Thursday, January 15, 2015

நன்செய் யக்ஞம்

 ண்டர்நட்டில் அனைத்து தமிழ் செய்தித் தாள்களையும் அன்று சுந்தரம் ஆராய்ந்து தகவல்களை ஒரு பேப்பரில் அவசரமாக எழுதிக் கொண்டார்.

எல்லாமே இடம் விற்பனைக்கு விளம்பரங்கள்..ஒன்றிரண்டை அடிக்கோடிட்டு வைத்தார். போனை எடுத்து முதல் நம்பரை கூப்பிட்டார். 
" இது புளியம்பட்டி முத்துசாமி சார் வீடுங்களா ?" 
"ஆமாம் . என்ன விஷயங்க ?"
"இடம் விற்பனை விஷயம் "
"சொல்லுங்க நான் தான் முத்துசாமி."
"உங்களோட எட்டு   ஏக்கர் பூமி பத்தி தான். விவரம் சொல்லறீங்களா ?"
"நல்ல செம்மண் பூமி கம்மாய்க் கரைக்கு சமீபம். கிணறு உண்டு. கம்மாய் வத்தினதுல கிணத்துல தண்ணி இல்ல. பட்டா , சிட்டா, அடங்கல் வில்லங்கம் இல்லாம இருக்கு.நெல்லு, பருப்பு, வாழை, எல்லாம் அமோகமா விளைஞ்ச பூமி "
" என்ன விலை சொல்லறீங்க ?"
சற்றே தயங்கியது குரல்." மொத்தமா முப்பது  லட்சம் கிடச்சா தேவலை. இது சுத்தமான விவசாய பூமி. ரோட்டுல இருந்து அஞ்சு கிலோமீட்டர் தள்ளி இருக்கறதால தான் இந்த ரேட்டு. ரோட்டு மேலே ஏக்கரா இருபதுக்குப் போயிட்டு இருக்குது."
"சரிங்க . நான் இப்பவே கிளம்பி வர்ரேன்.புளியம்பட்டி வந்ததும் கூப்பிடறேன். தோட்டத்துக்கு வழி சொல்லுங்க "

சுந்தரம் முத்துசாமியின் தோட்டத்தை அடைந்த போது உச்சி வெய்யில் நேரம். அந்த வறட்சியிலும் நிலம் காவி பரப்பிய களம் மாதிரி இருந்தது. மூலையில் அவரது வீட்டை அடைந்ததும் திண்ணையில் அமர்ந்தனர். 
"வாங்க என்று வரவேற்ற அவர் மனைவி மோர் கொண்டு வந்து வைத்தாள்.  ஒற்றை நாடியான , வேலைப் பளுவில் இறுகிய தேகம். முற்றத்தின் கல் பாவிய தரை, தேக்குத் தூண் , சற்றுத் தள்ளி இருந்த பெரிய தொழுவம் எல்லாம் ஒரு நன்கு வாழ்ந்த குடும்பத்தின் பெருமையை காட்டின.

" என் பேர் சுந்தரம். மத்திய அரசு வேலைல இருந்து நேத்து தான் ஓய்வு. நானும் ஆம்படையாளும் தான்.பையன் வெளிநாட்டுல .எனக்கு இந்த மாதிரி விவசாய நிலம் வாங்க ஆசை. அதான் " .
அந்த விவசாயியும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு முத்துசாமி  சுந்தரத்தைப் பார்த்து , "எல்லை எல்லாம் காட்டிட்டு வர்றேன் வாங்க"  என்று அழைக்க,
 "அதெல்லாம் பரவாயில்ல . கிரயமாகும் போது பாத்துக்கலாம். அடுத்த வாரம் அக்ரீமெண்டு போட்டுக்கலாம். அஞ்சு லட்சம் தர்ரேன்.என் பையன் ஆறு மாசம் கழிச்சு வருவான். அப்போ கிரயம் வச்சுக்கலாம். அவன் பேர்ல தான் வாங்கப் போறேன்." என்றார் சுந்தரம்.

தன்னுடைய விலாசம் , தொலை பேசி எண்ணெல்லாம் தந்து விட்டு அவர் சென்ற பிறகு முத்துசாமிக்கு நம்பவே முடியவில்லை. அண்டை அசலில் எல்லாரும் நிலத்தை விற்று விட்டு பெண் கல்யாணத்துக்கும், பையன் படிப்புக்கும் செலவு செய்ய நினைத்து , விலைக்கு ஆள் வராமல் தவித்துக் கொண்டிருக்க, தனக்கு இவ்வளவு எளிதாக , விலையும் பேரம் பேசாமல் இந்த மனுஷன் அமைந்தாரே என்று நிம்மதியாய் இருந்தது  . மனம் ஒதிமலை முருகனுக்கு நன்றி சொல்லியது.

டையில் பல தடவை சுந்தரம் கூப்பிட்டு பேச, அங்கே ஒரு நெருக்கம் உருவாகி விட்டிருந்தது. முத்துசாமி அவரை ஐயரே என்று அழைக்கத் தொடக்கி விட்டார். இவரும் அவரைக் கவுண்டர் வாள் என்று கூப்பிட  ஆரம்பித்து விட்டார்.. அக்ரிமண்ட் போடும் தினம் சுந்தரமும் அவர் மனைவி பாக்கியமும் இருந்தனர். சாட்சிக்கு அவர் நண்பர் ராமு.கையெழுத்திட்டு பணம் கொடுத்து வெளியே வருகையில், சுந்தரம் முத்துசாமியிடம், " கவுண்டர் வாள்  இன்னிக்கு எல்லாம் சுப சகுனம் போங்க உங்க பூமியில பசு மாடு குங்குமத்தோட எதிரே நின்னது, அங்க பிள்ளயார் கோவில்ல பூ விழுந்தது எல்லாம் ரொம்ப திருப்தி. எல்லாம் நான் நினைத்த படியே நடக்கறது. இப்போ உங்கள்கிட்ட நான் ஒண்ணு கேப்பேன். தப்பா நினைக்கப் படாது." என்று பீடிகை போட்டார்.

முத்துசாமியின் நெற்றி சுருங்கியது. அய்யர் நிபந்தனை போடுவது இது தான் முதல் முறை . "சொல்லுங்க " என்றார்.

" நானும் என் ஆத்துக் காரியும், காசி ,  கயை , சோமனாதம், ரிஷிகேஷ் , அயோத்தியா அப்படீன்னு ஒரு பெரிய தீர்த்த யாத்திரைப் பட்டியலே வச்சிண்டிருக்கோம். இங்க வந்து நாங்க இப்போதைக்கு விவசாயம் பண்ணப் போறது எல்லாம் இல்லை. நீங்களே எப்பவும் போல கிரயம் வரைக்கும் மட்டும் இல்ல, அதுக்கு அப்புறமும், என் சார்பா இந்த பூமியைப் பாத்துக்குங்க . என்னைப் பொறுத்த வரைக்கும் இது முதலீடு மட்டும். எனக்கு விளைஞ்ச எந்தப் பொருளும் வேண்டாம். உங்களுக்கு விவசாயம் நல்லா இருக்க என்னாலே முடிஞ்சது கூட செய்யறேன். எனக்குத் தெரிஞ்ச ஐ ஏ எஸ் ஆபீசர்  இருக்கார். உங்க குளத்தை தூர் வார சொல்லறேன். நான் கொடுத்த பணத்துல ஒரு அம்பதாயிரம் செலவு பண்ணி அதோ அங்கே ஒரு முப்பது செண்டுல ஒரு குளம் தோண்டுங்க . நான் கிரயத்துக்கு வரும் போது அதையும் திருப்பிக் கொடுத்துடறேன்." 

" ஐயரே எனக்கு விளங்கல்லீங்க. நானே வித்துட்டு நானே பின்ன நிலத்துல இருக்கவா ? உங்களுக்கு ஒண்ணும் வேண்டாமா ? அப்படி எல்லாம் முடியாதுங்க . நீங்க குத்தகையாவது வாங்கிக்குங்க." என்று கூற,
" சரி உங்க பிரியம் . முடிஞ்சதைக் குடுங்க." என்று கூறி விட்டு , பாக்கியத்தைப் பார்க்க, மாமி கையோடு கொண்டு வந்திருந்த வேட்டி துண்டு , புடவை ரவிக்கை எல்லாம் தாம்பாளத்தில் இட்டு, தேங்காய் பழம் தாம்பூலத்தோடு கொடுத்து கவுண்டருக்கும், மனைவிக்கும் கொடுத்தனர்.

"இந்த பூமியில் உங்க குடும்பம் சிறப்பா வாழணும் " என்று அவர்களை ஆசீர்வதித்து விட்டு சுந்தரம் புறப்பட்டு சென்று விட்டார். சென்றவர் சும்மா இல்லை. தன நண்பர் மற்றும் தெரிந்தவர் அனைவரையும் தொடர்பு கோண்டு பேசி , கண்மாயை இரண்டு மாதத்துக்குள் தூர் வாரச் செய்து விட்டார். கிராம மக்கள் தங்கள் சொந்த செலவில் கண்மாய்க்கு செல்லும் வாய்க்கால்களை செப்பனிட்டு விட்டனர். அடுத்த மாத மழையில் கண்மாய் பாதி நிரம்பி விட்டது. ஊரில் எல்லாக் கிணறும் ஊறி விட்டது.

" ஐயரே , நாங்க இப்போ நெல்; போட்டிருக்கோம். மூலை மேட்டுக் காட்டில புல்லு போட்டிருக்கேன். மாட்டுக்கு போதும். நீங்க குடுத்த காசுல தான் முட்டுவளி" என்று போனில் சொல்லி சிரித்தார் முத்துசாமி . "நீங்க விவசாயத்தைக் கவனியுங்க. நான் இந்த வாரம் காசி கிளம்பறேன். நாலு மாசம் ஆகும்.இரண்டு மாதம் தாமதமாக பொங்கல் சமயத்தில் வருகிறேன். கிரயம் அப்பா பாத்துக்கலாம். பணம் ஒண்ணும் அவசரம் இல்லயே ? என்று வினவ , கவுண்டர்  , " பொங்கலுக்கே பாத்துக்கலாம் வாங்க" என்று கூறி விட்டார். அய்யர் ரயிலேறும் போது விவசாய தம்பதியினர் கோவை ரயில் நிலையத்துக்கே வந்து வழியனுப்பினர்.   

பார விளைச்சல் கண்டது அந்த வருடம்.  நெல் மூட்டையை எண்ணியதில் முதலீடு போக நான்கு லட்சம் மிஞ்சும்  என்று பட்டது..  நாளை பொங்கல். அய்யர் வந்து விடுவார். அவரிடம் காட்டிய பின்பு வியாபாரிக்கு கொடுக்க உத்தேசம்.

அய்யர் சற்று இளைத்திருந்தார். ஒரு பெரிய தாமிர செம்பில் கங்கை தீர்த்தம் இருவருக்கும் கொடுத்து பெண்ணுக்கும், பையனுக்கும், பசுவுக்கும் கொடுத்து பின்பு பூமியிலும் தெளிக்கச் செய்தார். முத்துசாமி பாக்கியம் மாமியை அழைத்து முதல் நெல் மூட்டையை வழங்க, , மாமி அதன் மேல் குங்குமம் இட்டு பெற்றுக் கொண்டாள்.

கவுண்டரும், அய்யரும் எழுந்து தொழுவம் பார்க்கச் சென்றனர். பசுவைத் தடவிய படியே, அய்யர் , முத்துசாமியை நோக்கி, "எப்படி எல்லாம் திருப்தியா ?" என்று கேட்க , முத்துசாமி ," என்னிக்கு உங்க கால் இந்த ஊர்ல பட்டதோ, நான் அன்னிக்கே ராமசாமிக் கவுண்டர் பேரனா மாறிட்டேன் சாமி. எங்க அப்பச்சி கொடும் பஞ்சத்துலயும் ஊரை விட்டுப் போகாம அந்தக் கம்மாயை வெட்டினாரு. இருந்த நெல்லு பூராவும் ஊருக்கு குடுத்தாரு. இப்ப எம்பது வருஷம் அதுதான் எங்களைக் காப்பாத்துச்சு. இப்ப ஏதோ எம் பையன் படிச்சு வெளியூரு போய் சம்பாதிப்பான்னு ஒரு ஆசை வந்ததும், சின்ன பஞ்சத்துக்கே என் குடும்ப ஆஸ்தியை வித்துப்புட்டேன். ஏதோ உங்க பெரிய மனசால இங்க பொழப்பாவது ஓடுது. எங்க இருந்தோ வந்த  நீங்க கம்மாயை வெட்டிக் குடுத்த பின்னால இந்த ஊர்ல விக்க நினச்சவன் எல்லாம் மாறீட்டான். ஒழுங்கா மட்டைப் புடிச்சிட்டு போறான்  "  துண்டால் முத்துசாமி கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

" அடேடே , கவுண்டரே என்ன இது.தைரியமா இருங்க. நீங்க விரும்பினா உங்க பூமியை நீங்களே வச்சுக்கலாம். வேறே இடம் நீங்களே வாங்கிக் குடுங்க . அது போதும் எனக்கு"  கன்றுக்குட்டியை அணைத்தபடியே சுந்தரம் சொன்னார். 

"என்ன சொன்னீங்க , நிஜமாவா சாமீ ? என் பாட்டன் பூமி எனக்கு திரும்ப கிடைக்குமா ? அய்யோ , ஒதிமலை முருகா! பார்வதீ இங்க வா ! அய்யரு சொன்னதைக் கேளு " என்று வீட்டை நோக்கி ஓடி விஷயத்தை சொல்ல , உடல் இறுகிய அந்த உழைப்பாளிகள் இருவரும் மனம்  இளகி தரையில் உட்கார்ந்து விட்டனர்.

" கவுண்டரே ! நீங்க நெல்லு வித்து பணம் குடுங்க போதும். துண்டு விழுந்தா அவசரம் இல்ல . எனக்கு அடுத்த அக்ரிமெண்ட்டுக்குத் தான் வேணும். அடுத்த ஊர்ல உங்கள மாதிரியே யாராவது இருந்தா காமிங்க . என்னால விவசாயம் பண்ண முடியாது. ஆனால் காசி விஸ்வனாதன் அருளால விவசாயம் பண்ணறவாளை அதுல இருந்து வெளியேறாம தடுக்கவாவது முடியறதே. என் ஓய்வுப் பணத்துல பாதியை இதுக்கு ஒதுக்கியிருக்கேன்.எனக்கு வட்டி வேண்டாம். நாராயணன் புண்ணியத்துல முதல் போகாது. நீங்கள்ளாம் என்னை விட  தன்மானம் கொண்ட மனுஷாள்.  அணிலாட்டம் நானும் இங்கே ஒரு ஓரமா செஞ்சுட்டுப் போறேன்."

ய்யரும் மாமியும் நெல் மூட்டையை காரில் ஏற்றிச் சென்ற பொது புழுதி படியும் வரை அந்தக் குடும்பம் பார்த்து நின்றது. காரில் மாமி, " ஏன்னா , சொன்ன மாதிரியே புரட்சி பண்ணீ ட்டேள் " என்று பெருமையோடு சிரிக்க , " பாக்கியம் , நாம ஜாம்பவான் மாதிரி. அவா ஆஞ்சநேயன் மாதிரி. அவாளோட உண்மை பலம் அவாளுக்கு காமிக்க வேண்டியது மட்டும் நம்ம வேலை. மீதியை பகவான் பாத்துப்பாண்டி. ஒரு வகையில இது நம்ம யக்ஞம்  மாதிரி. 

"ஆமாமா . பிரசாதமும் கொடுத்துட்டாரே " என்று பின் சீட்டில் இருந்த நெல் மூட்டையைக் காட்டி சிரித்தாள்.  

No comments:

Post a Comment