Sunday, June 20, 2010

உயிரில் முளைத்த உணர்வு - சிறு கதை

ன்னிரண்டு  மணியா ? மாலதிக்கு பரபரப்பு அதிகமானது. கீ போர்டை தள்ளி விட்டு , இன்டர் காம் பட்டனை அழுத்தினாள். 'சொல்லுங்க மாலதி' என்றது ஆப்பரேட்டரின் பரிச்சயமான குரல்.

'இன்னிக்கு மொரிஷியசில் இருந்து ரெண்டு கெஸ்ட் வரணும். ரிசப்ஷனை  தான் கூப்பிடச் சொல்லி இருக்கேன். ஏர்போர்ட்டுக்கு வண்டி காலம்பர அஞ்சுக்கே போயாச்சு. பிளைட் லேட்டாம்."

' எனக்கு மொதல்லயே தெரியுமே. டிரைவர் அப்பப்ப  கூப்பிட்டுகிட்டே தான் இருக்கார். வந்தவுடனே உங்களுக்கு சொல்லறேன் "

'அப்பாடா ! இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு' என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மறுபடியும் கம்ப்யுட்டரில் மூழ்கினாள். " ச்சே ! என்னிக்கும் அரை மணியில முடியற ஒர்க் சீட்  ரெண்டு மணியாகியும் முடியலை. நாளே சரியில்லை. குடும்பத்தில பொம்பளை என்ன அவ்வளவு மட்டமா ? எனக்கு சொந்த புத்தி இல்லையா ? கொழந்தை பாவம் சாப்பிடாமல் வேறு ஸ்கூலுக்கு போனான்."

நினைக்க நினைக்க ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது மாலதிக்கு. "எவ்வளவு ப்ளான் போட்டேன் ராஜுவிற்கு ? பெரிய கொள்கை ! நாளைக்கு மார்க்கு வாங்காமல் மகன் தவிக்கட்டும் ! அப்போ எங்க போகும் கொள்கையும் மண்ணாங்கட்டியும் ?"

நேற்று ராஜூ மெல்லத் தான் ஆரம்பிச்சான். எப்பவும் போல், மாலதிக்கும் சங்கருக்கும் நடுவில் படுத்துக் கொண்டு, "ஏம்மா நான் பிரெஞ்சு எடுத்துக்கட்டுமா ?" என்றான். சங்கரோ ஒரு பெரிய புத்தகத்தில் மூழ்கியிருந்தான். மாலதி தான் கவனித்தாள். "ஏண்டா கண்ணா ? தமிழ் பிடிக்கலையா ? நீதான் இலக்கண மேதையாச்சே ? உங்கப்பாவுக்கே சொல்லிக் கொடுப்பியே ?"


"இல்லம்மா . என் பிரெண்டுங்க ரெண்டு பேர் நேத்து தான் மாத்தினாங்க. பிளஸ் டூவில மார்க்கு குறையறதுக்கு தமிழ் தான் காரணமாம். நூத்தி எண்பது போட்டாலே பெரிசாம். பிரெஞ்சுல இருநூறு காரண்டியாம். போர்ஷனும் ரொம்ப கம்மி."

"ஏங்க கேட்டீங்களா ?" சங்கர் நிமிர்ந்தான்." ராஜூ , உனக்கு இந்த குறுக்கு புத்தி யாரு சொல்லிக் கொடுத்தா ? மார்க்கா பிரதானம் ? உனக்குத் தான் புரியலைனா உங்கம்மாவுக்குமா ? முடிஞ்ச மார்க்கு வாங்கு போதும்."

"அப்பா, மெட்ரிக் எக்சாம்ல கூட தமிழ் தான் என்னோட டோட்டலை குறைச்ச்சது. பிரெஞ்சு ஸ்டூடன்ட் தான் ஸ்கூல் பஸ்ட்டு."

"நாளைக்கு உன் வாழ்க்கைக்கு தமிழ் தான் உதவும். பிரெஞ்சா உதவும் ?. நான் உனக்கு வாங்கி வச்ச புத்தகத்தை எல்லாம் நீ எப்படி படிப்ப ? " சங்கர் ராஜூவை உற்று நோக்கினான். "என் உடம்புல ஊறிட்டிருக்கற ஒவ்வொரு சொட்டும் தமிழ் தான். "

சங்கர் மேலே சொல்வதற்குள் மாலதி குறுக்கிட்டாள் " இவரு பாக்கற எஞ்சினியர் வேலைல தமிழ்ல தான் புழங்கராங்களோ ? குழந்தை மார்க்கு வாங்க வழியைச் சொல்லறான் . அவன் அப்பாவுக்கு பெரிய லட்சிய வேகம் ! பிழைப்புக்கு ஆகற வேலையைப் பாருடா கண்ணா ? நாளைக்கு சாயங்காலம் பெர்மிஷன் போட்டுட்டு ஸ்கூலுக்கு வரேன். பிரின்சிபாலைப் பார்ப்போம்."

சங்கர் இப்போது படுக்கையில் நன்றாக உட்கார்ந்தான். 'என்னடா ராஜு ? உங்கம்மா என்ன  அந்த அபியும் நானும்  அப்பன் மாதிரி நினைச்சுட்டாளா ?  உருப்படற வழியை நான் சொல்லறேன். புத்திசாலியா இரு. சந்தேகம் என்னவா இருந்தாலும் என்னைக் கேளு. சரி இப்பப் படுத்துத் தூங்கு." ராஜுவின் ஏமாற்றமான பார்வை மாலதியை உசுப்பி விட்டது

" எப்பப் பாரு என் மகன் மொத மார்க்கு மொத மார்க்குன்னு பீத்தலுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல.அட்வைசாம் அட்வைஸ் ! புதுசா வந்த பசங்க எல்லாம் பிச்சு ஒதறும். உங்க பிள்ளை எட்டாவதோ பத்தாவதோ வாங்குவான். சந்தோசம் தானே ?"

" அம்மா மாலு ! சாப்ட்டுவேர் புரோக்கிராம் பண்ணறதோட உன்னோட குறுக்கு அறிவை நிறுத்திக்க. உங்கப்பாவோட தமிழ் துவேஷம் போகட்டும்." அவளுடைய அப்பா பாம்பேயில்   வளர்ந்தவர். வீட்டில் தமிழ் பேசினாலும், பெரிதாக மதிக்காதவர்.

மாலுவுக்கு கொதித்தது.  "அவரை எதுக்கு இழுக்கறீங்க ? குழந்தை விஷயத்தை மட்டும் பேசுங்க .நான் வரலை.  நீங்களே வேணா போயி மாத்தி விடுங்க. "

" ஆகற விஷயத்தைப் பேசு. இத விட கொழந்தைக்கு விஷம் குடுன்னு சொன்னால் கூட ஒத்துக்குவேன். இனிமே உனக்கு எட்டாத விஷயத்தைப் பத்தி பேசாத ! " சங்கர் படுக்கையில் சரிந்து கொண்டே சொன்னான். எங்கப்பா தமிழ்லையும் சரி , சமஸ்கிருதத்திலையும் சரி, பெரிய வித்வான். 'பண்டிதன்னா ரெண்டு மொழியும் தெரியணும். தெரிஞ்சா மட்டும் போறாது . ஊறி நனையனும்'பார்  . என்னையும் அப்படித்தான் வளர்த்தார்."

"ஆரம்பிச்சுடீங்களா . முதல்ல மார்க்குக்கு வழி சொல்லுங்க. பண்டிதன் ஆகறதை பின்னாடி பார்க்கலாம். இங்க பாருங்க , மத்த பிள்ளைக மாதிரி ராஜூ இல்லை. படிக்க ஆர்வம் உள்ள பையன். அதுல மண்ணைப் போடாதீங்க."

சங்கர் எப்போதும் அலாதியான அமைதியுடன்தான் இருப்பான். கீதையும், வேதப் படிப்பும் , தேவாரமும், திவ்வியம் பிரபந்தமும் அவனை அப்படி மாற்றி இருந்தன. இப்போது சற்றே கோபத்துடன் " இதுல யாரும் பேச முடியாது. இன்னும் யாரும் பேசாதீங்க" என்று கண்டிப்புடன் கூறி விட்டு ராஜுவைப் பார்க்க , அவன் அதற்குள் தூங்கியிருந்தான்.

மாலதியின் எண்ணம் கம்ப்யூட்டரில் பதிய மறுத்தது." பாவம் ராஜூ. காலைல அப்பாவோட  மூஞ்சியைப் பார்த்ததும் , பயந்து சாப்பிடாமல் ரோஷத்தோட போயிட்டான்.இருக்கட்டும் இருக்கட்டும். இன்னைக்கு சாயங்காலம் ரெண்டுல ஒண்ணு கேட்டுடறேன். "

போன் அலறியது. " மாம், கெஸ்ட் வந்துட்டாங்க ". மாலதி பரபரப்போடு "நேரா கெஸ்ட் ரூமுக்கு அனுப்பிடுங்க" நான் அங்க தான் போறேன்"

. அவள் நிமிர்வதற்குள் , "மன்னிக்க வேண்டும். இங்கேயே வந்து விட்டோம்." என்றனர் அந்த இருவரும். பின்னாடியே டிரைவரும். "மேடம், உங்களைப் பார்க்கனும்னாங்க அதான் " என்றார். மாலதி கை குலுக்க நீட்ட முற்படுமுன், அவர்கள் இருவரும், குவித்த கரங்களோடு நின்றனர். அதில் உயரமானவர்  , "வணக்கம், திருமதி மாலதி " என்று சிரித்தார். ' நான் மாயவன். இவர் கண்ணப்பன்.". மாலதி சுதாரித்துக் கொண்டு ' வணக்கம். உட்காருங்க " என்றாள்." ஹவ் வாஸ் யுவர் ஜர்நீ ? வாட் வில் யு ஹவ் ?"

மாயவன் சிரித்தார். "திருமதி  மாலதி, நாங்க மொரிஷியஸ் தமிழர்கள். தமிழிலே பேசலாம். தமிழுக்கு ஏங்கிப் போயிருக்கோம் நாங்க. " மாலதி சிரித்துக் கொண்டு, " உங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு ஆகியிருக்கு . ரெசிடென்சிக்கு போகலாமா அல்லது ரத்னா ரீஜன்சிக்கு போகலாமா? " அவர்கள் குறுக்கிட்டு , "அவசரமில்லை, ஆனா ஒரு விண்ணப்பம் .சின்னதா ஒரு அய்யர் ஓட்டலுக்கு கூட்டிகிட்டு போங்க. ரெண்டு வருஷம் ஆச்சு , தமிழ்ச் சோறு சாப்பிட்டு " மறுபடியும் சிரித்தனர்.

சாப்பிடும் பொது இருவரும் கலக்கி விட்டனர். கடையின் உரிமையாளரிடம் இருவரும் உரிமையோடு வம்பு பேசியதும், அவரோ நேரே டேபிளுக்கே வந்து விட்டார். இவர்கள் ஊறுகாயில் இருந்து வாழை இலை வரை சிலாகித்துப் பேச , சுற்று முற்றும் இருந்தவர்கள்  எல்லோரும்   சுவாரசியமாக ரசிக்க, மாலுவும் டென்ஷன் குறைந்து லேசாகியது போல உணர்ந்தாள். கடைக்கார அய்யர் வெற்றிலை பாக்கு எல்லாம் கொடுத்து அமர்க்களப் படுத்தி விட்டார். காசு வாங்கவும் மறுத்து விட்டார்.

'உங்களை எல்லாம் பார்த்தா என் ஆம்படையாளும், அம்மாவும் , அக்காவும் சந்தோஷப் படுவா . வீட்டுக்கு சாயங்காலம் வாங்க " என்று அழைப்பு வேறு வைத்தார். கண்ணப்பன் நெகிழ்ந்து போய், "தமிழ் மண்ணே, எங்களை மட்டும் ஏன் அந்நிய தேசத்தில் விட்டாய் ? " என்று கலங்கி நின்றார். தன கைப்பையைத் திறந்து , அதில் தான் கொண்டு வந்த ஒரு விலை உயர்ந்த பேனாவை அய்யரிடம் கொடுத்து , 'பரிசா நினைக்காதீங்க. என் மக்களுக்கு நான் தரும் நினைவுப் பொருள். தயங்காம வாங்கிக்கணும் " அனைவருமே நெகிழ்ந்து நிற்க, பிரியா விடை பெற்றனர் இருவரும்.

திரும்பி வரும் போது, மாலு " ஏன் கண்ணப்பன், நாலு தமிழ் வார்த்தையும் உபசரிப்பும் உங்களை அவ்வளவு கலங்க வைச்சது ?"

"மாலு ! உங்களை உங்க அம்மா மடியில படுக்க வைத்து தடவினா , உங்களுக்கு எப்படி இருக்கும் ?  அதப் போல பத்து மடங்கு உயர்ந்த நிலையில நாங்க இங்க இருக்கோம். தமிழின் ஒவ்வொரு வார்த்தையும் , தமிழ் மக்களின் ஒவ்வொரு உபசரிப்பும், எங்களை வினாடிக்கு வினாடி சுவர்க்கத்துல ஏற்றுது." அவர் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்ள , மாலதி பதறி விட, அவர்  புன்னகையுடன் ' என்னை, இந்தக் கண்ணீரை அனுபவிக்க விடுங்கள் "  என்றார்

இடது பக்கமிருந்து மாயவன், ' அவனுக்கு மட்டும் கொஞ்சம் அவகாசம் கூட இருந்தால், நேரா   இங்கே பேரூரில நூறு வருஷத்துக்கு முன்னால இருந்த  சாம்பசிவ முதலியார் பத்தி விசாரிக்க போயிடுவான். அவர் இவனோட கொள்ளுத் தாத்தா !"

'நான் வேணுமின்னா விசாரிக்கவா ? என் பெரியப்பா பேரூரில் பெரிய வேத பாடசாலை வச்சிருக்கார். என் வீட்டுக்காரருடைய குரு . அவருக்கு தெரியாதவர் அங்கே யாருமில்லை "  என மாலு வினவ, கண்ணப்பன் துள்ளித் திரும்பி, "நிஜமாவா ? இன்னைக்கே முடியுமா? " எனக் கேட்டு முடிப்பதற்குள் ,  மாலுவின் செல் போனில் பெரியப்பாவின் குரல் கேட்டது. பெரியப்பா , நான் மாலு ! என்றதும், " சொல்லுடீம்மா கொழந்தை. வீட்டுக்காரன் எப்படி இருக்கான் , குழந்தை எப்படி இருக்கான் ?"


 எல்லாம் நல்லா இருக்கா பெரியப்பா , நான் இப்ப ஸ்பீக்கர் ஆன் பண்ணியிருக்கேன்.  எனக்கு ஒரு ஒத்தாசை வேணும், என் கம்பனிக்கு   விருந்தாளியா வந்த ஒருத்தர் தன கொள்ளுத் தாத்தா பேரூரில நூறு வருஷம் மிந்தி இருந்தார்ன்னும், அவர் பேர் சாம்பசிவ முதலியார்ன்னும் சொல்றார். உங்களுக்கு யாராவது தெரியுமா ?"

போனில் மௌனம். குரல் தொடர்ந்தது " பேரூரில , நூத்துக்கு மேல முதலியார் இருக்கா. ஒரு வேளை !" , என்று நிறுத்தி, " வெள்ளைக்காரா தன குடும்பத்தை கப்பல்ல கூட்டிண்டு போனதா இங்கே வாழை இலைக் கடை முதலியார் சொல்லுவார். அவாளோ இருக்குமோ ? . நீ எதுக்கும், ஏழு மணிக்கு இங்கே வா. போயே பாத்திடலாம்." என சொல்ல, மாலு , கண்ணப்பனை நோக்கி, பெரியப்பா வரச் சொல்லறார்.சாயங்காலம் கம்பனியில் மீட்டிங் ... " என்று இழுக்க,   கண்ணப்பன் ,  நாளைக்கு  இரவு விழித்தாவது என் வேலையை முடித்து விடுகிறேன். இப்பவே போகலாம் என்று பரபரத்தார்.

ந்து மணி. செல் போன் அடித்தது. சங்கர் ! " ஏய் ! என்னடி கண்ணா பண்ணரே ?" மாலுவுக்கு முகம் சிவந்தது . செல்லமாக , " சாயங்காலம் நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினாத்தான் மனசு ஆறும் " என சிரித்து கொண்டே சொல்ல அவனும் " நானும் சாயங்காலம் உனக்கு ஒரு பரிசு தரப் போறேன் " என்றான்.

மாலதி எதையோ நினைத்தவள் போல , "கண்ணா , கண்ணா கோவிச்சுக்காதே  கண்ணா , இன்னிக்கு நான் பெரியப்பாவைப் பாக்க பேரூர் போயிண்டிருக்கேன்." என்று தொடங்கி கண்ணப்பன் விபரம் கூறி , " ஏய் ஏய் ! ப்ளீஸ் பா ! இன்னிக்கு சனிக்கிழமை தானே ? நீங்களும் காரில் பேரூர் வந்துடுங்கோ . ராஜுவையும் அழைச்சுட்டு வாங்கோப்பா ,ப்ளீஸ் ! அப்படியே கோவிலுக்கும் போயிட்டு வரலாம் "

"மனைவி சொல்லி மறுப்பானா இந்த இலங்கை வேந்தன் ? தயாராய் இரு . உன் பெரியம்மா கிட்டே  அந்த பழைய சாதப் புளியோதரையை மட்டும் போட வேண்டாம்னு சொல்லி வை  " என்று சீண்டிய பின்னரே போனை  வைத்தான்.

வர்கள் போவதற்குள் பேரூரில் ராமகிருஷ்ண கனபாடிகள் வீட்டில் பெரும் கூட்டமே சேர்ந்து விட்டிருந்தது.  இலைக்கடை முதலியார் தான் ஓடி வந்து கார் கதவைத் திறந்தார். இவர்கள் வாயைத் திறப்பதற்குள் அங்கே முழு விஷயமும் ஒலிபரப்பப் பட்டுவிட்டிருந்தது. கண்ணப்பன் யார் என்று மாலு சொல்லியதுதான் பாக்கி. அங்கே ஆண்களின் அணைப்புக்களும், பெண்களின் கண்ணீரும் அந்த முதலியார் சபையை உணர்ச்சி வெள்ளமாக்கி இருந்தது. இதற்குள் சங்கரும் ராஜுவும் காரில் வந்து இறங்கினர்.

கண்ணப்பனுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினாள் மாலதி. " திரு சங்கர், இன்னிக்கு உங்க மனைவி என்னை  பல முறை அழ வைச்சிட்டாங்க. என் தாய் நாடு எனக்கு இவ்வளவு தந்து விட்டது" என்று இலைக்கடை  நாகராஜ முதலியாரைக்  காட்டினார். சங்கரும், சிரித்துக் கொண்டே " நான் அவளை இன்னிக்கு காலையில அழ வச்சேன். அவ உங்க மேல சாத்திட்டாள்  போல !'  கண்ணப்பன் கேள்விக்குறியுடன் சங்கரைப் பார்க்கவும், சங்கர் பிரெஞ்சு பாட விவகாரத்தை அவருக்கு  விவரித்தான்.

ல்லாரும் கோயிலுக்குள் சென்ற பொது, கண்ணப்பன், "மாலு, நீங்க ராஜுவிற்கு பிரெஞ்சு பாடத்தை எடுக்க சொன்னீங்களாமே ? " என்று ஆதங்கத்துடன் கேட்டார். "நாங்கல்லாம் தமிழ் தமிழ்னு உயிரை விடறோம். நீங்க இப்படிப் பண்ணலாமா ? " அங்க பாருங்க , எங்க சனங்களை . எங்க எல்லாரின் பிணைப்பு தமிழ் மட்டும் தாங்க. தயவு செஞ்சு ராஜுவைத் தமிழ் படிக்க வைங்க"

மாலதிக்கு எப்படியோ ஆகி விட்டது. இதற்குள் அர்த்த மண்டபத்தில் நுழைந்து விட்டிருந்தனர். சங்கர் சிரித்துக் கொண்டே வந்தான். "என்ன கண்ணப்பன், இந்தாங்க மாலை, அர்ச்சகர்  கிட்டே கொடுத்து வேண்டிக்குங்க"

"சங்கர், உங்களுக்கு தேவாரம் தெரியுமா ?"

"தெரியுமாவது ? இவளோட பெரியப்பா தான் என் மாமா . அவர்கிட்ட   இதே ஊரில்    தான் வேதமும், தேவாரமும் , திருவாசகமும், பிரபந்தமும் கத்துகிட்டேன்." என்று கனபாடிகளை பார்த்து சிரிக்க,அவரும்  "டேய் ,  சங்கரா சம்பந்தரோட பதிகம் ஒண்ணு பாடேன்" என்று கட்டளையிட்டார். சங்கரும் மேல் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு , ஈசனைப் பார்த்து " தோடுடைய செவியன் ... " என்று ஆரம்பித்தான். ராஜுவும் சேர்ந்து கொள்ள , கண்ணப்பனும், கூட்டமும் மெய்மறந்து நின்றது.

சங்கர் முடித்ததும், கண்ணப்பன் திடீரென்று " மந்திரமாவது  நீறு ... " என்று திருநீற்றுப் பதிகம் பாடினார். மாலதி ஏதோ புது உலகத்தில் இருப்பவளைப் போல் உணர்ந்தாள்.

ரவு பத்து மணி ஆகி விட்டது இவர்கள் விடை பெற. கனபாடிகள் வீட்டிலேயே அன்று சாப்பாடு. கண்ணப்பனை இலைக்கடை முதலியாரிடம் ஒப்படைத்து விட்டு, இவர்கள்  மட்டும் திரும்பினர்.

"ஆ ! சங்கர் கத்தினான். "சொன்னபடி கிளளிட்டேன்". என்றாள் மாலதி. "சரி இப்ப சொல்லுப்பா , என்ன பரிசு ?"

" டேய் குட்டி, இங்க வாடா   " என  ராஜுவைப் பார்த்து " உன் இஷ்டப்படியே பிரெஞ்சு படிச்சுக்கோடா. அப்பப்போ என் தமிழையும் நினைச்சுக்கோ. நான் உன் பிரின்சிபாலைப் பார்த்து பேசிட்டேன்   "

"வேண்டாங்க, ராஜூ தமிழே படிக்கட்டும். " இது மாலதி
.
சங்கர் வியப்புடன் மாலதியைப் பார்த்து " அம்மையார் மனமாற்றத்துக்கு காரணம் யாதோ ? பேரூர் பட்டீஸ்வரன்   திருவுள்ளமோ  ? கண்ணப்பன் கைங்கர்யமோ? பெரியம்மா கை உப்புமாவோ ?" என்று  சீண்ட  ,

" அப்பா , நான் தமிழே படிக்கறேன் பா    . இன்னிக்கு நீங்க ஸ்கூலுக்கு வந்து போன பின் எங்க தமிழாசிரியர் என்னைக் கூப்பிட்டு பேசினார் . இந்த வருஷம் தமிழ் படிக்கற சில மாணவர்களில் நான் மட்டும் தான் நன்னா    படிக்கிறேன்னும் , நான் போயிட்டா  தானும்  பள்ளியை   விட்டுப்   போவதாகவும்  சொன்னார்பா . அப்புறம் , கண்ணப்பன் அங்கிளைப்  பார்த்ததும் தான் தமிழோட  அருமை   எனக்கு புரிஞ்சுது .  "

கார் நொய்யல் ஆற்றங்கரையில் இதமாக  ஊர்ந்தது .

6 comments:

 1. வெங்கட்.. சிறுகதையில் இவ்வளவு உணர்வுபூர்வமா நீங்க எழுதி இதுவரை படித்ததில்லை.. ரொம்ப அனுபவித்து எழுதியிருப்பீங்க போல.. நானும் அனுபவித்து படித்தேன்.. அவ்வளவு எளிய நடையில் தெளிவா கதைய கொண்டு போயிருக்கீங்க..

  ஏதாவது மொரீஷியஸ் ஆளை சந்திச்சீங்களா? உண்மையில அவங்க இவ்வளவு சென்சிடிவாவா இருப்பாங்க? ஆம் என்றால், நீங்கள் எழுதியது ஒரு கதையல்ல..

  எனக்கு ஒரே ஒரு குறை இந்த் கதையில்.. சங்கர் பாடிய தேவாரப் பாடலையும் கண்ணப்பன் பாடிய தேவாரப் பாடலையும் முழுமையாக குடுத்திருந்தால், என்னைப் போல அறிவிலிகளுக்கு தேவாரப் பாடலை ஒரு கதையோடவவாது படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.. முழு பாடலையும் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

  ReplyDelete
 2. அன்பரே
  மனம் நிறைந்து உள்ளது
  கவிதைத்துவம் தாங்கிய கதை
  பட்டிஸ்வரன் அருள் என்றும் தங்களுக்கு இருக்க வேண்டுதலுடன்
  பாலகோபால்

  ReplyDelete
 3. en kannil neer vazhindathu
  intha unarvu poorvamana warthaigal niraintha kathaiyal
  mikka nandri
  parameswaran

  ReplyDelete
 4. செந்தில்
  இதோ தேவாரத்தின் முதல் பதிகமான 'தோடுடைய செவியன் ' . இது சீர்காழி தளத்தில் பாடப் பெற்றது.

  1.1 திருப்பிரமபுரம்
  பண் - நட்டபாடை

  1 தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
  காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
  ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
  பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.1
  2 முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு
  வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
  கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
  பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.2
  3 நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி
  ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்
  ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்
  பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.3
  4 விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
  உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
  மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
  பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.4
  5 ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
  அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
  கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
  பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.5
  6 மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி
  இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்
  கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
  பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.6
  7 சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
  உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
  கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
  பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.7
  8 வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
  உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
  துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
  பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.8
  9 தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
  நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
  வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
  பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.9
  10 புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
  ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
  மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்
  பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே. 1.1.10
  11 அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
  பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
  ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
  திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே. 1.1.11

  திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
  சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.
  திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

  திருச்சிற்றம்பலம்

  ReplyDelete
 5. பால கோபால் ஐயா

  தங்கள் வரவுக்கும் இனிய சொற்களுக்கும் மிக்க நன்றி. அடிக்கடி இந்த வலைப்பதிவை பார்க்குமாறு வேண்டுகிறேன்.

  வேங்கடசுப்ரமணியன்

  ReplyDelete
 6. பரமேஸ்வரன் ஐயா

  தங்கள் வரவுக்கும் உணர்ச்சி பூர்வமான பகிர்தலுக்கும் நன்றி. ஆனந்தம் சில நேரங்களில் சிரிப்பை வரவழைத்தாலும் , பல நேரங்களில் கண்ணீரை அல்லவா உதிர்க்க வைக்கிறது ? அதுவும் சாதாரணமான நீரா உயிரின் ஆழங்களில் இருந்தல்லவா அது உதிர்கிறது ?

  வேங்கடசுப்ரமணியன்

  ReplyDelete