Thursday, February 20, 2014

கீதையை எப்படிப் படிப்பது ?

கீதையை எப்படிப் படிப்பது ?

ஆசாரியர்கள் அருகி விட்ட இன்றைய சூழ்நிலையில் ஒருவர் கீதையை எப்படிக் கற்க முடியும் ? இதற்கு விதிமுறைகள் உண்டா ? யார் யார் கீதையைப் படிக்க வேண்டும் என்று வரை முறை உண்டா ? கீதை நூலை வீட்டில் வைக்கலாமா ?

இந்தக் கேள்விகள் இயல்பாக இன்றைய இளைய தலைமுறையினர்  மனதில் எழுகின்றன. காரணம், இரண்டு தலைமுறைகள் ஆங்கிலக் கல்வி கற்கும் சமுதாயமாக நாம் மாறி விட்டதும், மதச் சார்பின்மை என்ற பெயரில் "எல்லா மதமும் உண்மை, ஒரே குறிக்கோளை நோக்கிச் செல்பவை " என்னும் அப்பட்டமான பொய்களைப் படிப்பதாலும், சமஸ்கிருதம் என்னும் நமது பண்பாட்டு மொழியில் இருந்து விலகியதாலும் தான்.

இதையும் மீறி எப்படி கீதை கற்பது ?  இன்றைய இந்து சமூகத்தின் அடிப்படையே வேதாந்தம் தான். தங்கள் கொள்கைகளை நிலை நாட்ட சங்கரர் முதலிய  வேதாந்த ஆச்சாரியர்களின் மூன்று தேர்வு நூல்களில் கீதையும் ஒன்று..  காந்தி ஒவ்வொரு இந்துவும் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய நூல் கீதை என்கின்றார் . முதலில் ஒரு சில கேள்விகளுக்கு விடை கூறிய பின் எப்படிப் படிப்பது என்று பார்த்து விடலாம்.

கீதையை அனைத்து சாதியினரும் படிக்கலாமா ?

கீதை மகாபாரதத்தின் ஒரு பகுதி. இதிகாசங்கள் நான்கு வருணங்களுக்கும் பொதுவானவை. ஆகவே பகவத் கீதையை எல்லோரும் படிக்கலாம்.

எப்படி ஆரம்பிப்பது ?

குழந்தைக் கண்ணனோ,  பசுவுடன் நின்ற கோலத்தில் உள்ள கண்ணன் படமோ இருத்தல் உத்தமம். அந்தப் படத்துக்கு ஒரு நல்ல நாளில் அலங்காரம் செய்து, ஜகத் குருவான கண்ணனை அந்தப் படத்தில் ஆவாஹனம் செய்து , நைவேத்தியம் படைத்து, தீப தூப மரியாதைகளுடன் வணங்க வேண்டும். கீதை உரை எடுத்து  ஒரு பலகையில் செய்யப் பட்ட மனையில் அல்லது பீடத்தில் வைத்து அதனை தூப தீபம், நைவேத்தியம் செய்து வணங்கி, பின்பு கண்ணனிடம் பாராயணத்தில் நம்முடன் கூடவே இருக்கும் படி வேண்டி சிரத்தையுடன் படிக்க ஆரம்பிக்க வேண்டும். முதல் ஒரு வாரம் , கீதையின் தியான சுலோகங்களை படிக்க வேண்டும். அவை நன்கு மனப்பாடம் ஆனா பின், முதல் அத்தியாயம் ஆரம்பிக்கலாம். (குழலூதும் கண்ணன் படம் இப்போது வேண்டாம்.)

கீதையைப் படிக்க விதிமுறை உண்டா ?

பொதுவாக நம்முடைய  புனித நூல்களை பூசை அறையில் வைத்துப் படிப்பது உத்தமம். அதுவும் குளித்து அன்றாட பூசைகளை முடித்து (அல்லது  பிராம்மணர்களாய் இருப்பின் சந்தி  முடித்து)  காலையோ அல்லது மாலையோ படித்தல் சிறந்தது. பணி   ஓய்வு  பெற்றவர்கள் நாள் முழுதும் பாராயணம் செய்யலாம். நேரம் இல்லாதவர்கள் உறங்கும் முன் சுத்தமாக இருந்து ஒரு சுலோகமோ  அல்லது இரண்டு சுலோகமோ மனப்பாடம் செய்து உரை படித்து உறங்கச் செல்லலாம்.

கீதையைப் படிக்க வேண்டுமா ? பாராயணம் செய்ய வேண்டுமா ?

கீதையை வெறுமனே படிக்க மூன்று மணி நேரம் போதும்.ஆனால் கீதையை அறிய பல ஜன்மங்கள் வேண்டும் என்று சுவாமி ராம்சுகதாஸ் குறிப்பிடுவார். நானும் இரண்டாவது வகையை மட்டும் குறிப்பிடுகிறேன். இது ஒரு வகை தொடர் பயிலுதல் ஆகும். இதில் ஒவ்வொரு சுலோகமும்  உரக்க  மனப்பாடம் செய்தல் வேண்டும். இதன் பின்னர் பத உரையைப் படித்தல் வேண்டும். பின்னர் சுலோகத்தின் பொழிப்புரையை மொத்தமாக மனத்தில் பதிக்க வேண்டும். இதற்குப் பின்னர் சுலோகத்தின் விரிவுரையை மனதில் இருத்த வேண்டும். ஓரிரு நிமிடம் அன்று கற்ற சுலோகத்தை ஆழ்ந்து சிந்தித்து நம் வாழ்வில் அதை எங்கு கடைப் பிடிக்கலாம் என்பது பற்றி சற்று தியானித்த பின்னர் எழலாம். இதை பாராயணம் என்று ஒருவாறு உரைக்கலாம். இம்முறையில் ஒரு சுலோகம் வீதம் தினம் படித்தால் தினத்துக்கு மொத்தமாக பதினைந்து முதல் இருபது நிமிடம் ஆகலாம். முழு நூல் எழுநூறு சுலோகங்களால் ஆனது. ஏறக்குறைய இரண்டு வருடம் பிடிக்கும்.

பாராயணம் செய்ய எந்த கீதை உரை சிறந்தது ?

எனக்குத் தெரிந்த வரை நம்முடைய சனாதன பாரம்பரியம் , நம்முடைய பண்பாட்டின் மூல வேரோடு பரிச்சயம் போன்ற அடிப்படை விஷயங்களோடு , சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மூல சுலோகங்கள் , பத அர்த்தங்கள், விரிவுரை ஆகிய அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவது கீதா பிரஸ்ஸின் " தத்வ விவேசனி " . திரு ஜெயதயால் கோயந்தகா அவர்களுடைய ஹிந்தி உரையை திரு சுவாமிநாத ஆத்ரேயன் தமிழில் திறம்பட எழுதியுள்ளார். இதன் விலையும் நூறு ரூபாய் தான். சித்பவானந்தரின் உரை இதற்குப் பின்னர் தான்.சுவாமி ராம் சுகதாஸின் உரை அற்புதமானது . ஆனால்நீளமானது   . ஆகவே பாராயணத்துக்கு உதவாது.

கீதையைப் படிக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா ?

ஆரம்பத்தில் சமஸ்கிருதம் மேல் ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். கீதை கற்கும் பொழுதே சமஸ்கிருதமும் ம் வந்து விடும். இந்தி ஆசிரியர் ஒருவரை அணுகி இந்தி எழுத்தைக் கற்று எளிய சொற்களை படிக்க தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நலம். இன்று சமஸ்கிருதமும் இந்தியும் ஒரே எழுத்தான தேவநாகரியில் தான் எழுதப் படுகின்றன. சமஸ்கிருதத்தின் அடிப்படை அமைப்பு, அடிப்படை சொற்கள் ஒரு நூறு , போன்றவை அறிந்து வைத்துக் கொள்ளுதல்  ஒரு அற்புதமான தொடக்கத்திற்கு அடித்தளம். இன்றைய இணையம் இதற்கு வெகுவாக உதவும்.
ஏன் கீதை சுலோகங்களை மனப்பாடம் செய்த பின்னரே அர்த்தத்தை ஆராய வேண்டும் ? பாராயணம் செய்யும் முறை என்ன ?

சம்ஸ்கிருத மொழி ஆழம் மிக்கது. அது போலவே விரிவும் மிக்கது. ஒவ்வொரு சொல்லும் அந்தந்த சுலோகத்துக்கு உள்ளேயும் மற்ற இடங்களிலும் வேறு பொருளைத் தரக்கூடும். ஒரு சிறந்த உதாரணம் "கர்மம் " என்ற வார்த்தை. இதற்கு பல பொருள்கள்   கீதையில் உரை ஆசிரியர்களால் கொடுக்கப் படுகின்றன. இது போன்றே யோகம், தர்மம் போன்ற சொற்கள்.

மனப்பாடம் என்பது பாராயண விதி.இதன் முக்கியத்துவம் சொல்லி மாளாது. சுவாமி ராம் சுகதாஸ் கீதையை முதலில் சுலோக வாரியாக, பின்பு அத்தியாயம் வாரியாக, பின்பு முழு மனப் பாடம் செய்து, பின்பு தலை கீழ் மனப் பாடமும் செய்ய வலியுறுத்துகிறார். என்னுடைய வாழ்க்கையைச் செறிவுள்ளதாக்கியவை இந்த பாராயண முயற்சிகளே. இதற்கு எவ்வளவு முயல்கிறோமோ அவ்வளவும் நமக்கு லட்சம் மடங்கு அனுகூலத்துடன் திரும்பி வரும். ஆகவே எந்த சங்கடமும் பாராமல் தொடங்கவும். முதலில் சற்று சோர்வு வரலாம். தளரக் கூடாது. முந்தைய தினம் படித்தது இன்று மறக்கலாம். சோர்வு வேண்டாம். காலையில் படித்த சுலோகத்தை ஒரு சின்ன துண்டு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு நாள் முழுதும் பத்து முறையாவது திரும்பக் கூறுதல் வெகுவாக உதவும்.

கீதா பிரஸ்ஸில் கையடக்க கீதை சுலோகங்கள் மட்டும் அடங்கிய பிரதி சமஸ்கிருதத்திலோ ஆல்லது தமிழிலோ ஐந்து ரூபாய்க்கு கிடைக்கிறது. வாங்கி எப்போதும் கைவசம் வைத்திருக்கவும். திடீர் திடீர் அன்று நமக்கு சுலோகங்கள் தேவைப் படும். அந்தத் தருணங்களில் நாம் படிக்கும் சுலோகங்களை நாம் என்றென்றும் மறக்க மாட்டோம்.

பகவத் கீதையின் முழு ஒலி வடிவம் நிபுணர்களால் பாடப்பட்டு இணைய தளத்தில் கிடைக்கிறது. அதனை தரவிறக்கம் செய்து நம் கைபேசியில் பதிந்து கொண்டால் சதா சர்வ காலமும் விரும்பிய நேரம் எல்லாம் கேட்கலாம். ஆரம்ப காலங்களில் இத்தகைய தருணங்கள் அனைத்தும் நம்மை எங்கோ கொண்டு சென்று விடுபவை.

நீங்கள் இரண்டு சுற்று முடிக்கும் போது (அதாவது , 4 ஆண்டுகளுக்குப் பின் ) ஒருவாறு உங்களுக்கு ஒரு ஐம்பது முதல் நூறு சுலோகங்கள் நிரந்தர மனப்பாடம் ஆகியிருக்கும். இது குறைந்தாலும் ,  பாதகமில்லை. மிகுந்தால் மகிழ்ச்சியே .

மூன்றாவது சுற்றில் இருந்து   , ஒரு நாளுக்கு மூன்று அல்லது நான்கு சுலோகங்கள் பாராயணம் செய்யலாம். நான்காவது சுற்றில் பத்து செய்யலாம். ஐந்தாவது சுற்றில் முழு அத்தியாயமாக செய்யலாம். இந்த சமயங்களில் உங்களுக்கு அந்த சுலோகங்கள் நன்கு பரிச்சயம் ஆகியிருப்பதால் அந்த வேகம் உங்களுக்கு உடன்பாடாகவே தோன்றும். அர்த்தம் மனதில் ஒட , சுலோகம் வாயில் உச்சரிக்கப் பட இப்படியாக நீங்கள் அவற்றில் நிபுணத்துவம் பெற ஆரம்பிப்பீர்கள். சில நேரங்களில், குறிப்பிட்ட சுலோகங்களில் மனம் லயித்து நின்று விடும். கண்களில் நீர் வரும். உணர்ச்சிப் பெருக்கால் தன வசம்  கூட இழப்போம். இவை எல்லாம் நாம் சரியான பாதையில் போவதை உறுதிப் படுத்தும்.

தினமும் ஒரு அத்தியாயம் பாராயணம் பண்ணும்  போது , பதினெட்டு நாட்களில் முழு பாராயணம் முடிக்கலாம். பத்து வருடம் முடிக்கையில் நீங்கள் நூற்றுக்கு மேல் சுற்று பாராயணம் முடித்திருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் சுலோகத்தோடு அர்த்தமும் உடனே சிந்திக்கப் படுவதால், அந்தத் தருணங்கள் விலை மதிப்பு மிக்கவை. உங்கள் வாழ்க்கையை  ஆன்மீக உச்சிக்குக் கொண்டு சேர்ப்பவை.

சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், தகுந்த பெரியார்களோடு கலந்து தெளிவு பெற முயல வேண்டும். இணையத்தில் ஏராளமான கீதை உரைகள் விரவிக் கிடக்கின்றன.

ஒவ்வொரு அத்தியாய பாராயணம் முடிந்த பின்னும் விசேஷ பூஜைகள் செய்து மகிழுங்கள். முழு சுற்று முடிந்ததும், உற்றார் உறவினர், நண்பர்களை அழைத்து ஒரு விஸ்தாரமான பூஜை ஏற்பாடு செய்யலாம். அன்று சில பிரதிகள் வாங்கி தகுதி உள்ளோருக்கு அப்போது தானம் செய்ய வேண்டும். அவர்களுக்கும் பாராயணம் செய்யும் முறை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கீதையைப் படிப்பதை "ஞான யக்ஞம் " என்று கிருஷ்ணர் சிலாகிக்கிறார். கீதையைப் பிரச்சாரம் செய்பவர்களை தனக்கு மிகவும் உகந்தவர்கள் என்று புகழ்கிறார். கீதையின் ரகசியங்கள் நமக்குத் தெரியத் தெரிய இந்த ஞான வேள்வி மேன் மேலும் சிறப்படையும். கண்ணன் உங்களுடன் இருந்து துணை புரிவானாக.


1 comment:

  1. venkat.. gurus are still there for everyone.. the link has been cut in the past 50 years.. everyone has to first search for their guru..

    ReplyDelete