Sunday, May 19, 2013

மாமிசமும் ஆன்மீகமும்

உணவும் ஆன்மீகமும்

ஒரு வருடத்துக்குப் பின்பு எழுத வருகிறேன். இப்போது கதை அல்ல. ஒரு விஷயம் படித்து அதற்கு என்னளவில் மறுப்பும் மேல் விளக்கமும் தர இதை எழுதுகிறேன்.  
தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் இந்த கட்டுரை என் கவனத்தைக் கவர்ந்தது.  உணவும்  விதியும் 

ஒரு வாசகர் அவரிடம் மாமிசம் ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்றதா என்று கேட்க , அதற்கு தன பாணியில்  விளக்கியிருந்தார். அதில் கொஞ்சம் உடன்பாடு,  சிறிது மாற்றுக் கருத்து என்னுடையது.

இந்த புலால் விஷயம் தொன்று தொட்டது என்று ராதா ஷியாம் பிரம்மச்சாரி போன்ற ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. ராமர் , சீதை மற்றும் இலக்குவன் மூவரும் புலால் உண்டதை வால்மீகியே பதிவு செய்திருக்கிறார் என்று பிரம்மச்சாரி கூறுகிறார்.வேத காலத்தில் பிராம்மணர்களே இறைச்சி , அதுவும் பசு இறைச்சியை உண்டனர் என்கிறார் அவர். தேவி பாகவதத்தில்  விசுவாமித்திரர் பஞ்ச காலத்தில் ஒரு புலையன் சேமித்து வைத்திருந்த நாயின் மாமிசத்தை திருடி உண்டதாக வருகிறது என்று தம்பண்ண செட்டியார் சமீபத்திய நூலில் கூறுகிறார்.

ராதா ஷியாம் பிரம்மச்சாரி கீதையில் எங்குமே புலால் உணவைக் கண்டித்து நேரடியாக ஒரு வார்த்தை கூட இல்லை என்கின்றார். 

இது இப்படி இருக்க , இன்றைய ஆன்மீக குருக்கள் , சிந்தனையாளர்கள் அனைவரும் புலால் விலக்கம் ஆன்மீக முன்னேற்றத்துக்கு அடிப்படைத் தகுதி என்கின்றனர். திருக்குறளும் , திருமந்திரமும் புலாலை வன்மையாகக் கண்டிக்கின்றன. 

தன்னூண் பெருக்கிற்குப் பிறிதூண்  தான் தின்பான் 
எங்ஙனம் ஆளும் அருள் 

இது திருக்குறள்.

ஜெயமோகன் அப்படியெல்லாம் இல்லை என்று கூறி , விவேகானந்தரையும் , சீன ஞானிகளையும் உதாரணம் காட்டி  அவர்கள் புலால் உண்டவர்கள் என சுட்டுகிறார். 

இப்போது எல்லாருக்கும் சந்தேகம் வந்திருக்கும். இந்த பின்னணித் தகவல்களால் சற்று குழம்பி , புலால் நன்மை தானோ என்ற கருத்தும் வந்திருக்கலாம். முதலில் நவீனத்தில் இருந்தே செல்வோம். விவேகானந்தர் ஒரு இடத்தில் ஆகாரத்தைப் பற்றிக் கூறுகையில் " ஒரு கால கட்டம் வரை உணவில் கவனமாக இரு. புலால் தவிர்.  முதிர்ந்த கால கட்டம் ஒன்று வரும் அப்போது நீ என்ன உண்டாலும் அது உன்னை ஒன்றும் செய்யாது." என்கிறார். இது வங்காளத்தில் கொடுக்கப் பட்ட அறிவுரை. அங்கே பிராம்மணர்கள் கூட மீன் சாப்பிடுவார்கள். 


சமீபத்தில் வெளிவந்த விரிவான வாழ்க்கைக் குறிப்பில் , யாரிடம் என்ன வாங்கி உண்கின்றோம் என்பதில் கவனம் செலுத்தியே இருந்திருக்கிறார் சுவாமி விவேகானந்தர் . அமெரிக்காவில் இரண்டாம் முறை இருந்த போது " நானும் அந்தக் கிழவர் (ராமகிருஷ்ணர் ) மாதிரியே ஆகிவிட்டேன். ஒரு சிலர் சமைத்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை " என்று கூறி ஒரு ஓட்டலில் சாப்பிட்டதை வாந்தி எடுத்தாராம்.


அடுத்தது கீதை. கீதையில் உணவு பற்றி வரும் குறிப்புகள் இதோ
1 . அளவான உணவே யோகிக்கு ஏற்றது. (அதிகம் உண்ணாமலும் பட்டினி இல்லாமலும் இரு.) (ப கீ 6-16)
2 . சாத்வீக உணவு என்பது ஆயுள், அறிவு, பலம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, ருசி, ஆகியவைகளை வளர்த்தும், ரசம் (நீர்பிடிப்பு) , மற்றும் பசை (எண்ணெய் பிடிப்பு)  உள்ளது வாகவும் , வலிவு தருவது வாகவும் , இன்பம் விளைவிப்பதுமாக இருக்கும்.
 3 . கசப்பு, புளிப்பு,  துவர்ப்பு , அதிக சூடு, வறட்சி, எரிச்சல் மிகுந்தவை ராஜச உணவுகள் . இவை துக்கம், சோகம், நோய் ஆகியவற்றை உண்டு பண்ணும்.
4 . சாமம் கழிந்த , சுவை அற்ற, ஊசிப் போன, பழைய , எச்சில் செய்யப்ப்பட்ட, மற்றும் தூய்மை அற்றது தாமச உணவு.  (ப  கீ 17-8,9,10)


 ஹோமியோபதி என்னும் மருத்துவம் பற்றி இங்கே கொஞ்சம் சொல்ல வேண்டும். மனித உடல் ஆரோக்கியமான நிலையில் இருக்கையில் ஒருவருக்கு ஒரு செடியின் சாறோ , ஒரு வேதிப் பொருளோ  அளிக்கப் பட்டு அவர் உடல் மற்றும் மனம்  அந்த புது பதார்த்தத்துக்கு எப்படி எல்லாம்  ஆட்பட்டு மாற்றம் அடைகிறது என்பது ஆராயப் படுகிறது. அவை குறிப்பெழுதப் பெறுகின்றன. பிற்பாடு வேறு யாருக்கேனும் அதே விதமான மாற்றங்கள் கொண்ட உடல் நோய் இருந்தால் அதே பதார்த்தம் வீரிய  படுத்தப்பட்டு  அந்த நபருக்கு கொடுக்கப் படும் பொது அந்த நோய் குணமாகிறது.  இது ஹோமியோபதியின் எளிய விளக்கம்.  இன்று ஹோமியோபதியில் மூன்றாயிரத்துக்கு மேற்பட்ட மருந்துகள் உள்ளன. அவை யாவும் ஆரோக்கியமான மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு , விளைவுகள் பதிவாகி உபயோகத்துக்கு வந்தவை. இன்னும் அந்தப் பட்டியல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டுவது மன மாற்றம். உதாரணம் ஊமத்தை. இந்த சாற்றை கொடுத்தால் மனம் தடுமாறும், வார்த்தை குழறும். இடை விடாது சிரிப்பார் அல்லது இடைவிடாது பேசுவார். இருட்டைக் கண்டால் பயம். பேய்களைப் பார்த்தது போல பேசுவார். மொத்தத்தில் ஒரு பயித்தியம் பிடித்த நிலை. இதன் முழு விளைவுகளை  இங்கே படிக்கலாம். 

நம் ஊரில் ஊமத்தை காய் தின்றால் பயித்தியம் பிடிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் பயித்தியம் பிடித்த ஒரு மனிதருக்கு பல சமயம் ஊமத்தை மருந்தாகவும் ஆகிறது ஹோமியோபதி விதியின் படி.

நான் இதை விரிவாக எழுதக் காரணம் அந்நிய உணவுகள்/ பொருட்கள் ஏற்படுத்தும் மன மாற்றம் நிஜமே என்பது.  காமத்தை தூண்டுகின்ற பொருட்கள் ஆன்மீகத்துக்கு தடைக் கற்கள். ஆன்மீக ஆற்றலை விரயம் செய்பவை. வெங்காயம், பூண்டு, முருங்கை, போன்றவை இந்த வகையை சேர்ந்தவை. துளசி, வேம்பு போன்றவை இதற்கு எதிர் ரகத்தைச் சேர்ந்தவை. அவை மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இதற்கெல்லாம் பெரிய ஆராய்ச்சி தேவை இல்லை.


மாமிசம் மனித உடலின் அதன் தன்மையை ஏற்றி விடும். ஜெயமோகன் சொல்வது போல் இது குடல் சார்ந்தது அல்ல. தூல உடல் என்பது புலன்கள், மனம், புத்தி, மற்றும் பிராணன் சார்ந்தது. உலகின் ஒவ்வொரு பொருளும் பிராணனை பல வகைகளில் கொண்டுள்ளன. மனித உடலில் அவை பலவேறு வகைகளில் இயங்குகின்றன. மனிதனின் பிராணனை அந்த அந்நிய பிராணன்கள் தாக்கி மாற்றும் போது நோய் உருவாகிறது. ( மேலும் படிக்க இங்கே)

மாமிசம் உடல் பலத்தை ஏற்றுகிறது என்பது ஒரு வகையில் உண்மை. ஆனால் பல வகைகளில் பலவீனத்தை ஏற்படுத்திய பிறகே அது நிகழுகிறது. 

2 comments:

 1. நான் வால்மீகி ராமாயணம் சமீபத்தில் படித்தேன்.. அதில், ராம லக்ஷ்மணர், குகன் கொடுத்த கறி விருந்தை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிடவில்லை..

  அதோடு, சித்ரகூடத்தில் புதிய குடிசை அமைக்கும்போது, முதன் முதலில் வீடு புகுவதற்காக ஒரு மானை அடித்து நெருப்பில் வாட்டுகிறார்கள்.. ஆனால் சாப்பிட்டதாக சொல்லவில்லை..

  அப்படியிருக்க ராமாயணத்தில் மாமிசம் சாப்பிட்டதாக எந்த இடத்தில் வருகிறது என்று தெரிந்து கொள்ளலாமா?

  ReplyDelete
 2. சுந்தர காண்டத்தில் நான் படித்தது இது (லிப்கோ). அனுமன் சீதையிடம் ராமனுடைய நிலையை விவரிக்கையில், "தங்கள் பிரிவால் ராமன் , மது மாமிசங்களை விட்டார்" என்று ஒரு ஒரு சொற்றொடர் வருகிறது.

  http://www.valmikiramayan.net/utf8/sundara/sarga36/sundara_36_frame.htm

  36 வது சர்கம், 41 வது ஸ்லோகம்

  न मांसं राघवो भुङ्क्ते न चापि मधुसेवते |
  वन्यं सुविहितं नित्यं भक्तमश्नाति पञ्चमम् || ५-३६-४१

  41. raaghavaH = Rama; na bhuNkte = is not eating; maamsam = meat; na sevate = not indulging in; madhuchaapi = even spirituous liquor; nityam = everyday; paN^chamam = in the evening; ashnaati = he is eating; bhaktam = food;vanyam = existing in the forest; suvihitam = well-arranged (for him).

  "Rama is not eating meat, nor indulging even in spirituous liquor. Everyday, in the evening, he is eating the food existing in the forest, well arranged for him."

  ReplyDelete