Thursday, October 23, 2014

மகாபாரதக் கல்வி ஏன் பொலிவிழந்தது ?

மகாபாரதக் கல்வி ஏன் பொலிவிழந்தது ?

(ஜெயமோகனின் "பெரிதினும் பெரிது"  கட்டுரைக்கு பதில்)

நேற்றைய தினமலர் நாளிதழோடு தீபாவளி சிறப்பு மலர் ஒன்று சேர்த்துக் கொடுத்தார்கள். உள்ளே  இன்ப அதிர்ச்சி . ஜெயமோகனின் " பெரிதினும் பெரிது " என்ற கட்டுரை. கிடைத்த இடத்தில் உட்கார்ந்து வாசித்தேன். மகாபாரதத்தின் பெருமையை, மகிமையை அறிந்தவர்களில் இன்றைய தமிழ் எழுத்தாளர்களில் ஜெயமோகனுக்கு ஈடாக யாரும்  இல்லை என்றே கூறி விடலாம். ஜெயமோகனின் இணைய தளத்தில் இப்போது<இங்கே> வாசிக்கக் கிடைக்கிறது.

அவரும் தன இணைய தளத்தில் தமிழ் மகா பாரதம் எழுதி வருகிறார்- புது வடிவத்தில். தினமும் ஒரு அத்தியாயம் எழுதி வருகிறார். அதிலேயே மூழ்கி இருப்பதால் , அது சம்பந்தமாக பல விஷயங்களை அனாயாசமாக , இயல்பாக இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.

வியாசர் மகாபாரதத்திப் பற்றிக் கூறுகையில் , "இங்கில்லாதது எங்கும் இல்லை " என்று கூறினாராம். இது எனக்கு முன்னமே தெரியும். ஆனால் மலையாள சினிமா எழுத்தாளர்  லோஹித தாஸ் கூறிய செய்தி எனக்கு தேன் போன்றது . "வ்யாஸோச்சிஷ்டம்  ஜகத்ஸர்வம் " ( வியாசனின் எச்சிலே ஜகம் முழுவதிலும் ) என்ற சொற்றொடரை அவர் நினைவு கூர்ந்து ஜெயமோகனுக்கு சொல்ல அவரும் அதை கொடுத்து விட்டார். எல்லாரும் படிக்க வேண்டி பரிந்துரைக்கிறேன்.

ஜெயமோகன் சமீப காலமாக மகாபாரதம் மற்றும் அது சார்ந்த படிப்பு தமிழ் நாட்டில் வீழ்ந்ததற்கு காரணம் தேடி , தன முடிவாக சிலவற்றை வைக்கிறார். இந்து மதம் மூன்று கட்டுமானங்கள் மேல் நிற்கிறது.அவை 1 . தத்துவம், 2. பக்தி மன  நிலை, மற்றும் 3.சடங்கு.  நாத்திகப் பிரச்சாரம் காரணமாக தமிழ் நாட்டில் உண்மை பக்தி குறைந்ததாகவும் , அதன் காரணமாக சடங்குகள் மேலோங்கிய ஒரு மதம் மட்டுமே இங்கு நீடிக்கிறது என்று கூறுகிறார்.

மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு இது உண்மையாகவே தெரியும். நான் மாறுபடுகிறேன். அதன் விளைவே இந்த கட்டுரை. முதலில் ஜெயமோகன் யார் என்று சற்று பார்த்து விட்டு முன்னகர்வது ஒரு சரியான ஆரம்பமாக இருக்கும். அவர் குழப்பமான காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் பிறந்தவர்.கிறித்துவர்கள் அதிகம் சூழ்ந்த நிலையில் வாழ்ந்தவர்.  திராவிடம் வேறு உச்சக் கட்டத்தில் அக்காலத்தில் பிரச்சாரம் செய்து இருக்கிறது. 

நம்மில் யாரைக் கேட்டாலும் தங்கள் பழக்க வழக்கங்கள் பெற்றோரிடம், அதுவும் குறிப்பாகத் தாயிடம் இருந்தே வந்ததாகக் கூறுவார்கள். ஆனால் அவருக்கு மதத்தைப் புகட்ட வேண்டிய தாய் ஒரு சுதந்திர மனப்பான்மை கொண்ட பெண்மணி. பைபிளும், எழுத்தச்சனும்  சேர்ந்து படித்தவர். ஜெயமோகன் தன்னுடைய இருபதாம் ஆண்டளவில் ஆர். எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்து தீவிரமாக இருந்து பின்பு விலகி , அரசு வேலையில் சேர்ந்த பின் கம்யூனிச அமைப்பில் சேர்ந்து அதன் பிரச்சாரத்திலும் தீவிரமாக இருந்து பின்பு எழுத்தாளர் ஆன பின், அதையும் நிராகரித்தவர். பின்பு நாராயண குருகுலத்தில் பற்றுக் கொண்டு அவர்களது வேதாந்தம் சார்ந்த மதத்தில் , நம்பிக்கையில் எழுதி வருகிறார்.

அவரது எழுத்தில் மேற்கூறிய அனைத்து நீரோட்டங்களின் தாக்கம் இருக்கும். தாயிடம் இருந்து மதம் கற்காததால் இயல்பாக அவருக்கு சடங்குகள் மீது பிடிப்பு இல்லை.

இந்தப் பின்னணியில் வைத்து  அவரது மேற்கூறிய வாசகத்தைப் படிக்கையில் இந்த முழு கட்டுரையின் குறைபாடு விளங்கி விடும். உண்மையில் இந்து மதத்தின் கட்டுமானம் 1. தத்துவம் 2 புராணம் மற்றும் 3. சடங்கு இந்த மூன்றின் மேலும் தான் உள்ளது.பக்திமன நிலை என்று இரண்டாவது காரணம் சுருக்கப் பட்டதற்கு அவரது இளமைச் சூழலே காரணம் என நான் நினைக்கிறேன்.

இந்த மூன்றும் தனித் தனியாக பார்ப்பவர்களுக்குத் தெரியாது. ஒவ்வொரு இனக்குழுவும் இங்கே தங்களுக்கென புராணம் வைத்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கென தனி சடங்கு முறைகள் (ஆகமங்கள்).  தனித் தத்துவ கோட்பாடுகள்.  தத்துவமும் , சடங்கும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்து கிடக்கிறது இங்கே.  புராணங்களிலும் மக்களின் வாழ்க்கை எப்படி சடங்கையும் தத்துவத்தையும் சமம் செய்து முன்னேறியது என்று வகை வகையாய் கதைகள் கிடைக்கின்றன. இந்த வாழ்க்கை முறைக்கு உபாசனை என்பது பெயர்.உபாசகனின் வாழ்க்கையில் சடங்கும், தத்துவமும் பிரிக்க முடியாதவை.

உதாரணத்துக்கு ஒரு சைவன் திருநீற்றிலும் மனிதனின் நிலையாமையை உணர்கிறான். ருத்திராக்ஷத்தில் இயல்பான துளையைப் பார்த்து அனைத்து கொட்டைகளின் வழியே ஊடுருவும் இழை போன்று பரமாத்மா மகேஸ்வரன் அனைத்து ஜீவன்களிலும் ஊடுருவி நிற்பதாக காண்கின்றான். சைவனின் , உணவு, படிப்பு அனைத்துமே அவன் வாழ்வின் தத்துவம், மற்றும் நம்பிக்கையின் கலவையே. ஒவ்வொரு குழுவிற்கும் இதே போன்று இங்கே அடையாளம் காட்டி விடலாம்.

மகாபாரதம் இங்கே சற்று உயர்ந்த பீடத்தில் இருக்கிறது. அது சைவமும், வைணவமும் தோன்றியதற்கு முன்பே தோன்றியதால் அதற்கு இந்த இரண்டு சம்பிரதாயங்களும் மதிப்பளித்தன.  ராமாயணமும் அப்படியே. 

மகாபாரதமும்  தமிழ் மண்ணும் ஒன்றாகப் பிணைந்தவை தான்.சங்க இலக்கியம் முதல் சென்ற நூற்றாண்டு வரை  பாரதம் நம் மக்களின் வாழ்க்கை முறையோடு பின்னிப் பிணைந்திருந்தது. மகேந்திர வர்ம பல்லவன் கிராமம் தோரும் பாரத மண்டபங்களை எழுப்ப ஆணையிட்டு மக்களுக்கு தினமும் பிரசங்கிக்க அந்தணர்களுக்கு நிவந்தம் கொடுத்தது வரலாறு. அவை இன்னும் உள்ளன. 

இப்படி இருக்க, ஏன் இதிகாசப் படிப்பு குறைந்தது ? 
1. நேருவியப் பார்வை. இது அகில இந்தியாவையும் பாதித்தது. தமிழகத்தை மட்டுமல்ல. நேருவிய லட்சியங்களைக் கைக்கொண்ட மூன்று தலைமுறைகள் தங்கள் இலக்கை மாற்றி வைத்தன. பொருளியல் சுதந்திரம் என்ற தாரகம் நோக்கி பாரதம் நகர்ந்தது. இதிலும் பிராம்மணர்கள் முன்னணி வகித்து விட்டனர்.ஜெயமோகன் கூறும் அனைத்து விஷயங்களும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

2. பிராம்மணர்கள் அருகிய சூழல்.: குமாஸ்தாக்களில் இருந்து அறிவியல் வல்லுநர் வரை பிராம்மணர்கள் சென்றது, பாரதத்தின் முதல் சோதனை. அது வரை கிராமம் தோரும் இதிஹாச, புராணப் பிரசங்கத்துக்கு அமைப்புக்கள் இருந்தன. இது தவிர எப்போதும் சஞ்சாரத்தில் இருக்கும், பண்டிதர்கள் , துறவியர் என எல்லாரும் கிராமங்களில் தங்கி தர்ம பிரச்சாரம் செய்ததால் இந்தப் பாரம்பரியம் நீடித்து வந்தது. பிராம்மணர்களின் வெளியேற்றத்தால் அது குலைந்தது. ஓரிருவர் தவிர , பெரும்பாலும் எல்லாரும் இதிகாசங்களை வாய்மொழியாகவே கற்றவர்கள். 

இந்த நிலையில் தான் மகாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் வெளி வரத்தொடங்கின. கும்ப கோணப் பதிப்பு 1930 முதல் தொடங்கியது. 1952 ஆம் ஆண்டு முதல் அதுவும் நின்றது. பின்பு ராஜாஜியின் குறுகிய பதிப்பு, சோ வின் 'மகாபாரதம் பேசுகிறது " போன்ற முயற்சிகள் மட்டுமே இங்கே நிகழ்ந்தன.

3. மதச் சார்பற்ற படிப்பு:மூன்று  தலைமுறையாக இந்த துரதிருஷ்டம் நம்மைப் பிடித்தாட்டுகிறது.

எந்தக் கால கட்டத்திலும் இந்த இரண்டு இதிகாசங்கள் மட்டுமே நம் வாழ்க்கை முறையின் போக்கை நிர்ணயித்தன. இந்தியா முழுவதும் ஒரே கால கட்டத்தில் இவைகள் பெருமையை இழப்பதைக் காணுகையில்   இந்த பாரதம் தழுவிய காரணங்களையே ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்ட நாத்திக இயக்கங்களினால் இந்த மாற்றம் ஏற்படக் காரணம் இல்லை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நம் புராண , இதிகாசப் படிப்பு முப்பது நாற்பதாண்டு காலமாக குறைந்தே வருகிறது.

அப்படியானால், தமிழகத்தில் நாத்திக இயக்கத்தால் ஏற்பட்ட தாக்கம் தான் என்ன ? முதலில் நாத்திக இயக்கம் இங்கே ஜாதிகளின் ஆதிக்கத்தை குறைக்கவோ, பகுத்தறிவை புகுத்தவோ வரவில்லை. அவர்களிடம் ஆன்மிகம் குறித்த தெளிவு இல்லை. முதிர்ச்சியும் இல்லை. அவர்களது நாத்திகம்  சமுதாய அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவே ஏற்படுத்தப்பட்டது. ஈ வெ ரா சமுதாய அதிகாரத்தை கைப்பற்றிக் கொடுத்தார். அண்ணாதுரை மற்றும் அவரின் சீடர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நாத்திக இயக்கத்தை உபயோகப் படுத்தினர். 

அந்த இயக்கத்தின் தொண்டர்கள் என்பவர்கள் பெரும்பாலும் பாரம்பரியமாக ஆன்மீக பாரம்பரியம் அற்றவர்கள். நாயக்கர்கள், வெறும் இரண்டு மூன்று நூற்றாண்டு வைணவப் பாரம்பரியம் கொண்டவர்கள். மேலும், தமிழ் வைணவ முறைகள் அவர்களுக்கு முற்றிலும் போதிக்கப் பட்டிருக்குமா என்பதும் சந்தேகமே. செட்டியார்களில் நகரத்தார் தங்கள் வெள்ளைக்கார பாசத்தால் இந்த இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். நாத்திக இயக்கம் பெரும்பாலும் வெள்ளாள ஜாதிகளைக் குறிவைத்தது . வெள்ளாளர்களில்அடுக்கு ஜாதிகள் பல உண்டு. மேல் தட்டு மக்கள் ராஜாக்கள்/ ஜமீன்தார்கள்/பண்ணையார்கள். இவர்கள் 'காங்கிரஸ்காரர்கள்'. நடுத்தட்டு சிறு நில உடைமையாளர்கள் மற்றும் மேற்பார்வை பணி செய்பவர்கள். இந்த இரண்டு தட்டு பிரிவினருக்கும் தத்துவம், புராண சடங்கு சார்ந்த ஆன்மீகப் பின்புலம் அதிகம். 

கடைத் தட்டு வெள்ளாளர்கள் கூலித் தொழிலாளிகள். இந்தக் கடைத்தட்டுக்கு, ஆன்மிகம் என்ற பாரம் பரியம் இருந்தது இல்லை. குல தெய்வம், கிடா வெட்டு போன்ற சடங்குகளுக்கு மேல் இவர்கள் அறியாதவர்கள். இன்றும் கழகத் தலைவர்கள் பலரும் இந்தப் பிரிவில் இருந்தே வந்தவர்கள். இவர்கள் தான் நம் கல்விக்கொள்கைகலை வகுப்பவர்கள்.

வெள்ளாளர்களில் பல தட்டுக்களையும் இணைக்க உத்திகள் நடக்க, இக்கால கட்டத்தில் தான் மேல் தட்டு வெள்ளாளர்களுடைய   பாரம்பரியம் பதவிக்காக தியாகம் செய்யப் பட்டது. அவர்களும் காங்கிரசை உதறி , இறங்கி வந்து திராவிட அரசியலில் இணைந்தார்கள்.

ஆக , நாத்திகம் நம் பாரம்பரியத்தை மறைக்கவில்லை. சுயநலம் மட்டுமே.

இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஒவ்வொருவருக்கும், தான் வசித்த கிராமம், உள்ளூர் கோவில், சாதி, குலம், மற்றும் தொழில்  சார்ந்த மதப் பாரம்பரியம் உண்டு. எங்க அய்யரூ, எங்க பூசாரி, எங்க பண்டாரம், எங்க ஜோசியர், என்று அங்கே உண்டான பந்தம் உண்டு. கிராமங்களில் நிவந்தங்களோடு வாழ்ந்த பௌராணிகர்கள் , நேருவின் திட்டத்தால் இடம் பெயர ஆரம்பிக்கவே, கிராமங்களின் ஆன்மீகக் கல்வி பொலிவிழந்தது. இன்னும் கட்டுக் குலையாத கிராமங்களில் பிராம்மண துவேஷம் என்பதே என்னவென்று தெரியாது. அந்தக் கிராமங்களில் பாரம்பரியம் செழித்துத் தான் இருக்கிறது.

மகாபாரதம் இன்னும் குடும்பங்களின் நினைவில், அங்கங்கே கிடைக்கும் சொற்பொழிவுகளில், பொக்கிஷங்களாய் பாதுகாக்கப் படும் பழைய பிரதிகளில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment