Thursday, June 24, 2010

நாமக்கல் !! - ஒரு சிறு கதை


"ன்ன லலிதா , ஏற்பாடு பண்ணியாச்சா ?" ஆபீசுக்குள் நுழையும் போதே கோமதி கேட்டாள்.

"வா சொல்றேன். அது ஒரு  பெரிய கதை"  லலிதா  தோள் பையை இறக்கி வைத்து ஆசுவாசப்பட்டாள். கோமதிக்கு பரபரப்பு அதிகமாகியது. "உங்க வீட்டுக்காரர் ஒத்துகிட்டாரா ? பையன் என்னங்கிறான் ? அப்புறம் மாமனார் ?"

" உன் வீட்டுல மாதிரியெல்லாம் என் வீட்டுல நடக்காது கோமு. மூணும் மூணு திக்கு. நான் ஒருத்தி என்ன பண்ண ? என்னமோ எனக்காக பண்ணிக்கிறாப்பல ஆயிடுத்து கடைசில !" லலிதா சடைந்தாள்.

"பழமா காயா அதைச் சொல்லு முதல்ல." கோமு விடாமல் குடைந்தாள்.

"பழம் மாதிரிதான் . இன்னும் தீர்மானமாகலை"  லலிதா  பாட்டிலைத் திறந்து இரண்டு முடக்கு தண்ணீர் குடித்து விட்டு கோமதியைப் பார்த்து புன்னகைத்தாள். "அவரு என் பக்கமாத்தான்  பேசினாரு. பையன் தான் எதுவுமே பேச மாட்டேங்கிறான். மாமனார் என் கண்ணுக்கே சிக்காம இருக்கார்.  இன்னைக்கு ராத்திரி மறுபடியும் ஆரம்பிக்கணும்"

"நாளை காலை ரிசல்ட்டு  . குழப்பிடாதே !" கோமதி எச்சரித்து விட்டுச் சென்றாள்.

" மேடம்  டீ  இந்தாங்க!."  நாயர் கடை வாசு !. "என்னடா ! இன்னிக்கு சந்தனம் குறைவா வச்சிருக்கே. அதுக்கும் பட்ஜெட்டா ?" லலிதா கிண்டலடிக்க, " போங்க மேடம், அளவாத்தான் உரைச்சேன் . அதான் சிரிசாயிடுச்சு " என்று கோணிய படியே அடுத்த டேபிளுக்குப் போய் விட்டான். லல்லி மணி பார்த்தாள். பதினொண்ணே முக்கால் !  ஸ்டேட்மன்ட் பெரும்பாலும் ரெடி. டீயை உறிஞ்சியபடியே , செல் போனில் ராமுவை அழைத்தாள்.

" சொல்லு, லல்லி, என்ன முக்கியமா ?" என்றான் ராமு. "இல்லல்ல. சீனு விஷயம் தான்.." அவள் ஆரம்பிக்கும் முன்னரே, ' சரி சரி, எல்லாம் சாயங்காலம் பேசிக்கலாம் கண்ணா. நேத்து தான் லெக்சர் பெரிசா அடிச்சாச்சே ! ஆபீஸ்ல ஏதாவது விட்டுப் போன பகுதி ஞாபகம் வந்துருச்சோ ? எதுவானாலும் தாத்தாவும் பேரனும் பேசி முடிக்கட்டும். நான் கொஞ்சம் லேட் ஆகும் இன்னிக்கு.எனக்கு ராத்திரிக்கு சிம்பிளா உப்புமாவோ அல்லது ரசம் சாதம் ஆனாலும் போதும். " வைத்துவிட்டான் ராமு.  லல்லிக்கு கோபம் வந்தது " என்ன புருஷன் ? பொறுப்பே இல்லாம !"

லஞசு  நேரத்திலும் லல்லிக்கு நிலை கொள்ளவில்லை. ஏன்தான் ஆளாளுக்கு இப்படிப் புரியாமல் நடந்து கொள்கிறார்களோ ? வீட்டிற்கு போன் போட்டாள். சீனு தான் எடுத்தான். " சாப்பிட்டியாடா செல்லம் ?" லல்லியின் கேள்விக்கு , " ம்ம், ஆச்சும்மா " என்றான். சுரத்தே இல்லை. "பொரியல் போட்டுண்டியா ? சுண்டக்காய் வறுத்து வச்சேனே சாப்பிட்டியா ? " அவளுடைய தொடர்ந்த கேள்விகளுக்கும் " ம்ம் " போட்டுக்கொண்டே தான் இருந்தான். "தாத்தா எங்க ? "

நான்கைந்து வினாடிகள் மௌனம் . பின்னர் "மாடியில இருக்கார்மா " என்றான். அவளுக்கு நன்றாகத் தெரியும், மாமனார் அவளைத் தவிர்த்து வருகிறார். பக்கத்திலே தான் இருக்கிறார் ! தாத்தாவைப் போலவே பேரன் !   "நான்தான் வில்லி ஆயிட்டேன்!" லல்லி அலுத்துக் கொண்டாள்.

"கு , பிசியா ? " ராமுவின் குரல் கேட்டதும் போனின் மறுபக்கத்தில் இருந்து உற்சாகமாக பதில் வந்தது. ஏண்டா , என்கிட்டே எதுக்கு இந்த பார்மாலிட்டி ? சொல்லு, இத்தனை நாளா ஒரு தகவல் இல்லை . லல்லி , குழந்தை, மாமா எல்லாம் எப்படி இருக்கா ?

விசாரிப்புகளுக்குப் பின் ராமு விஷயத்திற்கு வந்தான். ரகு, உன் பையன் சேஷுவை ரெண்டு வருஷம் மின்ன ஒரு போர்டிங் ஸ்கூல்ல விட்டு ப்ளஸ்  டூ  படிக்க வச்சியே, எப்படிடா மார்க்கு வாங்கினான் ? ஸ்கூல் எல்லாம்  எப்படி ?

" எது அந்த நாமக்கல் ஸ்கூல் தானே ? சேஷு சுமாரா படிக்கற பையன். உள்ளூர்ல எண்பது வாங்கினான். நாமக்கல் ல  போயி தொண்ணூறு வாங்கினான். சீனுவுக்கு எதுக்குடா அதெல்லாம் ? அவன்தான் ஸ்கூல் பர்ஸ்டாச்சே ?"

ராமு சற்று திணறினான். " அது ஒண்ணும் இல்லடா . இங்க என்னமோ தொண்ணூத்தி அஞ்சு பர்சன்ட் வாங்கறான். அங்க நாமக்கல் போனா, ஸ்டேட்  ரேங்கு வாங்க வச்சுடுவாங்களாம். உண்மையா ?"

ரகு இப்போது அமைதியாகி விட்டான். " அதெல்லாம் ஆளைப் பொறுத்து தான் எல்லாம். நீ சிங்கத்த வீட்டுல வச்சுட்டு வேட்டையாட சொல்லித் தரணும்னு பேசிட்டு இருக்கே . ஆமா இது யார் ஐடியா ? லல்லியோடதா ? "

ராமுவுக்கு இனிமேல் எதையும் மூடி மறைப்பதில் இஷ்டம் இல்லை. " ஆமாண்டா. அவ ஆபீஸ்ல ப்ரெண்டு  ஒருத்தி தன பையனை அனுப்பி அவன் ஏகப்பட்ட மார்க்கு வாங்கி உள்ளூர்லயே பெரிய காலேஜுல சொல்ப பீஸ் கட்டி சேந்துட்டானாம். ஏதோ ரொம்ப நல்ல ஸ்கூலாம். நல்லா பாத்துக்குறாங்களாம் . இந்த ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டா போதுமாம். அப்புறம், காலேஜு, கேம்பஸ் இன்டர்வ்யூ எல்லாம் நம்மைத் தேடி வருமாம் . நாளைக்கு  மெட்ரிக்கு ரிசல்ட்டு. முடிவு உடனே எடுக்கணுமாம். "

ரகு சிரித்தான் " சரி சரி ! இந்நேரம் லல்லி பையனோட அமேரிக்கா வேலை, கல்யாணம், அப்புறம் இவ அங்க போயி டெலிவரி பாக்கற வரைக்கும் மனசுக்குள்ள பிலிம் ஓட்டியிருப்பா !  நேத்து தூங்கவாவது விட்டாளா ? வண்டு மாதிரி ரீங்காரம் பாடியிருபபாளே !" லல்லி இவர்கள் இரண்டு பேருக்கும் முறைப் பெண். ரகு ராமுவை விட பெரியவன். அவனுக்கு சீக்கிரமே திருமணம் ஆகிவிட்டபடியால், லல்லியை இவன் மாமா இவனுக்கு மணமுடித்தார். ரகு தொடர்ந்தான் " நான் இன்னிக்கு ராத்திரி அங்க வர்ரேன்.  அங்க பேசிப்போம்" .

அவன் பிடி கொடுத்துப் பேசாதது ராமுவுக்கு சற்றுக் கவலையாகத்தான் இருந்தது. லல்லியின் ஆலோசனை அவனுக்கும் சற்றுப் பிடித்துத் தானிருந்தது.   நல்ல காலேஜில் சீட்டு வாங்க வேண்டும் என்றால் குறைந்தது அஞ்சுக்கு மேலே தரணும். கௌன்சலிங்கில் வெளியூர் கிடைத்து தொலைந்தால் ஹாஸ்டல் அது இது என்று பெரிய செலவு வைக்கும். நாமக்கல்லில் ரெண்டு வருஷமும் சேர்த்து விட்டால் ரெண்டு லட்சம் போதுமாம். தொண்ணூத்து அஞ்சுக்கு மேலே வாங்கினால் அதுல பாதி தந்தா போதுமாம். ஆனா இந்த ரகுப்பயல் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறான் !

சிவராமன் வேட்டி நுனியைப் பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தார். கூடவே சீனுவும். தெருமுனைக்கு வந்ததும்  பழனிசாமிக் கவுண்டர்  சேர்ந்து கொண்டார். அங்கே பாத்திரம் வாடகைக்கு விடுபவர். "என்ன சிவராமா , இன்னிக்கு லேட்டு ? ஏதாவது சீரியல் பாக்குறியா ? " என்று அவரைச்  சீண்டினார். சிவராமன் புன்னகைத்தார்.  கவுண்டருக்கு அந்த ஊரிலேயே சிவராமன் ஒருவர் மட்டும் நண்பர். அதுவும் அறுபத்தைந்து வருஷமாக ! இருவரும் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் படித்தவர்கள். இவர் வாத்தியாராக , இவர் விவசாயியாக , இடையில் பிரிந்திருந்தனர். பத்து   வருஷம் முன்பு, கவுண்டர் இங்கேயே கடை போட்டுவிட, இவர்கள் தினம் மாலை கோவிலில் சந்திப்பது வழக்கம். இன்று பிரதோஷம்.  

கோயிலில் நுழைந்தவுடன் சிவராமன் உணர்ச்சிப் பிழம்பாக இருப்பார். பிள்ளயார் முன்பாக நின்று 'சுக்லாம் பரதரம்.. " சொல்லும் போதே அரைக்கண் மூடி ஏதோ உலகத்திற்குச் சென்று விடுவார். அவரிடம் யாரும் பேச முடியாது.  இன்று பிரதோஷக் கூட்டம் நிரம்பியிருந்தது . குருக்கள்  சீனுவைக் கண்டதும், "வாடா, குழந்தே   உக்கார். ஸ்லோகம் சொல்லுடா. நான் அபிஷேகம் முடிக்கறேன்" என்றார்.

சீனு லிங்காஷ்டகம் சொல்ல ஆரம்பித்தான். குருக்கள் அபிஷேகம் ஆரம்பித்தார். இப்போது சிவராமன் ஸ்ரீ ருத்ரம் சொல்ல ஆரம்பித்தார். இருவர்  கண்களிலும் நீர் வழிந்தது.  கவுண்டர் உருகிப் போய் விட்டார். இன்று ஏதோ தாத்தாவும் பேரனும் உணர்ச்சியின் பிடியில் இருப்பதாகத் தோன்றியது கவுண்டருக்கு . பின்னால் இருந்த மீனாட்சி மாமி , "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" என்று  ஆரம்பித்தவுடன் சிவராமன் குரலே எழாமல் விக்கித்து நின்று விட்டார்.

தீபாராதனை முடிந்து பிரசாதம் வாங்கி விட்டு மண்டபத்தில் அமரும் போது தான் கவுண்டர் கவனித்தார். "என்ன ஐயரே, என்ன விவரம் ? முகம் வாடியிருக்கு . பிரசாதம் பத்தலையா ? " என வினவி விட்டு சீனுவைப் பார்க்க , அவனும் சுரத்தில்லாமல் இருப்பதைப் பார்த்து , "என்னப்பா பேராண்டி,  உனக்கு என்ன கவலை ? டெண்டுல்கர்  டக் அவுட்டு ஆயிட்டானா ? " என கிண்டலடிக்க, இருவரும் மௌனம் காக்கவும், பழனிச்சாமி கவுண்டருக்கே திக் என்று ஆகி விட்டது. எதையும வெளிக்காட்டிக் கொள்ளாமல் , "நான் குந்தி  தேவி மாதிரி. யாருக்கும் சொல்ல மாட்டேன். தாராளமா சொல்லலாம் " என்று நாசூக்காக  துருவினார்.

"பழனிச்சாமி, உன்கிட்ட சொல்லறதுக்கு என்ன ? இவன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கிறுக்குப் பிடிச்சிருச்சு. இவனை நாமக்கல்லுக்கு அனுப்பறாங்களாம் " என்ற சிவராமன், கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டார். கவுண்டருக்கு புரியவில்லை " எதுக்கு ? ஆஞ்சநேயர் கோவிலுக்கா ?" என்று பொதுவாகக் கேட்டு வைத்தார்.

 சிவராமனோ வேதனை தாளாமல், " விளையாடாதே. அது நமக்கு புரியாத விளையாட்டு. காசு விட்டெறிஞ்சு, குழந்தையை சக்கையாய் பிழிஞ்சு , மார்க்கு வாங்கற புது வித்தை. தமிழ்நாட்டை புடிச்சு ஆட்டற புது வியாதி. " கவுண்டருக்கு நாமக்கல் விவரம் விளக்கினார். அவரோ, " என்னடா இது , அய்யமார் வூட்டுக் குழந்தைக்கே இந்த கதின்னா, குடியானவன் வீட்டுல என்னதான் நடக்காது ? குழந்தைய படி , படின்னு கொன்னே போடுவாங்க போலிருக்கே ? ஏன் கண்ணு, நீ தானே உன் ஸ்கூல்ல மொத மார்க்கு ? உனக்கே இந்தக் கதியா ? "

சீனு  முதல் முதலாய் வாயைத் திறந்தான். " தாத்தா, அம்மா பிடிவாதமா சொல்லறாங்க. அப்பாவும் போன்னுதான் சொல்லறார். எனக்கு படிப்பும் வேணும். எல்லோரும் வேணும் . அங்கே போனா தாத்தா கிட்ட கேட்கிற ராமாயணம், பாகவதம், அப்புறம் பாட்டு கிளாஸ் எல்லாம் போயிடும். வீட்டுல எல்லாரும் சேர்ந்து சாப்பிட முடியாது. ஸ்லோகம் , கோவில்  எதுவும் முடியாது " சொல்ல சொல்ல கண்ணில் இருந்து நீர் வழிந்தது.

கவுண்டர்,  "சரி சரி , நீ கோவில்ல அழுகாதே. தைரியமா வீட்டுக்கு போ." என்று தேற்றி அனுப்பி வைத்தார். இரண்டு பேரும் தளர்ந்து நடப்பதைப் பார்த்ததும், " ஈஸ்வரா, இந்தச் சின்னப் புள்ளைக்கா சோதனை ? சிவராமனைப் பாரு! உன்னை தினமும் பாடற வாய் அது. அதுல அழுகையை உண்டாக்காதே " என்று சிவனுக்கு கடைசியாய் வேண்டுதல் வைத்து விட்டு, கடையை நோக்கி நடந்தார்.

ராமு   களைத்து  வந்திருந்தான். சீனு எங்க என்று கேட்க, "மாடில" என்று லல்லி காட்டினாள்.

ரகு  வரும் போது எட்டாகி விட்டது.   சேஷுவையும் கூட்டி வந்திருந்தான் . " லல்லி , நல்ல பசி. நீங்க ஒண்ணும் எல்லாத்தையும் முடிச்சிடலயே ?  எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தனர். ரகு படபடப்பாக சிவராமனோடும், சீனுவோடும் பேசிக் கொண்டிருந்தான்.

அதற்குள் , ஏதோ  செல் போன் மணி சத்தம். " என்னோடதுதான்" என்ற  சேஷு சாப்பிடும் போதே இடது கையால் போனை எடுத்து  காதில் வைத்துக் கொண்டான் . " ஹை , என்னடி இந்நேரத்தில ? ஆங் ! நானா ? இங்கே ஒரு இடத்தில மாட்டிட்டு இருக்கேன். என்னது ! இப்ப வரவா ? ம்ஹும் ! செக் போஸ்ட் இருக்கு. நாளை பார்க்கலாம். எஸ் எம் எஸ் போடு. என்னது, ஐயோ ! அதுக்கெல்லாம் இது நேரமில்லைடீ " பெரிதாகச் சிரித்து விட்டு போனை ஆப பண்ணினான். ரகு குனிந்த தலையை நிமிரவே இல்லை.

சிவராமன் அப்போது தான் முதன் முறையாக நிமிர்ந்து பார்த்தார். "சேஷு ! யாரண்டை இப்படி பேசினாய் ?"

சேஷு ஏதோ விசித்திர ஜந்துவைப் போல் அவரைப் பார்த்து விட்டு , "தாத்தா , இந்தக் கேள்விக்கு நான அப்பா கிட்டயே பதில் சொன்னது இல்லை. ஐ திங் இட் இஸ் அன் இன்ட்ருஷன் இன் மை ப்ரைவசி !"  சிவராமன் திரும்பி ரகுவைப்  பார்த்தார். " பெரியப்பா , இவன் நன்னா சொன்ன பேச்சு கேட்டுண்டு தான் இருந்தான். வெளியூர்ல படிச்சு வந்ததும் ஏதோ அவிழ்த்து விட்டாப்பல இப்படி இருக்கான். இவன் அம்மா ஏதோ பையன் படிப்பு வரும்னு அனுப்பிச்சா. இப்ப என்னடான்னா உள்ளதும் போச்சு. இப்பத்தான் காலேஜு இரண்டாம் வருஷம் . இதுக்கே இப்படி அலட்டல் " 

 சாப்பிட்டு முடித்து ரகுவை நோக்கி ராமு கேட்டான், " நீ இன்னும் நான கேட்டதுக்கு பதிலே சொல்லல்லை" என்றான் . ரகு, ஒரு வறண்ட சிரிப்புடன், உனக்கு வார்த்தையை விட உதாரணம் தான் புரியும்னுட்டு அதையே காட்டியாச்சு. இன்னுமா புரியலை ?  நீங்க ரெண்டு பேரும் நன்னா கேட்டுக்கோங்கோ. சீனு தெய்வப் பிறவி. அவனை கிணத்திலே தள்ளிடாதீங்கோ. மேலும் பெரியப்பாவோட உயிரோட நீங்க விளையாடுறீங்க" .

ரகுவை வாசல் வரை வழியனுபபித் திரும்பியதும், உள்ளே ஹாலில் சிவராமன் நின்றிருந்தார். " ராமு, லல்லி இங்க வாங்கோ"  என்று விட்டு சோபாவில் அமர்ந்தார். " எனக்கு மனசு சரியில்லை. நான கொஞ்ச காலம் காசியில் இருந்துட்டு வரலாம்னுட்டு இருக்கேன். அதான் உங்களைக் கூப்பிட்டேன்." கையில் இருந்த காகிதக் கட்டை எடுத்தார்.

"இதுல வீட்டுப் பத்திரம் இருக்கு. நான திரும்பி வருவேனோ என்னமோ. இன்னும் கொஞ்ச நேரத்தில பழனிச்சாமி ஒரு லாயரோட வருவார். உயில் எழுதிடறேன். குழந்தையை நன்னா பாத்துக்கோங்கோ ..." கடைசி வார்த்தையை சொல்லும் போதே வாயைப் பொத்திக் கொண்டு விட்டார். சோபாவில் அப்படியே சாய்ந்தும் விட்டார்.

"மாமா" என்று லல்லி பதறி அவர் கையைப் பிடித்துக் கொள்ள, சிவராமன் மெதுவாக " அம்மா, உங்களுக்கெல்லாம் புத்திமதி தேவை இல்லை. கோசலை குழந்தை வேண்டினப்போ, தனக்கு பிள்ளை வேணும்னு வேண்டிக்கலை. உலக நன்மைக்காக எல்லாருக்கும் நல்லதையே செய்யப் போற மகா புருஷன்  தனக்கு பிறக்கணும்னு  தான் வேண்டினாள். அவளுக்கு ராமன் பிறந்தான்.  இப்போ கலி யுகத்துல குழந்தை பிறந்த உடனேயே, "நீ நல்லா படிச்சி, நல்லா சம்பாதிக்கணும்"  இப்படித்தான் தாய் சொல்லறா. பின்ன கொழந்தைகளும் எப்படி வளரும் ? "

" ராமு, தெய்வாதீனமா, சீனு காசுக்கு மயங்கற பையன் இல்ல. எங்க பாத்தாலும், பெத்தவாளே குழந்தையை சபிக்கற காலத்தில நமக்கு சொக்கத் தங்கம் கிடைச்சிருக்கு. அதை காசுக்கு மயங்கிச் சிதைச்சிடாதீங்கோ. இனிமே நீங்க தான் அவனுக்கு எல்லாம்." என்று ஒரு பெருமூச்சு விட்டார். "இதோ என் பேங்கு பாஸ் புக். லச்சத்தி சொச்சம் இருக்கு. செலவுக்கு வச்சிக்கோ.  நான நாளைக்குப் புறப்படறேன். நீ நாளைக்கு ரிசல்ட்டு வந்ததும் புறப்படணும் இல்லையா ? அதான் இப்பவே சொல்லிட்டேன்".

ராமு விக்கித்து நின்றான். "என்னப்பா பெரிய வார்த்தை எல்லாம் பேசறேள். உங்களுக்குப் பிடிக்கலேன்னா வேண்டாம்பா . சீனுவை இங்கேயே சேத்திடலாம். " என்று சொல்லிவிட்டு , அவருடைய காலடியில் அமர்ந்து கொண்டான். வேண்டாம்பா உங்களை மீறி எதுவும் நான செய்ய மாட்டேன். நீங்க இல்லேன்னா சீனு சிதறிப் போயிடுவான் அப்பா ! "

ப்போது சீனு , கவுண்டருடனும், வக்கீல் குமாஸ்தாவுடனும் நுழைந்தான். தாத்தாவும் தந்தையும் கலங்கி நின்றதைப் பார்த்ததும், " ஏன் தாத்தா , என்ன ஆச்சு, ஏன் இப்படி இருக்கேள் ? என்று ஓடி வந்தான். தன ஒரு கையால் பேரனை வாரி இழுத்த சிவராமன், இன்னொரு கையால் ராமுவின் தலையை வருடி விட்டார்.

 லல்லி   நெகிழ்ந்து நின்றாள்   , " மாமா என்னை மன்னிசச்சிடுங்க ! என்னோட பேராசை தான்... " என ஆரம்பிக்க, சிவராமனோ " அம்மாடி ! இன்னிக்கு சமூஹம் அப்படி. நாம தான் திடமா இருக்கணும்."

கவுண்டர் நெகிழ்ந்து போனார். " சிவராமா உன் குடும்பமே தெய்வீகம் "

பின்பு லல்லியை நோக்கி . " தோ பார் லல்லிம்மா ! உன் மாமன் தான் என்னை வினோபா கிட்டயும், சிவானந்தர் கிட்டயும் கொண்டு போனவன். காளைக் கண்ணு போட்ட ஒரே மாசத்தில வித்துடுவோம் எங்க ஊர்ல. உங்க மாமன் உபதேசத்தில நான் தான் திடமா வைக்கோல் கன்னுக்குட்டியை காட்டி பால் கறக்குறது மகா பாவம்னு வாதாடி ஜெயிச்சவன். நீங்க இப்படிப் பண்ணலாமா.?"

கவுண்டர் தொடர்ந்தார் " அது என்னமோ வெறும் உருப் போட வைக்குறது தான் நாமக்கல் பாணியாம். கத்திச் சண்டைக் காரனை காய்கறி வெட்டப் போட்ட மாதிரி. ராமுத் தம்பி, இந்த வீண் வேலையை விடு. இனி எனக்கும் இவருக்கும் வேலை இல்லை. நான் வரட்டுமா "  கவுண்டரும் குமாஸ்தாவும் விடை பெற  , சிவராமன் தான் மௌனத்தைக் கலைத்தார். "போம்மா லல்லி. உன் புருஷனைக் கவனி. நான எங்கயும் போகலை, போறுமா ? போயி எல்லாரும் தூங்குங்கோ. வாடா சீனு"  என்று கட்டளையிட்டார்.  ராமுவும் லல்லியும்  மாடியில் அவர் தூங்கி வெகு நேரம் அவர் காலடியிலேயே அமர்ந்திருந்தனர்.

அடுத்த நாள்  தேர்வு முடிவு அறிவிப்பு  !

காலையில், லல்லி பூஜை அறையில் சஹஸ்ர நாமம் சொல்லிக் கொண்டே   கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். ராமு குளித்து விட்டு ஹாலில் அமர்ந்திருந்தான். " சீனு, இப்பவே மணி எட்டு. எட்டே முக்காலுக்கே இன்டர்நெட் சென்டருக்கு போயிடணும்.   தாத்தா எங்கே ?" என்று கேட்க, " பாத் ரூமிலே இருக்கார்.வந்துடுவார் " என்றான் சீனு.

அப்போது வாசலில் சத்தம். சீனு தான் எட்டிப் பார்த்தான். அவன் முகத்தில் பெரும் ஆச்சரியம்! " வணக்கம் சார். வாங்க !" என்று கூறிக் கொண்டே உள்ளே ஓடி வந்தான். "அப்பா, எங்க பிரின்சிபாலும் கரஸ்பாண்டென்டும்    !"  . பிரின்சிபால் நேரடியாக சீனுவைப் பிடித்து அனைத்துக் கொண்டார். " யூ நோ வாட் ? யூ ஆர் இன் டாப் பைவ் மான் !" இடி மாதிரிச் சிரித்தார். கூட இருந்தவரிடம், "சார் நான சொல்லலை, இவன் தான் ஸ்ரீனிவாசன். அவர் ப்ரௌட் ஸ்டுடென்ட்.! "  இதற்குள் லல்லியும் சிவராமனும் ஹாலுக்கு வந்து விட்டனர்.

சீனுவும் ராமுவும் வாய் மூடவில்லை. கரஸ்பாண்டென்ட், ராமுவின் கையைப் பிடித்துக் குலுக்கி, " உங்க பையனால எங்க பள்ளிக்கும், இந்த ஊருக்கும் , இந்த மாவட்டத்துக்கும் பெருமை. நானூத்து தொண்ணூறு மார்க்கு ! " என்று சொன்னார். லல்லி விக்கித்து நின்றாள்.

இவன் மாவட்டத்தில் முதல். மாநிலத்தில் ஐந்தாவது. இப்போதான் டி இ ஒ ஆபீஸ்ல இருந்து நேரா இங்க வர்றோம். கங்ராஜுலேஷன் மிஸ்டர் ராமு . இப்போ நான தயாராக வரவில்லை . இருந்தாலும் , இது என் சின்னப் பரிசு "  என்றபடி, நூறு ரூபாய் கட்டு ஒன்றை சீனுவில் கையில் வைத்து விட்டு, "உங்களை சீக்கிரம் ஸ்கூல் விழாவில் சந்திக்கிறேன்" என்றார்.

செல்லும் போது " வாட் எ பிடி ! எங்க பள்ளியே இப்படிப்பட்ட ரிசல்ட்டு குடுக்குது. இந்த ஜனங்க ஏன்தான் போர்டிங் ஸ்கூல் அது இதுன்னு பறக்கறாங்களோ ? சீனு , ப்ளஸ் டூ இங்கே தானே " என்று   சீனுவின் கன்னத்தில் செல்லமாக தட்டி கேட்க, லல்லி தான் " கண்டிப்பா , இங்க தான் சார் " என்று புன்முறுவலித்த படியே கூறினாள்.

சிவராமன் "பரமேஸ்வரா , காப்பாத்திட்டேடா " என்றபடியே பேரனை உச்சி முகர்ந்தார்.

அன்று பூஜை மிக ரம்மியமாக நடந்தது.

15 comments:

 1. VENKAT SIR... WONDERFUL...

  ANBUDAN
  CHEENU@COIMBATORE

  ReplyDelete
 2. அன்பரே
  படிக்க மிகவும் எளிமையாக இருந்தது
  மனதை இளக்கியது
  ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெறமுடியும்
  இன்றைய சூழலில் பெற்றோர் பாடு பெரும்பாடுதான்
  எல்லோரும் சீனு ஆக முடியுமா
  பள்ளியும் ஆசான்களும் ஓர் உபகரணம்தானே அன்றி முடிவு அல்ல
  மாணவனின் தனித் திறனும் தன்மையும் வெற்றி வேட்கையும்தான்
  அவனது வாழ்க்கைக்கு வழிகாட்டி
  உங்கள் எழுத்து வெற்றியுடன் தொடர இறைவன் அருள் என்றும் இருக்க வேண்டும்
  அன்பன் பாலகோபால்

  ReplyDelete
 3. Well written, Venkat. The story reflects the current craze for rewards without putting in the required effort.

  ReplyDelete
 4. வெங்கட்.. போன கதை உங்க சின்ன பையன வெச்சு உருவானதுன்னு நினைக்கிறேன்..

  இந்த வாரம், உங்க பெரிய பையனா?

  சரி.. நாமக்கல்ல சேர்க்கறதுன்னு முடிவு செஞ்சதுக்கப்புறம், எந்த ஸ்கூல்னு முடிவு பண்ணியிருபீங்களே?

  S.R.V ?
  குறிஞ்சி?
  Green Park?

  அப்படி இல்லைன்ன ஈரோடு பக்கத்துல வித்ய விகாஸ் பள்ளிக்கூடம்?

  எப்படி இருந்தாலும், சில அடிப்படை உண்மைகள தெடிஞ்சுக்கோங்க.. என் தம்பி அங்க ஒரு லட்சம் கட்டி இரண்டு வருடம் படிச்சதனால் சொல்றேன்..

  முதல்ல அவங்க எல்லா பசங்களையும் ஒரே மாதிரி படிக்க வைக்கறதில்ல.. யாரு நல்லா படிக்கறாங்களோ, அவங்கள மட்டும் கவனம் செலுத்துவாங்க.. தெனமும் இந்த பக்கத்துல இருந்து, இந்த பக்கம் வரை ஒரு எழுத்து மாறாம அப்படியே பரிட்சையில எழுதனும்.. கேள்வியே கிடையாது.. இப்படி, ரெண்டு வருசத்துல முக்கால் வாசி, புத்தகத்த அப்படியே மனப்பாடம் பண்ண வெச்சுடறாங்க.. அப்புறம் பரிட்சையில புத்தகத்துல உள்ளது படியே எழுதுவாங்க..

  லேப்ல கண்டிப்பா முழு மார்க்கும் வாங்க வெச்சுடுவாங்க.. (எப்படியாவது !!!! ).. வேற எந்த பொழுது போக்கும் இல்ல..

  அவங்க எப்படியாவது ரிசல்ட் கொண்டு வர்றதுனால, ரொம்ப பிரபலமாயிட்டாங்க.. மக்களுக்கும் நுகர்வோர் கலாச்சாரத்துக்கு மாறினதால, அவங்க ரிசல்ட் மட்டும் தான் பார்க்கறாங்க.. அதை வாங்கும் வழிமுறைய பார்க்கறதில்ல..


  என்னை பொறுத்த வரையில், உங்க பையன ஐ.ஐ.டி க்கு தயார் பண்ணுங்க.. கண்டிப்பா மேல வருவாங்க.. அங்க மனப்பாடத்துக்கு வாய்ப்பே கிடையாது.. Logical Reasoning, Aptitude, mathematical knowledgஎ.. இவைகள்தான் பிரதான தேவை.. நல்லா புரிந்து கொள்ளும் ஆற்றல், சிந்திக்கும் ஆற்றல்.. இது உங்க பையனிடம் இருந்தா, உடனே ஒரு ஐ.ஐ.டி கோச்சிங் சென்டர்ல சேர்த்துடுங்க.. அதோட முடிஞ்சா, CBSE பள்ளிக்கூடத்துல சேர்த்துடுங்க..

  ReplyDelete
 5. குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ... என்று உங்களைப் பார்த்துப் பாட வேண்டும் போல் இருக்கிறது சார். தமிழமுதம் நாமக்கல்லை ஒருமுறை யல்ல எனது துணைவிக்காக இரண்டாம் முறை படித்துக் காட்டும்போதுதான் ரொம்பவும் மகிழ்ந்தேன் - பலமுறை நெகிழ்ந்தேன் சார். சினிமாப் பார்த்ததுபோல இருந்தது சார். தமிழ் வாசிக்க இயலாதவர்களுக்காக இதை ஆங்கிலத்தில் எழுதலாமா என்று தோன்றுகிறது. வாழ்க உங்கள் பணி மென்மேலும். அன்புடன் வித்தியானந்த சர்மா. ஃப்ளோறிடா, யூ.எஸ்.ஏ. ஜூன் 24, 2010

  ReplyDelete
 6. mickka arumaiana kathai. indraya soozhnilaiyai nandraga prathiplithirukireerkal. nanri.
  melum ezhuthungal, melum padithu manamakizhvom

  parameswaran

  ReplyDelete
 7. not a 'sirukathai' konjam perisu but really nice shud b a boost for bright & enthu students who cannot afford 2 go 2 rich schools

  ReplyDelete
 8. dear venkat,
  well conceived plot. today's 'yathartham'idhuthan
  keep it up
  bhilai gopalan

  ReplyDelete
 9. A simple but excellent story. A good comment on the happenings of the day.
  Viswanathan.

  ReplyDelete
 10. Ippanteki

  Good effort and well coneived plot Keep it up All the bestg

  ReplyDelete
 11. வணக்கம் சீனு சார்
  பாராட்டுக்கு நன்றி. இதுதானே டானிக்.
  வேங்கடசுப்ரமணியன்

  ReplyDelete
 12. பால கோபால் அய்யா,
  உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி. உங்கள் தெளிந்த மொழி நடையும் , அதில் பாராட்டும் பெரும் போது, குளிர்ந்து விடுகிறேன்.
  வேங்கடசுப்ரமணியன்

  ReplyDelete
 13. செந்தில்
  உங்கள் பதிவிற்கு நன்றி. இது என் வீட்டுக் கதை அல்ல. நானும் என் மனைவியும் இதில் ஒத்த கருத்து உடையவர்கள்.பதினாறு வயது மகனுக்கு இன்னும் ஊட்டி விடும் தாயாவது பையனை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்புவதாவது ?
  வேங்கடசுப்ரமணியன்

  ReplyDelete
 14. திரு அருண் (குரு) , விஸ்வநாதன், பரமேஸ்வரன், வித்யானந்தா சர்மா ,கோபாலன், நடுவில்மடம், ஆகியோருக்கு,

  இது தங்கள் முதல் வருகை என்று எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து ஊக்கம் தாருங்கள்.
  வேங்கடசுப்ரமணியன்

  ReplyDelete
 15. Dear Sri.Venkatasubrmanian,
  Powerful message well presented in a lucid story form; Keep it up. Best Regards,Ramakrishnan/Bangalore.

  ReplyDelete