காசி.என்னமோ நினைத்தவர் போல் அவரே தொடர்ந்து " எப்படி. முறையா வந்து கூப்பிடுவாங்களா ?. ந்யூஸ் பேப்பர்ல எல்லாம் வருமில்ல ? சன்மானம் ஏதாவது பேசினாங்களா ? " என்று காசி கேட்க, வைத்தி , " ஏண்டா , நம்ம பேசுறது நம்ம ஆத்ம திருப்திக்கு. இதுல போய் இந்தக் கண்டிஷன் எல்லாம் தேவையா ? என்று எதிர்க் கேள்வி கேட்டார்.

"சார், பேனா வாங்குங்க சார். கொரியா பேனா சார். பன்னெண்டு ரூபா தான் சார்." அவர்களது பேச்சில் குறுக்கிட்டுக் கொண்டு அந்த வியாபாரி நுழைந்தான். கழுத்தில், கையில், தோளில் என்று  உடம்பு முழுதும் பேனாக்களைத் தொங்க விட்டிருந்தான்.  

"சார், இந்த வகைப் பேனா கேம்லின் கம்பனில கூட இல்ல சார். லீக் சுத்தமா ஆகாது சார். மாவு மாதிரி எழுதும் சார். விலை கம்மி சார்." அந்த ஆளை பூங்காவில் இதற்கு முந்திபல தடவை பார்த்திருக்கிறார்கள். கால் மிதி, டார்ச் லைட்,என்று ஏதாவது விற்பான்.

வைத்தி ஒரு பேப்பரில் எழுதிப் பார்த்து விட்டு, " ரெண்டு பேனா குடுப்பா " என்று பாக்கட்டில் கையை விட்டார். காசி அப்போது அந்தப் பேனாவை அலட்சியமாகப் பார்த்து , நேத்து சாயங்காலம் இதையே ஒரு அம்மாவுக்கு பத்து ரூபாவுக்கு வித்தியே. இப்ப எப்படி பன்னிரண்டு ரூபா ? " என்று கேட்க, "அந்த வியாபாரி, இல்ல சார். அப்படியெல்லாம் நான பண்ண மாட்டேன். ஆளுக்கு ஒரு  விலை வெக்கிற ஆள் நான இல்ல சார் ! " என்று அவசரமாக பதில் சொன்னான்.

"டே வைத்தி ! உனக்கு இந்த பேனா பார்க்கு வாசல்ல நான குறைவா வாங்கித் தர்ரேன்." என்று சொல்லவும், அந்த ஆள் விழிப்பாகி, "சார், இத்தனை நாள் வியாபாரம் பண்ணறோம். ஏதோ இரண்டு ரூபாய்க்கு வியாபாரம் கெட வேண்டாம். இந்தாங்க சார் , பத்து ரூபாவே குடுங்க. .கலர் பாத்து எடுங்க " என்று பணிவானான்.

வியாபாரம் முடிந்ததும், வைத்தி , "ஏண்டா அப்படி அவன் வயித்தில அடிச்சே ? இன்னிக்கு ரெண்டு பொறி உருண்டை  கூட கிடைக்காது அந்தக் காசில " என்று அந்த வியாபாரிக்கு பரிவு காட்ட , " நீ ஒரு முட்டாள். நம்ம கிட்ட வர்ற வரைக்கும் 'எது எடுத்தாலும் பத்து ருபா ' அப்படீன்னு ஒரு அட்டை கழுத்துல தொங்க விட்டிருந்தான். நம்ம கிட்ட வரும் போது அத எடுத்துட்டான். இதை நான கவனிச்சேன் . அதுதான் இந்த டிராமா. வைத்தியநாத அய்யர் வெள்ளைச் சோளம். அவருக்கு எப்படி அதெல்லாம் தெரியும் ?" என்று காசி தனக்கே உரிய பாணியில் சொன்னார்.

 வீட்டுக்குத் திரும்பி வரும் போது காசி கேட்டார். "எதுக்குடா பேனா? என்ன விசேஷம் ?"

"ஒ அதுவா ? நேத்து என் பசங்க ரெண்டும் கீதைல பதினஞ்சாவது அத்தியாயம் மனப்பாடமா சொன்னாங்க. பிரமாதமா இருந்துது. அதான் இன்னிக்கு அவங்களுக்கு சின்னதா ஒரு பிரசன்ட்." என்றார் வைத்தி.

"ஏண்டா , பிரசண்டுன்னு சொல்லறே , இப்படியா மொட்டையாக் குடுப்பே ? " என்று அதைப் பிடுங்கி, அருகில் இருந்த ஒரு பான்சி கடையில் இரண்டையும் பாக்கிங் செய்து வாங்கி வந்தார்.

"சரிதான். அழுக்குப் பாவாடை சிலுக்கு தாவணி கதை தான். பத்து ரூபா பேனாவுக்கு இத்தனை சோக்கா ?" என்று வைத்தி  சிரித்தார்.

" வைத்தி , இங்க பாரு. இது பரிசு. விலையைப் பத்தி குழந்தைகள்கிட்ட பேசக் கூடாது. இன்னிக்கு பேசாம இரு " என முன்னமேயே மிரட்டிக் கூட்டி வந்தார்.

வீட்டில் குழந்தைகளுக்கு ஒரே மகிழ்ச்சி. வைத்தியின் மனைவிக்கோ இரட்டிப்பு சந்தோசம். திடீரென்று ஏதோ நினைத்தவளாய், " காசி அண்ணா , உண்மையச் சொல்லுங்கோ . இது அவரோட ஐடியாவா , அல்லது உங்களோடதா ? " என்று காசியைப் பார்த்துக் கேட்டாள்.

"உங்களுக்கு எல்லாம் வைத்தியோட அருமை கொஞ்சமும் தெரியலை போல. அவன் அறிஞன் மட்டும் இல்ல. அவனுக்கு எத்தனை அன்புன்னு இப்பத்தான் புரிஞ்சது. கிராஸ்கட் ரோட்டுல நாலு கடை ஏறி வாங்கினான். கொரியா பேனாவாம்." என்று காசி முடித்தார்.

" குழந்தைகள் இரண்டும் ஓடி வந்து , வைத்தியை பிடித்துக் கொண்டன. அப்பா எவ்வளவு விலை சொல்லுப்பா ? " என்று. வைத்தி இப்போது அதிகக் கலவரமாய் விட்டார். தெருவோரத்தில் வாங்கியதை கடையில் வாங்கியதாகக் காசி சொன்னவுடன் அவருக்கு கை காலே ஓடவில்லை.

அப்போது காசி அவர் உதவிக்கு வந்தார். " நோ குட்டீஸ். பரிசோட விலை எல்லாம் சொல்லக் கூடாது. பாட் மானர்ஸ்." என்று அவர்களைப் பார்த்து கண்சிமிட்டிச் சிரித்தார்.

பெரியவன் அவரைப் பார்த்து கொக்காணி காட்டினான். " நாங்க எப்படியும் கண்டு பிடிச்சிடுவோம் பாருங்க." என்று சவால் விட்டு விட்டு, தம்பியைப் பார்த்துத் திரும்பி " டே அன்னிக்கு பரத் ஒரு பேனா கொண்டு வந்தானே, இதே மாதிரி!  எத்தனை விலை சொன்னான் ?" என்று கேட்க, அவன் தம்பி , " ஏதோ நூத்துக்கு குறையாம சொன்னான்டா " என்று மண்டையைச் சொரிந்து கொண்டே பதில் சொன்னான்.

வைத்தியின் மனைவி , " ஏன் அண்ணா , இவ்வளவு விலை கொடுத்திருக்கார். பேசி வாங்கினாரா , இல்ல, எப்பவும் போல .." என்று கிண்டலாய் காசியைப் பார்த்தாள்.

காசி வைத்தியைப் பார்த்து சிரித்தார். " உனக்கு உங்க வீட்டுல ரொம்ப நல்ல பேர்"

தற்குள் வைத்தியின் மனைவி காப்பி போட சமையலறைக்குள் சென்று விட, குழந்தைகளும், பேனாவில் மை நிரப்ப உள்ளே ஓடினர்.

" ஏண்டா கொழந்தைகள் கிட்ட அப்படிப் பொய் சொன்னே . உனக்கு காசி விஸ்வநாதன்னு பேரை விட குருக்ஷேத்திரக் கண்ணன் அப்படீன்னு பேர் வைக்கலாம் " என்று கொதித்தார்.

"அடே வைத்தி. எந்தப் பொருளுக்கும் மதிப்பு நாம் அதை பயன்படுத்துவதிலும், அதை பக்குவமாக பிறருக்கு எடுத்துச் சொல்லறதுல யும் தான் இருக்கு. இப்ப நீ அந்தப் பேனா வெறும் பத்து ரூபா அப்படீன்னு கையில பாக்கிங் இல்லாம குடுத்திருந்தாயானால் உன் குழந்தைகளுக்கு இவ்வளவு சந்தோசம் இருந்திருக்குமா அல்லது உன் பொண்டாட்டி கையால் எனக்கு காப்பி தான் கிடைச்சிருக்குமா ?" காசி சிரித்தார்.

காப்பி வந்தது. வைத்திக்கு காசியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஊசியாய்த் தைத்தன. "உண்மைதானோ ? உலகில் மகிழ்ச்சி  பெருகுவது கூட இது போன்ற மெருகுகளால் தானோ ? "
ப்போது பாக்கட்டில் போன் அடித்தது.

"ஹலோ , வைத்தியநாதன் ஹியர் "

"சார். நான் ஸ்ரீதர். கோயம்பத்தூர் ரோட்டரி சங்கங்களின் கூட்டமைப்புக்கு விழக் கமிட்டி தலைவர்.  உங்களைக் கூப்பிட்டு பேசுங்கன்னு ரஞ்சன் சொன்னார். எல்லாம் பேசியாச்சுன்னும் சம்பிரதாயமா கூப்பிடுங்க போதும்னும் சொன்னார்." என்றது எதிர் முனைக் குரல்.

வைத்தி, இப்போது சோபாவில் சாய்ந்து கொண்டார். " ஆமா ரஞ்சன் பேசினார். ஆனா ஒண்ணும் பேசி முடிவாகலயே. உங்க கிட்ட என்ன சொன்னார் ? "

இப்போது எதிமுனைக் குரல் தடுமாறியது. " இல்ல நீங்க எல்லாத்தையும் ஒத்துக்கிட்டீங்க அப்புடீன்னு ..." என்று இழுத்தார்.

" மிஸ்டர் ஸ்ரீதர் . நீங்களோ , அல்லது ரஞ்சனோ, என்னை  வந்து பார்த்து இது விஷயமா பேசறது நல்லது. தலைப்பு பத்தி பேசணும். அப்புறம், அன்னிக்கு புரோக்ராமை எந்த எந்த ந்யூஸ் பேப்பர்ல போடணும் அப்படீங்கற விஷயம், அப்புறம் அன்னைக்கு என்னை அழைச்சுண்டு போக யார் வருவாங்க , என்னுடைய சன்மானம் எவ்வளவு இதை எல்ல்லாம் பேசணும் . நானும் பிரிபேர் ஆகணும் இல்லையா ? பெரிய கூட்டமாச்சே ?" வைத்தி மிகவும் ஓய்வாகச் சாய்ந்து கொண்டார்.

இப்போது எதிர் முனையில்  ஸ்ரீதர்  , " ஒ, சரி. நான் அபப ... ரஞ்சன் கூட பேசீட்டு.. உங்களைப் பார்க்கறேன் " என்று தடுமாறினார்.

" நோ ப்ராப்ளம். நாளைக்கு பகல் முழுதும் நான் பிசி. சாயங்காலம் வாக்கிங் முடிஞ்சு ஏழு மணிக்கு வருவேன் . அபப வேணா வாங்க " என்றவாறு போனை அணைத்தார்.

காசி, இப்போது அர்த்த புஷ்டியோடு வைத்தியைப் பார்த்துப் புன்னகைத்தார். "வள்ளலாருக்கே இல்லாத விஷய ஞானம் இது. கடை விரித்தேன் கொள்வாரில்லை அப்படீன்னு புலம்பினார். பசிச்சவனுக்கு மட்டும்தான் சோறு. இது உனக்கு இன்னிக்கு புரிஞ்சிருச்சு. இனிமே உன் ஆன்மீகப் பகிர்வுகள் தேவையுடைய இடத்திற்கு மட்டும் தான் போகும்.  நீ சொன்னயே அந்தக் கண்ணன் கூட தன் மேல் பொறாமை உள்ளவர்களிடமும், அசிரத்தை உள்ளவர்களிடமும் கீதையின் ரகசியத்தை சொல்லக் கூடாதுன்னு தான்  சொல்லியிருக்காரு ".

நண்பர்கள் இருவரும் இணக்கமாகச் சிரித்தனர் இப்போது.

Sunday, July 25, 2010

சுப விரயம் - ஒரு சிறு கதை"அய்யா, கிட்டய்யர் வந்திருக்காருங்க !" சிப்பந்தி கூறினான்

கிட்டு உள்ளே நுழைந்தார். கையில் எப்போதும்  போல் ஒரு டயரி. இன்று கூடவே சில காகிதங்கள். இவரைப் பார்த்து நமஸ்கரித்து புன்னகைத்தார்.

"வாங்க கிட்டு சார் " என்று எழுந்து உபசரித்து  விட்டு மனோகர் உட்கார்ந்தார். அவரைப் பார்த்தாலே மதிக்கத் தோன்றும். என்றுமே வெள்ளை வேட்டி சட்டை தான். கிட்டு நேராக விஷயத்துக்கு வந்தார். "  இன்னிக்கு பேங்குல இருந்து மில் சைட் பார்க்க வர்றாங்க.நம்ம பத்து மணிக்கு அங்கே இருக்கணும். பன்னிரண்டு மணிக்கு நம்ம ஓட்டல் புது கிளை பீளமேட்டுல மூன்றாவது கிளை துவக்க விழா. சுகி சிவம் பேச்சு இருக்கு. கிளம்ப மணி ரெண்டாயிடும்.  அஞ்சு மணிக்கு காலேஜ் விழா"

மனோகர் கிட்டு அய்யருடன் கிளம்பினார். "இவரையா சுவாமி அப்படிச் சொன்னார் ?"

னோகருக்கு அந்த நாள் இன்றும் நன்கு  நினைவிருந்தது . அன்று மனோகர் குழம்பிய மனத்துடன் தான் வழக்கமான பௌர்ணமி சந்திப்புக்குச் சென்றார். ஓட்டலில் பணக் குளறுபடிகள், மில் கட்டுவதில் தொய்வு, மகனின் சந்தேகமான நடவடிக்கைகள், மாப்பிள்ளையின்  ஊதாரித்தனம் எல்லாம் சேர்ந்து அன்று அவரை உச்ச கட்ட விரக்தியில் ஆழ்த்தியிருந்தன.

மனோகரன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். அவரின் தலையை வாஞ்சையோடு தொட்ட சுவாமி 'சௌக்கியமா ?' என்று ஆதுரமாய் விசாரித்தவுடன், மனோகருக்கு கடந்த மாத மன உளைச்சல்கள்  எல்லாம் கரைந்து விட்டது போல் இருந்தது. பழங்களை சமர்ப்பித்த பிறகு சுவாமி எல்லோரையும் அமரச் செய்தார்.

அப்போது சீடர்கள் பஜனையை ஆரம்பித்தனர். இந்த ஒரு நாளை மனோகர் என்றுமே தவற விட்டதில்லை. பிரதி பௌர்ணமி சுவாமி மக்களுக்காகவே இருப்பார். சிரிப்பு, உபசரிப்பு, சிறிய உபதேசம், புத்தகங்கள் அன்பளிப்பு என்று ஒவ்வொருவரிடமும் தனிக் கவனம் செலுத்துவார். இன்று மனோகர் பஜனையில் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார். ஒவ்வொரு பாட்டும் அவருக்கு புது உற்சாகத்தைத் தந்து கொண்டிருந்தது.

மாலை எல்லோரும் கிளம்புகையில் , சுவாமி மனோகரை அழைத்தார். கண்களாலேயே 'என்ன' என்பது போல விசாரிக்க, மனோகர் அது வரை அடக்கியிருந்த சோகங்கள் அங்கே பீறிட்டன. கண்களில் நீர் தழும்ப தன் துக்கங்களை விவரிக்க, சுவாமியோ, " கிருஷ்ணா ! இத்தனை சோகமா ? முக்தியை மட்டும் ஒன்றாக வைத்த நீ  பந்தமும் ஏன் அதுபோல் ஒன்றாக வைக்கவில்லை ?" என்று தன் முன்னே இருந்த வேணுகோபாலனின் திருவுருவத்தைப் பார்த்து வினவினார் .

சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்து விட்டு, மனோகரனை நோக்கி, உங்களுக்கு ஒரு நல்ல உதவியாளர் வேண்டும் . சரியா ? என்று விட்டு மனோகரைப் பார்த்தார். மனோகருக்கு அது சரியா தவறா என்று சொல்ல முடியவில்லை. ஸ்வாமியே தொடர்ந்தார், " இங்கே கிட்டு என்ற சீடர் இருக்கிறார். அவரை நீங்கள் இரண்டு வருடம் வைத்திருக்கலாம். தற்போது தான் ஒய்வு பெற்றவர்.  அவரை அனுப்பி வைக்கிறேன் " என்று முடித்தார்.. அப்போது மற்றவர்களும் வந்து விடவே, மனோகர் விடை பெற்றார்.

பௌர்ணமிக்கு இரண்டாம் நாள் கிட்டு அவரைச் சந்தித்தார். அவரை கம்பனியின் விருந்தினர் அறையில் தங்க வைத்து விட்டு , சுவாமிக்கு போன் செய்தார் மனோகர். " வந்து விட்டாரா ? நல்ல மனிதர். எதையும் நம்பிக் கொடுக்கலாம். "  பின்பு சிரித்து விட்டு , "உங்க பணமும் , சொத்தும் பத்திரமாப் பாத்துக்குங்க . ஹரி ஓம் "  சுவாமி போனை வைத்து விட்டார். மனோகருக்கு அந்த சிரிப்பின் பொருளும், கடைசி வார்த்தைகளின் பொருளும் புரியவில்லை.

கிட்டுவோ , எத்தனை வேலை கொடுத்தாலும் , அசராத ஆளாக இருந்தார். முதலில் அவருக்கு ஓட்டல் பொறுப்பைத் தான் கொடுத்தார். இரண்டாவது நாள் அவர் முன் இருபது ஊழியர்களின் வேலை நீக்கப் படிவத்துடன் வந்தார். அன்னூரில் இருபது விவசாயிகளிடம் நேரடி ஒப்பந்தம் போட்டு காய் கறிகளும் தேங்காயும் வாங்க ஏற்பாடு, சாப்பாட்டு மெனுவில் மாற்றம், முகப்பில் பிள்ளையாருக்கு அனுதினமும் ஒவ்வொரு அலங்காரம் என்று ஒரே மாதத்தில் பல மாற்றங்கள். மனோகரும் அவரது பணப் பரிமாற்றங்களை உற்றுக் கவனித்தார். ஒரு சிலரிடம் குறுக்கு விசாரணையும் செய்தார்.

எல்லாரும் அவரை ஒரு மகானாகவே பார்த்தனர். அன்னூர் விவசாயிகளில் ஒருவர் , " சார், கிட்டய்யரைப் போல கிடைக்குமா சார் ? என்னை கந்த புராணம் தினமும் படிக்கச் சொன்னார். என் மகளுக்கு கல்யாணம் நிச்சயமாக ஒரு ஸ்லோகம் எழுதிக்  கொடுத்திருக்கார் " என்று புகழாரம் பாடினார். புதிதாக போர்டு எழுதிய ஓவியன், பலசரக்குக் கடை செட்டியார் எல்லாம் ஏறக்குறைய இதே போன்றே தான்.

சிப்பந்திகளோ , ஒரு படி மேலேயே புகழ்ந்தனர். " தினமும் பிரார்த்தனை பண்ண பிறகு தான் வேலை ஆரம்பிக்கச் சொன்னார் சார் . அவரும் கூடவே இருந்து சொல்வார் சார். எங்களுக்கு எல்லாம் புது பாயும் , போர்வையும் குடுத்தார் சார். ". முன்னமே இந்தசலுகையைக்  கிட்டு கேட்ட போது, மனோகர் தயங்க , கிட்டு தான், " இத்தனை நாள் ந்யூஸ் பேப்பர் விரிச்சு தூங்கறாங்க. முழுசா தூங்காம பகலில் எப்படி வேலை செய்வாங்க ? " என்று நேராக அவர்கள் தூங்கும் ஹாலைக் கூட்டிக்  கொண்டு போய்  காட்ட, மனோகர் வெட்கத்தில் சிறுத்து விட்டார். மூன்றாயிரம் சதுர அடிக்கு இரண்டே ஜன்னல்கள் !   

" சார் இவங்களுக்கு ஏதாவது செய்யணும். நீங்களே சொல்லுங்க"  என்று கிட்டுவைக் கேட்க, அவரோ , " இந்த கீழ் தளம் அவங்க தங்க வைக்க தகுதியில்லாதது. இங்கே சாமான்களும்  , காய் கறிகளும் வச்சுக்கலாம். மூணாவது மாடியிலே இருக்கற ஸ்டோர் ரூம் அவங்களுக்குக் குடுங்க " என்று சிபாரிசு செய்ய உடனடியாக அது அமலுக்கும் வந்து விட்டது. எல்லாருக்கும் மாதம் ஒரு முறை   பஜனை , மனோகரனுடன் நேரடி சந்திப்பு, அதிக சம்பளம் என்று சலுகைகள் பொழிந்தன.

ரண்டு மாதத்தில், ஓட்டல் நிமிர்ந்தது. காந்தீபுரத்தில் மனோகருக்கு  பழைய வீடு இருந்தது. அதை இன்னொரு ஓட்டலாக மாற்றச் சொன்னார் கிட்டு. வீட்டை சிறிய மாற்றங்களுடன் , குறைந்த செலவில் புதுப்பித்து ஆரம்பிக்க, அது சக்கைப் போடு போட்டது. கிட்டு தினமும் இரவு வசூல் தொகையை எஸ் எம் எஸ் செய்வார். புதிய ஓட்டல் , பழைய ஓட்டலின் வசூலை நெருங்கிக் கொண்டிருந்தது.

மனோகருக்கு  அப்போது தான் சுவாமி நினைவு வந்தது. கிட்டுவிடம் , " அய்யா , நீங்க சுவாமி சொல்லி வந்தீங்க. அவரை நினைவு  படுத்தீட்டே  இருக்கீங்க. பணப் பிரச்சினை இப்போ இல்ல . இப்போ உங்கள் அறிவுரை என்ன ? " என்று கேட்க , " உங்க மகன் பேரில் ஒரு ஏழைக் குழந்தைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் ஒரு ஆசிரமம் ஆரம்பிங்க " என்று விட்டு மனோகரை உற்றுப் பார்த்தார். மனோகருக்கு அப்போது தான் மகன் செல்வம் நினைவு வந்தது. முன்பெல்லாம் ஓட்டலில் இருக்கும் கேஷியரிடம் மிரட்டிக் காசை வாங்கிக் கொண்டு போய் விடுவான்.  இப்போதோ ? கிட்டு அய்யர் செய்த மாயம் தான் !

அன்று இரவு அவர் மனைவி படுக்கையில் , " ஏங்க ! நீங்க செல்வம் கிட்ட பேசிக் கூட நாளாச்சு. அவன் என்ன பாவம் பண்ணினான்.? நீங்க பேசாதது அவனுக்கு ரொம்ப வருத்தம். உங்களுக்குத் தெரியுமா, நேற்று அவனோட பிரின்சிபால் கூப்பிட்டு அவனோட பிராஜக்ட்டு தேசிய அளவில தேர்வு ஆகியிருக்குன்னு சொன்னார். அவனோட புது அறுவடை கருவிக்கு 'மனோவெஸ்ட்' என்று உங்க பேர் வெச்சிருக்கான். இதோ பாருங்க அவன் போட்டோ " என்று காட்டினார். மனோஹருக்குப் புல்லரித்தது. அதில் ஒரு பெரிய இயந்திரத்தின் முன் செல்வம் நின்றிருந்தான். அசப்பில் தன் தாத்தாவை நினைவு  படுத்தும் தோற்றம்.!

அவர் மனைவி தொடர்ந்தார் ," எல்லாம் கிட்டு அய்யர் தாங்க அவனை இப்படி மாற்றினது.

மனோகருக்கு எல்லாம் தெரியும் . செல்வத்துக்கு தன் சொந்த மதிப்பு தெரிய வேண்டும் என்று தான் இத்தனை நாளும் மௌனம் காத்தார்.

கிட்டு அய்யரிடம் செல்வம் மாட்டினதே ஒரு தனிக் கதை. ஒரு நாள் செல்வம் தன் நண்பர்களுடன் காரில் வந்து , நேராக காஷியரிடம் பணம் கேட்க , அவர் இதோ வர்ரேன் என்று விட்டு கிட்டு அய்யரிடம் சொல்ல, சமையல் கட்டில் இருந்த அவர் , ஓடி வந்தார். " ஒ, செல்வம் நீ  தானா ? வாப்பா ! உன்னைத் தான் பார்க்கனும்னுட்டு இருந்தேன் என்றபடி அவன் கையைப் பிடித்துக் கொண்டார். காஷியரைக் கூப்பிட்டு, சாருக்கும் அவர் நண்பர்களுக்கும் சாப்பிட ஏற்பாடு பண்ணுங்க " என்று அவரை விரட்டினார்.

திடீரென்று எதோ நினைத்துக் கொண்டவராக , "தம்பி , கொஞ்சம் கல்லால உக்காருங்க. இதோ காய்கறி சப்ப்ளையர் வந்திருக்கார். அனுப்பிச்சிட்டு வந்துடறேன். " என்று விட்டு உள்ளே ஓடினார். செல்வத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அய்யர் சொன்ன மாதிரி அடுத்த அரை மணி நேரம் பணம் வாங்கிப் போட்டுக் கொண்டு இருந்தான். அப்போது காஷியர் கையில் காமராவுடன் ஓடி வந்தார். "சார்! அப்படியே உட்காருங்க . ஒரு போட்டோ எடுக்கறேன் "  என்றவாறு பல போட்டோ எடுத்து விட்டார்.

அய்யர் அப்போது செய்த வேலை அவனை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு பெரும் கூட்டத்தையே கூட்டிக் கொண்டு வந்து விட்டார். " இவங்கல்லாம் நம்ம அலுவலக பணியாளர்கள் " என்றவாறு எல்லாரயும் அறிமுகப் படுத்தினார். பின்பு செல்வத்தை சமையல் அறை, குளிர் சாதன  அறை, தாங்கும் வளாகம் எல்லாம் சுற்றிக் காண்பித்தார்.

செல்வத்துக்கு இதெல்லாம் புதிது. அவனை எல்லாரும் சின்னப் பையனாகவே கருதி வந்தனர். ஆனால் கிட்டு அய்யர் ?

அப்போது அவர்களிடம் சொல்லிக் கொண்டு போக ஒரு உயரமானவர் வந்தார். பார்த்தாலே விவசாயி என்று தெரிந்தது. "ஐயரே , வரட்டுங்களா ?  அந்த உரம் இல்லாம வளர்த்த கீரை எப்படீன்னு சொல்லுங்க " என்று சொல்லி விட்டுக் கிளம்ப , "அய்யர் அவரை நிறுத்தி, கவுண்டரே , இவர் யார்னு கேட்காமலே போறீங்களே " என்று அழைக்க , அவரும் கேள்விக்குறியோடு செல்வத்தைப் பார்த்தார். "இவரு நம்ம முதலாளியோட மகன் செல்வம். எஞ்சினியரிங் படிக்கறார்." என்று அறிமுகப்படுத்த , அவரோ, "அடடே, மன்னிக்கணும் கண்ணு. பார்த்தாலே பெரிய இடத்துப் பையன் மாதிரி தெரியுது. நல்லா இருக்கீங்களா " என்று கேட்டு விட்டு வணக்கம் போட்டார். செல்வமும் பதில் வணக்கம் போட்டான்.

மூவரும் திரும்பி  நடந்தனர் , " செல்வம் எஞ்சினியரிங் கடைசி வருஷம் தானே ! பிராஜக்ட் வருமே ? என்ன பண்ணறதா உத்தேசம் ? இதோ கவுண்டருக்கு உதவற மாதிரி ஏதாவது பண்ணுங்க . அவரு பெரிய விவசாயி " என்று விட்டு அவரைப் பார்க்க , கவுண்டர் செல்வத்தை நோக்கித் திரும்பி, "தம்பி நீங்க அறுவடை எந்திரம் ஒண்ணு பண்ணுங்க . இப்ப இருக்கறது எல்லாம் இந்திய நாட்டுக்கு பொருந்தாது . நம்ம தோட்டத்துக்கு கட்டாயம் வாங்க " என்று அழைப்பு வைத்து விட்டு விடை பெற்றார்.

அதற்குள் அவர்களுக்கு சிற்றுண்டி தயாராக இருந்தது . செல்வம் அப்படியொரு உபசாரத்தை அனுபவித்ததே இல்லை. அவன் நண்பர்களோ வாயடைத்தே போயினர். போகும் போது , " செல்வம் பணம் ஏதாவது வேணுமின்னா என்கிட்டே கேளு  . உன்  பேர்ல ஒரு அக்கவுன்ட் ஆரம்பிக்க சொல்லி பாங்க மானேஜர் கிட்ட பேசியாச்சு. நாளைக்கு  செக் புக் அனுப்பறேன்." என்றார்.

னிதர் அடுத்த நாள் காலை காலேஜு வாசலிலேயே இருந்தார் . " ஏர்போர்ட் வேலை இருந்தது. அப்படியே உன் கிட்ட செக் புக் குடுத்துட்டுப் போகலாம்னு வந்தேன் " என்றவர், உங்க டிபார்ட்மென்ட் ஹெட் யாரு ? அவரண்டை கொஞ்சம் பேசணுமே ? " என்றார்.

பேராசிரியர் அனந்த கிருஷ்ணன் கிட்டு அய்யரிடம் மயங்கியே போனார். அவரும் சுவாமியின் சிஷ்யர் . சற்று நேரம் பேசி விட்டு செல்வத்தின் பிராஜக்ட் பற்றிப் பேசினார். அறுவடை எந்திரத்தைப் பற்றிச் சொல்ல , அவரோ " பிரமாதம் ! நான எல்லா வகையிலும் ஒத்தாசை செய்யறேன் " என்று உறுதி வேறு கொடுத்தார்.

என்ன நடக்கிறது என்று உணரும் முன்பே செல்வத்தை வேலைகள் சூழ்ந்து கொண்டன. அவன் நண்பர்கள் கிட்டு அய்யரிடம் மகுடியில் மயங்கிய நாகங்கள் போன்று இருந்தனர்.கவுண்டர் தனது தோட்டத்தில் இவர்களுக்கு ஒரு கொட்டகையே போட்டுக் கொடுத்து விட்டார். அய்யர் அங்கே ஊரில் இருந்த ஒர்க் ஷாப் ஒன்றுடன் பேசி செல்வத்துக்கு தேவையான பாகங்களைச் செய்ய சொல்லி விட்டார்.

அதன் பலன் தான் இன்று செல்வத்துக்கு ஜனாதிபதி விருது. செல்வம் காலேஜில் நாளை மாணவர்களை விடை அனுப்பும் நாள் வேறு.  செல்வம் அய்யரிடம் தனியாகப் பேசி பீளமேட்டில் ஒரு கிளை ஓட்டல் ஆரம்பிக்குமாறு சொல்லி இருக்கிறான். அய்யரும், அது பற்றி ஆலோசித்து பார்க்க, அங்கே ஒழுங்கான ஓட்டலே இல்லை என்றும் , நன்றாக ஓடும் என்றும் செல்வம் இப்போது வியாபாரத்துக்குத் தயாராகி விட்டான் என்றும் தெரிவித்தார்.  மனோகரன் ஆனந்தத்தில் திளைத்தார்.


" ய்யர் சார். நீங்க சொன்ன மாதிரியே செல்வம் பேர்ல ஆசிரமம் ஆரம்பிச்சுடலாம். எவ்வளவு பணம் ஒதுக்கணும் ? " என்று கேட்க , " ஒரு கட்டிடமும் , பணமா இருபது லட்சமும் தேவைப்படும். இதோ விவரம்  " என்று கிட்டு அய்யர் ஒரு காகிதம் நீட்டினார். "இருபது லட்சமா ? " மனோகர் தயங்கினாலும் , இரண்டே மாதத்தில் தன் வருமானத்தை இரட்டித்தவரிடம் வாதாடாமல் , "செஞ்சுடுங்க . பேப்பர் ஒர்க் எல்லாம் ஆடிட்டர் கிட்ட சொல்லி செய்யச் சொல்லுங்க " என்று விட்டு வீட்டுக்குத் திரும்பி விட்டார். என் மகன் பேரில் வேறு அல்லவா நடக்கிறது ?

மனோஹருக்கு அது மட்டும் புதிராகவே இருந்தது " இந்த மனிதரைப் பற்றி ஏன் சுவாமி அப்படிச் சொன்னார்? "


காரில் திரும்புகையில் மனோகரனுக்கு மில் விவகாரம் நினைவு வந்தது . போன வாரம் தான் மாப்பிள்ளை வந்து , தன்னுடைய பூர்வீக இடத்தில் மில் கட்டப் போவதாகவும் , மனோகரனிடம் பண உதவி வேண்டும் என்றும் கேட்டார். ஆளே மாறிப் போயிருந்தார். அய்யரிடம் ஏதும் கேட்கும் முன்பே அய்யர் விவரங்களோடு தயாராக இருந்தார். " மில் தொழில் பரவாயில்லை. ஆள் பற்றாக்குறை மட்டும் தான் . அதுக்கு ஒரு வழி இருக்கு. " அடுத்த நாளே அங்கே சென்றனர்.

ந்த ஊர்க் கவுண்டர் மரியாதையான மனிதர். " எங்க ஊர்ல பல பேரு வேற ஊர்களுக்கு போறாங்க. இங்கயே மில் கட்டினா நல்லது தான். ஒரு விண்ணப்பம் ... " என்று இழுக்க , மனோகர் " தயங்காம சொல்லுங்க ," என்றார்.

" எங்களுக்கு எல்லாம் பொன்காளியம்மன் தான் குல தெய்வம். ஆத்தா கோயில் போன வருஷம் இடி இறங்கி சேதாரமாயிடுச்சு. விக்கிரகம் மட்டும் தான் மிஞ்சுச்சு. நீங்க மில் கட்டும் போதே ஆத்தா கோயிலையும் கட்டிக் குடுத்தீங்கன்னா இந்த ஊர் ஜனங்க உங்களுக்கு எல்லா வகையிலையும் ஒத்தாசையா இருப்போம்.  " என்று மிக பவ்வியமாக கேட்டார்.

அடுத்த நாள் அய்யர் மில் திட்ட அறிக்கையுடன் வந்தார். கூடவே கோவிலுக்காக ஸ்தபதி கொடுத்த வரை படமும்  இருந்தது. "மில்லுக்கு கட்டம் ஒண்ணரைக் கோடி ஆகும். நம்ம மாணிக்கம் குடுத்த எஸ்டிமேட். " கிட்டு அய்யர் விளக்கினார்.

"அபப கோவிலுக்கு எவ்வளவு ? ". மனோகரன் கேட்டார்.

"ஸ்தபதி பத்து லட்சம் ஆகுமின்னு சொன்னார் " என்றார் கிட்டு அய்யர்.

"இது அவசியமா ?" என மனோகரன் கேட்க , கிட்டு அய்யரோ , "அந்த ஊர்ல நம் தொழில் நடக்கப் போகுது. சொல்லப் போனா இனிமே அதுவும் நம்ம ஊர்தான். செய்யறதுல தப்பில்லை . என்னைக் கேட்டா கண்டிப்பா செய்யனும்பேன் " என்றார்.

மனோகரன் சரியென்று சொல்லிவிட்டார். அவருடைய மனமெல்லாம் அவருடைய மகள் மற்றும் மாப்பிள்ளையின் எதிகாலம் பற்றி சிந்தித்தது. மாப்பிள்ளை எப்படி மாறி விட்டார் ? அய்யர் எப்படி மாற்றினாரோ ?

 அன்று மாலை காலேஜ் விழாவில் முதல்வர் செல்வத்தை ஆகோ ஒகோவெனப் புகழ்ந்தார். செல்வத்தின் இயந்திரத்தின் செயல் விளக்கம் வீடியோவோடு இருந்தது. ஒரே கரகோஷம் ! மனோகர் குடும்பமே மகிழ்ச்சியில் மிதந்தது. . வீடு திரும்புகையில் செல்வத்தை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார் மனோகரன். "அய்யர் தாம்பா என்னை இந்த அளவு ஊக்குவிச்சார் " செல்வத்தின் குரல் உணர்ச்சியால் கம்மியிருந்தது.  மனோகரனுக்கு புல்லரித்தது. இந்த மனிதனிடமா ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னார் சுவாமி ? ஏன் ? இந்த தடவை சுவாமியிடம் கண்டிப்பாக கேட்டு விட வேண்டும் !

டுத்த பௌர்ணமி அன்று சுவாமியை  குடும்பத்தோடு சந்தித்தார் மனோகர். " கிருஷ்ணன் அருள் உங்க கிட்ட பூரணமா இருக்கு போலே. கவலை தீர்ந்ததா ? " என்று சுவாமி ஆதுரமாய் வினவ,  மனோகரோ , " சுவாமி , எல்லாம் உங்க கருணை. உங்க சீடர் கிட்டு அய்யர் என் வாழ்க்கையையே  மாற்றிட்டார். என் மகன் இன்று எனக்குத் தோள் கொடுக்கத் தயாராயிடான். என் மாப்பிள்ளை நல்ல பழக்கத்துக்கு மாறீட்டார். என் தொழில் நல்ல படியா போகுது. " என்றார்.

"சுவாமியோ, ஹரே கிருஷ்ணா !  உன் கருணையே கருணை " என்று கிருஷ்ண விக்கிரகத்தை பார்த்துப் பார்த்து ஆனந்தித்தார்.

மனோகரோ சற்றுத் தயங்கி ," சுவாமி , ஒரு கேள்வி! " என்றார்.

சுவாமியோ, சிரிப்பு மாறாமல் அவரைப்  பார்த்து மேலே சொல்லச் சொன்னார்.

" அன்னிக்கு கிட்டு அய்யரை அனுப்பும் போது , சொத்தையும் பணமும் பத்திரமா பாத்துக்க சொன்னீங்களே ! எதுக்குன்னு விளக்கமா சொல்லுங்க சுவாமி "

சுவாமி அதற்கு மறு மொழி பேசவில்லை. அருகில் இருந்த சீடரிடம் சொல்லி , கிட்டுவை வரச் சொல்லு என்றார். கிட்டு பவ்வியமாக நின்று நமஸ்கரித்தார்.

" எத்தனை செலவு வைத்தாய் இவருக்கு ?" என்று அவரைப் பார்த்தார்.

 '" ஆசிரமத்துக்கு இருபது. கோவிலுக்கு பத்து . ஆக மொத்தம் முப்பது லக்ஷம் சுவாமி " 

மனோகர், பார்த்தாயா ? நான்கே மாதத்தில் உன்னிடம் இருந்து முப்பது லக்ஷம் பறித்து விட்டார் கிட்டு. இன்னும் ஒரு வருஷம் கூட இருந்தால் என்ன நடக்கும்?  "

மனோகர்  சிரித்தபடி , " இந்த மாதிரி  பணம் பறிக்கறதுக்கு நான என்றுமே உடன் படுவேன் சுவாமி " என்றார். 

"இதெல்லாம் ஆண்டவன் கொடுத்தது . நமக்கே எல்லாம்னு இல்லாம அதை எல்லாருக்கும் குடுக்கணும். தர்மம் தழைக்கணும். " சுவாமி எல்லாரையும் ஆசீர்வதித்தார்.

கிருஷ்ணன் எல்லாருக்கும் அருள் தரும் புன்னகையை வீசி நின்றான்.

Thursday, July 15, 2010

மனசாட்சியே இறை சாட்சி !- ஒரு சிறுகதை

விநாயகம் யாரோ அழைப்பது கேட்டுத் திரும்பினார். "ஒ! செல்லப்பன் ! எங்கே இத்தனை நாளா காணோம் ?"

வண்டியில் இருந்து இறங்கிய செல்லப்பன் , இவர் கையைப் பிடித்துக் கொண்டு , "இன்னிக்கு உங்களை ஒரு கிலோமீட்டர் விரட்டிப் பிடிச்சேன் சார் " என்றார். இருவரும் வண்டியை ஓரத்தில் நிறுத்தினர். விநாயகம் அப்போதுதான் கவனித்தார். செல்லப்பன் மீசை இல்லாமல் , சட்டையை கால் சரைக்குள் 'இன்' செய்து, ஷூ ,  பர்ப்யும்  எல்லாம் போட்டு அமர்க்களமாக இருந்தார்.

"என்ன செல்லப்பன் , ரெண்டாவது கல்யாணம் ஏதாவது செஞ்சுக்கிட்டீங்களா ?  ஆளே மாறிட்டீங்க !" என்று குறும்போடு கேட்டார்.


" உண்மையாகவா ? ஒண்ணுமில்ல சார் , புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிச்சேன். அதுக்காகத்தான் இந்த மாற்றம் ." என்றார் செல்லப்பன்.

" ஏதாவது ஆம்வே ஏஜன்ட் ஆயிட்டீங்களா என்ன ?" இது விநாயகம். செல்லப்பன் உடனே உஷாராகி " எப்படி சார் கண்டு பிடிச்சீங்க ? அது விஷயமாத் தான் உங்களை நிறுத்தினேன் ." என்றார்.


விநாயகம் இது போன்ற பல போர்க்களம் கண்டு மீண்ட  வீரர். அலட்டிக்  கொள்ளாமல், " அருமையான தொழில் சார்.என் நிலைமை இப்போ வேற மாதிரி. பையன் மெட்ரிக்கு , பொண்ணு ப்ளஸ் டூ. ரெண்டு வருஷம் ஆகட்டும். நானே உங்களைத் தேடி வருவேன் பாருங்க! " என்றார்.

ஏமாற்றமடைந்தாலும், செல்லப்பன் தளராமல், " ஏன் சார் , நம்ம சுந்தர மூர்த்தி இப்போ பீளமேட்டில தானே இருக்கார் ? என்று கேட்க, ஆமாம் , போன மாசம் கூட பாத்தேன். வீடு எல்லாம் கட்டி முடிச்சுட்டார்." என்றார் விநாயகம். செல்லப்பன் உற்சாகமாகி " சார் கொஞ்சம் போன் நம்பரும் அட்ரசும் குடுங்க " என்று கேட்டு வங்கிக் கொண்டார்.


"ன்னங்க , கொஞ்சம் ஆர்த்திக்கு ஷூ பாலிஷ் போட்டு விடுங்க !" பார்வதி சொல்லி முடிக்கும் முன்னேயே அங்கே சுந்தர மூர்த்தி இருந்தார்.  பெண்ணைப் பார்த்து  " மேடம் , பாலீஷுக்கு ரெண்டு ருபா ! அர்ஜண்டுக்கு அஞ்சு ருபா !" என்று குறும்போடு கேட்க, ஆர்த்தி சளைக்காமல், "ஏம்ப்பா , உங்க ஊர்ல கடன் எல்லாம் உண்டா ? அஞ்சே வருஷம் தான் ! "என்று ஏட்டிக்கு போட்டி பேசினாள்.

அம்மாவையும் பெண்ணையும் ஸ்கூட்டரில் ஏற்றி விட வராந்தா வரை சென்று நின்றார். பார்வதி வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது, " உப்புமா காஸ் மேல இருக்கு. தயிர் பிரிட்ஜில இருக்கு. ஊறுகாயும் இருக்கு. நான எப்படியும் ஒரு மணிக்குள்ள வந்திடுவேன்." என்று உரக்க சொன்னாள். அவரோ, " சரி ரோட்டைப் பார்த்து போ. லைசன்சு பர்சில வச்சியா ? மொய் கவர் எடுத்தியா ?" என்று கேட்க , பார்வதி " எல்லாம் ஆச்சுங்க . நான வர்ரேன் " என்று கிளம்பினாள்.

சுந்தர மூர்த்தி வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்த முற்படும் போது , செல்லப்பன் வீட்டின் முன் நின்று ஹாரன் அடித்தார். இவர் கேட்டைத் திறக்கச் செல்லும் முன்பாகவே, " என்ன சார் சௌக்கியமா ? " என்று உற்சாகமாக விளிததார். சுந்தர மூர்த்தி புன்னகையுடன் , எல்லாம் நல்லா இருக்கேன், வாங்க ! " என்று அன்புடன் வரவேற்றார்.

" எனக்கு ஒரே சம்சயம் . நீங்க இன்னிக்கு வீட்டில இருப்பீங்களோ இல்லையோன்னு.  சனிக்கிழமையாச்சே ! எதுக்கும் பாத்துட்டு போலாம்னுட்டு வந்தேன்." என்றார் செல்லப்பன்.

குளிர்பானம் கொடுத்தார் மூர்த்தி. " என்ன சார் இன்னிக்கு லீவு தானே ? கொஞ்சம் பேச முடியுமா ?" என்று செல்லப்பன் கேட்டார் .

" இன்னிக்கு நான ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டேன். வீட்டுக்காரிக்கு ஒரு கல்யாணம் . என் பையன் இன்னிக்கு ஐ ஐ டி கோச்சிங் கிளாசுக்கு போயிட்டு  வருவான். வேலைக்காரி ஒன்பது மணிக்கு வருவா. இன்னிக்கு மதியம் பால் கார்டு வாங்கணும். ஒண்ணா லீவு போட்டுட்டேன் " என்று மூர்த்தி தனக்கே உரிய சாந்த குணத்தோடு பதில் சொன்னார்.

" என்னது ? ஸ்கூல் பிரின்சிபால் இந்த வேலை எல்லாம் செய்யறதா ? நோ நோ ! சார் , இதை எல்லாம் விடுங்க. நான உங்களுக்கு நேரத்தைக் காசாக்குற வித்தை சொல்லித் தர்ரேன் . உங்க ஸ்கூல் ல குடுக்கற இருபதினாயிரத்துக்கு நீங்க பாடு பட்டது போதும் !" செல்லப்பன் மூர்த்தியைக் கூர்ந்து கவனித்தார்.

மூர்த்தி சற்று நெளிதலுடன், "என்ன செல்லப்பன் இன்னிக்கு ஒரே கலாட்டாவாக இருக்கீங்க ? என்னை எதுலயும் சிக்க வைக்காதீங்க . காசு இருந்தாத்தானே ?" சிரித்தார்.

"உங்களைக் காசு யாரு கேட்டா ? உங்க நேரமும் , உங்க செல்வாக்கும் மட்டும் தான் உங்களுக்கு இதுல துணை நிக்கும்" என்றபடி, தான் ஆம்வே யில் முகவராக சேர்ந்ததையும் , கை நிறைய பணம் சம்பாதிப்பதையும் கூறினார். "வெறும் அஞ்சா யிரம் தான் போட்டு சேர்ந்தேன். இன்னிக்கு எனக்கு கீழே காரமடையில ஒரு லைன் , அவனாசில ஒண்ணு, திருப்பூர்ல ஒண்ணு ஓடுது. இருநூறுக்கு மேலே ஏஜன்ட் இருக்காங்க . நல்லா ஓடுது. இப்ப தான் ஒரு ஆல்டோ வாங்கினேன். " என்றார் பெருமிதமாக.

சுந்தர மூர்த்திக்கு இந்த நடைமுறை எல்லாம் புரியாது. செல்லபபனைப் பார்த்து , " ஆமா , ஏதோ ஏஜன்ட் னு சொன்னீங்க. இந்த தொழில் ல என்ன பொருளை விக்குறீங்க ?" என்று அப்பாவியாய் வினவினார்.

செல்லப்பன்
நாக்கைக் கடித்துக் கொண்டார். " என்ன சார் இது ? ஆம்வே பொருட்களைத் தெரியாம இருக்கீங்க. இதோ பாருங்க " என்று தான் பையில் கொண்டு வந்த சாமான்களைக் காட்டினார். இது டூத் பேஸ்ட். இது கிளீனிங் சொல்யூஷன். உலகிலேயே நம்பர் ஒன. இது வைட்டமின் பொடி. இது ஓமேகா.. என்று அடுக்கினார். அதன் சிறப்புகளையும்  விளக்கிக்கொண்டே போனார்.

"பரவாயில்லையே ! துணி துவைச்ச பின்னாடி சோப்பு கலந்த தண்ணிய செடிக்கு கூட விடலாமா ? இது வேணா ஒரு பாட்டில் குடுங்க சார். நூறு மில்லி இருந்தா காமிங்க " என்றார்.

செல்லப்பன் ஏதோ சொல்ல முற்படுமுன், கதவு திறக்கும் ஒலி கேட்டது. மூர்த்தி சாரின் மகன் தோளில் பையோடு வந்தான். "ஸ்ரீராம்! என்று அறிமுகம் செய்தார். அவன் கை குவித்து வணக்கம் சொல்லி, பிறகு தந்தையை நோக்கித் திரும்பினான். " அப்பா, காய்கறி இதோ பையில் இருக்கு. பிரிட்ஜில வைக்கறேன்." என்று விட்டு உள்ளே சென்று விட்டான். உடனே மூர்த்தியும் பின்னாடியே சென்றார். உள்ளே ஏதோ பாத்திரம் நகர்த்தும் சத்தம் கேட்டது.

ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தார் மூர்த்தி. " மன்னிக்கணும். அவன் காலைல அஞ்சுக்கு போனவன். இப்பத்தான், ஒன்பதுக்கு வந்திருக்கான். சாப்பிட வச்சிட்டு வந்தேன்." என்று தோள் துண்டால் கையைத் துடைத்தார். " என்னமோ சொல்ல வந்தீங்க "

செல்லப்பன் உற்சாகமானார். இந்த மாதிரி சிச்சுவேஷன் அவருக்கு தினம் நிகழும். ஒரு முறை தன் முன்னோடிகள் சொல்லிக் கொடுத்ததை நினைவு படுத்திக் கொண்டு ஆரம்பித்தார். " சார், உங்க பையனோட படிப்புச் செலவு, பொண்ணோட படிப்பு, கல்யாணச் செலவு எல்லாம் கணக்கு பண்ணி பாருங்க. மலைச்சுப் போயிடுவீங்க. ஒத்த சம்பளத்துல இதெல்லாம் பண்ணனும்னா முடியுமா ? நான உங்களை என்ன மாதிரி ஏஜன்ட் ஆக மாறச் சொல்லறேன். நீங்க என்னடானா சொந்த தேவைக்கு வேணும் அது இதுன்னு பேசறீங்க "

போன் மணி அடித்தது. மூர்த்தி எடுத்தார்." ம்ம் சொல்லும்மா . கல்யாண டிபன் எப்படி ? ஆர்த்தியை சரியாய் கிராஸ் பண்ணி ஸ்கூல் ல விட்டியா ? சரி , சரி, மெல்ல வா " போனை வைத்து விட்டு நிமிர்ந்தார்.

"செல்லப்பன், இப்போ நீங்க சொன்னீங்களே, சொந்த உபயோகத்துக்கு வேண்டி இந்த ஏஜன்ட் ஆகறது சரியில்லையா ? அப்படித்தான் உங்க கீழே உள்ள எல்லாரும் பண்ணறாங்களா? உங்க வீட்டுல இந்த பொருட்கள் எல்லாம் உபயோகம் பண்ணறது இல்லையா ? " என்று மூர்த்தி கேட்டார்.

" ஆமாம் சார். இது பணம் பண்ணுற செயின். இதுல சொந்த உபயோகம் எல்லாம் வீண் " என்றார் செல்லப்பன்.

"செல்லப்பன், இப்ப நீங்க சொன்னதில இருந்து எனக்கு
இந்த பிசினஸ் மேல ஒரு மாதிரியான ஊகம் வந்திருக்கு . அதாவது, சுகாதாரப் பொருட்களை தான் வங்கி விற்றாலும், அதை என்ன தான் ஆகா ஓகோ ன்னு சொல்லி வித்தாலும் , அது பிறர் வாங்கி தான் லாபம் சம்பாதிக்கணும் அப்படி ன்னு எல்லாரும் நினைக்கறாங்க. இதனால உங்க செயின் ல உள்ள ஒருவருமே தனக்காக இதுகளை உபயோகம் பண்ணறது இல்ல. இதே தப்பை என்னையும் பண்ணச் சொல்லறீங்க. அப்படித் தானே ? "

செல்லப்பனுக்கு இந்தக் கேள்வி ஒரு சரியான அடிதான். தான் சென்ற செமினார்களில் இந்த மாதிரி வாதம் செய்தால் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்களா என்று யோசித்தார்.

அதற்குள் மூர்த்தியே, " இதில இன்னொன்னு இருக்கு. உங்க ஒருத்தருக்கு, சிறிசா வருமானம் வரணும்னா கூட , உங்க மூலமா இரண்டு பேர் இதில சேரணும். அவங்களுக்கும்  காசு கொஞ்சம் வரணும்னா , அவங்களுக்குக் கீழே மேலும் ஆளு கூடணும். உங்களுக்கு போட்ட பணம் திரும்பணும்னா இந்த செயின் நீண்டுகிட்டே போகணும். இதில எப்பவுமே ஏமாளி , கடைசியாய்ச் சேர்ந்தவன் தான் . இல்லையா ?" என்று மெல்ல , ஆனால் தெளிவாக கேட்டார்.

செல்லப்பன் , இதை எதிர்பார்க்கவில்லை. "நீங்க தேவை இல்லாமல் அடுத்தவரைப் பத்தி கவலைப்படுறீங்க. இதுல மோசம் போனவன் கிடையாது.". என்று ஏதோ ஆரம்பிக்க, மூர்த்தி சிரித்தார்.

"செல்லப்பன், சில வருடத்துக்கு முன்னாடி என்னை சில பேர் ஷேர் மார்க்கட்டுக்கு வந்து சேர சொன்னாங்க. விசாரிச்ச பிறகு தெரிந்தது. காலையில வாங்கின ஷேரை சாயங்காலமே விககறதாம். எப்படி நமக்கு ஒரு கம்பனியோட நிலவரம் ஒரு நாளைக்குள்ள தெரியும் ? அதுக்குள்ளே இதில இப்படி அவசரமா விக்கறது எதுக்குனு நான கேட்டப்ப , இப்ப நீங்க சொன்ன அதே பதில் தான் எனக்குக் கிடைச்சது. எனக்கு புரிந்தது ஒரே விஷயம். இந்த பணம் ஒரு ஏமாத்து பணம். பொருளுக்காக வியாபாரம் பண்ணாம பணத்துக்காக வியாபாரம் பண்ணி  ஒருத்தனை சிக்க வச்சு அவனை இழக்க வைக்கறதுதான் இந்த வியாபாரம் எல்லாம் ! "  மூர்த்தி முடிப்பதற்குள் செல்லப்பன் முந்தினார்.

"என்னைப் பார்த்துமா இப்படி சொல்லறீங்க ? நான சம்பாதிச்சது எப்படி ? என் உழைப்பினால தானே ?"

இப்போது மூர்த்தியின் கண்கள் செல்லபபனை உற்றுப் பார்த்தன. " நீங்க அப்பவே எனக்கு ஒரு உத்தரவாதம் குடுத்தீங்களே, போட்ட பணம் ரெண்டே மாசத்தில வரும் அப்படீன்னு ! அது யாரு பணம் ? உங்க கம்பனி பணமா அல்லது புதுசா சேர்ரானே அவன் பணமா ? நீங்க போயி பாக்கற ஒவ்வொரு ஆளும் சம்பளம் பத்தாம மாசக் கடைசியில கையைப் பிசையறவன் தானே ? அவனுடைய பணத்தைத் தின்னா நானும் கார் வாங்கணும் ?"

செல்லப்பனுக்கு இப்போது வியர்த்தது. மூர்த்தி மேலும் தொடர்ந்தார். செல்லப்பன், நீங்களும் என்னைப் போல ஒரு டீச்சர். நான இன்னிக்கு என் மனைவிக்காகவும், குடும்பத்துக்காகவும் லீவு போட்டு கவனிக்கிறேன். ஆனா நீங்க பணத்துக்காக லீவு போட்டிருக்கிறீங்க. இதோ , இப்ப சித்த முன்ன என் பையனுக்கு என் கையால நான சாப்பாடு போட்டேனே , அந்த திருப்தியை இந்த ஆம்வே வியாபாரம் குடுக்குமா ?  இல்லை !, இந்த மாதிரி விஷயங்களால என் குற்ற உணர்வு தான் ஏறும். மேலும், என்னால பொய் சொல்லி வியாபாரம் பண்ண முடியாது. ஆனா, நான சொன்ன மாதிரி , அந்த க்ளீனிங் சொல்யூஷன் நூறு மில்லி வாங்கறேன். இது என் மனசுக்குப் பிடிச்ச வியாபாரம் "

மூர்த்தி தொடர்ந்தார் . " நீங்க முதல்ல தவறாம யோகா செய்வீங்க . எல்லோருக்கும் சொல்லிக் குடுப்பீங்க. இப்போ அதெல்லாம் விட்டுட்டீங்க போல. வில் போல இருந்த நீங்களே இப்ப பணம் பணம்னு அலைஞ்சு தொப்பையை வச்சிக்கிட்டு இருக்கீங்க. தினம் மகனோட ஸ்கூலுக்கு ஸ்கூட்டர்ல வருவீங்க. இப்ப அவனை ஹாஸ்டல் ல விட்டுட்டீங்க. வெறும் பணத்தால நீங்க இழந்த உறவுகளை, ஆரோக்கியத்தை , திரும்ப பெற முடியுமா ? நான உங்களைக் கேட்கிறேன். ஒரு குடும்பத்தின் ஆணிவேரான தலைவர் நீங்க திசை திரும்பி ஆச்சுன்னா , உங்க குடும்பம் என்னவாகும் ?  நீங்க என்னை விட சின்னவர். உங்க மகன் என் ஸ்டூடன்ட் . அந்த உரிமையில் தான் இதெல்லாம் சொன்னேன். தப்புன்னா மன்னியுங்க." என்று முடித்தார்.

அந்த ஹால் முனையில் நின்றிருந்த ஸ்ரீ ராம்  தன் தந்தையை பெருமிதமாகப் பார்த்தான். செல்லப்பன்   சற்று நேரம் தலை குனிந்து உட்கார்ந்திருந்தார். பிறகு மெல்ல நிமிர்ந்து, "சார் , பையனுக்கு படிப்பு தடை படக் கூடாதுன்னு தான் ஹாஸ்டல்ல போட்டேன். அவனும் இது வரை ஒண்ணும் சொல்லல்ல." என்று சொல்ல, குறுக்கிட்ட மூர்த்தி, "உங்க மகனும், ஸ்ரீ ராமும் நண்பர்கள். அடிக்கடி இங்கே போன் பண்ணுவான். ஒரு நாள் ரொம்ப அழுது பேசினான். அப்பா வர்றதே இல்ல அப்படீன்னு. நானும் அவனுக்கு ஆறுதல் சொல்லி சமாதானப் படுத்தினேன். " என்று சொல்ல, செல்லப்பன் அப்படியே நிலை குலைந்து நாற்காலியில் சாய்ந்து விட்டார். கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.

"சார், நான இத்தனை நாள் சம்பாதிச்சது அவனுக்காகத் தானே சார். நாளைக்கு அவனுக்கு ஆகட்டுமேன்னு தானே சார் இத்தனயும் பண்ணினேன் ? அவனே புரிஞ்சிக்கலை பாருங்க ! " என்று விரக்தியோடு பேசினார்.

மூர்த்தி இப்போது அவரருகே நெருங்கி அமர்ந்தார். " இப்போ நான சொல்லறதை நிதானமா கேளுங்க. நீங்க ஒரு வாத்தியாரா இருந்த வரைக்கும் நீங்க பணத்தை சம்பாதிச்சீங்க. உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாம பொருள் சம்பாதிச்சீங்க. உங்க குடும்பம் தெளிஞ்ச ஓடை போலே ஓடிக்கொண்டிருந்தது. கடமையைச் செய்ததால பணம் உங்களுக்கு வந்தது. இப்போ   பணம் பண்ணறதுக்கு மட்டும் உழைக்க ஆரம்பிச்சீங்க . பணம் உங்களை சம்பாதிக்க ஆரம்பிச்சிடுச்சு. இப்போ நீங்க முழுக்க பணத்தின் பிடியில் இருக்கீங்க. இதில இருந்து நீங்க வெளிய வரலைன்னா அந்த வருமானத்தின் நோக்கமே சிதைஞ்சிடும். நல்லா யோசியுங்க. இப்போ நான பால் கார்டு  வாங்கப் போயிட்டு இருக்கேன். மாடியிலே என்னோட ரூம் இருக்கு. கொஞ்ச நேரம் தியானம் செஞ்சுட்டு இருங்க. அரை மணியில வந்துடுவேன்." என்று அவரை மாடியில் விட்டு விட்டு தெருவில் இறங்கி நடந்தார்.

 திரும்பி வந்த போது செல்லப்பன் இல்லை. " அங்கிள் இப்போதான் போறார் பா " என்றான் ஸ்ரீராம்.

ன்று மாலை , மூர்த்தி , காயப் போட்ட துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். உள்ளே பார்வதி, விருந்துண்ட மயக்கத்தில் தூங்கியிருந்தாள். மணி ஐந்தாயிற்று. சின்னவள் வரும் சத்தம் கேட்டது.

 'அப்பா!"

"என்னடா செல்லம் ? ஏன் ரொம்ப களைச்சு இருக்கே ?
பால் சாப்பிடுறியா ?"

சரிப்பா . இதோ முகம் கழுவிட்டு வர்ரேன்.

மூர்த்தி வேலை முடித்து , சமையலறையில் சென்று நிமிடத்தில் பால் கலந்து வந்தார். பெண் ஆசையாய் குடிப்பதைப் பார்த்து விட்டு, திருப்தியாய் புன்னகைத்தார்.

வாசலில் ஏதோ அரவம். கதவைத் திறந்தார். விநாயகமும் அவரோடு இன்னொரு பெண்மணியும். " ஒ வாங்க, வாங்க ! " மூர்த்தி வரவேற்றார்.

" அந்த பெண்மணி சற்று பரபரப்பாக இருந்ததை உணர்ந்த மூர்த்தி , விநாயகத்தைப் பார்க்க, அவர் , " சார் இவங்க செல்லப்பன் மனைவி. அவர் இங்க வந்தாரான்னு விசாரிக்க வந்திருக்காங்க "

அந்த பெண்மணி அவரைப் பார்த்து , " என் வீட்டுக்காரர் மதியம் உங்க வீட்டுல இருந்து வந்ததும், என்னண்டை ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசினார். ஏதோ இந்த ரெண்டு வருஷத்துல இழந்ததைப் பற்றியும் சொன்னார். குழந்தையை ஹாஸ்டல் ல விட்டதைப் பற்றி ரொம்ப வருத்தப் பட்டார். சாப்பிடக் கூட இல்லை. நான சமையல் உள் வேலை முடிச்சிட்டு வந்து பார்த்தப்போ, அவர் போயிட்டார்.வண்டியைக் கூட எடுக்கலை.செல் போனும் அணைச்சிருககு   உங்க வீட்டு விலாசம் விசாரிக்க விநாயகம் அண்ணன் கிட்ட போன் பண்ணேன். அவர் தான் இங்கே கூட்டிட்டு வந்தார் " என்று பயத்தோடு விவரித்தார்.

மூர்த்தி " இல்லையே, அவர் போன பின் இங்க வரவே இல்லை. வேற எங்கயும் கேட்டீங்களா ? என்று கூறிக் கொண்டிருக்கும் போதே செல்  போன் மணி அடித்தது. செல்லப்பன் !

" என்ன மூர்த்தி சார் . தொந்தரவுக்கு மன்னிக்கணும். உங்க கிட்ட ஒரு ஐந்து நிமிடம் பேசலாமா ?"

" ஒ தர்ராளமாக . அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி. இப்போ எங்கே இருக்கீங்க ? உங்க மனைவி உங்களைத் தேடி இங்கயே வந்தாச்சு." என்றார் மூர்த்தி.

" அடடா ! மனசுக்குள்ள ஒரு வேகம் சார். எங்கப்பா அம்மா வைப் பார்க்கனும்னு தோணிச்சு. ரெண்டு வருஷம் ஆச்சு அவங்களைப் பார்த்து. நேரா திருப்பூர் போயிட்டேன். என் மனைவிக்குச் சொல்லுங்க இன்னிக்கு ராத்திரி வீட்டுக்கு வந்திருவேன் னு " செல்லப்பன் கூறி விட்டு , " சார் இன்னொரு விஷயம். நான படிச்சு, பெரியவங்க சொல் கேட்டு, அப்புறம் அவங்க நடத்தையைப் பார்த்து, இப்படி பல பாடம் படிச்சிருக்கேன். இன்னிக்கு முதல் நாளா , உங்க சொல்லும், எண்ணமும் ரெண்டும் குன்றின் மேல் வச்ச விளக்குப் போல பிரகாசித்ததை பார்த்தேன். என்னக்கு இத்தனை நாளா பணப் பித்து பிடித்தவர்களே உதாரணமாக இருந்தாங்க . முதன் முதலா பணத்தை துச்சமா பார்த்த நீங்கள் தான் என் வாழ்க்கைக்கு குரு. "

செல்லப்பன் தொடர்ந்தார் " நாளைக்கு எங்கப்பா அம்மாவோட உங்களைப் பார்க்க வர்ரேன். எங்கம்மா என்னைப் பார்த்ததும் அழுதுட்டாங்க சார். பணத்து பின்னால் சுத்திட்டு இருந்த என்னை ..."   இதைச் சொல்லும் பொழுதே அவர் நாத் தழு தழுத்தது .

" அட, இதுக்கெல்லாம் அழலாமா ?  சியர் அப். கட்டாயம் நாளைக்கு வாங்க. சாயங்காலமா பார்க்கணும்னா , நான நாளைக்கு சலிவன் வீதி வேணுகோபால் சாமி கோவில்ல பகவத் கீதை சொற்பொழிவு பண்ணறேன். ஆறு மணிக்கு. அங்கே வாங்களேன் " என்று அழைத்தார்.

" கண்டிப்பா வர்ரேன் சார். எங்க குல தெய்வமே கிருஷ்ணன் தான் . ரெண்டு வருஷமா கோவில் பக்கம் எங்க போனான் இந்தப் பாவி ?  கொஞ்ச போனை என் மனைவிக்குக்  கொடுங்க " என்றார்.

விநாயகமும் , செல்லப்பன் மனைவியும்  விடைபெற்ற பிறகே, அவர் பார்வதியை எழுப்பினார்.

வேணுகோபால சாமி கோவில் அன்று களை கட்டியிருந்தது. முன் மண்டபத்தில் ஒரே கூட்டம். மேடையில் மூர்த்தி தனக்கே உரிய அமைதியான ஆனால் அழுத்தமான பாணியில் கீதையை மக்களுக்கு விவரித்தார்.

தியான ஸ்லோகம் மற்றும் பீடிகை முடிந்து, எல்லாரும், அமைதியானவுடன், மூர்த்தி கூடி இருந்தவர்களைப் பார்த்து  " இப்போ நாம் பார்க்கப் போறது பக்தியும் கர்மமும் இணைந்த ஒரு ஸ்லோகம். நாம் எதைச் செய்தாலும், எதை உட்கொண்டாலும், எந்த யாகம் செய்தாலும், எந்த தானம் செய்தாலும், எந்த தவம் செய்தாலும், அதை அப்படியே பகவானுக்கு அர்ப்பணம் பண்ணனும்னு இந்த ஸ்லோகம் சொல்லறது.  இப்போ , உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். "நாம் ஒரு தப்பான கார்யம் பண்ணி விட்டு, அதை எப்படி பகவானுக்கு அர்ப்பணிக்கிறது ?  இது சாஸ்திர விரோதமல்லவா ?"  இந்த சிக்கலுக்கு உங்களிடம் விடை இருக்கா ?" என்று கூட்டத்தைப் பார்த்தார்.

" அர்ப்பணம் பண்ணக் கூடிய சரியான கார்யங்களை மட்டுமே தெரிந்து செய்யறது மட்டும் தான் ஒரே வழி " கூட்டத்தில் இருந்து இந்த குரல் கம்பீரமாக வந்தது. மூர்த்தி அது யாரென்று உற்றுப் பார்த்த பொழுது அங்கே செல்லப்பன் ! . மனிதர் அலாதியான அமைதியுடன் இருந்தார். நெற்றி நிறைய குங்குமம் ! கூடவே அவர் குடும்பமும், விநாயகமும் !

கூட்டம் முடிந்ததும் செல்லப்பன் அவர் கைகளைப் பற்றிக் கொண்டார். அவர் கண்களில் நீர். அவர் மனைவியோ, " சார் இன்னிக்கு காலைல தான் என் மகன் கிட்ட பேசினோம். நாளைக்கு அவனை ஹாஸ்டல் ல இருந்து இங்கேயே அழைச்சிட்டு வந்திரலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்." என்றார்.

" செல்லப்பன் ! நான ஏதோ ரெண்டு வார்த்தை பேசப் போய், அது உங்களை ரொம்ப பாதிச்சிருச்சோ ? தவறு இருந்தா மன்னிக்க...." என்று  மூர்த்தி பேச ஆரம்பிக்க ,

செல்லப்பன் மூர்த்தியைப் பேச விடவில்லை. அவருடைய கையை பிடித்து, தன் ஜிப்பா பாக்கட்டில் இருந்து ஒரு பாட்டிலை எடுத்து அவர் கையில் வைத்தார். " நீங்க கேட்ட க்ளீனிங் சொல்யூஷன். இதுதான் நான பண்ணற கடைசி ஆம்வே வியாபாரம் ! " சிரித்தார்.

அப்போது பட்டர் வந்து , "எல்லோரும் வாங்கோ !  தீபாராதனை ! கண்ணனை சேவிங்கோ " என்றார்.


 " தேவ தேவா ! கண்ணா ! ஜகத்குருவே, உன் கருணையே கருணை !" மூர்த்தி கண்ணில் நீர் மல்க கோகுல பாலகனை இமை மூடாமல் சேவித்தார்.  .

 கற்பூர ஆரத்தி குழலூதும் கண்ணன் மீது பட்டதும், செல்லப்பனுக்கு சிலிர்ப்பு கண்டது .  அங்கே இருந்த ஒரு பக்தை  "குறை ஒன்றும் இல்லை..... " , பாட்டைப் பாட ஆரம்பிக்க, அனைவர் கண்களிலும் நீர் வழிந்தது. கண்டவர்  நெஞ்சமும் நிரம்பி நின்றது.


Thursday, June 24, 2010

நாமக்கல் !! - ஒரு சிறு கதை


"ன்ன லலிதா , ஏற்பாடு பண்ணியாச்சா ?" ஆபீசுக்குள் நுழையும் போதே கோமதி கேட்டாள்.

"வா சொல்றேன். அது ஒரு  பெரிய கதை"  லலிதா  தோள் பையை இறக்கி வைத்து ஆசுவாசப்பட்டாள். கோமதிக்கு பரபரப்பு அதிகமாகியது. "உங்க வீட்டுக்காரர் ஒத்துகிட்டாரா ? பையன் என்னங்கிறான் ? அப்புறம் மாமனார் ?"

" உன் வீட்டுல மாதிரியெல்லாம் என் வீட்டுல நடக்காது கோமு. மூணும் மூணு திக்கு. நான் ஒருத்தி என்ன பண்ண ? என்னமோ எனக்காக பண்ணிக்கிறாப்பல ஆயிடுத்து கடைசில !" லலிதா சடைந்தாள்.

"பழமா காயா அதைச் சொல்லு முதல்ல." கோமு விடாமல் குடைந்தாள்.

"பழம் மாதிரிதான் . இன்னும் தீர்மானமாகலை"  லலிதா  பாட்டிலைத் திறந்து இரண்டு முடக்கு தண்ணீர் குடித்து விட்டு கோமதியைப் பார்த்து புன்னகைத்தாள். "அவரு என் பக்கமாத்தான்  பேசினாரு. பையன் தான் எதுவுமே பேச மாட்டேங்கிறான். மாமனார் என் கண்ணுக்கே சிக்காம இருக்கார்.  இன்னைக்கு ராத்திரி மறுபடியும் ஆரம்பிக்கணும்"

"நாளை காலை ரிசல்ட்டு  . குழப்பிடாதே !" கோமதி எச்சரித்து விட்டுச் சென்றாள்.

" மேடம்  டீ  இந்தாங்க!."  நாயர் கடை வாசு !. "என்னடா ! இன்னிக்கு சந்தனம் குறைவா வச்சிருக்கே. அதுக்கும் பட்ஜெட்டா ?" லலிதா கிண்டலடிக்க, " போங்க மேடம், அளவாத்தான் உரைச்சேன் . அதான் சிரிசாயிடுச்சு " என்று கோணிய படியே அடுத்த டேபிளுக்குப் போய் விட்டான். லல்லி மணி பார்த்தாள். பதினொண்ணே முக்கால் !  ஸ்டேட்மன்ட் பெரும்பாலும் ரெடி. டீயை உறிஞ்சியபடியே , செல் போனில் ராமுவை அழைத்தாள்.

" சொல்லு, லல்லி, என்ன முக்கியமா ?" என்றான் ராமு. "இல்லல்ல. சீனு விஷயம் தான்.." அவள் ஆரம்பிக்கும் முன்னரே, ' சரி சரி, எல்லாம் சாயங்காலம் பேசிக்கலாம் கண்ணா. நேத்து தான் லெக்சர் பெரிசா அடிச்சாச்சே ! ஆபீஸ்ல ஏதாவது விட்டுப் போன பகுதி ஞாபகம் வந்துருச்சோ ? எதுவானாலும் தாத்தாவும் பேரனும் பேசி முடிக்கட்டும். நான் கொஞ்சம் லேட் ஆகும் இன்னிக்கு.எனக்கு ராத்திரிக்கு சிம்பிளா உப்புமாவோ அல்லது ரசம் சாதம் ஆனாலும் போதும். " வைத்துவிட்டான் ராமு.  லல்லிக்கு கோபம் வந்தது " என்ன புருஷன் ? பொறுப்பே இல்லாம !"

லஞசு  நேரத்திலும் லல்லிக்கு நிலை கொள்ளவில்லை. ஏன்தான் ஆளாளுக்கு இப்படிப் புரியாமல் நடந்து கொள்கிறார்களோ ? வீட்டிற்கு போன் போட்டாள். சீனு தான் எடுத்தான். " சாப்பிட்டியாடா செல்லம் ?" லல்லியின் கேள்விக்கு , " ம்ம், ஆச்சும்மா " என்றான். சுரத்தே இல்லை. "பொரியல் போட்டுண்டியா ? சுண்டக்காய் வறுத்து வச்சேனே சாப்பிட்டியா ? " அவளுடைய தொடர்ந்த கேள்விகளுக்கும் " ம்ம் " போட்டுக்கொண்டே தான் இருந்தான். "தாத்தா எங்க ? "

நான்கைந்து வினாடிகள் மௌனம் . பின்னர் "மாடியில இருக்கார்மா " என்றான். அவளுக்கு நன்றாகத் தெரியும், மாமனார் அவளைத் தவிர்த்து வருகிறார். பக்கத்திலே தான் இருக்கிறார் ! தாத்தாவைப் போலவே பேரன் !   "நான்தான் வில்லி ஆயிட்டேன்!" லல்லி அலுத்துக் கொண்டாள்.

"கு , பிசியா ? " ராமுவின் குரல் கேட்டதும் போனின் மறுபக்கத்தில் இருந்து உற்சாகமாக பதில் வந்தது. ஏண்டா , என்கிட்டே எதுக்கு இந்த பார்மாலிட்டி ? சொல்லு, இத்தனை நாளா ஒரு தகவல் இல்லை . லல்லி , குழந்தை, மாமா எல்லாம் எப்படி இருக்கா ?

விசாரிப்புகளுக்குப் பின் ராமு விஷயத்திற்கு வந்தான். ரகு, உன் பையன் சேஷுவை ரெண்டு வருஷம் மின்ன ஒரு போர்டிங் ஸ்கூல்ல விட்டு ப்ளஸ்  டூ  படிக்க வச்சியே, எப்படிடா மார்க்கு வாங்கினான் ? ஸ்கூல் எல்லாம்  எப்படி ?

" எது அந்த நாமக்கல் ஸ்கூல் தானே ? சேஷு சுமாரா படிக்கற பையன். உள்ளூர்ல எண்பது வாங்கினான். நாமக்கல் ல  போயி தொண்ணூறு வாங்கினான். சீனுவுக்கு எதுக்குடா அதெல்லாம் ? அவன்தான் ஸ்கூல் பர்ஸ்டாச்சே ?"

ராமு சற்று திணறினான். " அது ஒண்ணும் இல்லடா . இங்க என்னமோ தொண்ணூத்தி அஞ்சு பர்சன்ட் வாங்கறான். அங்க நாமக்கல் போனா, ஸ்டேட்  ரேங்கு வாங்க வச்சுடுவாங்களாம். உண்மையா ?"

ரகு இப்போது அமைதியாகி விட்டான். " அதெல்லாம் ஆளைப் பொறுத்து தான் எல்லாம். நீ சிங்கத்த வீட்டுல வச்சுட்டு வேட்டையாட சொல்லித் தரணும்னு பேசிட்டு இருக்கே . ஆமா இது யார் ஐடியா ? லல்லியோடதா ? "

ராமுவுக்கு இனிமேல் எதையும் மூடி மறைப்பதில் இஷ்டம் இல்லை. " ஆமாண்டா. அவ ஆபீஸ்ல ப்ரெண்டு  ஒருத்தி தன பையனை அனுப்பி அவன் ஏகப்பட்ட மார்க்கு வாங்கி உள்ளூர்லயே பெரிய காலேஜுல சொல்ப பீஸ் கட்டி சேந்துட்டானாம். ஏதோ ரொம்ப நல்ல ஸ்கூலாம். நல்லா பாத்துக்குறாங்களாம் . இந்த ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டா போதுமாம். அப்புறம், காலேஜு, கேம்பஸ் இன்டர்வ்யூ எல்லாம் நம்மைத் தேடி வருமாம் . நாளைக்கு  மெட்ரிக்கு ரிசல்ட்டு. முடிவு உடனே எடுக்கணுமாம். "

ரகு சிரித்தான் " சரி சரி ! இந்நேரம் லல்லி பையனோட அமேரிக்கா வேலை, கல்யாணம், அப்புறம் இவ அங்க போயி டெலிவரி பாக்கற வரைக்கும் மனசுக்குள்ள பிலிம் ஓட்டியிருப்பா !  நேத்து தூங்கவாவது விட்டாளா ? வண்டு மாதிரி ரீங்காரம் பாடியிருபபாளே !" லல்லி இவர்கள் இரண்டு பேருக்கும் முறைப் பெண். ரகு ராமுவை விட பெரியவன். அவனுக்கு சீக்கிரமே திருமணம் ஆகிவிட்டபடியால், லல்லியை இவன் மாமா இவனுக்கு மணமுடித்தார். ரகு தொடர்ந்தான் " நான் இன்னிக்கு ராத்திரி அங்க வர்ரேன்.  அங்க பேசிப்போம்" .

அவன் பிடி கொடுத்துப் பேசாதது ராமுவுக்கு சற்றுக் கவலையாகத்தான் இருந்தது. லல்லியின் ஆலோசனை அவனுக்கும் சற்றுப் பிடித்துத் தானிருந்தது.   நல்ல காலேஜில் சீட்டு வாங்க வேண்டும் என்றால் குறைந்தது அஞ்சுக்கு மேலே தரணும். கௌன்சலிங்கில் வெளியூர் கிடைத்து தொலைந்தால் ஹாஸ்டல் அது இது என்று பெரிய செலவு வைக்கும். நாமக்கல்லில் ரெண்டு வருஷமும் சேர்த்து விட்டால் ரெண்டு லட்சம் போதுமாம். தொண்ணூத்து அஞ்சுக்கு மேலே வாங்கினால் அதுல பாதி தந்தா போதுமாம். ஆனா இந்த ரகுப்பயல் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறான் !

சிவராமன் வேட்டி நுனியைப் பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். கூடவே சீனுவும். தெருமுனைக்கு வந்ததும்  பழனிசாமிக் கவுண்டர்  சேர்ந்து கொண்டார். அங்கே பாத்திரம் வாடகைக்கு விடுபவர். "என்ன சிவராமா , இன்னிக்கு லேட்டு ? ஏதாவது சீரியல் பாக்குறியா ? " என்று அவரைச்  சீண்டினார். சிவராமன் புன்னகைத்தார்.  கவுண்டருக்கு அந்த ஊரிலேயே சிவராமன் ஒருவர் மட்டும் நண்பர். அதுவும் அறுபத்தைந்து வருஷமாக ! இருவரும் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் படித்தவர்கள். இவர் வாத்தியாராக , இவர் விவசாயியாக , இடையில் பிரிந்திருந்தனர். பத்து   வருஷம் முன்பு, கவுண்டர் இங்கேயே கடை போட்டுவிட, இவர்கள் தினம் மாலை கோவிலில் சந்திப்பது வழக்கம். இன்று பிரதோஷம்.  

கோயிலில் நுழைந்தவுடன் சிவராமன் உணர்ச்சிப் பிழம்பாக இருப்பார். பிள்ளயார் முன்பாக நின்று 'சுக்லாம் பரதரம்.. " சொல்லும் போதே அரைக்கண் மூடி ஏதோ உலகத்திற்குச் சென்று விடுவார். அவரிடம் யாரும் பேச முடியாது.  இன்று பிரதோஷக் கூட்டம் நிரம்பியிருந்தது . குருக்கள்  சீனுவைக் கண்டதும், "வாடா, குழந்தே   உக்கார். ஸ்லோகம் சொல்லுடா. நான் அபிஷேகம் முடிக்கறேன்" என்றார்.

சீனு லிங்காஷ்டகம் சொல்ல ஆரம்பித்தான். குருக்கள் அபிஷேகம் ஆரம்பித்தார். இப்போது சிவராமன் ஸ்ரீ ருத்ரம் சொல்ல ஆரம்பித்தார். இருவர்  கண்களிலும் நீர் வழிந்தது.  கவுண்டர் உருகிப் போய் விட்டார். இன்று ஏதோ தாத்தாவும் பேரனும் உணர்ச்சியின் பிடியில் இருப்பதாகத் தோன்றியது கவுண்டருக்கு . பின்னால் இருந்த மீனாட்சி மாமி , "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" என்று  ஆரம்பித்தவுடன் சிவராமன் குரலே எழாமல் விக்கித்து நின்று விட்டார்.

தீபாராதனை முடிந்து பிரசாதம் வாங்கி விட்டு மண்டபத்தில் அமரும் போது தான் கவுண்டர் கவனித்தார். "என்ன ஐயரே, என்ன விவரம் ? முகம் வாடியிருக்கு . பிரசாதம் பத்தலையா ? " என வினவி விட்டு சீனுவைப் பார்க்க , அவனும் சுரத்தில்லாமல் இருப்பதைப் பார்த்து , "என்னப்பா பேராண்டி,  உனக்கு என்ன கவலை ? டெண்டுல்கர்  டக் அவுட்டு ஆயிட்டானா ? " என கிண்டலடிக்க, இருவரும் மௌனம் காக்கவும், பழனிச்சாமி கவுண்டருக்கே திக் என்று ஆகி விட்டது. எதையும வெளிக்காட்டிக் கொள்ளாமல் , "நான் குந்தி  தேவி மாதிரி. யாருக்கும் சொல்ல மாட்டேன். தாராளமா சொல்லலாம் " என்று நாசூக்காக  துருவினார்.

"பழனிச்சாமி, உன்கிட்ட சொல்லறதுக்கு என்ன ? இவன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கிறுக்குப் பிடிச்சிருச்சு. இவனை நாமக்கல்லுக்கு அனுப்பறாங்களாம் " என்ற சிவராமன், கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டார். கவுண்டருக்கு புரியவில்லை " எதுக்கு ? ஆஞ்சநேயர் கோவிலுக்கா ?" என்று பொதுவாகக் கேட்டு வைத்தார்.

 சிவராமனோ வேதனை தாளாமல், " விளையாடாதே. அது நமக்கு புரியாத விளையாட்டு. காசு விட்டெறிஞ்சு, குழந்தையை சக்கையாய் பிழிஞ்சு , மார்க்கு வாங்கற புது வித்தை. தமிழ்நாட்டை புடிச்சு ஆட்டற புது வியாதி. " கவுண்டருக்கு நாமக்கல் விவரம் விளக்கினார். அவரோ, " என்னடா இது , அய்யமார் வூட்டுக் குழந்தைக்கே இந்த கதின்னா, குடியானவன் வீட்டுல என்னதான் நடக்காது ? குழந்தைய படி , படின்னு கொன்னே போடுவாங்க போலிருக்கே ? ஏன் கண்ணு, நீ தானே உன் ஸ்கூல்ல மொத மார்க்கு ? உனக்கே இந்தக் கதியா ? "

சீனு  முதல் முதலாய் வாயைத் திறந்தான். " தாத்தா, அம்மா பிடிவாதமா சொல்லறாங்க. அப்பாவும் போன்னுதான் சொல்லறார். எனக்கு படிப்பும் வேணும். எல்லோரும் வேணும் . அங்கே போனா தாத்தா கிட்ட கேட்கிற ராமாயணம், பாகவதம், அப்புறம் பாட்டு கிளாஸ் எல்லாம் போயிடும். வீட்டுல எல்லாரும் சேர்ந்து சாப்பிட முடியாது. ஸ்லோகம் , கோவில்  எதுவும் முடியாது " சொல்ல சொல்ல கண்ணில் இருந்து நீர் வழிந்தது.

கவுண்டர்,  "சரி சரி , நீ கோவில்ல அழுகாதே. தைரியமா வீட்டுக்கு போ." என்று தேற்றி அனுப்பி வைத்தார். இரண்டு பேரும் தளர்ந்து நடப்பதைப் பார்த்ததும், " ஈஸ்வரா, இந்தச் சின்னப் புள்ளைக்கா சோதனை ? சிவராமனைப் பாரு! உன்னை தினமும் பாடற வாய் அது. அதுல அழுகையை உண்டாக்காதே " என்று சிவனுக்கு கடைசியாய் வேண்டுதல் வைத்து விட்டு, கடையை நோக்கி நடந்தார்.

ராமு   களைத்து  வந்திருந்தான். சீனு எங்க என்று கேட்க, "மாடில" என்று லல்லி காட்டினாள்.

ரகு  வரும் போது எட்டாகி விட்டது.   சேஷுவையும் கூட்டி வந்திருந்தான் . " லல்லி , நல்ல பசி. நீங்க ஒண்ணும் எல்லாத்தையும் முடிச்சிடலயே ?  எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தனர். ரகு படபடப்பாக சிவராமனோடும், சீனுவோடும் பேசிக் கொண்டிருந்தான்.

அதற்குள் , ஏதோ  செல் போன் மணி சத்தம். " என்னோடதுதான்" என்ற  சேஷு சாப்பிடும் போதே இடது கையால் போனை எடுத்து  காதில் வைத்துக் கொண்டான் . " ஹை , என்னடி இந்நேரத்தில ? ஆங் ! நானா ? இங்கே ஒரு இடத்தில மாட்டிட்டு இருக்கேன். என்னது ! இப்ப வரவா ? ம்ஹும் ! செக் போஸ்ட் இருக்கு. நாளை பார்க்கலாம். எஸ் எம் எஸ் போடு. என்னது, ஐயோ ! அதுக்கெல்லாம் இது நேரமில்லைடீ " பெரிதாகச் சிரித்து விட்டு போனை ஆப பண்ணினான். ரகு குனிந்த தலையை நிமிரவே இல்லை.

சிவராமன் அப்போது தான் முதன் முறையாக நிமிர்ந்து பார்த்தார். "சேஷு ! யாரண்டை இப்படி பேசினாய் ?"

சேஷு ஏதோ விசித்திர ஜந்துவைப் போல் அவரைப் பார்த்து விட்டு , "தாத்தா , இந்தக் கேள்விக்கு நான அப்பா கிட்டயே பதில் சொன்னது இல்லை. ஐ திங் இட் இஸ் அன் இன்ட்ருஷன் இன் மை ப்ரைவசி !"  சிவராமன் திரும்பி ரகுவைப்  பார்த்தார். " பெரியப்பா , இவன் நன்னா சொன்ன பேச்சு கேட்டுண்டு தான் இருந்தான். வெளியூர்ல படிச்சு வந்ததும் ஏதோ அவிழ்த்து விட்டாப்பல இப்படி இருக்கான். இவன் அம்மா ஏதோ பையன் படிப்பு வரும்னு அனுப்பிச்சா. இப்ப என்னடான்னா உள்ளதும் போச்சு. இப்பத்தான் காலேஜு இரண்டாம் வருஷம் . இதுக்கே இப்படி அலட்டல் " 

 சாப்பிட்டு முடித்து ரகுவை நோக்கி ராமு கேட்டான், " நீ இன்னும் நான கேட்டதுக்கு பதிலே சொல்லல்லை" என்றான் . ரகு, ஒரு வறண்ட சிரிப்புடன், உனக்கு வார்த்தையை விட உதாரணம் தான் புரியும்னுட்டு அதையே காட்டியாச்சு. இன்னுமா புரியலை ?  நீங்க ரெண்டு பேரும் நன்னா கேட்டுக்கோங்கோ. சீனு தெய்வப் பிறவி. அவனை கிணத்திலே தள்ளிடாதீங்கோ. மேலும் பெரியப்பாவோட உயிரோட நீங்க விளையாடுறீங்க" .

ரகுவை வாசல் வரை வழியனுபபித் திரும்பியதும், உள்ளே ஹாலில் சிவராமன் நின்றிருந்தார். " ராமு, லல்லி இங்க வாங்கோ"  என்று விட்டு சோபாவில் அமர்ந்தார். " எனக்கு மனசு சரியில்லை. நான கொஞ்ச காலம் காசியில் இருந்துட்டு வரலாம்னுட்டு இருக்கேன். அதான் உங்களைக் கூப்பிட்டேன்." கையில் இருந்த காகிதக் கட்டை எடுத்தார்.

"இதுல வீட்டுப் பத்திரம் இருக்கு. நான திரும்பி வருவேனோ என்னமோ. இன்னும் கொஞ்ச நேரத்தில பழனிச்சாமி ஒரு லாயரோட வருவார். உயில் எழுதிடறேன். குழந்தையை நன்னா பாத்துக்கோங்கோ ..." கடைசி வார்த்தையை சொல்லும் போதே வாயைப் பொத்திக் கொண்டு விட்டார். சோபாவில் அப்படியே சாய்ந்தும் விட்டார்.

"மாமா" என்று லல்லி பதறி அவர் கையைப் பிடித்துக் கொள்ள, சிவராமன் மெதுவாக " அம்மா, உங்களுக்கெல்லாம் புத்திமதி தேவை இல்லை. கோசலை குழந்தை வேண்டினப்போ, தனக்கு பிள்ளை வேணும்னு வேண்டிக்கலை. உலக நன்மைக்காக எல்லாருக்கும் நல்லதையே செய்யப் போற மகா புருஷன்  தனக்கு பிறக்கணும்னு  தான் வேண்டினாள். அவளுக்கு ராமன் பிறந்தான்.  இப்போ கலி யுகத்துல குழந்தை பிறந்த உடனேயே, "நீ நல்லா படிச்சி, நல்லா சம்பாதிக்கணும்"  இப்படித்தான் தாய் சொல்லறா. பின்ன கொழந்தைகளும் எப்படி வளரும் ? "

" ராமு, தெய்வாதீனமா, சீனு காசுக்கு மயங்கற பையன் இல்ல. எங்க பாத்தாலும், பெத்தவாளே குழந்தையை சபிக்கற காலத்தில நமக்கு சொக்கத் தங்கம் கிடைச்சிருக்கு. அதை காசுக்கு மயங்கிச் சிதைச்சிடாதீங்கோ. இனிமே நீங்க தான் அவனுக்கு எல்லாம்." என்று ஒரு பெருமூச்சு விட்டார். "இதோ என் பேங்கு பாஸ் புக். லச்சத்தி சொச்சம் இருக்கு. செலவுக்கு வச்சிக்கோ.  நான நாளைக்குப் புறப்படறேன். நீ நாளைக்கு ரிசல்ட்டு வந்ததும் புறப்படணும் இல்லையா ? அதான் இப்பவே சொல்லிட்டேன்".

ராமு விக்கித்து நின்றான். "என்னப்பா பெரிய வார்த்தை எல்லாம் பேசறேள். உங்களுக்குப் பிடிக்கலேன்னா வேண்டாம்பா . சீனுவை இங்கேயே சேத்திடலாம். " என்று சொல்லிவிட்டு , அவருடைய காலடியில் அமர்ந்து கொண்டான். வேண்டாம்பா உங்களை மீறி எதுவும் நான செய்ய மாட்டேன். நீங்க இல்லேன்னா சீனு சிதறிப் போயிடுவான் அப்பா ! "

ப்போது சீனு , கவுண்டருடனும், வக்கீல் குமாஸ்தாவுடனும் நுழைந்தான். தாத்தாவும் தந்தையும் கலங்கி நின்றதைப் பார்த்ததும், " ஏன் தாத்தா , என்ன ஆச்சு, ஏன் இப்படி இருக்கேள் ? என்று ஓடி வந்தான். தன ஒரு கையால் பேரனை வாரி இழுத்த சிவராமன், இன்னொரு கையால் ராமுவின் தலையை வருடி விட்டார்.

 லல்லி   நெகிழ்ந்து நின்றாள்   , " மாமா என்னை மன்னிசச்சிடுங்க ! என்னோட பேராசை தான்... " என ஆரம்பிக்க, சிவராமனோ " அம்மாடி ! இன்னிக்கு சமூஹம் அப்படி. நாம தான் திடமா இருக்கணும்."

கவுண்டர் நெகிழ்ந்து போனார். " சிவராமா உன் குடும்பமே தெய்வீகம் "

பின்பு லல்லியை நோக்கி . " தோ பார் லல்லிம்மா ! உன் மாமன் தான் என்னை வினோபா கிட்டயும், சிவானந்தர் கிட்டயும் கொண்டு போனவன். காளைக் கண்ணு போட்ட ஒரே மாசத்தில வித்துடுவோம் எங்க ஊர்ல. உங்க மாமன் உபதேசத்தில நான் தான் திடமா வைக்கோல் கன்னுக்குட்டியை காட்டி பால் கறக்குறது மகா பாவம்னு வாதாடி ஜெயிச்சவன். நீங்க இப்படிப் பண்ணலாமா.?"

கவுண்டர் தொடர்ந்தார் " அது என்னமோ வெறும் உருப் போட வைக்குறது தான் நாமக்கல் பாணியாம். கத்திச் சண்டைக் காரனை காய்கறி வெட்டப் போட்ட மாதிரி. ராமுத் தம்பி, இந்த வீண் வேலையை விடு. இனி எனக்கும் இவருக்கும் வேலை இல்லை. நான் வரட்டுமா "  கவுண்டரும் குமாஸ்தாவும் விடை பெற  , சிவராமன் தான் மௌனத்தைக் கலைத்தார். "போம்மா லல்லி. உன் புருஷனைக் கவனி. நான எங்கயும் போகலை, போறுமா ? போயி எல்லாரும் தூங்குங்கோ. வாடா சீனு"  என்று கட்டளையிட்டார்.  ராமுவும் லல்லியும்  மாடியில் அவர் தூங்கி வெகு நேரம் அவர் காலடியிலேயே அமர்ந்திருந்தனர்.

அடுத்த நாள்  தேர்வு முடிவு அறிவிப்பு  !

காலையில், லல்லி பூஜை அறையில் சஹஸ்ர நாமம் சொல்லிக் கொண்டே   கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். ராமு குளித்து விட்டு ஹாலில் அமர்ந்திருந்தான். " சீனு, இப்பவே மணி எட்டு. எட்டே முக்காலுக்கே இன்டர்நெட் சென்டருக்கு போயிடணும்.   தாத்தா எங்கே ?" என்று கேட்க, " பாத் ரூமிலே இருக்கார்.வந்துடுவார் " என்றான் சீனு.

அப்போது வாசலில் சத்தம். சீனு தான் எட்டிப் பார்த்தான். அவன் முகத்தில் பெரும் ஆச்சரியம்! " வணக்கம் சார். வாங்க !" என்று கூறிக் கொண்டே உள்ளே ஓடி வந்தான். "அப்பா, எங்க பிரின்சிபாலும் கரஸ்பாண்டென்டும்    !"  . பிரின்சிபால் நேரடியாக சீனுவைப் பிடித்து அனைத்துக் கொண்டார். " யூ நோ வாட் ? யூ ஆர் இன் டாப் பைவ் மான் !" இடி மாதிரிச் சிரித்தார். கூட இருந்தவரிடம், "சார் நான சொல்லலை, இவன் தான் ஸ்ரீனிவாசன். அவர் ப்ரௌட் ஸ்டுடென்ட்.! "  இதற்குள் லல்லியும் சிவராமனும் ஹாலுக்கு வந்து விட்டனர்.

சீனுவும் ராமுவும் வாய் மூடவில்லை. கரஸ்பாண்டென்ட், ராமுவின் கையைப் பிடித்துக் குலுக்கி, " உங்க பையனால எங்க பள்ளிக்கும், இந்த ஊருக்கும் , இந்த மாவட்டத்துக்கும் பெருமை. நானூத்து தொண்ணூறு மார்க்கு ! " என்று சொன்னார். லல்லி விக்கித்து நின்றாள்.

இவன் மாவட்டத்தில் முதல். மாநிலத்தில் ஐந்தாவது. இப்போதான் டி இ ஒ ஆபீஸ்ல இருந்து நேரா இங்க வர்றோம். கங்ராஜுலேஷன் மிஸ்டர் ராமு . இப்போ நான தயாராக வரவில்லை . இருந்தாலும் , இது என் சின்னப் பரிசு "  என்றபடி, நூறு ரூபாய் கட்டு ஒன்றை சீனுவில் கையில் வைத்து விட்டு, "உங்களை சீக்கிரம் ஸ்கூல் விழாவில் சந்திக்கிறேன்" என்றார்.

செல்லும் போது " வாட் எ பிடி ! எங்க பள்ளியே இப்படிப்பட்ட ரிசல்ட்டு குடுக்குது. இந்த ஜனங்க ஏன்தான் போர்டிங் ஸ்கூல் அது இதுன்னு பறக்கறாங்களோ ? சீனு , ப்ளஸ் டூ இங்கே தானே " என்று   சீனுவின் கன்னத்தில் செல்லமாக தட்டி கேட்க, லல்லி தான் " கண்டிப்பா , இங்க தான் சார் " என்று புன்முறுவலித்த படியே கூறினாள்.

சிவராமன் "பரமேஸ்வரா , காப்பாத்திட்டேடா " என்றபடியே பேரனை உச்சி முகர்ந்தார்.

அன்று பூஜை மிக ரம்மியமாக நடந்தது.

Sunday, June 20, 2010

உயிரில் முளைத்த உணர்வு - சிறு கதை

ன்னிரண்டு  மணியா ? மாலதிக்கு பரபரப்பு அதிகமானது. கீ போர்டை தள்ளி விட்டு , இன்டர் காம் பட்டனை அழுத்தினாள். 'சொல்லுங்க மாலதி' என்றது ஆப்பரேட்டரின் பரிச்சயமான குரல்.

'இன்னிக்கு மொரிஷியசில் இருந்து ரெண்டு கெஸ்ட் வரணும். ரிசப்ஷனை  தான் கூப்பிடச் சொல்லி இருக்கேன். ஏர்போர்ட்டுக்கு வண்டி காலம்பர அஞ்சுக்கே போயாச்சு. பிளைட் லேட்டாம்."

' எனக்கு மொதல்லயே தெரியுமே. டிரைவர் அப்பப்ப  கூப்பிட்டுகிட்டே தான் இருக்கார். வந்தவுடனே உங்களுக்கு சொல்லறேன் "

'அப்பாடா ! இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு' என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மறுபடியும் கம்ப்யுட்டரில் மூழ்கினாள். " ச்சே ! என்னிக்கும் அரை மணியில முடியற ஒர்க் சீட்  ரெண்டு மணியாகியும் முடியலை. நாளே சரியில்லை. குடும்பத்தில பொம்பளை என்ன அவ்வளவு மட்டமா ? எனக்கு சொந்த புத்தி இல்லையா ? கொழந்தை பாவம் சாப்பிடாமல் வேறு ஸ்கூலுக்கு போனான்."

நினைக்க நினைக்க ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது மாலதிக்கு. "எவ்வளவு ப்ளான் போட்டேன் ராஜுவிற்கு ? பெரிய கொள்கை ! நாளைக்கு மார்க்கு வாங்காமல் மகன் தவிக்கட்டும் ! அப்போ எங்க போகும் கொள்கையும் மண்ணாங்கட்டியும் ?"

நேற்று ராஜூ மெல்லத் தான் ஆரம்பிச்சான். எப்பவும் போல், மாலதிக்கும் சங்கருக்கும் நடுவில் படுத்துக் கொண்டு, "ஏம்மா நான் பிரெஞ்சு எடுத்துக்கட்டுமா ?" என்றான். சங்கரோ ஒரு பெரிய புத்தகத்தில் மூழ்கியிருந்தான். மாலதி தான் கவனித்தாள். "ஏண்டா கண்ணா ? தமிழ் பிடிக்கலையா ? நீதான் இலக்கண மேதையாச்சே ? உங்கப்பாவுக்கே சொல்லிக் கொடுப்பியே ?"


"இல்லம்மா . என் பிரெண்டுங்க ரெண்டு பேர் நேத்து தான் மாத்தினாங்க. பிளஸ் டூவில மார்க்கு குறையறதுக்கு தமிழ் தான் காரணமாம். நூத்தி எண்பது போட்டாலே பெரிசாம். பிரெஞ்சுல இருநூறு காரண்டியாம். போர்ஷனும் ரொம்ப கம்மி."

"ஏங்க கேட்டீங்களா ?" சங்கர் நிமிர்ந்தான்." ராஜூ , உனக்கு இந்த குறுக்கு புத்தி யாரு சொல்லிக் கொடுத்தா ? மார்க்கா பிரதானம் ? உனக்குத் தான் புரியலைனா உங்கம்மாவுக்குமா ? முடிஞ்ச மார்க்கு வாங்கு போதும்."

"அப்பா, மெட்ரிக் எக்சாம்ல கூட தமிழ் தான் என்னோட டோட்டலை குறைச்ச்சது. பிரெஞ்சு ஸ்டூடன்ட் தான் ஸ்கூல் பஸ்ட்டு."

"நாளைக்கு உன் வாழ்க்கைக்கு தமிழ் தான் உதவும். பிரெஞ்சா உதவும் ?. நான் உனக்கு வாங்கி வச்ச புத்தகத்தை எல்லாம் நீ எப்படி படிப்ப ? " சங்கர் ராஜூவை உற்று நோக்கினான். "என் உடம்புல ஊறிட்டிருக்கற ஒவ்வொரு சொட்டும் தமிழ் தான். "

சங்கர் மேலே சொல்வதற்குள் மாலதி குறுக்கிட்டாள் " இவரு பாக்கற எஞ்சினியர் வேலைல தமிழ்ல தான் புழங்கராங்களோ ? குழந்தை மார்க்கு வாங்க வழியைச் சொல்லறான் . அவன் அப்பாவுக்கு பெரிய லட்சிய வேகம் ! பிழைப்புக்கு ஆகற வேலையைப் பாருடா கண்ணா ? நாளைக்கு சாயங்காலம் பெர்மிஷன் போட்டுட்டு ஸ்கூலுக்கு வரேன். பிரின்சிபாலைப் பார்ப்போம்."

சங்கர் இப்போது படுக்கையில் நன்றாக உட்கார்ந்தான். 'என்னடா ராஜு ? உங்கம்மா என்ன  அந்த அபியும் நானும்  அப்பன் மாதிரி நினைச்சுட்டாளா ?  உருப்படற வழியை நான் சொல்லறேன். புத்திசாலியா இரு. சந்தேகம் என்னவா இருந்தாலும் என்னைக் கேளு. சரி இப்பப் படுத்துத் தூங்கு." ராஜுவின் ஏமாற்றமான பார்வை மாலதியை உசுப்பி விட்டது

" எப்பப் பாரு என் மகன் மொத மார்க்கு மொத மார்க்குன்னு பீத்தலுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல.அட்வைசாம் அட்வைஸ் ! புதுசா வந்த பசங்க எல்லாம் பிச்சு ஒதறும். உங்க பிள்ளை எட்டாவதோ பத்தாவதோ வாங்குவான். சந்தோசம் தானே ?"

" அம்மா மாலு ! சாப்ட்டுவேர் புரோக்கிராம் பண்ணறதோட உன்னோட குறுக்கு அறிவை நிறுத்திக்க. உங்கப்பாவோட தமிழ் துவேஷம் போகட்டும்." அவளுடைய அப்பா பாம்பேயில்   வளர்ந்தவர். வீட்டில் தமிழ் பேசினாலும், பெரிதாக மதிக்காதவர்.

மாலுவுக்கு கொதித்தது.  "அவரை எதுக்கு இழுக்கறீங்க ? குழந்தை விஷயத்தை மட்டும் பேசுங்க .நான் வரலை.  நீங்களே வேணா போயி மாத்தி விடுங்க. "

" ஆகற விஷயத்தைப் பேசு. இத விட கொழந்தைக்கு விஷம் குடுன்னு சொன்னால் கூட ஒத்துக்குவேன். இனிமே உனக்கு எட்டாத விஷயத்தைப் பத்தி பேசாத ! " சங்கர் படுக்கையில் சரிந்து கொண்டே சொன்னான். எங்கப்பா தமிழ்லையும் சரி , சமஸ்கிருதத்திலையும் சரி, பெரிய வித்வான். 'பண்டிதன்னா ரெண்டு மொழியும் தெரியணும். தெரிஞ்சா மட்டும் போறாது . ஊறி நனையனும்'பார்  . என்னையும் அப்படித்தான் வளர்த்தார்."

"ஆரம்பிச்சுடீங்களா . முதல்ல மார்க்குக்கு வழி சொல்லுங்க. பண்டிதன் ஆகறதை பின்னாடி பார்க்கலாம். இங்க பாருங்க , மத்த பிள்ளைக மாதிரி ராஜூ இல்லை. படிக்க ஆர்வம் உள்ள பையன். அதுல மண்ணைப் போடாதீங்க."

சங்கர் எப்போதும் அலாதியான அமைதியுடன்தான் இருப்பான். கீதையும், வேதப் படிப்பும் , தேவாரமும், திவ்வியம் பிரபந்தமும் அவனை அப்படி மாற்றி இருந்தன. இப்போது சற்றே கோபத்துடன் " இதுல யாரும் பேச முடியாது. இன்னும் யாரும் பேசாதீங்க" என்று கண்டிப்புடன் கூறி விட்டு ராஜுவைப் பார்க்க , அவன் அதற்குள் தூங்கியிருந்தான்.

மாலதியின் எண்ணம் கம்ப்யூட்டரில் பதிய மறுத்தது." பாவம் ராஜூ. காலைல அப்பாவோட  மூஞ்சியைப் பார்த்ததும் , பயந்து சாப்பிடாமல் ரோஷத்தோட போயிட்டான்.இருக்கட்டும் இருக்கட்டும். இன்னைக்கு சாயங்காலம் ரெண்டுல ஒண்ணு கேட்டுடறேன். "

போன் அலறியது. " மாம், கெஸ்ட் வந்துட்டாங்க ". மாலதி பரபரப்போடு "நேரா கெஸ்ட் ரூமுக்கு அனுப்பிடுங்க" நான் அங்க தான் போறேன்"

. அவள் நிமிர்வதற்குள் , "மன்னிக்க வேண்டும். இங்கேயே வந்து விட்டோம்." என்றனர் அந்த இருவரும். பின்னாடியே டிரைவரும். "மேடம், உங்களைப் பார்க்கனும்னாங்க அதான் " என்றார். மாலதி கை குலுக்க நீட்ட முற்படுமுன், அவர்கள் இருவரும், குவித்த கரங்களோடு நின்றனர். அதில் உயரமானவர்  , "வணக்கம், திருமதி மாலதி " என்று சிரித்தார். ' நான் மாயவன். இவர் கண்ணப்பன்.". மாலதி சுதாரித்துக் கொண்டு ' வணக்கம். உட்காருங்க " என்றாள்." ஹவ் வாஸ் யுவர் ஜர்நீ ? வாட் வில் யு ஹவ் ?"

மாயவன் சிரித்தார். "திருமதி  மாலதி, நாங்க மொரிஷியஸ் தமிழர்கள். தமிழிலே பேசலாம். தமிழுக்கு ஏங்கிப் போயிருக்கோம் நாங்க. " மாலதி சிரித்துக் கொண்டு, " உங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு ஆகியிருக்கு . ரெசிடென்சிக்கு போகலாமா அல்லது ரத்னா ரீஜன்சிக்கு போகலாமா? " அவர்கள் குறுக்கிட்டு , "அவசரமில்லை, ஆனா ஒரு விண்ணப்பம் .சின்னதா ஒரு அய்யர் ஓட்டலுக்கு கூட்டிகிட்டு போங்க. ரெண்டு வருஷம் ஆச்சு , தமிழ்ச் சோறு சாப்பிட்டு " மறுபடியும் சிரித்தனர்.

சாப்பிடும் பொது இருவரும் கலக்கி விட்டனர். கடையின் உரிமையாளரிடம் இருவரும் உரிமையோடு வம்பு பேசியதும், அவரோ நேரே டேபிளுக்கே வந்து விட்டார். இவர்கள் ஊறுகாயில் இருந்து வாழை இலை வரை சிலாகித்துப் பேச , சுற்று முற்றும் இருந்தவர்கள்  எல்லோரும்   சுவாரசியமாக ரசிக்க, மாலுவும் டென்ஷன் குறைந்து லேசாகியது போல உணர்ந்தாள். கடைக்கார அய்யர் வெற்றிலை பாக்கு எல்லாம் கொடுத்து அமர்க்களப் படுத்தி விட்டார். காசு வாங்கவும் மறுத்து விட்டார்.

'உங்களை எல்லாம் பார்த்தா என் ஆம்படையாளும், அம்மாவும் , அக்காவும் சந்தோஷப் படுவா . வீட்டுக்கு சாயங்காலம் வாங்க " என்று அழைப்பு வேறு வைத்தார். கண்ணப்பன் நெகிழ்ந்து போய், "தமிழ் மண்ணே, எங்களை மட்டும் ஏன் அந்நிய தேசத்தில் விட்டாய் ? " என்று கலங்கி நின்றார். தன கைப்பையைத் திறந்து , அதில் தான் கொண்டு வந்த ஒரு விலை உயர்ந்த பேனாவை அய்யரிடம் கொடுத்து , 'பரிசா நினைக்காதீங்க. என் மக்களுக்கு நான் தரும் நினைவுப் பொருள். தயங்காம வாங்கிக்கணும் " அனைவருமே நெகிழ்ந்து நிற்க, பிரியா விடை பெற்றனர் இருவரும்.

திரும்பி வரும் போது, மாலு " ஏன் கண்ணப்பன், நாலு தமிழ் வார்த்தையும் உபசரிப்பும் உங்களை அவ்வளவு கலங்க வைச்சது ?"

"மாலு ! உங்களை உங்க அம்மா மடியில படுக்க வைத்து தடவினா , உங்களுக்கு எப்படி இருக்கும் ?  அதப் போல பத்து மடங்கு உயர்ந்த நிலையில நாங்க இங்க இருக்கோம். தமிழின் ஒவ்வொரு வார்த்தையும் , தமிழ் மக்களின் ஒவ்வொரு உபசரிப்பும், எங்களை வினாடிக்கு வினாடி சுவர்க்கத்துல ஏற்றுது." அவர் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள , மாலதி பதறி விட, அவர்  புன்னகையுடன் ' என்னை, இந்தக் கண்ணீரை அனுபவிக்க விடுங்கள் "  என்றார்

இடது பக்கமிருந்து மாயவன், ' அவனுக்கு மட்டும் கொஞ்சம் அவகாசம் கூட இருந்தால், நேரா   இங்கே பேரூரில நூறு வருஷத்துக்கு முன்னால இருந்த  சாம்பசிவ முதலியார் பத்தி விசாரிக்க போயிடுவான். அவர் இவனோட கொள்ளுத் தாத்தா !"

'நான் வேணுமின்னா விசாரிக்கவா ? என் பெரியப்பா பேரூரில் பெரிய வேத பாடசாலை வச்சிருக்கார். என் வீட்டுக்காரருடைய குரு . அவருக்கு தெரியாதவர் அங்கே யாருமில்லை "  என மாலு வினவ, கண்ணப்பன் துள்ளித் திரும்பி, "நிஜமாவா ? இன்னைக்கே முடியுமா? " எனக் கேட்டு முடிப்பதற்குள் ,  மாலுவின் செல் போனில் பெரியப்பாவின் குரல் கேட்டது. பெரியப்பா , நான் மாலு ! என்றதும், " சொல்லுடீம்மா கொழந்தை. வீட்டுக்காரன் எப்படி இருக்கான் , குழந்தை எப்படி இருக்கான் ?"


 எல்லாம் நல்லா இருக்கா பெரியப்பா , நான் இப்ப ஸ்பீக்கர் ஆன் பண்ணியிருக்கேன்.  எனக்கு ஒரு ஒத்தாசை வேணும், என் கம்பனிக்கு   விருந்தாளியா வந்த ஒருத்தர் தன கொள்ளுத் தாத்தா பேரூரில நூறு வருஷம் மிந்தி இருந்தார்ன்னும், அவர் பேர் சாம்பசிவ முதலியார்ன்னும் சொல்றார். உங்களுக்கு யாராவது தெரியுமா ?"

போனில் மௌனம். குரல் தொடர்ந்தது " பேரூரில , நூத்துக்கு மேல முதலியார் இருக்கா. ஒரு வேளை !" , என்று நிறுத்தி, " வெள்ளைக்காரா தன குடும்பத்தை கப்பல்ல கூட்டிண்டு போனதா இங்கே வாழை இலைக் கடை முதலியார் சொல்லுவார். அவாளோ இருக்குமோ ? . நீ எதுக்கும், ஏழு மணிக்கு இங்கே வா. போயே பாத்திடலாம்." என சொல்ல, மாலு , கண்ணப்பனை நோக்கி, பெரியப்பா வரச் சொல்லறார்.சாயங்காலம் கம்பனியில் மீட்டிங் ... " என்று இழுக்க,   கண்ணப்பன் ,  நாளைக்கு  இரவு விழித்தாவது என் வேலையை முடித்து விடுகிறேன். இப்பவே போகலாம் என்று பரபரத்தார்.

ந்து மணி. செல் போன் அடித்தது. சங்கர் ! " ஏய் ! என்னடி கண்ணா பண்ணரே ?" மாலுவுக்கு முகம் சிவந்தது . செல்லமாக , " சாயங்காலம் நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினாத்தான் மனசு ஆறும் " என சிரித்து கொண்டே சொல்ல அவனும் " நானும் சாயங்காலம் உனக்கு ஒரு பரிசு தரப் போறேன் " என்றான்.

மாலதி எதையோ நினைத்தவள் போல , "கண்ணா , கண்ணா கோவிச்சுக்காதே  கண்ணா , இன்னிக்கு நான் பெரியப்பாவைப் பாக்க பேரூர் போயிண்டிருக்கேன்." என்று தொடங்கி கண்ணப்பன் விபரம் கூறி , " ஏய் ஏய் ! ப்ளீஸ் பா ! இன்னிக்கு சனிக்கிழமை தானே ? நீங்களும் காரில் பேரூர் வந்துடுங்கோ . ராஜுவையும் அழைச்சுட்டு வாங்கோப்பா ,ப்ளீஸ் ! அப்படியே கோவிலுக்கும் போயிட்டு வரலாம் "

"மனைவி சொல்லி மறுப்பானா இந்த இலங்கை வேந்தன் ? தயாராய் இரு . உன் பெரியம்மா கிட்டே  அந்த பழைய சாதப் புளியோதரையை மட்டும் போட வேண்டாம்னு சொல்லி வை  " என்று சீண்டிய பின்னரே போனை  வைத்தான்.

வர்கள் போவதற்குள் பேரூரில் ராமகிருஷ்ண கனபாடிகள் வீட்டில் பெரும் கூட்டமே சேர்ந்து விட்டிருந்தது.  இலைக்கடை முதலியார் தான் ஓடி வந்து கார் கதவைத் திறந்தார். இவர்கள் வாயைத் திறப்பதற்குள் அங்கே முழு விஷயமும் ஒலிபரப்பப் பட்டுவிட்டிருந்தது. கண்ணப்பன் யார் என்று மாலு சொல்லியதுதான் பாக்கி. அங்கே ஆண்களின் அணைப்புக்களும், பெண்களின் கண்ணீரும் அந்த முதலியார் சபையை உணர்ச்சி வெள்ளமாக்கி இருந்தது. இதற்குள் சங்கரும் ராஜுவும் காரில் வந்து இறங்கினர்.

கண்ணப்பனுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினாள் மாலதி. " திரு சங்கர், இன்னிக்கு உங்க மனைவி என்னை  பல முறை அழ வைச்சிட்டாங்க. என் தாய் நாடு எனக்கு இவ்வளவு தந்து விட்டது" என்று இலைக்கடை  நாகராஜ முதலியாரைக்  காட்டினார். சங்கரும், சிரித்துக் கொண்டே " நான் அவளை இன்னிக்கு காலையில அழ வச்சேன். அவ உங்க மேல சாத்திட்டாள்  போல !'  கண்ணப்பன் கேள்விக்குறியுடன் சங்கரைப் பார்க்கவும், சங்கர் பிரெஞ்சு பாட விவகாரத்தை அவருக்கு  விவரித்தான்.

ல்லாரும் கோயிலுக்குள் சென்ற பொது, கண்ணப்பன், "மாலு, நீங்க ராஜுவிற்கு பிரெஞ்சு பாடத்தை எடுக்க சொன்னீங்களாமே ? " என்று ஆதங்கத்துடன் கேட்டார். "நாங்கல்லாம் தமிழ் தமிழ்னு உயிரை விடறோம். நீங்க இப்படிப் பண்ணலாமா ? " அங்க பாருங்க , எங்க சனங்களை . எங்க எல்லாரின் பிணைப்பு தமிழ் மட்டும் தாங்க. தயவு செஞ்சு ராஜுவைத் தமிழ் படிக்க வைங்க"

மாலதிக்கு எப்படியோ ஆகி விட்டது. இதற்குள் அர்த்த மண்டபத்தில் நுழைந்து விட்டிருந்தனர். சங்கர் சிரித்துக் கொண்டே வந்தான். "என்ன கண்ணப்பன், இந்தாங்க மாலை, அர்ச்சகர்  கிட்டே கொடுத்து வேண்டிக்குங்க"

"சங்கர், உங்களுக்கு தேவாரம் தெரியுமா ?"

"தெரியுமாவது ? இவளோட பெரியப்பா தான் என் மாமா . அவர்கிட்ட   இதே ஊரில்    தான் வேதமும், தேவாரமும் , திருவாசகமும், பிரபந்தமும் கத்துகிட்டேன்." என்று கனபாடிகளை பார்த்து சிரிக்க,அவரும்  "டேய் ,  சங்கரா சம்பந்தரோட பதிகம் ஒண்ணு பாடேன்" என்று கட்டளையிட்டார். சங்கரும் மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு , ஈசனைப் பார்த்து " தோடுடைய செவியன் ... " என்று ஆரம்பித்தான். ராஜுவும் சேர்ந்து கொள்ள , கண்ணப்பனும், கூட்டமும் மெய்மறந்து நின்றது.

சங்கர் முடித்ததும், கண்ணப்பன் திடீரென்று " மந்திரமாவது  நீறு ... " என்று திருநீற்றுப் பதிகம் பாடினார். மாலதி ஏதோ புது உலகத்தில் இருப்பவளைப் போல் உணர்ந்தாள்.

ரவு பத்து மணி ஆகி விட்டது இவர்கள் விடை பெற. கனபாடிகள் வீட்டிலேயே அன்று சாப்பாடு. கண்ணப்பனை இலைக்கடை முதலியாரிடம் ஒப்படைத்து விட்டு, இவர்கள்  மட்டும் திரும்பினர்.

"ஆ ! சங்கர் கத்தினான். "சொன்னபடி கிளளிட்டேன்". என்றாள் மாலதி. "சரி இப்ப சொல்லுப்பா , என்ன பரிசு ?"

" டேய் குட்டி, இங்க வாடா   " என  ராஜுவைப் பார்த்து " உன் இஷ்டப்படியே பிரெஞ்சு படிச்சுக்கோடா. அப்பப்போ என் தமிழையும் நினைச்சுக்கோ. நான் உன் பிரின்சிபாலைப் பார்த்து பேசிட்டேன்   "

"வேண்டாங்க, ராஜூ தமிழே படிக்கட்டும். " இது மாலதி
.
சங்கர் வியப்புடன் மாலதியைப் பார்த்து " அம்மையார் மனமாற்றத்துக்கு காரணம் யாதோ ? பேரூர் பட்டீஸ்வரன்   திருவுள்ளமோ  ? கண்ணப்பன் கைங்கர்யமோ? பெரியம்மா கை உப்புமாவோ ?" என்று  சீண்ட  ,

" அப்பா , நான் தமிழே படிக்கறேன் பா    . இன்னிக்கு நீங்க ஸ்கூலுக்கு வந்து போன பின் எங்க தமிழாசிரியர் என்னைக் கூப்பிட்டு பேசினார் . இந்த வருஷம் தமிழ் படிக்கற சில மாணவர்களில் நான் மட்டும் தான் நன்னா    படிக்கிறேன்னும் , நான் போயிட்டா  தானும்  பள்ளியை   விட்டுப்   போவதாகவும்  சொன்னார்பா . அப்புறம் , கண்ணப்பன் அங்கிளைப்  பார்த்ததும் தான் தமிழோட  அருமை   எனக்கு புரிஞ்சுது .  "

கார் நொய்யல் ஆற்றங்கரையில் இதமாக  ஊர்ந்தது .

Wednesday, May 5, 2010

துக்க தோஷம் (ஒரு சிறு கதை)

" னுங்க இங்க ஒரு ஆம்புலன்ஸ் வந்துதா ? "

அந்த பெரியவர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார். "இங்கே எல்லாமே ஆம்புலன்ஸ் ல தான் வரும். எது அந்த லாட்ஜ் கேசா ?"

"ஆமாம், டாடாபாத் லாட்ஜ் தானே சொல்றீங்க ? ". என் பதில் அவர்களைக் குழப்பி விட்டது போலும். அவர் தன் பக்கம் இருந்தவரைப் பார்த்து, 'பாய், அது ரயில்வே ஸ்டேஷன் லாட்ஜ் பாடி தானே நம்ம வண்டியில வந்துது ? '

அந்த லுங்கி கட்டின பாய் " சார், இன்னி மேல வந்தாலும் வரும், மார்ச்சுவரி அதோ மூலையிலே இருக்கு. போயி பாருங்க. சரி ... பேரு என்ன சொன்னீங்க ? "

"பூமிநாதன்" என்றுவிட்டு நகர்ந்தேன் .

பூமிநாதன் !. இனி அப்படி ஒரு மனிதரைப் பார்க்க முடியுமா ?

நேற்று நடந்தது போல் இருக்கிறது அவர் வந்த நாள். இருபத்தைந்து வருடம் இருக்கும். நான் அப்போதுதான் காலேஜ் முடித்த நேரம். பக்கத்து வீட்டில் ஏகப்பட்ட களேபரம். கிருஷ்ணராஜ் சாருடைய நண்பர் வருகின்றார் என்று என் தங்கை கூறினாள். அமேரிக்காவில் இருந்தாம் !

ஆள் குட்டையாக வெளுப்பாக இருந்தார். இரண்டொரு நாளிலேயே தெரிந்து வில்லது அவர் ஒரு அறிவு ஜீவி என்று. பெரிய அமெரிக்கக் கம்பனியில் இன்ஜினியராக இருந்தாராம். திரும்பிப் போவார் என்றார்கள். அவர் போகவில்லை. அமேரிக்கா அவருக்குப் பிடிக்கவில்லையாம். என்னை விடப் பத்து வருடம் பெரியவர்.

அவருடைய பரிமாணங்கள் எனக்குப் புரிய சில வாரங்கள் ஆனது. கிருஷ்ணராஜ் சார் வீட்டில் தான் தங்கி வந்தார். அதுவே எங்கள் வீடு மாதிரி ஒரு ரயில்வே கம்பார்ட் மென்ட் வீடு. நேராக மூணு ரூம் அவ்வளவு தான். கிருஷ்ணராஜ் சார் மனைவி வெளிய போக வரணும்னா இவரைத் தாண்டித் தான் போகணும். ஓரிரு வாரங்களிலேயே முகச்சுளிப்பு ஆரம்பமாய் விட்டது.

இவரோ வெள்ளைச் சோளம். பற்பல நேரடி மற்றும் மறைமுக உணர்த்தலுக்குப் பிறகே 'புரிந்து' கொண்டு ஜாகையை மாற்றினார். ஒரு மாதாந்திர வாடகை 'லாட்ஜு' க்கு . இருபத்தைந்து வருடம் அங்கேயே தான். நேற்று வரை.

இதற்குள் அவர் என்னைத் தன் இன்ஜினீரிங் விஷயங்களுக்காக ஒரு உதவியாளனாகவே ஆக்கிக் கொண்டார். தன் புதிய சிறு தொழில் நிறுவனத்துக்கு பாகங்களை டிசைன் செய்து வந்தார். இளம் பொறியாளனான என்னை துணைக்கு வைத்துக் கொண்டார். சமயத்தில் தன் பழைய நண்பர்களின் நிறுவனங்களில் எனக்கு வேலை தேடவும் அனுப்புவார்.

என்னுடைய பொறியியல் அறிவைச் சோதிப்பார். திடீரென்று , " ஒரு குண்டு தர்றேன் . போயி உன் காலேஜில வச்சிட்டு வா" என்பார். நான் படித்த கல்லூரி மேலும், நம் பாடத் திட்டத்தின் மீதும் அவ்வளவு வெறுப்பு ! அவரது அணுக்கத்தில் சில மாதங்களிலேயே நான் அடிப்படை விஷயங்களில் தேர்ந்து விட்டேன். எனக்கும் வேலை கிடைத்து நான் என் வழியைப் பார்க்க போய் விட்டேன். என்றாவது தான் சந்திப்பு.

பாக்கேட்டில் மணி அடித்தது. என் மனைவிதான். ' என்னங்க எங்க இருக்கீங்க ? பாத்துட்டீங்களா ? கூட்டமா இருக்கா ? எல்லாரும் வந்தாச்சா ?'

'இன்னும் பாடி வரலை. வந்ததும் சொல்றேன்.நீ சாப்பிட்டாச்சா ?'

'ஆச்சுங்க . வெய்யில்ல நிக்காதீங்க. அஞ்சு மணிக்குள்ள வந்துடுங்க. தண்ணி காச்சி வக்கறேன்.' போனை வைத்து விட்டு அந்த வளாகத்தை பார்த்தேன். போலீஸகாரர் மோட்டர்சைக்கிளில் வேகமாகச் சென்றார்.

பூமிநாதன் சாரிடம் எனக்கு மிகவும் பிடித்ததும் , பிடிக்காததும் அவரது பட்டும் படாததுமான போக்கு. அவரது வாழ்க்கையில் அது ஒரு பெரிய தீம் ஆகவே இருந்தது. ஏதோ ஒரு ஆயத்தத்தில் இருக்கும் போது , அது பற்றி மேலோட்டமாகக் கேட்டாலும், 'எதுக்காகக் கேட்கிறீங்க ?' என்பார். நான் பல வருடங்கள் பழகிய பின் அவரை இது மாதிரிக் குடைந்த போதும் இதே மாதிரி மழுப்புவார்.

என் தகப்பனார் அவருக்கு ஓயாமல் பெண் பார்ப்பார். 'உங்க ஜாதியில பொண்ணா கிடைக்காது ? என்று அவருக்கு பெண் மேல பெண்ணாக சொல்லுவார். பூமிநாதனோ , ஒவ்வொன்றிலும் ஏதோ சொல்லி நிராகரிப்பார். என் அப்பா சடைந்து போயஅவரிடமே , ' என்ன சார், இதுல என்ன குறை கண்டீங்க , நல்ல குடும்பம்,.. என்று விளக்கப் போவார். அப்போதும் அதே ஒட்டாத பதில். அவருடைய நண்பர்களும் இதே புலம்பலைத்தான் என்னிடம் வைப்பார்கள். 'உன்னோட இன்ஜினியர் உருப்பட மாட்டான் ' என்று வைவார்கள்.

அவருடைய திரையை யாராலுமே விலக்க முடியவில்லை. வரிசையாக என்னுடைய தமக்கைகளுக்கும், எனக்கும் , அவரது பெரும்பாலான நண்பர்களுக்கும், பணியாளர்களுக்கும் திருமணம் முடிந்த காலத்திலும், அவரது நிராகரிப்பு படலம் தொடர்ந்தது. அவருடைய அறைக்கு எப்பொழுதேனும் சென்றால் அங்கே ஒரு புரோக்கர் ஜாதகக் கட்டை வைத்துக் கொண்டு நிற்பார். நான் அவரிடம், 'இது போல ஆளுகளை நம்பாதீங்க சார். உங்க கிட்ட நூத்துக்கும் அம்பதுக்கும் தான் வர்றாங்க. பேசாம ஒரு நல்ல பேமிலி பெண்ணா பாத்து முடிங்க ' என்று கண்டித்த போதும் அதே புன்னகை. ஒட்டாத புன்னகை.

அவருடைய பாகஸ்தர்களுக்கும் அவருக்கும் இடையே வந்த சிறு மனத் தாபத்தினால் அவர் தன் கம்பனியில் இருந்து விலகியது எனக்கு பின்பே தெரியும். விவரம் அறிய நான் கேட்ட போதும் இதே பாணி புன்னகை. 'உடுங்க. ஒத்து வரலை' அவ்வளவுதான் பதில். பிறகு அவர் ஒரு பிசினஸ் ஆரம்பித்து அது பறக்க ஆரம்பிக்கும் முன்னேயே நொடிந்து விட்டார். பழைய பார்ட்னர்கள் உலகம் அறிந்தவர்கள். நெளிந்து கொடுத்து சென்றனர். இவரோ மண்பானை ராகம். ஒடுக்கு எல்லாம் எடுக்க முடியாது. உடைத்தே விட்டார். உடைந்தும் போனார்.

என்னிடமும் அவர் சில காலம் ஒரு பாகஸ்தர் ஆனார். அப்போது என் வாழ்க்கையில் பொருளாதாரப் புயல் அடித்து வீசிக் கொண்டிருந்தது. என்னுடைய இன்னொரு தொழிலையும் இந்தப் புதுத் தொழிலையும் பார்க்க முடியாமல் அவரிடம் பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டேன். மேலும் அப்போது அவரை சில நண்பர்கள் வேறொரு படுகுழியில் தள்ளி விட்டுக் கொண்டிருந்தனர். ஒரு நாள் நான் சீட்டு கம்பனியில பார்ட்னர் ஆயிட்டேன் என்றார்.

சில காலம் கழித்து அவர் கைப்பொருள் கரைந்து விட்ட செய்தியும் அவருக்கு சர்க்கரை வியாதி வந்ததும் தெரிந்தது. புன்னகை மன்னர் தன் எந்த துக்கத்தையும் வெளிக்காட்டவில்லை.

ப்படிப்பட்ட அமுக்கி வைக்கப்பட்ட துக்கங்களின் முடிவே அவரது தற்கொலை போலும். இன்று மதியம் அவரது லாட்ஜுக்கு பக்கத்தில் வசிக்கும் என் நண்பர் எனக்குப் போன் செய்து கூறியதும் புறப்பட்டு, லாட்ஜுக்குப் போனேன். ' யாருங்க, தூக்குப் போட்டுக்கிட்டாரே அவரா ? இப்பதான் ஆசுபத்திரிக்கு போனாங்க . போஸ்ட் மார்ட்டம் பண்ணனுமாம் . " என்றார் லாட்ஜ் சிப்பந்தி.

ந்த வேன் பெரிய அரை வட்டம் அடித்து மார்ச்சுவரி முன் நின்றது. வேனிற்கு பக்கத்தில் சில பார்த்த முகங்கள். அவருடைய கல்லூரி சகோதரர்கள். எல்லோரும் களைப்படைந்திருந்தனர். ஒருவர் போலீசிடமும், ஒருவர் மார்ச்சுவரிக்குள்ளும் சென்றனர்.

சற்று நேரத்தில் இருபது முப்பது பேர் கூடி விட்டோம். ஒரு நண்பரிடம், "சார் பாடியைப் பார்க்கலாமா" என்றேன் ?

அவர் சட்டென்று ஏதோ திகைத்தவர் போல நின்று, 'ஏம்ப்பா , கதவைத் திறந்து விடு பார்க்கட்டும்' என்றார். கதவு திறந்ததும் லுங்கி அணிந்த கால்கள் தெரிந்தன . வேனிற்குள்ளேயே ஏறிப் பார்த்தேன். பெரிதும் வலியை அனுபவிக்காத சாவு போலும். முகம் சாந்தமாகவே இருந்தது- பிதுங்கிய நாக்கு மட்டும் அகால மரணத்தை நினைவூட்டியது.

எல்லாரும் வந்து விட்டார்களா என்று நோட்டமிட்டேன். பெரும்பாலும் இருந்தனர். 'ஏதோ குறை இருப்பதாக என் மனத்திற்குப் பட்டது. ஒவ்வொருவராக 'பாடியை' பார்த்தனர்.

இரண்டு மணி நேரமாயிற்று , பாடி திரும்பக் கிடைக்க. மீண்டும் வேன் தரிசனம். வெள்ளைத் துணியில் மூட்டையாக வந்து சேர்ந்தார் பூமிநாதன். நாக்கை மீண்டும் சரி செய்து கொடுத்து விட்டிருந்தனர். மாலையும் பன்னீரும் வந்தது. 'பரவாயில்லை' என அருகில் இருந்த ஒரு நண்பரிடம் சொன்னேன் "நம்ம மக்கள் ஒரு குறையும் வைக்கவில்லை "

ஆனாலும், எங்கேயோ குத்திற்று. ஏதோ குறை. ஆனால் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. நண்பர் கூட்டம் ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து    செய்தது. பெரிய இடத்தில் சொல்லி சீக்கிரத்தில் போஸ்ட் மார்ட்டம் முடித்தது, போலீஸ விசாரணை முடித்தது, ஊரில் இருந்து அவரது தமையனை வரவழைத்தது, என்று எல்லா விதத்திலும் காரியம் கச்சிதமாக நடந்து வந்தது.

கடைசியாக, ஒரு டாக்சி வந்தது. ஒரு சிறு கூட்டம். 'ஆசிரமத்துக்காரங்க' என்றார் என் நண்பர். கடைசியாக அவர் ஒரு ஆன்மீகக் குழுவிடம் தொடர்பு வைத்திருந்தார்.

அந்த ஆசிரம நிர்வாகிகள் ஒவ்வொருவராக , தரிசனம் செய்தனர். கடைசியில், எல்லாரையும் அதிர வைக்கும் ஒரு வெடிக்குமுறல் கேட்டது. தலை குனிந்தும, தூணில் சாய்ந்தும் நின்ற அனைவருமே , துணுக்குற்று நிமிர்ந்தோம். வேனுக்குள்ளிருந்து தான் அந்த சப்தம். அங்கே ஒரு வயதான அம்மா கதறிக்கொண்டிருந்தார். ""அய்யா, சின்ன அய்யா, இப்படிப் பண்ணீட்டீங்களே அய்யா , ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லியிருக்கலாமே, உங்களை இந்த நிலைமைக்கு விட்டிருப்பேனா ? அய்யா, உங்களை மாதிரி ஒரு நல்லவரை இனி எப்போ பார்ப்பேன் ? அய்யா , என் வயிறு எரியுதே அய்யா ?""

அந்தக் கதறல் அனைவரையும் நிலைகுலைய வைத்தது என்னையும தான். விசாரித்த போது, அந்த ஆசிரமத்தில் எடுபிடி வேளை செய்யும் ஆயா என்றனர்.மனம் ஏதோ லேசானது மாதிரி இருந்தது.

வீட்டிற்கு வந்து , குளியல் முடிந்து வரும் போது, என்னை சுற்றி திரண்டிருந்த வீட்டாருக்கு , நடந்ததை சொல்ல ஆரம்பித்தேன். முடித்த பிறகு, நான் அனுபவித்த அந்த வினோத குத்தல் நினைவுக்கு வந்தது. அதைச் சொன்ன போது, "அங்க பொம்பளை யாராவது இருந்தாளா? என்றாள் என் சகோதரி.

இல்லை . "அவருடைய மைத்துனி கூட சும்மா நார்மலா தான் இருந்தாங்க. இந்த பாட்டி அம்மா தான் கதறினாங்க."

என் தங்கை இந்த பதிலைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள்.

இது கூட புரியலையா ? சாவு நடந்த இடத்தில துக்கம் யாருக்கு வரும் ? பொம்பளைக்குத்தான். ஒண்ணு, அம்மாவா இருக்கணும், இல்ல பொண்டாட்டியாவோ, மகளாவோ இருக்கணும். துக்கம் இல்லாத சாவு வீட்டுலதான் நீங்க அவ்வளவு பேரும் அத்தனை நேரமும் இருந்தீங்க. எல்லா வரிசையும் செஞ்சும், அங்க பிரிவுத் துயர் இல்ல. அதான் , அந்த கிழவி எல்லாரையும் முந்திட்டா. உன் குத்தல் எதனாலையும் இல்ல. துக்கம் அனுசரிக்காத குற்ற உணர்ச்சி தான் உன் குத்தல்"

"அந்தப் பாட்டிதான் இன்னிக்கு அந்த ஆத்மாவுக்கு ஆறுதல். நீங்க யாருமே இல்லை. பிரேதத்துக்கு காசும் , பணமுமா முக்கியம் ?" என்றாள்.