Friday, January 23, 2009

தமிழ்ப் பாட்டி


அவ்வைத் தமிழ்

என் காலத்தில் (ஐயோ, ரொம்ப ஒன்றும் இல்லை , சுமார் முப்பத்தைந்து வருடம் முன்பு தான்), சிலேட்டும பலப்பமும் கையுமாய் பள்ளிக்கு போனவன் எல்லாம், அவ்வையை அறியாமல் இருக்க முடியாது. ஏன், இன்றும் அவ்வை இல்லாமல் தமிழ் ஆரம்பப் பாடம் இல்லை.

ஆத்திச் சூடியும், கொன்றை வேந்தனையும் கொடுத்த கவித் தெய்வம் அவ்வை. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற வாக்கு என் வயதில் எல்லோர் மனதிலும் வேரூன்ற அந்தப் பாட்டியன்றோ காரணம் ? மணப் பிராயத்திலேயே இளமையைத் துறந்து, என்றும் முதுமை வேண்டி நின்ற கருணைத் தெய்வம் அவள். உலகில் அல்லலுறும் மானிடர் பேரில் அவ்வைக்கு அவ்வளவு பரிவு !

அவ்வையார் என்பவர் யார் , எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்பது பற்றி வரலாற்றாளர்கள் பல விதமாய்ப் பேசுகிறார்கள். ஆனால் என் சுதந்திரம் பழத்தை மட்டுமே ருசிப்பது; வேரை நோண்டுவதல்ல. அவ்வையின் கனிகளாகிய பாடல்கள் மட்டுமே எனக்கு வேண்டும்.

சிறு வயதில் ஏனோ தானோ வென்று படித்தாலும் , முப்பது வயதுக்கு மேல் தான் அவ்வையின் அருமை எனக்குப் புரிந்தது. நல்வழியும், மூதுரையும் தமிழ்ப் பொக்கிஷங்கள் என்பது என் மண்டைக்கு அப்போதுதான் உறைத்தது . நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பழ மொழிகள் அவ்வையின் பாட்டுக்களிலிருந்தே கடன் வாங்கியவை. இந்தப் பாட்டைக் கவனியுங்கள்

சித்திரமும் கைப்ப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்;-
நடையும்
நடைப்பழக்கம்; நட்பும்
தயையும்
கொடையும் பிறவிக்குணம்.

இந்தப் பாடலின் சொல்லும் , பொருளும் இடி போன்ற முழக்கத்தோடு இறங்கும். ஆனால் இதனுள்ளே குறைந்தது இரண்டு பழ மொழிகள் நாம் தேடிக் கண்டு பிடிக்கலாம். அவ்வை தமிழ் மொழியோடும் மக்களோடும் இரண்டறக் கலந்து விட்டவள்.

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு- மேலைத்
தவத்தளவே
ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்தளவே
ஆகுமாம் குணம்.

இதிலும், கடைசி வரி அடிக்கடி சுட்டப்படும் ஒன்றாகும்.

நான் அவ்வையின் பாடல்களில் மிகவும் விரும்பும் ஒன்று இதோ

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவல்ல
நட்டாலுநண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும்
வெண்மை தரும்.-----------------------------(மூதுரை- 4)

(பால் எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாததைப் போல, எதிரிகள் எவ்வளவு பழகினாலும், நண்பர்கள் அல்லர். சங்கைச் சுண்ணாம்புக் காளவாயில் இட்டுச் சுட்டாலும் அது கருக்காமல் வெண்மையான சுண்ணத்தையே தருவது போல, நற்பிறப்பு வாய்த்த மக்கள் வறுமை வரினும் மேன்மையோடு இருப்பார்)

இதோ இன்னொன்று

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று
தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா
வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே
தான் தருதலால்.

(நிமிர்ந்து தளராது வளரும் தென்னை வேரிலே ஊற்றிய நீரைச் சுவையாக்கி தலையில் இளநீராகத் தருவது போல , தான் செய்த நன்றி பலமடங்காகத் திரும்பி வரும். ஆகவே அது என்று வரும் என்பது குறித்துப் பேசற்க.)

மேலே கூறியவை அனைத்தும் சமுதாய, மற்றும் அறவழிப் பாடல்கள். அவ்வைக்கு ஒப்புயர்வற்ற ஆன்மீகப் பக்கம் ஒன்று உண்டு. விநாயகனின் சிறந்த பக்தை அவ்வை என்பது நாம் அறிந்ததே. "வாக்கு உண்டாம், நல்ல மனமுண்டாம் ..." என்று தொடங்கும் பாடல் அவ்வையுடையது தான். ஆனால், என் அன்றாட ஆன்மீக வழிபாட்டிற்கு நானும் என் குடும்பமும் பாடும் ஒரு பாடல் அவ்வை வாய் வந்ததுதான். அது பாடல் என்று சொல்வதை விட, யோக நெறியின் முற்றிய விளக்கம் என்றே சொல்லலாம். அந்தப் பாட்டு " விநாயகர் அகவல்"

அந்தப் பாட்டு இதோ கீழே உள்ள இணைப்பில்.சொடுக்குங்கள். நம் தமிழகத்தின் சிகரப் பாடகர், அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய இறவாப் பாடல்.விநாயகர் அகவல் முழுவதையும் படிக்க விரும்புபவர்கள் இதோ இந்த இணைப்பிலிருந்து தங்கள் கணினிக்கு இறக்கிக் கொள்ளலாம். கீழ் உள்ள வரியின் மேல் சொடுக்குங்கள்.

விநாயகர் அகவல் பாட்டு

முடிக்கவே மனமில்லை. இதோ ஒரு முத்தாய்ப்பு.

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்- ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.

( ஆறு கோடையில் வற்றிய நிலையிலும் தன் மணல் ஊற்றால் உலகுக்கு நீரூட்டும். அது போல் நல்ல குடிப்பிறந்தார் வறியவர் ஆனாலும் மனம் ஒப்பி இல்லை எனச் சொல்ல மாட்டார்.)

ஔவையார் உங்களையும் சிந்திக்கத் தூண்டினால் மகிழ்வேன்.

9 comments:

 1. good one venkat.. its a sad fact that there are not much people to highlight the greatness of avvaiyar..

  ReplyDelete
 2. In the verse "nIraLavE" the first sentence misses the word "nUlaLavE' at the end

  ReplyDelete
 3. மிக்க நன்றி ஸ்ரீனிவாசன் ,
  "நூலளவே" வார்த்தை சேர்த்துக்கொள்ளப்பட்டது. அடிக்கடி இந்த வலைப் பதிவை பார்க்குமாறு வேண்டுகிறேன்.
  வெங்கட்

  ReplyDelete
 4. Really I enjoyed the contents. A welcome effort. There is no feature in life which Avvai Paatti's poems have not touched.
  May God bless you
  K Venkatachari
  kvchari@gmail.com

  ReplyDelete
 5. Excellent blog. n the storm of life we struggle through myriads of stimuli of pressure, stress, and muti-problems that seek for a solution and answer. We are so suppressed by the routine of this every life style that most of us seem helpless. However, if we look closely to ancient techniques we shall discover the magnificent way to understand and realize the ones around us and mostly ourselves. If only we could stop for a moment and allow this to happen. May all beings be happy (Loka Samastha Sukhino Bhavanthu)

  ReplyDelete
 6. நன்றி திரு வெங்கடாச்சாரி, திரு பட்டாத்திரி

  உங்கள் விஜயத்திற்கு நன்றி. அவ்வைத் தமிழ் அமுது அவ்வளவு இனியது. அனைவரையும் ஈர்க்கும். அடிக்கடி இந்த பதிவை பார்க்கவும்.

  வெங்கட்

  ReplyDelete
 7. Dear Friend,
  You can find the full english translation of Vinayagar Agaval in my web site
  www.geocities.com/ramya475, With best wishes, Ramachander

  ReplyDelete
 8. Very interesting and useful.
  Kumar
  Coimbatore

  ReplyDelete
 9. ///என் காலத்தில் (ஐயோ, ரொம்ப ஒன்றும் இல்லை , சுமார் முப்பத்தைந்து வருடம் முன்பு தான்), சிலேட்டும பலப்பமும் கையுமாய் பள்ளிக்கு போனவன் எல்லாம், அவ்வையை அறியாமல் இருக்க முடியாது.////

  உண்மை...!
  முற்றிலும் உண்மை...!

  ///நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
  நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு- மேலைத்
  தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
  குலத்தளவே ஆகுமாம் குணம்.///

  இந்தப்பாடலை என் தந்தையார்...
  தான் நான்காம் வகுப்பு வரை படித்திருந்தாலும்.... எப்போதும்....
  அவ்வப்போதும் மேற்கோள் காட்டிக்கொண்டே இருப்பார்...!

  அவ்வரிகள் நினைவுக்கு வரவே...
  கூக்ளியில் தேடியபோது
  தங்கள் இப்பதிவை பார்த்தேன்...!
  "குப்பைகளுக்கிடையில் வைரமாய் தங்கள் இந்த "தமிழமுதம்"....!
  "வைரம்" எங்கே இருந்தாலும்
  அது வைரம்... வைரம்தான்.
  அதன் மதிப்பு குறையாது.
  நன்றி வேங்கடசுப்ரமணியன்...!
  வாழ்த்துக்கள்...
  தொடரட்டும் தங்கள் பணி...!

  நான் மூன்றாம் வகுப்பு வரை மரபிரேம் போட்ட மாவுப் பலகையில் கல்லு பலப்பம், மாவு பலப்பம் கொண்டு எழுத்து படித்தவன்.. அதன்பிறகுதான் a, b, c, d என்ற ஆங்கில எழுத்துக்களை படித்தவன்... ஐந்தாம் வகுப்புக்குப் பிறகுதான் கணக்கு, சரித்திரம், பூகோளம், விஞ்ஞனம் என்ற பாடங்களை படித்தவன்...

  ஆசான் சொன்னதைவிட எந்தந்தையார் வாழ்வியலுக்கு தேவையானவற்றை... குறிப்பாக "நீரளவே..." போன்ற பாடல்களை அவ்வப்போது எடுத்துக்காட்டியதால்தான்... அவற்றை கொஞ்சமாவது கடைபிடித்து இன்றும் "கொஞ்சோண்டு மனிதனாய் " வாழ்ந்து வருகிறேன்...

  இவற்றுக்கு காரணமே.... நம் தமிழ் முன்னோர் சொன்ன பாடல்கள் அனைத்தும் வாழ்வியலுக்கு மட்டும் தேவையானது...

  இப்போதுள்ள கல்வி போல "வணிக நோக்கிலோ"... "சம்பாதிக்கும் நோக்கிலோ"... "காலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலோ" உருவாக்கப்பட்ட... போதிக்கப்பட்ட.. கற்பிக்கப்பட்ட கல்வி அல்ல...! அவ்வையார், நாலடியார், திருக்குறள் போன்ற நூல்கள் கற்பித்தது "வாழ்வியலை" மட்டுமே... அதுவும் மனிதன்... மனிதனாய் வாழ... மேன்மையுற... கற்பிக்கப்பட்ட வரிகள்...!

  தமிழ்ப் புலவர்கள் வள்ளுவன் சொல்லாததையோ...! அவ்வையார் சொல்லாததையோ...! நல்லாடியார் சொல்லாததையோ...! உலகத்தில் எந்த மொழியிலும் எந்த நாட்டிலும் எந்தப் புலவனும் இதைபோல சொல்லவில்லை...! மனிதன், விலங்கு, பூல்பூண்டு, மரம், செடிகொடி, வானம், பூமி, கோள்கள், இயற்கை, சீரழிவு இப்படி அனைத்தும் சொல்லப்பட்டுள்ளது...!

  ReplyDelete